Followers

Monday, November 24, 2014

பழந் தமிழ் இலக்கியத்துக்குள் நுழைவோமா!



பழந்தமிழ் இலக்கியங்களில் காதலன், காதலியை ‘தலைவன், தலைவி’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். தலைவியைப் பிரிந்து தலைவன் பொருள் தேடச் செல்வான். இதற்குப் ‘பொருள்வயிற் பிரிவு’ என்று பெயர். இந்தப் பிரிவுக் காலம் மூன்று மாதங்களைத் தாண்டக் கூடாது. ஆனால் தமிழர்களாகிய நாம் ஒரு ஆண்டும், பலர் இரண்டு ஆண்டுகளும் தலைவியை பிரிந்து வளைகுடாக்களில் வாழ்ந்து வருகிறோம். மனைவி குழந்தை பெற்றோர்களோடு வாழ்ந்து வருபவர்களை நான் குறிப்பிடவில்லை. பெரும்பாலான தமிழர்கள் தலைவியை பிரிந்தே வாழ்கின்றனர்.

இத்துறையில் செலவழுங்கல், பிரிவாற்றாமை, பருவ வரவு, தலைவன் வரவு ஆகிய சூழல்கள் சிறப்பாகப் பாடப்படுகின்றன.

பிரிவு என்பது இளம் காதலருக்கு உயிர்வாட்டம் தருவது. தலைவியின் ஒப்புதலின்றிப் பிரிதல் தலைவனுக்கு இயலாதது. தலைவியின் மெல்லிய உணர்வுகளை உணரும் தலைவன் பிரிவைக் குறிப்பாக உணர்த்துவான். தலைவியின் வாட்டம் கண்டு தன் பயணத்தை நிறுத்துவான். தோழி எடுத்துச் சொல்லவும் பயணத்தை நிறுத்துவான். இதுவே செலவழுங்கல் என்பது. கலித்தொகைப் பாடப் பகுதியில் இதனைக் காணலாம். பொருள் தேடப் புறப்பட்ட தலைவனைத் தடுத்த தோழி அச்செய்தியைத் தலைவியிடம் தெரிவிக்கிறாள்.

‘மரங்கள் பட்டுக்கிடக்கும் காட்டுவழியில் பொருள் தேடிவர நினைக்கின்றாய். இதனைத் தலைவி அறிந்தால் நெஞ்சழிவாள். உயிரை விட்டுவிடுவாள் என்று நான் சொல்லத் தலைவன் பயணத்தை நிறுத்திவிட்டான். எனவே தலைவியே மகிழ்ச்சிகொள்’


வினைவெஃகி நீ செலின் விடுமிவள் உயிரெனப்
புனையிழாய் நின்னிலை யான்கூறப் பையென
நிலவுவேன் நெடுந்தகை நீளிடைச்
செலவொழிந் தனனால் செறிகநின் வளையே.

(கலி. 10, 21-24)


என்று தோழி கூறுகிறாள்.

மரங்கள் பட்டுக் கிடக்கும் காட்டு வழியில் பொருள்தேட புறப்பட்டாலே கலித் தொகை தலைவிக்கு வருத்தம் மேலிடுகிறது. ஆனால் இந்த கால தலைவிகளோ தலைவன் பாலைவன சுடு மணலில் கிடந்து வெந்தாலும் மாதா மாதம் தனக்கு பணத்தை மட்டும் அனுப்பி விடு என்கிறாள். 800 ரியால் 1000 ரியால் என்று குறைந்த சம்பளத்துக்கு வந்து வெயிலிலும் பனியிலும் கஷ்டப்படும் தலைவனின் வலி உணர்ந்தால் ஆடம்பர செலவுகளை தலைவி செய்வாளா? ஒரு உண்மை சம்பவத்தை இனி பார்ப்போம்

ஒரு முறை சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் எனது தாத்தாவை கோலாலம்பூர் பயணம் ஏற்றி விட வந்திருந்தேன். தனது மகளையும் பேரப்பிள்ளைகளையும் பார்க்க ஆவலோடு இரண்டு மாதம் டூரிஸ்ட் விசாவில் செல்கிறார். அருகே வேறொரு வயதானவரும் அமர்ந்திருந்தார். சோகத்தோடு இருந்தார். அவரை வழியனுப்ப வந்த நபரிடம் 'பெரியவர் சோகமாக காணப்படுகிறாரே! ஏன்' என்று கேட்டேன்.

அதற்கு அவர் 'சோகக் கதைங்க. இவருக்கு சரியாக காது கேட்காது. வயதாகி விட்டதால் கண் பார்வையும் மங்குகிறது. பொருள் தேட மலேசியா இனியும் நான் போக மாட்டேன் என்று அடம் பிடித்தார். ஆனால் அவர் மனைவியோ எனக்கு 1000 ரூபாய் பணம் கொடுத்து 'எப்படியாவது இந்த மனுஷனை ஃபிளைட் ஏற்றி அனுப்பி விட்டு வா' என்று அனுப்பியுள்ளர்'

'பிரியமில்லாதவரை இந்த வயதில் அனுப்பலாமா? இது தவறில்லையா'

'தவறுதாங்க.... நானும் அந்த அம்மா கிட்டே சொன்னேன். எனக்கு புத்தி சொல்லாதே! சொன்ன வேலையை செய்' என்று சொல்பவரிடம் நான் என்ன சொல்ல?'

'எந்த ஊரு?'

'மதுரை'

தாத்தாவுக்கு இமிக்ரேஷன் எல்லாம் முடிந்து உள்ளே சென்று விட்டார். வயதானவர் என்பதால் தாத்தாவின் ஃபிளைட் கிளம்பும் வரை நான் காத்திருந்தேன்.

விமானமும் கிளம்பி விட்டது. அரை மணி நேரம் கழித்து அந்த வயதான பெரியவர் மட்டும் சோகத்தோடு வெளியே வந்தார். அழைத்து வந்த இளைஞர் பதற்றத்தோடு 'நீங்க ஃபிளைட் ஏறலையா?' என்று கேட்டார். பெருசு சரியான ஆள்தான். விமான நிலைய கழிவறைக்கு சென்றவர் அரை மணி நேரம் கழித்துதான் வெளியேறியிருக்கிறார். மூன்று முறை விமான நிலையத்தில் தொடர்ந்து இவர் பெயரை கூப்பிட்டுள்ளார்கள். நேரமாகி விட்டதால் இவரது இருக்கையை காலியாகவே வைத்து விமானம் புறப்பட்டு விட்டது. வேண்டுமென்றே இவர் கழிவறையிலேயே அமர்ந்து விட்டார்.

'என்னய்யா இப்படி பண்ணிட்டீங்க? உங்க மனைவி கிட்டே நான் என்ன சொல்லப் போறேன் என்று எனக்கு விளங்கவில்லை'

'நீ ஒன்னும் கவலைப்படாதே! அவளை நான் சமாளிச்சுக்கிறேன்' என்று சொல்லி மதுரைக்கு பஸ் பிடிக்க இருவரும் சென்றனர்.

கலித் தொகையில் வரும் தலைவி தலைவனை பிரிவதை சோகமாக எண்ணுகிறார். ஆனால் இருபதாம் நூற்றாண்டு தலைவியோ தலைவன் வயதான காலத்தில் அந்நிய தேசத்தில் செத்தாலும் பரவாயில்லை: தான் நிம்மதியாக வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். காலம்தான் மனிதர்களை எப்படி எல்லாம் மாற்றுகிறது?

1 comment:

Seeni said...

நல்ல பகிர்வு