Followers

Tuesday, April 23, 2019

“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்!”

“இப்போ எனக்கு மகனும் பிறந்திருக்கான்!”
- இந்தியக் குழந்தைக்குத் தாயான துபாய் பெண்.
உலகம் முழுக்க அன்பு கொட்டிகிடக்கிறது.
யாரோ ஒருவர்தானே என பிறரை உதாசினப்படுத்தாத நல்ல உள்ளங்களும் நிறைந்து இருக்கின்றன. துபாய் விமான நிலையத்தில் பிரசவ வலியால் துடித்தவர், ஓர் இந்தியப் பெண். அவருக்குப் பிரசவம் பார்த்தவர், மருத்துவர் அல்ல... துபாய் விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்! குழந்தையோ குறைப்பிரசவத்தில் பிறந்தது. பிறகு என்ன நடந்தது?
இரு நாள்களுக்கு முன்பு, துபாய் விமான நிலையத்துக்கு இந்தியப் பெண் ஒருவர் வந்தார். இமிகிரேஷன் பகுதியில் வந்த அவரின் உடையில் ஆங்காங்கே ரத்தக்கறை படிந்திருந்தது. முகத்தில் பெரும் பதற்றம் காணப்பட்டது. பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் ஹனான் ஹூசைன் முகமதுவுக்குப் பணி முடிய 10 நிமிடமே இருந்தது. பெண்ணின் உடைகளில் ரத்தக்கறை படிந்துள்ளதைப் பார்த்த, ஹனான், அதிர்ச்சியடைந்தவாறே, “என்னாச்சு, ஏன் ரத்தக்கறை?” என்றார். பயத்திலேயே பெண்ணுக்கு வலி ஏற்படத் தொடங்க, தான் ஆறு மாதக் கர்ப்பிணி என்றவாறே தரையில் படுத்து வலியால் அலற ஆரம்பித்தார்.
சப் இன்ஸ்பெக்டர் ஹனானுக்கு, என்ன செய்வதெனத் தெரியவில்லை. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் நிலையில் அந்தப் பெண்ணும் இல்லை. ரத்தப்போக்கு அதிகரித்தது. மற்றவர்களுடன் சேர்ந்து கர்ப்பிணிப் பெண்ணை தனி அறைக்குள் கொண்டு சென்றார். மருத்துவர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் பெண்ணோ வலியால் துடிக்க, வேறு வழி தோன்றாமல் ஹனானே பிரசவம் பார்த்தார். ஆண் குழந்தை பிறந்தது.
இந்த இடத்தில் வேறு ஒரு பிரச்னையும் தலை தூக்கியது. குறைப் பிரசவத்தில் பிறந்ததால் குழந்தையின் இதயம் துடிக்கவில்லை. மூச்சும் விடவில்லை. போலீஸ் அதிகாரி என்பதால் ஹனானுக்கு சி.பி.ஆர். (cardiopulmonary resuscitation) கொடுக்கும் முறை தெரிந்திருந்தது. குழந்தைக்கு சி.பி.ஆர் கொடுத்தது குறித்து ஹனான், “பொதுவாகக் குழந்தைகள் பிறந்ததும் வீல் எனக் கத்தும்... அழும். இந்தக் குழந்தையோ ஒன்றுமே செய்யவில்லை. எனக்கு ஏதோ பிரச்னை என்பது மட்டும் புரிந்தது. குழந்தையின் பின்புறம் தட்டினேன். அப்போதும், குழந்தை அழவில்லை. தொடர்ந்து 3 நிமிடம் வரை சி.பி.ஆர் கொடுத்தேன். குழந்தை அலறியது. அப்போதுதான் எனக்கு உயிரே வந்தது. குழந்தை அலறவும் டாக்டர் குழு அங்கே வரவும் டைம் சரியாக இருந்தது. தொப்புள்கொடியில் இருந்து குழந்தையைப் பிரித்து அருகில் இருந்த லஃதீபா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்'' என்று அந்த `திக் திக்' நிமிடத்தை விவரித்தார்.
தற்போது, துபாய் மருத்துவமனையில் குழந்தைக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கடந்த 19-ம் தேதி துபாய் விமானநிலையத்துக்கு வந்த பெண், தான் கர்ப்பிணி என்பதை மறைக்க முயன்றுள்ளார். மும்பை செல்வதற்கு டிக்கெட் வைத்திருந்தார். துபாயில் குழந்தை பெற்றுக்கொள்ள அதிக செலவு பிடிக்கும் என்பதால், கணவர் டிக்கெட் எடுத்து அவரைத் தாய்நாட்டுக்கு அனுப்பியுள்ளார். கர்ப்பிணி என்பதால், விமானத்தில் ஏற்றுவார்களோ, இல்லையோ என்ற பயம் அவரைத் தொற்றிக்கொண்டது. விளைவு... குறைப் பிரசவம். நல்லவேளையாக, கடவுள் வடிவில் ஹனான் வந்து குழந்தையைக் காப்பாற்றியுள்ளார்.
ஹனானின் சேவையைப் பாராட்டி, அமீரக அரசு அவருக்கு விருது அளித்துக் கௌரவித்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் இருக்கும் குழந்தையையும் பெண்ணையும் தினமும் சென்று ஹனான் பார்த்துக்கொள்கிறார். ஹனான் மட்டுமல்ல, அவருடன் பணிபுரியும் மற்றவர்களும் மருத்துவமனைக்குச் சென்று குழந்தையின் தாய்க்கு ஆதரவாக இருந்துவருகின்றனர். குழந்தை இன்குபேட்டரில் உள்ளது. இன்னும் இரு மாதத்துக்கு மருத்துவமனையில் குழந்தை இருக்க வேண்டும். பிரசவச் செலவுகளை ஹனான் மற்றும் உடன் பணிபுரிபவர்கள் ஏற்றுக்கொள்ள முடிவுசெய்துள்ளனர்.
“என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. ஒரு குழந்தையின் உயிரை நான் காப்பாற்றியுள்ளேன். இந்தக் குழந்தை, அந்தத் தம்பதியின் முதல் குழந்தை. அதை நான் காப்பாற்றிக் கொடுத்துள்ளேன். தம்பதி இதனால் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள். ஏழு ஆண்டுகளாகத் துபாய் போலீஸில் பணிபுரிகிறேன். என் பணியில் நான் நிறைவு கண்ட நாள் இது. எனக்கு மூன்று பெண் குழந்தைகள். இப்போது, ஒரு மகனும் பிறந்திருக்கிறான் அவன் இன்குபெட்டரில் வளர்கிறான்'' என்று நெகிழ்கிறார் ஹனான்.
எம் .குமரேசன் @விகடன் .காம்
V Premkumar Babu


1 comment:

Dr.Anburaj said...

மனிதம் ஒங்கியிருக்கும் மக்கள் உலகில் சாதி மத மொழி போன்ற பேதமின்றி வாழ்ந்து வருகின்றாா்கள்.இந்தசம்பவத்தை படித்ததும் மனதில் தென்றல் வீசியதுபோல் இருந்தது.