Followers

Sunday, November 30, 2014

என் மகனுக்கு பேய் புடிச்சிருக்கு (சிறுகதை)

என் மகனுக்கு பேய் புடிச்சிருக்கு(சிறுகதை)



எல்லோர் முகத்திலும் சோகம்! இறப்பு என்பது எத்தகைய சோகத்தை கொடுக்கும் என்பதை அந்த வீடு உணர்த்திக் கொண்டிருந்தது. இப்றாகிம் பாய் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் இன்று இறந்த சடலமாக கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். வயதும் ஐம்பத்தைந்தை தாண்டியிருந்தது. சில காலம் நோய்வாய்பட்டிருந்தவர் நேற்று இரவு இந்த உலகுக்கு விடை கூறி விட்டு மறு உலக பயணத்துக்கு ஆயத்தமாகி விட்டார்.

எல்லோரும் சவுதியில் இருக்கும் இவரது மகன் ரஹீமின் வரவுக்காக காத்திருந்தனர். வந்தவுடன் உடலை அடக்கம் செய்ய தூக்க வேண்டியதுதான். சொந்தங்கள் ஒவ்வொருவராக வந்து துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தனர். இப்றாகிம் பாயின் மனைவி ஜீனத் சோகமே உருவாகி கணவனின் தலைமாட்டில் அமர்ந்திருந்தார். இறந்தவுடன் அந்த உடலை தண்ணீரால் கழுவி கட்டிலில் வைத்திருந்தனர். மறு குளிப்பாட்டு பையன் வந்தவுடன் வைத்துக் கொள்ளலாம் என்று சொந்தங்கள் சொல்லவே மகன் ரஹீமின் வரவை எதிர் நோக்கி அனைவரும் காத்திருந்தனர்.

இப்றாகிம் பாய்க்கு ஒரே பையன். பையனை நன்கு படிக்க வைத்திருந்தார். ரஹீம் துடிப்பான இளைஞன். கல்லூரி படிப்பை முடித்த கையோடு தாய் நாட்டிலேயே வேலை செய்ய விருப்பப்பட்டு பல இடங்கள் ஏறி இறங்கியும் ஒன்றும் சரிபட்டு வராததால் இணைய தொடர்பு மூலம் சவுதியில் வேலை கிடைத்து தற்போது மாதம் 50000 அனுப்பி வருகிறான். ஊருக்கு வந்து திருமணம் முடிக்கும் எண்ணத்தில் வர இருந்தவனுக்கு தகப்பனாரின் இறப்பு செய்தி இடியாக வந்திறங்கியது. கம்பெனியில் நிலைமையை விளக்கிச் சொல்லி தற்போது 15 நாள் விடுப்பில் தாயகம் திரும்பிக் கொண்டிருக்கிறான் ரஹீம்.

இதோ ஊருக்குள் வாகனம் நுழைந்து விட்டது. தனது வீட்டின் முன் சொந்தங்கள் அனைவரும் குழுமியிருப்பதை தூரத்திலிருந்தே பார்த்த ரஹீமுக்கு துக்கம் தொண்டையை அடைக்க மௌனமாக அழுதான். வீட்டின் முன் வாகனம் நின்றது.

சொந்தங்கள் சோகத்தோடு ரஹீமை வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். அதுவரை துக்கத்தை அடக்கி வைத்திருந்த ஜீனத் மகனைப் பார்த்தவுடன் 'அப்பா போய்ட்டாருப்பா...' என்று மகனை கட்டி அணைத்து அழத் தொடங்கினார். ரஹீமும் தாயாரோடு சேர்ந்து சிறிது நேரம் அழுது விட்டு தகப்பனாரின் முகத்தை பார்த்தான். அமைதி தவழும் முகம். ஒரு வேளை தொழுகையைக் கூட பிறபடுத்தாதவர். நல்ல உழைப்பாளி. இறைவன் சற்று சீக்கிரமே அழைத்துக் கொண்டு விட்டான் என்று நினைத்தவனாக தகப்பனாரை குளிப்பாட்ட ஆயத்தமானான்.

இறந்தவரை குளிப்பாட்டுதல் என்பது ஹஜ்ரத் என்று சொல்லப்படும் மார்க்க அறிஞரை அழைத்து செய்வதுதான் ஊர் வழக்கம். அதன்படி அவரின் வருகைக்காக பலரும் காத்திருந்தனர். ரஹீம் தனது மாமாவிடம் 'ஏன் ஹஜ்ரத்துக்காக காத்திருக்க வேண்டும். நான் இறந்தவரை குளிப்பாட்டுதலைப் பற்றிய செய்முறை விளக்கம் படித்திருக்கிறேன். எனது தகப்பனாருக்கு நானே கழுவதுதான் சிறந்தது' என்று பைப்பை திறந்து தண்ணீர் பிடிக்க ஆரம்பித்தான் ரஹீம்..

ரஹீமின் மாமா குத்தூஸ் வேகமாக வந்து 'தம்பி! அததற்கென்று ஆட்கள் இருக்கிறார்கள். நாமே செய்தால் பின்னால் அவரை பகைத்துக் கொண்டதாக ஆகும்' என்றார்.

'"என்ன மாமா! இறந்தவருக்கு குளிப்பாட்டும் உரிமை அவரது நெருங்கிய சொந்தத்துக்குத்தான் உண்டு என்ற ஹதீதை நீங்கள் பார்த்ததில்லையா? யார் தடுத்தாலும் நான்தான் குளிப்பாட்டுவேன்'". என்று கூறியவனாக பைப்பில் தண்ணீர் பிடிக்க ஆரம்பித்தான். உதவிக்கு ரஹீமின் நண்பர்களும் வந்தனர். வந்திருந்த பெரியவர்கள் ஆச்சரியத்தோடு ரஹீமை பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.

இறந்த உடலை சற்று சரிவாக உட்கார வைத்து தேங்கிய மலம் சிறுநீர் போன்றவை வெளியேற தோதுவாக வயிற்றை மெதுவாக அமுக்கினான். கையில் உறை இருந்ததால் அசுத்தங்களை எல்லாம் துடைத்து விட்டு பன்னீர் மற்றும் சோப்பு நுரை கலந்த தண்ணீரால் உடலை கழுவ ஆரம்பித்தான். அவனுக்கு உதவியாக இப்போது அவனது மாமாவும் வந்தார். அவனது நண்பர்களும் உதவினர். இறந்தவுடன் உடல் மிருதுவாகி விடும் ஆகையால் தோல்களுக்கு சிராய்ப்பு ஏற்படாமல் மிக மிருதுவாக தனது தந்தையை கழுவிக் கொண்டிருந்தான் ரஹீம்.

அடுத்தாக கற்பூரம் கலந்த தண்ணீரினால் இறந்த உடலை கழுவி விட்டனர். கழுவும் போது மூக்கிலும் வாயிலும் தண்ணீர் செல்லாமல் பார்த்துக் கொண்டனர். ஏனெனில் அந்த தண்ணீர் திரும்பவும் வயிற்றுக்குள் சென்றால் பிறகும் அசுத்தங்கள் வெளியாக வாய்ப்பிருக்கிறது. கழுவி முடிந்து ஒரு மெல்லிய துணியால் உடலை துடைக்க ஆரம்பித்தனர்.

அடுத்து அவனது மாமா வெள்ளை துணியை கொண்டு வந்தார். தலைப் பக்கமும் கால்பக்கமும் ஒரு அடி விட்டு இறந்த உடலின் மேல் போர்த்தினர். கால் பக்கமும், உடல் பக்கமும், தலைப் பக்கமும் துணியினால் முடிச்சு போட்டு நெருங்கியவர்கள் கடைசியாக பார்க்க அழைக்கப்பட்டனர். ஜீனத் கடைசி முறை தனது கணவனை பார்த்து விட்டு மகனைக் கட்டிக் கொண்டு சத்தம் போட்டு அழ ஆரம்பித்தார். 'வேண்டாம்மா! சத்தம் போட்டு அழாதீங்க...மனசுக்குள்ள அழுதுக்கோங்க...' என்று சொல்லி விட்டு வந்திருந்த அனைவரும் சேர்ந்து இறந்த உடலை தூக்க ஆயத்தமாகினர்.

சவப் பெட்டி வந்தது. உடலை அதனுள் பவ்யமாக வைத்து நான்கு பேர் சேர்ந்து தூக்க ஆரம்பித்தனர். பெண்கள் புறத்திலிருந்து அழுகுரல் அதிகமாகவே அவர்களை ரஹீம் ஆசூவாசப்படுத்தி தனது தந்தையின் உடலுக்கு தனது தோளையும் கொடுத்தான். இறந்த உடல் பள்ளிவாசலை நோக்கி சென்றது. இறந்தவருக்காக செய்யப்படும் பிரார்த்தனை என்ற ரீதியில் இந்த தொழுகை நடத்தப்படுகிறது. தொழுகை நடக்கும் இடத்தில் உடலை வைத்து விட்டு எல்லோரும் கை கால்களை அலம்பச் சென்றனர்.

எல்லோரும் இறந்த உடலுக்கு முன்னால் வரிசையாக நின்றனர். 'தொழ வைக்க ஹஜ்ரத் எங்கே?' என்ற கேள்வியை ஒரு சிலர் கேட்க ஆரம்பித்தனர். இறந்த உடலை கழுவ தன்னைக் கூப்பிடாமலும் பிறகு உடலை வீட்டிலிருந்து எடுத்து வரும் போது ஓத வேண்டிய பாத்திஹாவையும் ஓதாமல் எடுத்து வந்ததால் சற்றே கடுப்பான ஹஜ்ரத் 'ஏன் அதையும் அந்த பையனையே செய்ய சொல்லிடுங்களேன்' என்றார். கூட்டத்தில் சிறு சலசலப்பு.

"நான் அப்பவே சொன்னேன்பா...இப்போ பார் ஹஜ்ரத் கோபத்தில் இருக்கிறார்"

"இந்த பையனுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை. ஹஜ்ரத்தையே அனைத்து காரியத்தையும் செய்ய சொல்லியிருக்கலாம்ல. இப்ப பார் தொழுக வைப்பதிலும் பிரச்னை"


"சிறு பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க... அப்போ நம்ம அப்பன் பாட்டன் எல்லாம் செஞ்சது தப்பு. ரஹீம் சொல்றதுதான் சரியா!"

"எல்லாம் இந்த 25 வருஷமாத்தான்யா பிரச்னைக்ள். முன்னாடில்லாம் இது மாதிரி பள்ளி வாசலில் எந்த குழப்பமோ சண்டையோ வந்ததில்லை."

"நான் அப்பவே சொன்னேன்ல...இப்ப பார் யார் தொழ வைக்கிறது? போய் ஹஜ்ரத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவரை தொழ வைக்க கூப்பிடு" -ரஹீமின் மாமா.

பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ரஹீம் தொழுகைக்காக நின்றவர்களைப் பார்த்து பேச ஆரம்பித்தான் : "அஸ்ஸலாமு அலைக்கும்! பாத்திஹா ஓதாததோ என் தந்தைக்கு நானே குளிப்பாட்டியதோ நானாக செய்ததல்ல. முகமது நபி நெருங்கிய உறவினர்கள்தான் குளிப்பாட்ட வேண்டும் என்று சொன்னதால்தான் நான் செய்தேன். பாத்திஹா ஓதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே நான் பாத்திஹாவும் ஓதவில்லை. இறந்தவருக்காக நடத்தப்படும் தொழுகையும் இமாமாக(தலைவராக) நிற்பதற்கு இறந்தவரின் உறவினர்களே முதல் தகுதியாக நான் ஹதீதுகளில் படித்துள்ளேன். எனவே நானே எனது தகப்பனாருக்காக தொழ வைக்கிறேன்."

என்று கூறியவனாக தொழுகைக்கு தலைவனாக நிற்க ஆரம்பித்தான். இதை சற்றும் எதிர்பாராத ஹஜ்ரத் 'தம்பி..எனக்கு கோபமெல்லாம் இல்லே! நானே தொழ வைக்கிறேன்.' என்றார்..

"இல்லை ஹஜ்ரத். பள்ளியில் மற்ற நேர தொழுகைகளை நீங்கள் தொழ வையுங்கள். இது எனது தகப்பனாரின் இறப்புக்காக நடத்தப்படும் தொழுகை. இதை நானே தொழ வைக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே 'அல்லாஹூ அக்பர்' என்று சொல்லி நெஞ்சில் கையை கட்டிக் கொண்டான். பலர் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்பே தொழுகை ஆரம்பமாகி விட்டது. வந்திருந்த பலரும் வேக வேகமாக வந்து வரிசையில் நின்று தொழ ஆரம்பித்தனர். ஹஜ்ரத்தும் வேறு வழி இல்லாமல் வரிசையில் நின்று ரஹீமை பின்பற்றி தொழ ஆரம்பித்தார்.

தொழுகை முடிந்தது. எப்போதும் தொழுகை முடிந்தவுடன் ஃபாத்திஹா ஓதுவது வழக்கம். ஆனால் அதற்கும் இடம் கொடுக்காமல் சவப் பெட்டியை தனது நண்பர்களின் உதவியோடு தூக்கிக் கொண்டு இறந்தவர்கள் அடக்கம் செய்யும் மைய வாடியை நோக்கி நடக்க ஆரம்பித்தான் ரஹீம். மக்களும் பின் தொடர்ந்தனர். தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை உணர்ந்த ஹஜ்ரத் 'இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்' என்று மனதுக்குள் நினைத்தவராக தனது வீட்டை நோக்கி நடந்தார்.

பள்ளி வாசலை ஒட்டியே அடக்கஸ்தலும் இருந்தது. உடலை குழிக்குப் பக்கத்தில் இறக்கினர். குழியினுள் முதல் ஆளாக ரஹீம் இறங்கி தனது தகப்பனாரின் உடலை நண்பர்கள் உதவியோடு வாங்கினான். உதவிக்கு அவனது நண்பர்களும் வந்தனர். மண் வெட்டியின் துணை கொண்டு மண்ணை சிறிது சிறிதாக இழுத்து உடலை மூட ஆரம்பித்தனர். அனைத்து வேலைகளையும் ரஹீமே செய்வதை அவனது கல்லூரி தோழன் ராகவன் தூரத்திலிருந்து ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

உடலை மூடியவுடன் அங்கு நின்ற ஏழைகளுக்கு சில பண முடிப்புகளை ரஹீம் கொடுத்துக் கொண்டிருந்தான். பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். ரஹீமும் அவனது நண்பர்களும் உறவினர்களும் வீட்டை நோக்கி நடந்தனர்.

ரஹீமின் மாமா "தம்பி! சாப்பாடு ஆக்குவதற்கு நெய் ஆடு முதலான அனைத்துக்கும் நீ வருவதற்கு முன்பே சொல்லி விட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடும்" என்றார்.

"சாப்பாடு...ஆடா...என்ன மாமா கல்யாணமா நடக்குது. என் தகப்பனார் இறந்த இந்த நாளில் விருந்தா. எதுவும் வேண்டாம் எல்லாவற்றையும் கேன்சல் பண்ணுங்கள். எனது நண்பன் தாஹீர் வீட்டிலிருந்து சாப்பாடு ஆக்கி அம்மாவுக்கும் நம் குடும்பத்தவருக்கும் கொடுக்க சொல்லுகிறேன்"


"இங்க வந்திருக்கிறர்களுக்காவது சாப்பாடு கொடுக்க வேண்டும். தடுக்காதே ரஹீம்" - தாயார் ஜுனத்.

'"இல்லம்மா! நபிகள் இவ்வாறு இறந்த வீட்டில் சமைப்பதை தடுத்துள்ளார்கள். பக்கத்து வீடுகளிலிருந்து சாப்பாடு கொடுப்பதுதான் நபி வழி".

"என்னடா தம்பி! புதுசு புதுசா சொல்லுறே! இறந்த வீட்டில் அன்று சாப்பாடு ஆக்குவதும் ஏழாம் நாள் நாற்பதாம் நாள் வருடம் என்று நெய் சோறு ஆக்குவது நம் ஊர் பழக்கமாச்சே!"

"அம்மா! நம் ஊர் பழக்கத்தை நான் கேட்கவில்லை. முகமது நபி தடுத்ததனால் என்னால் செய்ய முடியாது. தயவு செய்து என்னை புரிந்து கொள்ளுங்கள்"

"ஏண்டா! என்னையே எதிர்த்து பேசிறியா"

"மார்க்கத்துக்கு முரணாக பேசினால் எதிர்க்கத்தான் செய்வேன் அம்மா! மன்னித்துக் கொள்ளுங்கள்"

"சவுதி போவதற்கு முன்னால் நல்லாதாணடா இருந்தே! பேய் கீய் புடுச்சுருச்சோ! ஹஜ்ரத்து கிட்டே சொல்லி உனக்கு நூல் முடிஞ்சு போடனும்" என்று சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் சென்றார் ஜீனத்..

தனது தாயார் இன்னும் இஸ்லாத்தின் அடிப்படையையே சரியாக விளங்க வில்லையே என்று தனக்குள் சிரித்துக் கொண்டவனாக நண்பர்கள் ராகவன் தாஹீரோடு வெளியில் சென்றான்.

ராகவன்: ஏண்டா...ரஹீம். புரோகிதர் செய்யற வேலையை எல்லாம் நீ ஏண்டா செய்யறே!

ரஹீம்: எங்கள் மார்க்கத்தில் அனைவருமே புரோகிதர்கள்தான். அனைத்து காரியங்களையும் அனைவரும் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நபர்கள்தான் செய்ய வேண்டும் என்று சம்பளத்துக்கு ஆட்களை நியமிப்பது முகமது நபி சொன்னதற்கு நேர்மாறான ஒன்று.

ராகவன்: என்னவோ போப்பா...நீ சொல்றது எல்லாம் நல்லாதான் இருக்கு. இப்படி பாத்திஹா எல்லாம் இல்லை என்றால் பாவம் அவர் குடும்பம் நடத்த பணத்துக்கு என்ன பண்ணுவார்?


ரஹீம்: அதற்கு அவரது சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும். தொழுகை நேரம் போக மற்ற நேரங்களில் வேறு வேலைகள் செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றலாமே!

ரஹீம் சொல்வதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டவர்களாக நண்பர்கள் கலைந்தனர்.


(தொடரும்)

ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி)அவர்கள் மரணித்தபோது ஜஃபருடைய குடும்பத்தாருக்கு உணவு தயார்செய்து கொடுங்கள் அவர்கள் கவலையில் இருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

(முஸ்லிம்).

இறந்தவர் வீட்டில் சாப்பாடு தயாரிக்கச் சொல்லி அங்கு சென்றவர்களெல்லாம் சாப்பிடுவதையும் அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறோம் என்ற பெயரில் அடிக்கடி அந்த வீட்டில் கூட்டம் கூடுவதையும் நாங்கள் மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட ஒப்பாரி யின் வகைகளில் ஒருவகையாகவே கருதினோம் என்று நபித்தோழர்கள் கூறுகின்றார்கள்

(அபூதாவூத்)

எனவே நபிவழியைப் பின்பற்றி மரணம் சம்பவித்த வீட்டாருக்கு சமைத்துக் கொடுக்க வேண்டுமே தவிர. அந்த வீட்டில் இறைச்சியும் சோறும் சமைப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.


No comments: