Followers

Friday, July 26, 2019

பள்ளி வாசலில் கிடைத்த பரிசு பொருள்!

இது ஒரு மீள் பதிவு ( 27-07-2018)
பள்ளி வாசலில் கிடைத்த பரிசு பொருள்!
நேற்று நான் தங்கியுள்ள வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிக்கு இரவு தொழுகைக்காக சென்றேன். தொழுகை முடிந்தவுடன் ஒரு உருது அறிஞர் சொற்பொழிவு உருது மொழியில் ஆற்றினார். சொற்பொழிவு முடிந்தவுடன் சில கேள்விகள் கேட்டார். யாரும் பதிலளிக்காமல் அமர்ந்திருந்ததால் தமிழனான நான் எழுந்து அதற்கு பதிலளித்தேன்.
கேள்வி:
எல்லாவற்றையும் விட சிறந்த செல்வங்கள் என நபிகள் நாயகம் அவர்கள் கூறியவை எவை?
பதில்:
1) இறைவனை நினைவு கூறும் நாவு 2) இறைவனுக்கு நன்றி செலுத்தும் உள்ளம் 3) இறை வழியில் நடந்திட கணவனுக்கு உதவிடும் நம்பிக்கையுள்ள மனைவி. (திர்மிதி)
இந்த பதிலை கேட்டவுடன் பாகிஸ்தானிய அறிஞர் எனக்கு அன்பளிப்பாக ஒரு அழகிய டிபன் பாக்ஸை அளித்தார். இதே போல் வேறொரு கேள்வி கேட்க மற்றொரு பாகிஸ்தானிக்கும் ஒரு பரிசு பொருள் கிடைத்தது. ஒரு அந்நிய தேசத்தில் அந்நிய மொழியில் கேள்வி கேட்டு அதற்கு பதிலும் அளித்து பரிசு வாங்கும் போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. இது என்னைப் போன்ற இளைஞர்களுக்கு  மேலும் ஆர்வத்தை அதிகரிக்கும்.
பள்ளிவாசல்கள் வெறும் தொழும் இடமாக மட்டுமே நபிகள் காலத்தில் இருந்ததில்லை. அரசாங்கமே பள்ளியில்தான் நடக்கும். கல்வி கற்பித்தல், உடற்பயிற்சி, போன்றவைகளையும் பள்ளியிலேயே நடத்த பழக வேண்டும். பள்ளியோடு தொடர்புடைய சிறுவர்களின் வாழ்வும் பிரகாசமாக இருக்கும்.
மேலும் மொழியை பொருத்த வரை உலக மொழிகள் அனைத்தும் மனிதர்கள் விளங்கிக் கொள்ள இறைவனால் படைக்கப்பட்டவையே. தாய் மொழிப் பற்று இருக்கலாம். அது வெறியாக மாறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய் மொழி அழியாமல் மற்ற உலக மொழிகளையும் ஆர்வமுடன் கற்க வேண்டும்.


No comments: