Followers

Sunday, March 12, 2017

திருக்குறளில் உள்ள முரண்கள்

கொல்லான் புலால் மறுத்தானைக் கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்.

உயிர்க் கொலை செய்யாமலும், புலால் உண்ணாமலும் ஒழுக்கம் காப்பவனை எல்லோரும் கை குவித்து வணங்குவர்.இவ்விரண்டு அறங்களும் இருந்தால் அவர்களை தேவர்களும் தொழுவர்.

உலகம் முழுவதற்கும் இக் குறளை நடைமுறைப் படுத்த இயலாது. ஆர்டிக் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு புலால் உணவைத் தவிர வேறு மார்க்கம் கிடையாது. பிறகு அவர்கள் எவ்வாறு உயிர் வாழ்வது?கடற்கரை ஓரம் வாழும் மீனவர்கள் தங்கள் தொழிலையும் விட வேண்டி வரும். அடுத்து நம் நாட்டில் காய்கறிகளையே உண்டு வாழும் ஒரு குறிப்பிட்டசமூகத்தாரை எந்த உயிரும் கை கூப்பி தொழுததை நாம் பார்க்க முடியவில்லை.


தன் ஊன் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பானை
எங்ஙனம் ஆளும் அருள்.

தனது உடம்பை வளர்ப்பதற்கு பிற உயிர்களை கொன்று சாப்பிடும் இயல்புடையோன் எங்ஙனம் அருளாட்சி செய்ய முடியும்? உடம்பை வளர்க்க புலால் தேவையில்லை. சைவ உணவே சிறந்தது என்பது கருத்து.

சைவம் சாப்பிட்டவர்கள் எல்லாம் அருளாட்சி செய்ததாக நாம் வரலாறுகளில் பார்க்க முடியவில்லை.அறிவியல் முடிவின் படி காயகறிகளுக்கும் உயிர் இருப்பதை நாம் ஒத்துக் கொண்டிருக்கிறோம். பிறகு மனிதன் எதைத்தான் சாப்பிடுவது? மான்,ஆடு,மாடு போன்ற மிருகங்களை புலி, சிங்கம் போன்றவை அடித்து சாப்பிடாமல் விட்டால் அவைகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிகாடுகள் அழியும் அபாயமும் உண்டு. புலால் உணவில் தான் புரோட்டீன் போன்ற சத்துக்கள் உள்ளதாகவும் அறிகிறோம். அனைத்து மனிதர்களும் சைவம் சாப்பிட ஆரம்பித்து விட்டால் காய்கறிகளின் விலை தாறுமாறாக ஏறி விடும் அபாயமும் உண்டு. எனவே இந்தக் குறளும் இந்த அதிகாரத்தில் புலால் உண்ணுதலுக்கு எதிராக வருகிற குறள்களும் உலகத்தார் அனைவருக்கும் நடைமுறைப் படுத்த இயலாதவைகளாகும்.

கல்லாதான் சொல்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதான் பெண்கமுற் றற்று.

படிப்பு சிறிதும் இல்லாத அறிவிலி ஒரு சபையில் பேச விரும்புவது, மார்புகள் இல்லாத ஒரு பெண் காதலை விரும்புவது போன்றதாம். அவள் விருப்பம் நிறைவேறாது.

பெண்களை இதை விட கீழாக இழிவு படுத்த முடியாது. அறிவாளிக்கு உதாரணம் சொல்ல உலகில் எத்தனையோ இருக்க புனிதமான பெண்களின் மார்பு தானா வள்ளுவருக்கு கிடைத்தது?ஹார்மோன்கள் அதிகம் சுரக்காதவர்களுக்கு மார்பு சிறிதாக இருப்பது இயற்கை. இதனால் அந்தப் பெண் இல்லறத்துக்கு தகுதி இல்லாதவள் என்றாகி விடுமா? இந்தக் கருத்தும் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.


கண்டது மன்னும் ஒருநாள் அலர்மண்ணும்
திங்களை பாம்பு கொணடற்று

'நான் என் காதலரை கண்டது ஒரு நாள்தான். அதனால்உண்டான உணர்வோ, நிலாவை பாம்பு கவ்வியது போல் எங்கும் பரவியுள்ளது.

அறிவியல் வளராத காலத்தில் சொல்லப் பட்ட ஒரு கதையை கேட்டு விட்டு உதாரணத்திற்கு சந்திர கிரகணத்தை எடுத்தெழுதியுள்ளார். பாம்பு சந்திரனை விழுங்கியதால்தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்ற கருத்து தற்போதய அறிவியலோடு மோதக் கூடிய கருத்தாகும்.


வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ள தும்மினீர் என்று

'நான் தும்மினேன் வழக்கம் போல் அவள் வாழ்த்தினாள். அங்ஙனம் வாழ்த்தியவளே தன் கருத்தை மாற்றிக் கொண்டு உம் காதலியருள் யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்.

தும்மல் என்பது உடம்பில் ஏற்படும் அலர்ஜியினால் வருவது. யாரோ நம்மை நினைப்பதால் தான் இந்த தும்மல் வருகிறது என்பது மூடப் பழக்கங்களை ஊக்குவிப்பதாகும். பெண்கள் எதற்கெடுத்தாலும் சந்தேகம் கொள்ளக் கூடியவர்கள் என்ற எண்ணத்தையும் இந்த குறள் ஏற்படுத்துகிறது.


இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.

'இப்பிறப்பில் நாம் ஒரு போதும் பிரிய மாட்டோம் என்று கூறினேனாக. மறு பிறப்பில் பிரிந்து போவேன் என்று சொன்னதாகக் கருதித் தன் கண்கள் நிறையக் கண்ணீரை பெருக்கி விட்டாள்.

புராணங்களில் சொல்லப் பட்ட மறு பிறவி கதைகளை நம்பி இக் குறளில் மறு பிறவி என்று ஒன்று உண்டு என்று வள்ளுவர் சொல்ல வருகிறார். இந்த குறளிலும் எனக்கு உடன் பாடு இல்லை.


இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு

ஒருவன் ஒருத்தியை மணந்து இல்லறம் நடத்துவதன் நோக்கமே, வரும் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதற்க்காகவே ஆகும். விருந்தோம்பல் ஒரு அறமாகவே கருதப்படும்.

விருந்தினரை உபசரிப்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் ஒருவன் மனைவியை அடைவதன் நோக்கமே விருந்தினரை உபசரிப்பதற்காகத்தான் என்ற வாதத்தை எவரும் ஒத்துக் கொள்ளார். இந்த குறளின் கருத்திலும் நான் மாறுபடுகிறேன்.

இது போன்று எழுதுவதால் திருக்குறளை நான் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் நினைக்க வேண்டாம். இந்திய இலக்கியங்களிலேயே ராமாயணம், பகவத் கீதை, சிலப்பதிகாரம் போன்ற நூல்களையெல்லாம் விட மிக உயர்ந்த தரத்தில் வைக்கப் பட வேண்டியது திருக்குறள் என்பது என் எண்ணம். அதுவும் திருவள்ளுவர் தந்த திருக்குறள் தமிழில் உள்ளதால் தமிழன் என்ற முறையில் பெருமையும் அடைகிறேன்.

No comments: