சாவித்திரி கண்ணன் பதிவின் காப்பி பேஸ்ட்
’’அடப்பாவிகளா?’’ என்று படிக்கும் யாரையும் உலுக்கி எடுத்து நிம்மதி இழக்க வைக்கும் பதிவே இந்நூல்!
உலுக்கி எடுக்கும் என்றால்,காந்தியை படுகொலை செய்ததற்கு மட்டுமல்ல! அந்தக் கொலையில் தெள்ளென வெளிப்பட்ட உண்மைகளை எவ்வளவு கவனமாக மறைத்தனர் – அதுவும் அவரது பிரதான சீடர்களாக அறியப்பட்ட பெரிய மனிதர்களும்! முக்கிய பத்திரிகைகளும்! என்பதைத்தான் இந்த பதிவுகள் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன…!
காந்தி இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபட்டார்! ஆனால்,அவர் முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை இந்து வெறியர்களும்,அவர்கள் சார்ந்த அமைப்புகளும் தொடர்ந்து சொல்லி வந்தன என்பது மட்டுமல்ல,அந்த காரணத்திற்காக அவர் மீது துவேஷ பிரச்சாரங்களையும் செய்து வந்தனர்! ஆக,இதன் தொடர்ச்சியாக அவரை கொலை செய்ய பலமுறை முயன்று,அதில் வெற்றியும் பெற்றனர் என்பது தானே வரலாறு!
ஆனால், காந்தியின் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்து தலையங்கமும்,கட்டுரைகளும் எழுதிய மிக முக்கிய பத்திரிகைகள்- குறிப்பாக தி இந்து,ஆனந்தவிகடன்,கல்கி…உள்ளிட்ட பிரபல பத்திரிகைகள் காந்தியின் பெருமைகளை,அவர் உலக அளவில் மதிக்கப்படுவதை,அவருக்கு மக்களிடம் உள்ள அபரிதமான செல்வாக்குகளை வியந்தும்,போற்றியும்,உருகி,உருகியும் எழுதினவேயன்றி,காந்தியைக் கொன்றவனின் நிலைபாட்டை கேள்விக்கு உள்ளாக்கவில்லை என்பது மாத்திரமல்ல,கனத்த மவுனம் சாதித்தன என்பதை அந்த பதிவுகளை படிப்பவர் எவரும் உணரமுடியும்!
அத்துடன்,காந்தியைக் கொன்றது ஒரு இந்து வெறியன்,ஆர்.எஸ்,எஸ் இயக்கம் மற்றும் இந்து மகாசபையில் நீண்ட காலம் செயல்பட்டும்.பேசியும்,எழுதியும் வந்தவன் என்பதையும் எந்த பத்திரிகையும் சுட்டிக் காட்டாமல் கவனமாக தவிர்த்து, மாறாக காந்தியை கடவுளுக்கு நிகராக புகழ்ந்து விஷயத்தை திசைதிருப்பும் வகையில் ஆன மட்டும் தங்கள் எழுத்தாற்றலை பயன்படுத்தியுள்ளதையும் இந்த பதிவுகள் அம்பலப்படுத்துகின்றன!
அதாவது காந்திக்கு எதிராக வன்மமாக தொடர்ந்து,பேசியும்,எழுதியும் வந்தவர்களின் தவறுகளை கண்டிக்க மனமில்லாவிட்டாலும்,அதை மறுக்ககூட மனமின்றி அழகாக ’எஸ்கேப்’ ஆகி,காந்தி பஜனை பாடுகிறார்கள் என்பதை தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாரதி இருந்தால்,இந்த அநீதிகளை எதிர்த்து எப்படி பொங்கி இருப்பான்?
ஆனால்,ராஜாஜியும்,கல்கியும்,எஸ்.எஸ்.வாசனும்,இந்து கஸ்த்தூரி அய்யங்காரும் ஏன் மவுனித்தனர் என்பதிலுள்ள ’உள் அரசியலை’ புரிந்து கொள்ள முடிந்தால்,இன்று மதவாத அரசியல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து ஆட்சியை பிடிப்பதற்கான நிலையின் பின்புலத்தில்,அன்று மவுனசாட்சியாக அடித்தளம் போட்டுக் கொடுத்தவர்களின் கைங்கரியத்தை உணரமுடியும்!
காந்தியை கோட்சே கொல்வதற்கு பத்து நாட்கள் முன்பாக கொலை செய்யமுயன்று குறி தப்பி கைதான மதன்லால்,’’ சிறையில் என்னை வந்து சந்தித்த என் சகாக்கள்,இன்னும் பத்து தினங்களில் காந்தி மரணமடைவார் என்று சொல்லிவிட்டுச் சென்றனர்’’ என்று சொல்லியிருப்பதில் இருந்து,சிறைக்குள் வந்து உறுதியளித்து செல்லக்கூடிய அளவுக்கு காந்தியின் கொலை திட்டமிட்டு,வெளிப்படையாக நடந்துள்ளது என தெரிய வருகிறது.
எந்த அளவுக்கு பட்டேலின் கீழ் இருந்த உள்துறை அமைச்சகம் காந்திக்கான ஆபத்தை அலட்சியமாக கையாண்டுள்ளது என்பதும் விளங்குகிறது.
இந்தச் சூழலில் பெரியாரின் குடியரசு,அண்ணாவின் திராவிட நாடு... உள்ளிட்ட ஒரு சில திராவிட இதழ்களே காந்தி கொலையின் பின் இருந்த மதவெறியையும்,அவை சார்ந்த அமைப்புகளையும்,துணிந்து வன்மையாக கண்டித்து தலையங்கமும்,கட்டுரைகளும் தீட்டியுள்ளன என்பதையும் காணமுடிகிறது.
காந்தி கொலையில் சம்மந்தபட்ட கோட்சே உள்ளிட்ட ஆறுபேர் பிராமணர்கள் என்ற நிதர்சனத்தை நினைவில் வைத்து பார்த்தால், அந்தகாலத்தில் மற்ற பத்திரிகைகள் மறைத்த அரசியலையும்,பெரியார்,அண்ணா உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே ’கோட்சே ஓரு பார்ப்பனர்’ என்று சொல்லமுடிந்த அரசியலையும் புரிந்து கொள்ளலாம்!
அதுவும் பெரியார் ஒருபடி மேலே சென்று,’’வருங்காலத்தில் கோட்சேவை கடவுள் ஆக்கினாலும் ஆக்கிவிடுவர்’’ என்று தீர்க்கதரிசனத்துடன் எழுதியுள்ளதையும் பார்த்தால், சிலிர்க்கிறது...!
இந்த பதிவை கொண்டுவந்த நண்பர் கடற்கரையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! இது விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு வரலாற்றுக் கடமையாகும்! அந்த கடமைக்கு துணை நின்ற சந்தியா பதிப்பக நடராஜனையும் மனமாற வாழ்த்துகிறேன்!
சந்தியா பதிப்பகம்; 044 2489 6979.
-----------------------------------------
வாங்கி படித்து பாதுகாக்கப்பட வேண்டிய புத்தகமாக தெரிகிறது. எழுதிய சகோ கடற்கரை மற்றும் வெளியிட்ட... சந்தியா பதிப்பகம், 77, 53 வது தெரு, அசோக் நகர்,சென்னை 83. போன்; 044-24896979. நிறுவனத்திற்கு நன்றிகள்.