'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, March 14, 2017
அசீமானந்தா விடுதலை - தீர்ப்பை எழுதியது மோடியா? நீதிமன்றமா?
காவி பயங்கரவாதம் மிக மூர்க்கத்தனமாக செயல்பட ஆரம்பித்து இருக்கின்றது. மோடியின் ஆட்சி முடிவதற்குள் தங்களுடைய அனைத்து சதி வேலைகளையும் நிறைவேற்றிக் கொள்ள திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகின்றது. இந்தியா முழுவதும் மாட்டுக்கறி தின்பவர்களுக்கு எதிராக குறிப்பாக இஸ்லாமிய, தலித், கிருஸ்தவ மக்களுக்கு எதிராக அது மேற்கொண்ட வன்முறைத் தாக்குதல்கள், காவி பயங்கரவாதிகளை விமர்சனம் செய்த எழுத்தாளர்களைக் கொலை செய்தது, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியைத் திணித்தது, செத்த மொழியான சமஸ்கிருதத்தை திணித்தது எனத் தொடங்கிய அதன் பயங்கரவாதம் இப்போது பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடைய கேடி சாமியார் அசீமானந்தா விடுதலையில் வந்து நிற்கின்றது. யார் இந்த அசீமானந்தா? ஒரு ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி, ஐந்து குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவன், 119 பேர் உடல் சிதறி உயிரிழக்கக் காரணமான இந்து பயங்கரவாதி. அப்படி குண்டுவைத்துப் பல பேரை கொன்றதைப் பெருமையாக ஒப்புக்கொண்டவன். அப்படிப்பட்டவனைத்தான் நீதிமன்றம் இப்போது விடுதலை செய்திருக்கின்றது.
2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீர் தர்காவில் குண்டு வெடித்து மூன்று பேர் கொல்லப்பட்டனர், 17 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு சம்மந்தமாக அசீமானந்தா உட்பட 13 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இப்போது இந்த வழக்கில் இருந்து அசீமானந்தா உட்பட 7 பேரை ஜெய்பூர் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது. 3 பேர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இன்னும் மூன்று பேரை பத்துவருடங்களாக தேடிக்கொண்டே இருக்கின்றது. குற்றம் உறுதி செய்யப்பட்டவர்களில் சுனில் ஜோசியும் ஒருவர் ஆவர். இவர் 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். செத்துப்போனவனை குற்றவாளி என்றும், உயிரோடு இருப்பவனை குற்றமற்றவன் என்றும் நீதி மன்றம் விடுவித்துள்ளது. இது ஒன்றும் தற்செயலானது அல்ல. அசீமானந்தா விடுதலை தொடர்பாக நாம் பார்ப்பதற்கு முன்னால் ஏன் மோடி அரசால் திட்டமிட்டு அசீமானந்தா விடுதலை செய்யப்பட்டார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காரவான் இதழில் வெளிவந்த அசீமானந்தாவின் பேட்டியைப் பார்த்தோம் என்றால், இதை ஒரளவு நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
2012 ஜனவரி 10, 2013 ஜூன் 22, 2014 ஜனவரி 9, 2014 ஜனவரி 17 ஆகிய நாட்களில் சிறையில் பத்திரிக்கையாளர் லீனா அவர்களால் எடுக்கப்பட்ட அந்தப் பேட்டியில் அசீமானந்தா ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும், குண்டுவெடிப்புக்கும் உள்ள பல்வேறு திடுக்கிடும் பின்னணியை விளக்கியிருந்தார். மேற்குவங்கத்தில் இருக்கும் ஹூக்ளி மாவட்டத்தில் 1951 ஆம் ஆண்டு பிறந்த அசீமானந்தாவின் இயற்பெயர் நவகுமார் சர்க்கார் என்பதாகும். முதுகலை இயற்பியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது ஈடுபாடுகொண்ட அசீமானந்தவை இப்படி கொலைவெறியனாக மாற்றியது விவேகானந்தரின் சிந்தனைகள் தான். “ஹிந்துமதத்தை விட்டு வெளியே ஒருவன் செல்லும் போது ஒரு ஆள் குறைவது மட்டும் நடக்கவில்லை. எதிரிகள் எண்ணிக்கையில் ஒன்று கூடுவதும் நடக்கிறது” என்ற விவேகானந்தரின் இந்துத்துவா சிந்தனையைப் படித்த அசீமானந்தா தன்னை முழுவதுமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக ஒப்படைத்துக் கொண்டார். தன்னுடைய 31 ஆம் வயதில் சன்யாசியானர். அன்று முதல் தன்னுடைய நவகுமார் சர்க்கார் என்ற பெயரை அசீமானந்தா என்று மாற்றிக்கொண்டார்.
‘அசீமானந்தம்’ என்றால் எல்லையற்ற மகிழ்ச்சி என்று பொருளாம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பழங்குடியினப் பிரிவான வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற அமைப்பில் தன் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்தவர். இதன் மூலம் பழங்குடியின மக்கள் மதம் மாறாமல் தடுத்ததாகவும், கிறித்தவ மிஷனரிகளின் செல்வாக்கை தான் குறைத்தாகவும் அவரே பெருமை பட்டுக் கொள்கின்றார். இவரின் அடிப்படையான நோக்கம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவது கிடையாது, அவர்கள் வேறு மதம் நோக்கி செல்லக்கூடாது என்பதுதான்.
இப்படி வனவாசி கல்யாண் ஆசிரமத்தில் சேர்ந்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த அசீமானந்தா ‘கார்வாப்சி’ செய்வதில் புகழ்பெற்றவர். ஆயிரக்கணக்கான மக்களை இவர் தாய்மதம் திரும்புதல் என்ற பெயரில் இந்து மதத்திற்கு மாற்றியிருக்கின்றார். இதனால் இவர் பெயர் ஆர்.எஸ்.எஸ் வட்டாரத்தில் மிகப்பிரபலம். வெறும் மதத்தைப் பரப்புதல் என்ற எல்லையில் இருந்து முஸ்லிம் மக்களை பழிவாங்க வேண்டும் என்ற திட்டத்துடன் லெப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரீஷத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரக்கியா சிங் தாகூர், இந்தூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜோஷி ஆகியோருடன் சேர்ந்து சதித்திட்டம் செய்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். இதன்படி 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று டெல்லியில் இருந்து பாகிஸ்தான் புறப்பட்ட சம்ஜெளதா விரைவு வண்டியில் குண்டுவைத்தனர். இதில் 68 பேர் உயிரிழந்தனர். அடுத்து 2007 ஆம் ஆண்டு மெக்கா மசூதி அருகே இவர்கள் வைத்த குண்டுவெடித்து 11 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் தர்க்காவில் வெடித்த குண்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 2006 மற்றும் செப்டம்பர் 2008 இல் மலேகானில் நடந்த இரு தாக்குதல்களில் மொத்தம் 37 பேர் உயிழந்தனர்.
இந்தக் குண்டுவெடிப்புகள் அனைத்தும் மோகன் பகவத்தின் ஒப்புதலோடு செய்யப்பட்டது என்பதைத் தன்னுடைய பேட்டியில் அசீமானந்தா கூறியிருக்கின்றார். மோகன் பகவத் தன்னை சந்தித்து “இது நடப்பது மிக முக்கியம். ஆனால் இதில் சங்கம் சம்பந்தப்படாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று தன்னிடம் கூறியதாக அசீமானந்தா தெரிவித்தார். இந்த வழக்கில் மிக முக்கிய குற்றவாளியான சுனில் ஜோஷி 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் 29 அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவரது அம்மா வீட்டருகே மர்ம நபர்களால் துப்பாக்கியில் சுடப்பட்டு உரியிழந்து கிடந்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையை நடத்திவந்த மும்பை பயங்கரவாத தடுப்புப்பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்காரே மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் நவம்பர் 26 அன்று மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆரம்பம் முதல் மர்மமான பல சம்பவங்கள் நடந்துள்ளன. எப்படி மோடி, குஜராத் கலவர வழக்கில் இருந்து பல அசைக்க முடியாத வாக்குமூலங்கள் இருந்தும் மோசடியான முறையில் விடுவிக்கப்பட்டாரோ அதே போல இந்த அசீமானந்தாவும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இப்படி நூற்றுக்கணக்கான பேரை படுகொலை செய்த இந்த ஆர்.எஸ்.எஸ் பொறுக்கி ஒரு கோழையைப் போல ஹரித்வார் அருகே ஒரு கிராமத்தில் பதுங்கியிருந்த போது சி.பி.ஐ ஆல் கைது செய்யப்பட்டான். மறைந்திருந்து தனக்குப் பிடிக்காதவர்களைக் குண்டுவைத்தும், துப்பாக்கியால் சுட்டும் கொலைசெய்யும் இந்தப் பயங்கரவாதக் கும்பல் கோழைகளைப் போல ஓடி ஒளிந்து கொள்கின்றார்கள். தயிர் சோத்தையும், வெண்பொங்கலையும் தின்றுவிட்டு வீரம் பேசும் பொறுக்கிகளின் உண்மையான வீரம் இதுதான். மோகன் பகவத்துக்கு மட்டுமின்றி மோடி போன்றவர்களுக்கும் அசீமானந்தாவின் குண்டுவைப்புச் சதிகள் தெரிந்தே இருந்தன. 2005 டிசம்பரில் அசீமானந்தாவிற்கு ஒரு லட்சம் ரூபாய் விருது, கோல்வாக்கார் நூற்றாண்டையொட்டி கொடுக்கப்பட்டது. இந்த விழாவில் முரளி மனோகர் ஜோஷியும் கலந்துகொண்டார். ஆனால் வழக்கம் போல இப்போது ஆர்.எஸ்.எஸ் காலிகள் அசீமானந்தாவுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னாலும் சொல்வார்கள்.
இந்திய நீதிமன்றங்களைப் பொருத்தவரை ஆர்.எஸ்.எஸ் காலிகளைத் தண்டிப்பதற்கு ஒரு அளவுகோலையும், இஸ்லாமியர்களை தண்டிப்பதற்கு ஒரு அளவுகோலையும் எப்போதும் பயன்படுத்திவருகின்றன. அப்சல் குருவுக்கும், யாக்கூப் மேமனுக்கு ஒரு சட்டப் புத்தகத்தையும், மோடி, அமித்ஷா, அசீமானந்தா போன்றவர்களுக்கு மனுவின் சட்டப் புத்தகத்தையும் வைத்துத் தீர்ப்பு வழங்குகின்றன. இந்திய சமூகத்தின் பொது மனசாட்சி எப்போதும் முஸ்லிம்களின் உயிரையும், தலித்துகளின் உயிரையும் மட்டும் தான் காவு கேட்கின்றது. அது மோடி, அமித்ஷா, அசீமானந்தா போன்றவர்களை கடவுளுக்கு நிகராக பார்க்க பழக்கப்படுத்தப்பட்டு விட்டது. அசீமாந்தா மீது குற்றம் இல்லை என என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இப்போது விடுவித்துவிட்டது. என்.ஐ.ஏ, சி.பி.ஐ போன்றவற்றிற்கு ஆதாரமே இல்லாமல் ஒருவனை சிக்கவைத்து அவன் கதையை முடிக்கவும் தெரியும், அனைத்து ஆதாரங்களும் இருந்தாலும் ஒருவனை அப்பாவி என தப்புவிக்கவும் தெரியும். அதன் வேலையே ஆளும் அரசுக்கு வாலாட்டி வேலை பார்ப்பதுதான். இனிமேல் என்ன நடக்கும், மோடி தன்னுடைய ராஜகுருவுக்கு எதாவது பதவிகள் தந்து அவரை கெளரவப்படுத்தலாம். இல்லை சுனில்ஜோஷி போன்றவர்களுக்கு நிகழ்ந்தது போன்ற நிலைமையை தன்னுடைய கூலிப்படையை பயன்படுத்தி அசீமானந்தாவிற்கும் செய்து முடிக்கலாம். ஆனால் கண்டிப்பாக ஏதாவது ஒன்று நிச்சயம் நடக்கும்.
இது எல்லாம் இந்தியா இனி ஜனநாயக நாடு என்ற கிழிந்து போன முகமூடியையும் கிழித்து எறிந்துவிட்டு அம்மணமாக பார்ப்பன சனாதன தர்மத்தைச் சட்டமாக ஏற்றுக்கொண்ட நாடு என்ற நிலையை எட்டுவதற்கான முன்னோட்டங்கள் ஆகும். இனிமேல் நீதிமன்றங்கள் மூலம் வழக்காடி தங்களுடைய காவிப்படையினரை வெளியே எடுப்பதைவிட நேரடியாக சிறையைத் தகர்த்து, சினிமா படத்தில் வருவது போன்று வெளியே எடுக்கும் நிலை தொலைவில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகின்றது. இனி யாரை எல்லாம் நாங்கள் கொல்லப் போகின்றோம் என்பதை மோடி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் முன்கூட்டியே சொல்லிவிட்டுப் போட்டுத்தள்ளும் காலம் நம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது. வலதுசாரிப் பாசிசம் எல்லாம் ஒரே அணியில் திரண்டு வருகின்றது. ஆனால் இடதுசாரி சித்தாந்தம் தங்களுக்குள் நூற்றுக்கணக்கில் பிளவுபட்டுச் சண்டையிட்டுக்கொண்டு, மறைமுகமாக பாசிச சித்தாந்தத்தின் வெற்றிக்கு துணை செய்துகொண்டு இருக்கின்றது. இந்த நிலை நீடித்தால் அசீமானந்தாக்கள் சட்டத்தின் துணையுடன் அடுத்த குண்டுவெடிப்பை நிகழ்த்தத் தயங்க மாட்டார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
- செ.கார்கி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment