Followers

Tuesday, March 28, 2017

119 பேர் மரணமடைந்த குண்டுவெடிப்புகளுக்கு திட்டமிட்டேன்.....119 பேர் மரணமடைந்த குண்டுவெடிப்புகளுக்கு திட்டமிட்டேன்

‘காரவான்’ ஆங்கில இதழுக்காக லீனா கீதா ரெங்கநாத் எனும் செய்தியாளர் தனது குழுவினருடன் அம்பாலா சிறையில் அசீமானந்தாவை பேட்டி கண்டார். 2013ஆம் ஆண்டு நான்கு முறை சந்தித்து, 9 மணி நேரம் 26 நிமிடம் பதிவு செய்தார். தனது பயங்கரவாத செயல்களை வெளிப்படையாக அவர் ஒப்புக் கொண்டதோடு இதற்கு ஆர்.எஸ்.எஸ்.சின் முழு ஆசீர்வாதமும் உண்டு என்று அவர் கூறினார். டெல்லி மாநகர் நீதிமன்றத்திலும் இதேபோல் ஒப்புதல் வாக்குமூலம் தந்த பிறகும் இப்போது டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவரை நிரபராதி என்றும் அவருக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லை என்றும் விடுதலை செய்துவிட்டது.

‘காரவன்’ ஏட்டில் அவரது பேட்டி வெளி வந்தவுடன், வழக்கம்போல் ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் இவை உண்மைக்கு மாறானவை என மறுத்தன. அதைத் தொடர்ந்து அவரது பேட்டியின் ஒலி நாடா இணையத்தில் ஒலிப்பதிவாக வெளியிடப்பட்டது. இப்போதும் http/www.caravanmagazin.in/swamiassemanda-interviews என்ற தளத்தில் அதை கேட்கலாம்.

நரேந்திர மோடியின் முழுமையான ஆதரவு பெற்றவர் அசீமானந்தா. அவர் இப்போது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் ஒப்புதல் வாக்குமூலத்தை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ முழுமையாக வெளியிடுகிறது. அதிர்ச்சி யூட்டும் தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

நாங்கள் பேசப் பேச, அசீமானந்தா மேலும் மேலும் சகஜமாகவும் வெளிப்படையாகவும் பேச ஆரம்பித்தார். அவர் வாழ்க்கை பற்றி அவர் சொன்ன விஷயங்கள் குறிப்பிடத்தக்கவை மட்டுமல்ல மனதை தொல்லை செய்பவையும்கூட. தான் வாழ்க்கையில் பின்பற்றிய கொள்கைகள் பற்றியும், தான் செய்த வன்முறை சம்பவங்கள் பற்றியும் அவருக்கு திமிரான ஒரு பெருமிதம் இருந்தது. நாற்பது வருடங்களாக அவர் ஹிந்து தேசியவாதத்தை ஊக்குவித்தவர். அதில் பெரும் காலத்தை அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பழங்குடியினர் பிரிவான வனவாசி கல்யாண் ஆசிரமத்தில் பணியாற்றுவதில் செலவிட்டு சங்கத்தின் ஹிந்துத்துவ கொள்கையையும் ஹிந்து ராஷ்டிரத் துக்கான பார்வையையும் பரப்பினார். இப்போது அறுபது வயதைக் கடந்துவிட்ட அவர் தன் கொள்கைகளை ஒருபோதும் நீர்க்கவிட்டதில்லை.

காந்தியைக் கொன்ற பிறகு கைதான நாதுராம் கோட்சேவும் அவரது கூட்டாளி நாராயண் ஆப்தேவும் 1949இல் தூக்கிலிடப்பட்டு தகனம் செய்யப்பட்டது அம்பாலா சிறையில்தான். இன்னொரு கூட்டாளியான கோட்சேவின் சகோதரர் கோபாலுக்கு 18 வருட சிறை தண்டனை தரப்பட்டது. ‘என்னை கோபால் கோட்சே இருந்த அதே கொட்டடியில் வைத்திருக்கிறார்கள்’ என்று பெருமையாக சொல்லிக் கொண்டார் அசீமானந்தா. இன்று இந்துத்துவ பயங்கரவாதத்தின் மிகப் பிரபலமான முகம் அசீமானந்தாதான். வெடிகுண்டு நிகழ்ச்சிகள் நடப்பதற்கு பல வருடங்கள் முன்னர் அவரை சந்தித்திருந்த பத்திரிகையாளர்கள் எல்லாரும் என்னிடம் அவரை சகிப்புத் தன்மையே இல்லாத மிகவும் திமிரான ஒரு மனிதர் என்று வர்ணித் திருந்தார்கள். நான் இப்போது அந்த சிறையின் இருண்ட அலுவலக அறையில் சந்தித்தது சிறை வாசத்தால் சாதுவாக்கப்பட்ட, அதே சமயம் தன் செயல்கள் பற்றி எந்த வருத்தமும் இல்லாத ஒருவரை. “எனக்கு என்ன நடந்தாலும், அது ஹிந்துக்களுக்கு நல்லதுதான்” என்று சொன்ன அசீமானந்தா அவருக்கு இந்த வழக்கில் கிடைக்கும் எந்த தண்டனையானாலும், அது ‘ஹிந்துக்களை பொங்கி எழச் செய்யும்’ என்று நம்புகிறார்.

விசாரித்த அத்தனை அமைப்புகளும் இந்த தாக்குதல்களை திட்டமிடுவதில் அசீமானந்தா தான் முக்கிய பங்காற்றியவர் என்று சொல்லியுள்ளன. திட்டமிடும் கூட்டங்கள் நடத்தியது, எங்கே யாரை தாக்க வேண்டும் என்று தேர்வு செய்தது, குண்டு தயாரிப்புக்கு நிதி அளித்தது, குண்டு வைக்கவும் வெடிக்கவும் வேலை செய்தோருக்கு உதவியும் அடைக்கலமும் கொடுத்தது என்று பல வேலைகளைத் தான் செய்ததாக அசீமானந்தாவே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

டிசம்பர் 2010லும் ஜனவரி 2011லும் அசீமானந்தா டெல்லியிலும் ஹரியானாவிலுமாக இரு முறை கொடுத்த சட்டப்பூர்வமான ஒப்புதல் வாக்குமூலங் களில் தான் தாக்குதல்களை திட்டமிட்டதை ஒப்புக் கொண்டிருக்கிறார். இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் தந்தபோது, அசீமானந்தா தனக்கு வழக்கறிஞர் தேவையில்லை என்று மறுத்து விட்டார். ஒவ்வொரு முறை வாக்குமூலம் கொடுப்பதற்கு முன்னரும் அவர் விசாரணை அதிகாரிகள் நெருங்க முடியாத பாதுகாப்பில் 48 மணி நேரம் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். சுயமாக சிந்தித்து மனதை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு அப்போது அவருக்கு இருக்கவே செய்தது. இருமுறையும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட அவர் முடிவு செய்தார். நீதிமன்றத்தில் அதைப் பதிவு செய்தார்.

அவருடைய வாக்குமூலங்களிலும், அவரது இரு கூட்டாளிகளின் வாக்குமூலங்களிலும் இந்த தாக்குதல்கள், ஆர்.எஸ்.எஸ்.சின் மூத்த உறுப்பினர் ஒருவருக்குத் தெரிந்தே இவை திட்டமிடப்பட்டன என்று சொல்லப்பட்டிருக்கிறது.

நன்றி: ‘நரேந்திர மோடி ஆதரவு பெற்ற ஒரு காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்கு மூலம்’ நூலிலிருந்து

(தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர்கள் ஞாநி, நரேன் ராஜகோபாலன்)

No comments: