'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, March 28, 2017
'வீடு வாடகைக்குதானே கேட்டேன்? - மனுஷ்ய புத்திரன்
'வீடு வாடகைக்குதானே கேட்டேன்? - மனுஷ்ய புத்திரன்
என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். கிடைக்கவில்லை. என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்?
நான் பதினைந்து வருடங்களாகக் குடியிருந்த வீட்டை அதன் உரிமையாளர் விற்பதால் காலி செய்ய வேண்டிய கட்டாயம். உண்மையில், என் வாழ்வில் அழியாத நினைவுகளைக் கொண்ட வீடு இது. இந்த வீட்டில்தான் ஒருகாலத்தில் நடிகை வடிவுக்கரசி இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றிக்கூட ‘வடிவுக்கரசி இருந்த வீடு’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். ஆனால், ‘மனுஷ்ய புத்திரன் இருந்த வீடு’ என்று யாரோ ஒரு வாசகன் சொல்ல இந்த வீடு இருக்கப்போவதில்லை. இரண்டு வருடங்களுக்குள் இங்கே ஒரு மூன்றடுக்கு ஃப்ளாட் வந்துவிடும்.
கடந்த இரண்டு மாதங்களாக வீடு தேடி அலைகிறேன். நான் வீடு பார்க்கப்போகிற எல்லா இடத்திலும் என்னை வீட்டு உரிமையாளர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ‘டி.வி.யில் உங்க நிகழ்ச்சின்னா விரும்பிப் பார்ப்போம்’ என்று அன்பாகச் சொல்லி காபி கொடுக்கிறார்கள். ஆனால், எல்லா இடங்களிலும் நான் புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு காரணத்தால், எனக்கு வீடு மறுக்கப்படுகிறது.
சார், நீங்க முஸ்லிமா?
ஒரு வீட்டு உரிமையாளர் விளம்பரத்தில் கொடுத்திருந்ததைவிட இன்னொரு மடங்கு வாடகை சொன்னார். கேட்டால், “அது பிரின்டிங் மிஸ்டேக்” என்றார். என்னை நிராகரிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். பிறகு, அதே வாடகை குறிப்பிடப்பட்டு, அதே விளம்பரம் அடுத்த வாரமும் வந்திருந்தது.
நான்கு நாளைக்கு முன்னர் வீடு பார்த்தேன். வீடு எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. வீட்டுத் தரகர் உரிமையாளரிடம் அந்த வீட்டை நான்தான் பார்த்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். வீட்டு உரிமையாளருக்கு ஒரே மகிழ்ச்சியாம். ‘‘அவர் எழுத்தையெல்லாம் படித்திருக்கிறோம்.. அவர் எங்க வீட்டுக்குக் குடிவருவது எங்களுக்குத்தான் பெருமை..’’ என்று அவர் சொன்னதாகச் சொல்லிய வீட்டுத் தரகர் ‘‘நாளைக்கே போய் அட்வான்ஸ் கொடுத்துவிடுவோம்’’ என்றார். அவர் சொன்ன நாளில் வீட்டு உரிமையாளரைச் சந்திக்க நான் ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது தொங்கிய முகத்துடன் தரகர் வந்தார், ‘‘சார், நீங்க முஸ்லிமா? உங்க நிஜப் பெயர் என்ன?’’ என்றார்.
நான் அவரை உற்றுப் பார்த்தேன் ‘‘இல்ல சார், வீட்டு ஓனர்கிட்ட நீங்க முஸ்லிம் என்று யாரோ சொல்லியிருக்காங்க..” என்று இழுத்தார்.‘‘ஏன், நான் அசைவம் என்பதால் கொடுக்க மாட்டார்களா?’’ என்று கேட்டேன். ‘‘அசைவம் எல்லாம் பிரச்சினை இல்லை.. நீங்க முஸ்லிம் என்பதுதான் பிரச்சினை’’ என்றார்.
நான் உடைந்துபோனேன். ஒருவகையில், அந்த வீட்டு உரிமையாளரைப் பாராட்ட வேண்டும். அவர் மற்றவர்களைப் போல மழுப்பாமல், நேரடியாக உண்மையான காரணத்தை நேர்மையாகக் கூறிவிட்டார். நான் எழுதிய இரண்டாயிரம் கவிதைகளை நினைத்துப்பார்த்தேன். மதச்சார்பின்மைக் காகவும் சமூக நீதிக்காகவும் நான் எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்கள், பேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தேன். ஆயிரம் இருந்தென்ன? நான் இப்போது எதுவுமே இல்லை; வெறும் ஒரு முஸ்லிம்… அவ்வளவுதானே!
ஒரு கணம், என் வாழ்க்கையில் நான் எதையெல்லாம் போராடிப் பெற்றேனோ அது அனைத்தும் என்னிடமிருந்து பறிக்கப்பட்ட உணர்வு. நான் இப்போது வெறுக்கப்படும் ஒரு பெயர், ஒரு அடையாளம் மட்டுமே. இரண்டு நாளைக்கு முன்புகூட, மதவாதத்தைப் பரப்புகிற கட்சிகளுக்குத் தமிழக மக்களிடம் எந்த இடமும் இல்லை என்று ஒரு தொலைக்காட்சியில் சவால் விட்டுவிட்டு வந்தேன். ஆனால், என் நம்பிக்கைகள் தோற்றுவிடுமோ என்று இன்று நான் அஞ்சுகிறேன்.
கடக்க முடியாத தண்டனை
நான் என் சொந்தப் பெயரை ஒருபோதும் மறைத்ததில்லை. ‘ஹமீது’ என்றுதான் என்னைப் பல இடங்களில் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். முகநூலில் அந்தப் பெயரில்தான் எழுதுகிறேன். ஆனால், என்னை ‘மனுஷ்ய புத்திரன்’ என்கிற பொது அடையாளத்தில் மட்டும் அறிபவர்கள், என் சொந்தப் பெயரைக் கேட்டதும் அடையும் சங்கடம் என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இத்தனைக்கும் இஸ்லாமியப் பண்பாடு சார்ந்து ஒரு வாக்கியம்கூட என் கவிதைகளில் இல்லை. முகநூலில் என் அளவுக்கு மதவெறியர்களால் தாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரோ சமூகச் செயல் பாட்டாளரோ யாரும் இல்லை. இந்துத்துவா அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இந்தத் தாக்குதலைச் செய்திருக்கிறார்கள்.
மூன்று வயதில் எனக்கு நடக்க முடியாமல்போனது. என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. ஒரு எழுத்தாளனாக, ஒரு ஊடகவியலாளனாக, ஒரு பதிப்பாளனாக, ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவனாக மைய நீரோட்டத்தில் நான் எவ்வளவு கரைந்து நின்றபோதிலும் திடீரென ஒரு குரல் கேட்கிறது.. ‘‘வெளியே போ!’’
என்ன ஆனது பாரம்பரியம்?
சென்னையில் பெரும் வெள்ளம் சூழ்ந்த போது, வீடுகளிலும் கோயில்களிலும் புகுந்த சாக்கடையைச் சுத்தப்படுத்திய இஸ்லாமியர்கள் பாராட்டப்பட்டார்கள். அந்த நல்லுணர்வுகள் சாக்கடைத் தண்ணீரைப் போல இவ்வளவு சீக்கிரம் வடிந்துவிட்டனவா என்று தோன்றியது. வட இந்தியாவில் இருப்பதுபோல தமிழகத் தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் தனித் தனியான குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டிருப்பதில்லை. தமிழகத்துக்கு என்று தனிப் பாரம்பரியமும் நல்லுறவு நல்லுணர்வும் இருக்கிறது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு வீடு தரக் கூடாது என்ற மனோபாவம் இவ்வளவு ஆழமாக இங்கே எப்போது ஊடுருவியது? இல்லாமியர்கள் அசுத்தமானவர்கள், வன்முறை யாளர்கள், தேச விரோதிகள் என்ற பிரச்சாரம் சமூகத்தின் அடியாழம் வரை எப்போது ஆழமாகப் பரவியது? தெரியவில்லை!
எனக்கு ஒரு பெயர் இருப்பதுதான் பிரச்சினையா அல்லது நான் இருப்பதே பிரச்சினையா என்று குழப்பமாக இருக்கிறது. இந்த மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் நான் செய்திருக்கும் வேலைகளுக்காக நான் எந்த பிரதியுபகாரமும் கேட்கவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்? தமிழ்ப் பொதுச்சமூகம் யோசிக்க வேண்டும்.
எனக்கு இங்கு இடமில்லையா என்று இதுவரை கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது முதல் முறையாகக் கேட்கிறேன், ‘‘எங்களுக்கு இங்கு இடமில்லையா?’’
- மனுஷ்ய புத்திரன்,
கவிஞர், பதிப்பாளர்,
நன்றி
தமிழ் இந்து நாளிதழ்
29-03-2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment