பத்தாம் நூற்றாண்டு ஆய்வாளரான இப்ன் அல் ஹைதம்
பெரிதும் மதிக்கப்படும் நூலாசிரியரும், பல்வேறு விருதுகளை வென்றவருமான ப்ராட்லி ஸ்டிவன்ஸ் (Bradley Steffens), பத்தாம் நூற்றாண்டு ஆய்வாளரான இப்ன் அல் ஹைதம்-மை உலகின் முதல் விஞ்ஞானி என வர்ணித்து நூல் எழுதினார் (படம் 1). பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த நூல் அறிவியல் உலகில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இப்ன் அல் ஹைதம்-மிற்கு முன்பு விஞ்ஞானிகள் இல்லையா? ஏன் இவரை முதல் விஞ்ஞானி என்றார் ஸ்டிவன்ஸ்? காரணம் மிகவும் சுவாரசியமானது.
முஸ்லிம்கள், அறிவியல் ரீதியாக, இவ்வுலகிற்கு அளித்த பங்களிப்புகளிலேயே மிகச் சிறந்த கண்டுபிடிப்பு என்றால் அது 'அறிவியல் அணுகுமுறை' என்ற யுக்தி தான். ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்த முயற்சிக்கிறோம் என்றால், அதனை நோக்கிய பயணம் எப்படியாக இருக்க வேண்டும் என்று விளக்குவது தான் 'அறிவியல் அணுகுமுறை'யாகும். அறிவியலை எப்படி அணுகினால் நல்ல முடிவை பெறலாம் என உலகிற்கு முதன்முதலில் தெள்ளத்தெளிவாக சொல்லி கொடுத்தவர்கள் இஸ்லாமிய ஆய்வாளர்கள் தான்.
இவர்களின் பெரும்பாலான ஆய்வுகள் நன்கு சிந்திக்கப்பட்டு, வரைமுறைகள் வகுக்கப்பட்டு, கவனமாக கண்காணிக்கப்பட்டு, பல செய்முறைகள் செய்யப்பட்டு, முடிவுகள் நன்கு ஆராயப்பட்டு, ஆராயப்பட்ட முடிவுகள் தெளிவாக புத்தகங்களில் எழுதப்பட்டு வெளிவந்தன. இதிலுள்ள மிகப் பெரும் பயன் என்னவென்றால், அவர்களுடைய நூல்களை எதிர்காலத்தில் படிப்பவர்கள், முஸ்லிம் விஞ்ஞானிகள் செய்த செய்முறைகளை தாங்களும் செய்து அவர்களுடைய ஆய்வுகளை சரிபார்த்துக் கொள்ளலாம். இதனாலேயே நவீன அறிவியல் முஸ்லிம்களிடத்திலிருந்து தான் துவங்கியது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கான சரியான உதாரணம் நாம் மேலே பார்த்த இப்ன் அல் ஹைதம் தான். இயற்பியலின் முக்கிய பிரிவான ஒளிவியலில் இன்றியமையாத பங்களிப்பை அளித்தவர் அல் ஹைதம். இதனாலேயே ஒளிவியலின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். நாம் ஒரு பொருளை பார்க்கிறோமென்றால் அதற்கு காரணம், அந்த பொருளில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் நம் கண்களை எட்டுவதுதான் என்பதை கண்டுபிடித்தவர் இப்ன் அல் ஹய்தம். இது ஒரு புரட்சிகர கண்டுபிடிப்பு. ஏனென்றால் அன்றைய உலகம் எப்படி நம்பிக்கொண்டிருந்தது என்றால், நாம் ஒரு பொருளை பார்ப்பதற்கு காரணம், நம் கண்களில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் அந்த பொருளை எட்டுவதுதான் என்பது.
தன் கண்டுபிடிப்பை நிகழ்த்த பின்பற்றிய அனைத்து முறைகளையும், உத்திகளையும், முடிவுகளையும் தெள்ளத்தெளிவாக எழுதி வைத்தார் அல் ஹைதம். ஒளியியல் பற்றி அவர் எழுதிய நூல் 'கிதாப் அல் மனாசிர்' என்பதாகும் (படம் 2). இன்றைய அறிவியல் உலகம், ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்த எப்படியான அணுகுமுறையை பின்பற்றுகிறதோ அதனை முதன்முதலில் சொல்லிக்கொடுத்தவர் அல் ஹைதம் என்பதால் தான் அவரை முதல் விஞ்ஞானி என்று அழைத்தார் ப்ராட்லி ஸ்டிவன்ஸ்.
இந்த 'அறிவியல் அணுகுமுறை' யுக்தியை இப்ன் அல் ஹைதம்-மிற்கு பின்னால் வந்த மற்ற இஸ்லாமிய விஞ்ஞானிகளும் பின்பற்றிய காரணத்தினாலேயே அவர்களுடைய பல்வேறு கண்டுபிடிப்புகள் இன்றும் நிலைத்து நிற்கின்றன, அவற்றின் பலன்களை நாமும் இன்று வரை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 'இஸ்லாமிய அறிவியல் பொற்காலம்' குறித்த பிபிசி ஆவணப்படத்தில், சர்ரே பல்கலைக்கழக இயற்பியல்துறை பேராசிரியரான ஜிம் கலிலி பின்வருவதை கூறுகிறார்.
'என்னை பொறுத்தவரை, அறிவியல் அணுகுமுறை தான், மனித குலத்தால் கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகச் சிறந்த யுக்தியாகும். வேறெந்த யுக்தியின் மூலமாகவும் அகிலம் எப்படி வேலை செய்கிறது என்றோ அல்லது வேறு பல எப்படி வேலை செய்கின்றன என்றோ சொல்ல முடியாது. அதனால், நீங்கள் அடுத்த முறை பயணம் மேற்கொள்ளும்போதோ அல்லது கைப்பேசியில் பேசும்போதோ அல்லது தீவிரமான நோய்க்கு மருத்துவம் பார்க்கும்போதோ, இப்ன் அல் ஹய்தம், இப்ன் சினா, அல் பிருணி மற்றும் எண்ணற்ற இஸ்லாமிய அறிஞர்களை நினைவில் கொள்ளுங்கள். அவர்களால் அனைத்திற்கும் பதில் சொல்ல முடியாமல் போயிருக்கலாம், ஆனால் நிச்சயமாக எப்படி சரியான கேள்வியை கேட்பது என்று நமக்கு கற்றுக் கொடுத்தது அவர்கள்தான்'
சகோ Aashiq Ahamed அவர்களின் பதிவிலிருந்து....
1 comment:
இவரது பெயரை இதுவரை கேள்விப்பட்டதேயில்லை. நல்ல தகவல். சதா ஒருவரை முஸ்லீம் என்று அடையாளப்படுத்தத் தேவையில்லை.பாக்கிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல்சலாம் இந்தியாவிற்கு வந்தபோது தான் ஒரு அஹமதி முஸலீம் என்ற கருத்து அதிக முக்கியத்துவம் பெற்றது குறித்து மிகவும் வருந்தினாா்.
பத்தாம் நூற்றாண்டு ஆய்வாளரான இப்ன் பிறந்த நாடு போன்ற விபரங்களை மறைத்தது ஏன் ?
ஹிந்துஸ்தானத்தில் பிறந்த மக்களின் விஞ்ஞான சாதனைகளை என்றாவது பதிவு செய்ததுண்டா ? அதில் பெருமிதம் கொண்டதுண்டா ?
அரேபிய அடிமைகள் அரேபியர்கள் அல்லது அரேபிய அடிமைகளைப் பற்றிதான் பதிவிடுவார்கள். பிறமதத்தவர்கள் சாதனை செய்தால் அங்கிகரிக்க மாட்டாா்கள். முஸ்லீம்கள் ஆபத்தானவர்களாக மாறுவது இப்படித்தான்.
Post a Comment