கல்விக் கண்ணைத் திறக்கும் சவூதி - இரண்டு
இதன் முந்தைய பதிவில் வகுப்புகளின் நேரம், பாடங்கள் பற்றி பாரத்தோம். இதில் பயிலும் மாணவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள்) அனைவரையும் இலவசமாகவே ஹஜ்ஜூப் பயணத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். இதே பயணத்திற்கு வெளியில் ஏற்பாடு செய்து சென்றால் 1500 அல்லது இரண்டாயிரம் ரியால் வரை செலவு பிடிக்கும். இந்த கல்விக் கூடங்களின் செலவினங்களுக்கு அரசாங்கமே பணத்தை ஒதுக்கி விடுகிறது. ஒரு சில கோடீஸ்வரர்களும் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை இதற்கு செலவு செய்து புண்ணியத்தை தேடிக் கொள்கிறார்கள். அந்த ஹஜ்ஜூப் பயணத்தின் அனுபவங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
மெக்கா புறப்பட ஆறு மினி வேன்கள் தயார் நிலையில் நின்றன. விடியற்க்காலைத் தொழுகை (பஜ்ர்) யுடன் கிளம்ப வேண்டும் ஆதலால் நாங்கள அனைவரும் இரவே கல்விக் கூடத்துக்கு வந்து விட்டோம். இரவு சாப்பாடு முடிந்தவுடன் பள்ளியில் உள்ள மினி தியேட்டருக்கு அழைத்துச் செல்லப் பட்டோம். அங்கு கணிணியின் உதவி கொண்டு பவர் பாயிண்டில் ஹஜ்ஜூ என்றால் என்ன? எப்படி முகமது நபியின் கட்டளைப்படி கிரியைகளைச் செய்வது போன்ற விளக்கங்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டன. அதன் பிறகு உறக்கம். ஒரு சிலரின் குறட்டைச் சப்தத்தால் சிறிது தூக்கம் தடை பட்டாலும், அதையும் மீறி அசதியில் நன்றாக தூங்கினோம்.(எவ்வளவோ விஞ்ஞானம் முன்னேறினாலும் இந்த குறட்டைக்கு இதுவரை ஏன் நம் விஞ்ஞானிகளால் ஒரு விடிவு காணப்படவில்லை?)
காலைத் தொழுகை முடிந்தவுடன் பயணம் ஆரம்பமானது. ஆறு வேன்களிலும் 'மன்னர் பஹதின் கௌரவ விருந்தாளிகள் ' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட துணி பேனர்கள் மின்னின. உண்மையும் அதுதான். இந்த கல்விச் சாலைகள் மூலம் செல்பவர்கள் மன்னரின் கௌரவ விருந்தினர் என்ற அந்தஸ்த்தைப் பெறுகின்றனர். இருபது லட்சம் மக்கள் கூடும் நிகழ்ச்சியில் எங்கு சென்றாலும் எங்களுக்கு எந்த தடையும் இல்லை.தங்கியிருக்கும் பத்து நாட்களுக்கும் அனைத்து இடங்களிலும் எங்களுக்காக டெண்ட் போடப்பட்டுமுன் பதிவு செய்யப் பட்டு இருக்கும். இதற்கெல்லாம் முதற்கண் நன்றியை இறைவனுக்கு தெரிவித்து விட்டு எங்களின் பயணத்தைத் தொடர்ந்தோம்.
பயணத்தின் வழி நெடுக கேள்வி பதில் எங்கள் ஆசிரியர்களால் நடத்தப்பட்டது. உஸாமா பின் லாடனிலிருந்து இந்திய அரசியல் வரை அலசப் பட்டது.
முகமது சுல்தான் என்ற சவூதி பேராசியர் ஜிஹாதைப்(புனிதப் போர்) பற்றி ஓரு பிரசங்கம் செய்தார்.அவர் தன்னுடைய பேச்சில் ' ஜிஹாத் என்ற புனிதப் போரை பலரும் தங்கள் இஷ்டத்துக்கு வளைக்கிறார்கள். ஒரு மனிதனின் உயிரை எடுக்க எந்த தனி மனிதனுக்கும் உரிமையில்லை. உங்களை ஒருவன் கொல்ல வரும்போதும், உங்களின் குடும்பத்தை ஒருவன் அநியாயமாக அழிக்க வரும்போதும் மட்டும்தான் தற்காப்புக்காக ஆயுதத்தை எடுக்கலாம். இது தவிர வேறு காரணங்களுக்கு ஒருவன் தன்னிச்சையாக ஆயுதம் ஏந்தினால், அவன் தவறாக இஸ்லாத்தின் பெயரால் வழிகாட்டப் பட்டுள்ளான். அவனுடைய செயலுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுபோன்றவர்களால்தான் சாந்தியும் சமாதானத்தையும் போதிக்கும் இஸ்லாத்துக்கு உலகில் கெட்ட பெயர் ஏற்படுகிறது' என்று விளக்கினார்.ஜிஹாத் சம்பந்தமாக பலரும் பல கேள்விகளைக் கேட்டனர். அது அத்தனைக்கும் ஆதாரபூர்வமான முகமது நபியின் வார்த்தைகளையும்(ஹதீதுகள்), குர்ஆன் வசனங்களையும் எடுத்துக் காட்டி விளக்கினார்.இந்த நீண்ட தூர பயணம் கேள்வி பதில் நிகழ்ச்சியிலேயே சென்றது. இப்படியே நீண்ட பயணம் முடிவில் மக்கா நகரில் உள்ள மினா என்ற இடத்தில் முடிந்தது. எங்களுக்காக ஒதுக்கப்பட்ட கூடாரங்களில் தங்க வைக்கப் பட்டோம். ஓய.வு எடுத்தப்பிறகு பலவேறு தலைப்புகளில் ஹஜ்ஜைப் பற்றிய சொற்பொழிவுகள் நடத்தப்பட்டது.தம்மாம்,ரியாத்,கஸீம், நஜ்ரான் போன்ற ஊர்களில இருந்து அரசு செலவில் வந்தவர்கள் அனைவரும் ஒரே இடங்களில் தங்க வைக்கப் பட்டோம்.எங்களுக்கு மிக அருகிலேயே நம் ஊர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தோடு தங்கியிருப்பதாக சொன்னார்கள். பார்த்துப் பேச ஆவல் இருந்தாலும் வந்த வேலை ஹஜ் என்பதால் அந்த ஆர்வத்தை மூட்டை கட்டி வைத்து விட்டோம்.இது பற்றிய மேலும் சில செய்திகளை அடுத்த பதிவில் காண்போம் இறைவன் நாடினால்.
No comments:
Post a Comment