
ராஜஸ்தான் மாநிலத்தில், பசு காவலர்களால் தாக்கப்பட்ட பெஹ்லு கான் என்பவர் பலியாகியுள்ளார். பெஹ்லு கான் தாக்கப்பட்ட வீடியோ பதிவு, ஆங்கில ஊடகங்களில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாள்களுக்கு முன்பு, ஜெய்ப்பூரில் இருந்து பசுமாடுகளை ஏற்றிவந்த பெஹ்லு கான் உள்ளிட்ட சிலரை, பசு காவலர்கள் வழிமறித்துத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த பெஹ்லு கான், உயிரிழந்தார். இதையடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
வட மாநிலங்களில் பசுவதை புரிவோருக்கு எதிரான பசு காவலர்கள் அமைப்பு, பல ஊர்களில் அமைக்கப்பட்டுள்ளன. பசு காவலர்களால் தொடர்ந்து அப்பாவி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறிவருகின்றன. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பசுக்களுடன் சென்றவர்களை விசாரித்த ஹிந்து அமைப்புகள், அவர்களைத் தாக்கினர்.
முறையான அனுமதியுடன் பசுக்களை வாங்கிச் செல்கிறோம் என அவர்கள் கூறிய போதிலும், பசு காவலர்களால் தாக்கப்பட்டனர். இதில், ஹரியானாவைச் சேர்ந்த பெஹ்லு கான் என்பவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பெஹ்லு கான் உயிரிழந்தார். உ.பி, சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் பசு வதை புரிவோருக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக, சட்டீஸ்கரில் 'பசு வதையில் ஈடுபடுவோரை தூக்கிலிடுவோம்' என, மாநில முதல்வர் கூறியிருந்தார். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் ஒருவர் பசு காவலர்களால் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பெஹ்லு கானின் உறவினர்கள், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, நடுநிலையான விசாரணை மேற்கொள்ளப்படும் என உறவினர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
Vikatan
05-04-2017
No comments:
Post a Comment