சுப்ரமணியபாரதியும் இஸ்லாமும.
பள்ளித் தலம் அனைத்தும கோவில் செய்குவோம், திக்கை வணங்கும் துருக்கர், தில்லி துருக்கர் செய்த பழக்கமடி என்றெல்லாம் சொல்லி கருத்துகளை திரித்து பாரதியை ஒரு இஸ்லாமிய எதிர்ப்பாளராகத்தான் நம் ஊடகங்கள் நமக்கு காட்டியுள்ளன. நானும் 'பாஞ்சாலி சபதம்' படிக்கும் காலங்களில் இவர் ஒரு சார்பு உடையவரோ என்று நினைத்ததுண்டு. இருந்தும் அவருடைய எழுத்து நடை, வார்த்தைகள் போர்க் குணத்துடன் விழுகின்ற பாங்கு, சொல்ல வருவதை எளிமையாக சொல்வது போன்றவற்றால் அவர் கவிதைகளை ஒரு வெறியுடன் படித்த காலமெல்லாம் உண்டு. நம் தாய் மொழிப் பற்று, நம் நாட்டின் உயர்வில் அவருக்கு இருந்த ஆவல் போன்றவற்றை எல்லாம் படிக்கும் போது சில நேரங்களில் என் உடல் சிலிர்க்கும்.
சமீபத்தில் இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது சில அரிய தகவல்களை திரு மாலன் பாரதியைப் பற்றி எழுதியிருந்தார். அதைப் படித்தவுடன் பாரதியைப் பற்றிய என் எண்ணம் மேலும் உயர்ந்திருக்கிறது. இந்த பதிவில் பாரதி ஒரு இடத்தில் மன்னர் அக்பரை பூஜிக்க வேண்டும் என்று சொன்னதில் நான் மாறுபடுகிறேன். நம்மைப் படைத்த இறைவனைத் தவிர வேறு யாரும் பூஜிக்கத் தக்கவர்கள் அல்ல என்பது என் கருத்து.அதோடு வேறொரு இடத்தில் முகமது நபி தன் கனவில் வந்து சொன்னதாக பாரதி சொல்கிறார். முகமது நபி காலத்தில் அவரை நேரில் பார்க்காத எவரும் கனவிலும் பார்க்க முடியாது என்பது முகமது நபியின் கூற்று. எனவே பாரதி கனவில் வேறு யாரையோ பார்த்து விட்டு இவர் முகமது நபியாக இருக்கலாமோ என்று நினைத்திருக்கலாம். மேலும் தற்போது கிடைப்பது போல் எளிய தமிழில் குர்ஆன் அந்த காலத்தில் பாரதிக்கு கிடைத்திருந்தால் அவர எண்ணங்களில் பல மாற்றங்கள் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். திரு மாலனின் பதிவை அப்படியே தருகிறேன். உங்களின் கருத்துக்களையும் சொல்லுங்களேன்.!
பாரதியும் இஸ்லாமும்மாலன்
" மாரியம்மனிலிருந்து மகாவிஷ்ணு வரை எல்லாக் கடவுள்கள் மீதும் பாடல்கள் எழுதுகிறார். வேதத்தைப் புகழ்கிறார். உபநிஷதங்களின் அடிப்படையில் புதுக் கவிதை படைக்கிறார். கீதையை மொழி பெயர்க்கிறார். ஒருவேளை பாரதியார் என்னைப் போல இந்துத்வா ஆளோ? இஸ்லாம் பற்றி என்ன சொல்கிறார் 'உங்க' பாரதியார்?" என்று வம்பளக்க வந்தார் என் பக்கத்து வீட்டுக்காரர்.
ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் நேரம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போரடிக்கத் துவங்கியிருக்க வேண்டும். வம்புக்கு அலையும் அவர் என் வாயைக் கிளற வந்திருந்தார்.
"சொல்கிறேன், சொல்கிறேன். ஆனால் சொன்னால், அதை உம்மால் தாங்க முடியுமா என்றுதான் எனக்குக் கவலை"
"அப்படி என்ன ஐயா அதிர்ச்சி கொடுக்கப்போகிறீர்?"
"சொல்லட்டுமா? சொல்வதைக் கேட்டுவிட்டு, என்னைத் திட்டினால் கூட பரவாயில்லை. பாரதியைத் திட்டினால் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன்"
"சும்மா பூச்சி காட்டாதீரும். சொல்லும் அதையும்தான் கேட்போம்"
"நீங்கள் தினமும் பூஜை செய்து, விழுந்து கும்பிடுகிறீர்களே, அந்தக் கடவுள், அல்லாதான் என்கிறார்" என்றேன். என் இந்து நண்பர் முகத்தை சுருக்கினார்.கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், " என்ன சொன்னீர் மறுபடி சொல்லும்" என்றார்.
"பிரம்மம், பிரம்மம் என்று நீங்கள், அதாவது இந்துக்கள், சொல்கிறீர்களே அந்த பிரம்மம் அல்லா என்கிறார் பாரதியார்."
"நிஜமாவா? இல்லை நீர் கயிறு திரிக்கிறீரா?"
நான் என் மேஜை மீதிருந்த தராசு என்ற புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அது பாரதியார் எழுதிய நூல்களில் ஒன்று:
நேற்று பட்டணத்திலிருந்து ஒரு சாமியார் நம்ம கடைக்கு வந்திருந்தார்.அவர் சொன்னார்: ஹிந்துக்களுடைய வேதம் மிகவும் பழமையானது. அதிலும் நம்ம குரானைப் போல அல்லாவைத்தான் புகழ்ந்து பேசுகிறது. ஆனால் அல்லா என்கிறதற்கு அவர்களுடைய பாஷையிலே ப்ரஹ்ம என்கிறார்கள். அதில் ரிஷிகள் என்று பாடினவர்கள் அல்லாவினுடைய உண்மையை அறிந்தவர்கள்"
பக்கத்து வீட்டுக்காரர் புத்தகத்தை வாங்கிப்பார்த்தார்." இது பாரதியாரின் ஒரு பாத்திரத்தின் கூற்று. இதை எப்படி பாரதியின் கூற்றாக எடுத்துக் கொள்ள முடியும்?" என்று கேள்வி போட்டார். என்னை மடக்கி விட்டதாக அவருக்கு ஒரு பூரிப்பு.
"சரி, உமது திருப்திக்கு அப்படியே வைத்துக் கொள்ளும். ஆனால், அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய முகம்மதிய ஸ்திரீகளின் நிலமை என்ற கட்டுரையில், ' பரமாத்மாவான அல்லா ஹீத்த ஆலா அருள் புரிவாராக' என்று எழுதியிருக்கிறார். அது மட்டுமல்ல, இன்னொரு இடத்தில் இந்தியாவில் உள்ள இந்துக்கள் அக்பரை பூஜிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே அதற்கு என்ன சொல்கிறீர்?"
"இது என்ன புதுக் கதை?"
"இது கதை அல்ல. கதை போன்ற நடையில் எழுதப்பட்ட கட்டுரைகளில் சொல்லப்படுவதையே பாத்திரத்தின் கூற்று என்று தள்ளிவிடுகிற ஆள் நீங்கள்.அதனால் பாரதியாரின் கட்டுரை ஒன்றிலிருந்து வாசித்துக் காட்டுகிறேன். அதை நீர் அவருடைய கூற்று அல்ல என்று மறுக்க முடியாது."
"படியுமேன். கேட்போம்"
"நமது நாட்டில் தோன்றி நமது நன்மைக்குப் பாடுபட்ட மகான்களை எல்லோரும் ஒன்று சேர்ந்து பூஜிப்பதே நமது கடமை. இதை நாமெல்லோரும் நமது முகமதிய சகோதரர்களுக்குக் காரியத்தில் காட்ட, அக்பர் போன்ற மகமதிய மகான்களின் உற்சவத்தைக் கொண்டாட வேண்டும்"
"மதங்களிடையே சமரசம் நிலவ வேண்டும் என்ற கருத்தில் இதை சொல்லியிருப்பார். அக்பரை அவர் குறிப்பிட்டிருப்பதே அதற்குச் சான்று. அவர் இந்துக்களோடு நட்புப் பாரட்டியவர் அல்லவா?"
" 'மகமதிய சாஸ்திரங்களைப் படித்தால் இந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்' என்கிறார் பாரதியார். அதையாவது நம்புவீரா?"
"நீர் சொல்வதைப் பார்த்தால் கைவசம் ஆதாரம் வைத்திருக்கிறீர் என்று நினைக்கிறேன். எங்கே எடுத்து விடும் பார்ப்போம்"
நான் படித்துக் காட்டினேன்:" எல்லா வித்தைகளும் கலந்தால்தான் தேசத்தினுடைய ஞானம் பரிமளிக்கும். கலந்தால் பொது இன்பம். ஒன்றை ஒன்று கடித்தால் இரண்டுக்கும் நாசம். முகமதிய சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டால் ஹிந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்."
"அதையெல்லாம் பாரதியார் படித்திருக்கிறாரா?"
"படித்திருக்கிறார் என்பது மட்டுமல்ல. அவற்றைப் பற்றி சரளமாக, தெளிவாகப் பேசுகிறார். மதங்கள் பற்றிய கட்டுரைகளில் மட்டும் அல்ல, அரசியல் பேசும் போதல்ல, பொது விஷயங்கள் பேசும் போது கூட அவற்றைக் குறிபிடுகிறார். நம்பிக்கையே காமதேனு என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பதைப் படியுங்கள். முகமது நபியின் வாழ்க்கை சரித்திரத்தை இத்தனை சுருக்கமாக தெளிவாக இஸ்லாமியர் அல்லாத இன்னொருவர் எழுத முடியுமா என்று வியந்து போவீர்: "பழைய பொய்ச் சிலைகளின் வணக்கத்தை ஒழித்து எங்கும் வியாபித்து நிற்கும் பிரம்மத்தையே தொழ வேண்டும் என்று முகமது நபி அலகிவஸ்லாம் அவர்கள் ஒரு புதிய மதம் உண்டாக்கினார் என்ற கோபத்தால், குராயிஷ் கூட்டத்தார் அவருடைய சிஷ்யர்களைப் பயமுறுத்தியும், கொலை செய்தும் அடக்கிவிட்டு நபியையும் கொல்ல வேண்டுமென்ற சதி செய்து கொண்டிருக்கையிலே அந்த மகான் மெக்கா நகரத்திலிருந்து தப்பி மெடீனா நகரத்திற்குச் செல்லும் போது, பின்னே அவரைப் பிடிக்கும் பொருட்டாகக் குராயிஷ் குதிரைப்படைத் துரத்திக் கொண்டு வந்தது. நபியானவர் தம்மோடு வந்த ஒரே சிஷ்யருடன், அங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்தார். துரத்தி வரும் குதிரைகளின் காலடி சமீபமாகக் கேட்டது. சிஷ்யன் பயந்து போய், "இனி என்ன செய்வது?" என்று தயங்கினான். அப்போது நபி, " அப்பா, நான் அல்லாவின் தர்மத்தை நிலை நிறுத்தும் பொருட்டாக வந்திருக்கிறேன். என் காரியம் நிறைவேறும் வரை எனக்கு மரணம் இல்லை." என்று சொல்லி அபயதானம் செய்தார். ஆபத்து வரவில்லை. குதிரைப்படையோர் இடம் தெரியாமல், ஏமாறித் திரும்பினார்கள். முகமது நபி பின்னிட்டுக் காலானுகூலம் பெற்று அந்த ராஜ்யத்துக்கெல்லாம் தானே ராஜேஸ்வரராய், தமது தரிசனத்தை என்றும் அழியாமல் நிலை நிறுத்திச் சென்றார். நம்பிக்கையே காமதேனு. அது கேட்டவரமெல்லாம் தரும்"
"கட்டுரைகளில் ஆங்காங்கே இஸ்லாம் பற்றிக் குறிப்பிட்டுள்ள பாரதி, கவிதைகளிலோ, கதைகளிலோ இஸ்லாமியர்கள் பற்றி எழுதியிருக்கிறாரா?"
பாரதியினுடைய முதல் சிறுகதையும், கடைசி சிறுகதையும்
இஸ்லாமியர்களைப் பற்றியதாகவே அமைந்தது ஒரு தற்செயலான ஒற்றுமை. அவர் ஆசிரியராக இருந்த சக்ரவர்த்தினி என்ற பெண்கள் முன்னேற்றத்திற்கான இதழில், 1905ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது முதல் கதை வெளியாயிற்று. துளசிபாயீ என்ற அந்தக் கதை உடன் கட்டை ஏற நிர்பந்திக்கப்பட்ட ஒரு ராஜபுத்திரப் பெண்ணை அப்சல்கான் என்ற முகமதிய இளைஞன் காப்பாற்றிக் காதலித்து மணம் செய்து கொள்வதைச் சொல்லும் கதை. இந்தக் கதை பிரசுரமாகிய காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் ஒரே மதத்திற்குள், ஒரே ஜாதிக்குள் காதல் என்பதே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பாரதியாரோ, முரண்பட்டதாகக் கருதப்பட்ட இரு மதத்தைச் சேர்ந்தவர்கள் காதலிப்பது, ஒரு இந்து விதவையை இஸ்லாமிய இளைஞன் ஏற்று வாழ்வளிப்பது, உடன்கட்டை என்ற வழக்கத்தைக் கண்டிப்பது, ராஜபுத்ர வீரர்களோடு நடக்கும் சிறு சண்டையில் இந்து இளைஞன் ஒருவனின் தலை கொய்யப்படுவது என்று கதையை எழுதிக் கொண்டு போகிறார். அந்தக் காலகட்டத்தில் அது ஒரு புரட்சிகரமான கதையாகத்தான் இருந்திருக்க முடியும். இஸ்லாமியர்கள் மீதுள்ள அன்பினாலும், உடன்கட்டை போன்ற பெண்ணடிமை வழக்கங்கள் மீதிருந்த வெறுப்பினாலும் இந்தக் கதையை அவர் எழுதியிருக்க வேண்டும்.
அவரது கடைசிக் கதை இரயில்வே ஸ்தானம். அவர் காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய கதை. சொத்துக்காக முன்று பெண்களை மணந்த இஸ்லாமியர் ஒருவர் படும்பாட்டைக் கதை விவரிக்கிறது. அந்தக் கதையும் ஒரு சர்ச்சைக்குள்ளானது. அந்தக் கதையில் இஸ்லாமியர் ஒருவர், சகோதரிகள் மூவரை மணந்து கொள்வதாக பாரதி எழுதியிருப்பார். கதை பிரசுரமான பிறகு ஒரு இஸ்லாமிய நண்பர், மனைவி உயிருடன் இருக்கும் போது, அவளுடன் பிறந்த மற்றொருத்தியைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது இஸ்லாமிய சாஸ்திரங்களின் கொள்கை என்பதை பாரதிக்கு சுட்டிக் காட்டுகிறார். தனது தவறை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் பாரதி, இந்துக்களிடையே இருக்கும் வழக்கம் இஸ்லாமியர்களிடமும் இருக்கும் என்றெண்ணி எழுதிவிட்டதாக ஒப்புக் கொள்கிறார்."
"அவருக்கு இஸ்லமிய நண்பர்கள் அதிகம் இருந்தார்களோ?"
"அவர் பிறந்து வளர்ந்த எட்டையபுரம், சீறாப்புராணம் பாடிய கவிஞர் உமறுப் புலவர் வாழ்ந்த ஊர். அவர் எட்டையபுரத்தின் அரசவைக் கவிஞராகவும் விளங்கியவர். அவரது கல்லறை இன்றும் அங்கு இருக்கிறது. எட்டையபுரத்தில் கணிசமான அளவில் இஸ்லாமியர்கள் வாழ்ந்திருக்கிறர்கள். எனவே இளம் வயதிலேயே அவருக்கு இஸ்லாமியருடன் பழக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. புதுவையில் வாழ்ந்த காலத்தில், இஸ்லாமியர் ஒருவரது தேநீர்க் கடையில் 'தாடி ஐயர்' (பாரதிக்கு இப்படியும் ஒரு பட்டப் பெயர் உண்டு) தேநீர் பருகிய காட்சியைக் கண்டு அங்கிருந்தவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அன்று இந்துக்களும் இஸ்லாமியரும் பொது இடங்களில் ஒன்றாக அமர்ந்து உண்ணும் வழக்கமில்லை.' ஹிந்து-முகமதியர் கூட்டு விருந்து' என்று 1906 செப்டெம்பரில் சுதேசமித்ரன் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. இரண்டு சமயத்தாரும் ஒன்று சேர்ந்து உண்பது அத்தனை அபூர்வமாக இருந்தது. அதனால் பாரதி முகமதியரின் தேநீர் கடைக்குச் சென்று தேநீர் அருந்துவது அதிர்ச்சியோடு பார்க்கப்பட்டது. புதுவையிலிருந்து வெளியேறி தனது மனைவியின் ஊரான கடையத்தில் வாழ்ந்த போது இஸ்லாமியர்களோடு நட்புப் பாராட்டிய காரணத்தால் அவர் அக்கிரகாரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். ஆனால் அதற்குப் பின்னும், 1918ம் ஆண்டு ராவண சமுத்திரம், பொட்டல் புதூர் ஆகிய ஊர்களில் இஸ்லாம் மார்க்கத்திஒன் மகிமை என்ற தலைப்பில் உரையாற்றி இருக்கிறார்."
"இஸ்லாம் மார்கத்தின் பெருமைகளைத்தான் பாரதி பேசுவாரா? அதன் மீது ஏதும் விமர்சனங்கள் ஏதும் கிடையாதா?"
"இஸ்லாமியர்களிடையே உள்ள இரண்டு வழக்கங்கள் மீது பாரதிக்கு உடன்பாடில்லை. ஒன்று அவர்களிடையே உள்ள, கோஷா என்னும் பர்தா அணியும் வழக்கம். அது அவர்களுக்குப் பாதுகாப்பு என்ற வாதத்தை பாரதி ஏற்பதில்லை.' கனி கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பேனோ?' ' வன்ன முகத்திரையைக் களைந்திடென்றேன், நிந்தன் மதங் கண்டு துகிலினை வலிதுரிந்தேன்' என்றெல்லாம் எழுதி மூலம் ஒரு பெண்ணை அடைய நினைப்பவருக்கு இந்தத் துணித்திரை பெரும் அரண் அல்ல என்று சுட்டிக்காட்டுக்கிறார்.
பலதார மணத்தை இகழ்ந்துரைப்பதற்காகவே ரயில்வே ஸ்தானம் கதை எழுதப்படுகிறது. பலதார மணம் செய்து கொள்பவர்கள் ஒரு மனைவியைத் தவிர மற்றவர்களுக்கு மணவிலக்குக் கொடுத்து, அவர்கள் மற்றவர்களை மணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற யோசனை அந்தக் கதையில் வைக்கப்படுகிறது. இந்த யோசனையை முகமது நபியே தனது கனவில் தோன்றிச் சொன்னதாக பாரதி எழுதுகிறார்."
"ரொம்பத் துணிச்சல்தான்.அந்த துணிச்சலை இஸ்லாமியர்கள் இந்துக் கோயில்களை இடித்ததை விமர்சிக்கப் பயன்படுத்தியிருக்கலாமே?"
"அதைக் குறித்தும் அவருக்கு ஒரு கருத்து இருந்தது: " நாமும் அவர்கள் பேரில் பூர்வீகக் குற்றங்களை எடுத்துரைத்தல் தப்பிதம். அவர்களும் நம்மை உடன் பிறந்தவர்களெனெ பாவித்து நடக்க வேண்டும்" என்று ஓரிடத்தில் எழுதுகிறார்".
வம்பு கிடைக்காத ஏமாற்றத்தோடு எழுந்து கொண்டார் நண்பர்."ஓ! அப்படியா!அப்ப நான் வர்ரேன். உங்க 'பாய்' பாரதியாரிடமும் சொல்லுங்க!' என்றார் நண்பர் கிண்டலாக.
நான் புன்னகைத்தேன்.
27 comments:
//முகமது நபி காலத்தில் அவரை நேரில் பார்க்காத எவரும் கனவிலும் பார்க்க முடியாது என்பது முகமது நபியின் கூற்று.//
சுவனப்பிரியன்,
மேற்குறிப்பிட்ட கருத்துக்கு தயவு செய்து ஹதீஸ் மூலம் ஆதாரம் கொடுக்க முடியுமா? ஸகீஹ் புகாரியில் பதியப்பட்ட ஹதீஸில் "என்னைக் கனவில் கண்டவர் என்னையே கண்டார்; ஏனெனில் என் உருவத்தில் கனவில் சைத்தான் வர முடியாது" என்ற ஹதீஸ் உள்ளது.
முகம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டு சிலாகித்தவர்களுக்கும்,போதனைகளைக் கடைபிடிப்பவருக்கும் அவர்களைப் பற்றிய பிம்பம் மனதளவில் உணர்ந்திருக்கலாம். மேலும் கனவில் வருபவை/வருபவர்களை ஏற்கனவே நாம் பார்த்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது நம் சாதாரன கனவு அனுபவங்களின் மூலம் அறியலாம்.
உங்களுக்கு கருத்துக்கு ஏற்கக்க்கூடிய ஹதீஸ் ஆதாரம் இருந்தால் என் யூகங்களையும் அபிப்ராயத்தையும் மாற்றிக் கொள்வதில் தயக்கமில்லை.
அன்புடன்,
//பள்ளித் தலம் அனைத்தும கோவில் செய்குவோம், திக்கை வணங்கும் துருக்கர், தில்லி துருக்கர் செய்த பழக்கமடி//
பள்ளி என்று இங்கு பாரதியார் குறிப்பிட்டிருப்பது பள்ளிக்கூடங்களே (schools) கோவில்களாகக் கருதப்படவேண்டும் என்பதாகத்தான். பள்ளி என்ற வார்த்தை சமணப் பள்ளிகளையே பழங்காலத்தில் குறிப்பிட பயன்பட்டது. அங்கு கல்வி முதன்மைபெற்றிருந்தது என்பதையும் கவனிக்க. அதில் இருந்தே பள்ளி என்பது பள்ளிவாசலுக்கு எடுத்துக்க்கொள்ளப்பட்டது.
இஸ்லாம் வருவதற்கு முன் முகத்தை மூடி முக்காடிட்டுக்கொள்ளும் பழக்கம் இந்தியாவில் இல்லை; அதை இன்று இஸ்லாமிய ஆட்சி நீண்டகாலம் நடந்த வடநாட்டில் பெண்கள் முக்காடு அணிவதையும் தென்னாட்டில் அவ்வாறில்லாதிருப்பதையும் ஒப்பிட்டும் அறியலாம். துருக்கர் முக்காட்டைக் கொண்டு வந்தது ஒரு தகவல். அதைச் சொல்லுகிறார். பாரதிக்கு இந்த முக்காடு போடுதல் போன்றவற்றில் உடன்பாடில்லை.
அல்லா! அல்லா! அல்லா!
சரணங்கள்
பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லாவெளி வானிலே!
நில்லாது சுழன்றோட! நியமஞ் செய்தருள் நாயகன்
சொல்லாலும் மனத்தாலுந் தொடரொணாத பெருஞ்சோதி!
(அல்லா, அல்லா, அல்லா!)
கல்லாதவராயினும் உண்மை சொல்லாதவ ராயினும்
பொல்லாதவராயினும் தவமில் லாதவ ராயினும்
நல்லாருரை நீதியின்படி நில்லாதவ ராயினும்
எல்லோரும் வந்தேத்து மளவில் யமபயங் கெடச் செய்பவன்
(அல்லா, அல்லா, அல்லா!)
சுவனப்பிரியன், நல்ல கட்டுரை. பதித்தமைக்கு நன்றி.
பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம் என்பதில் உள்ள பள்ளி பள்ளிவாசல் அன்று; பள்ளிக்கூடங்கள் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று நம்புகிறேன். அதனால் பள்ளிவாசல்களை இந்து கோவில்கள் ஆக்குவோம் என்று பாரதியார் சொல்லியிருக்கிறார் என்று யாராவது திரித்துச் சொன்னால் நம்பமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
அது சரி, சுவனப்பிரியன் என்ற பெயர் உங்கள் இயற்பெயரா, இல்லை வலையுலகத்திற்காக வைத்துக் கொண்ட புனைப்பெயரா? பெயரின் பொருள் என்ன?
நல்லடியார்க்கு பதில்...
//முகம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டு சிலாகித்தவர்களுக்கும்,போதனைகளைக் கடைபிடிப்பவருக்கும் அவர்களைப் பற்றிய பிம்பம் மனதளவில் உணர்ந்திருக்கலாம். மேலும் கனவில் வருபவை/வருபவர்களை ஏற்கனவே நாம் பார்த்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது நம் சாதாரன கனவு அனுபவங்களின் மூலம் அறியலாம். //
நல்லடியார் இது மிகவும் தவறான கண்ணோட்டம்.
கனவில் நபி(ஸல்) அவர்களைக் காண்பது (புகாரியில் வந்த ஹதீஸ்கள்) :
6993. 'கனவில் என்னை காண்கிறவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்.' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
''நபி(ஸல்) அவர்களுக்குரிய தோற்றத்தில் (அவர்களின் அங்க லட்சணங்களுடன்) அவர்களைக் கண்டால்தான் (நபி(ஸல்) அவர்களைக் கனவு கண்டதாகக் கருதப்படும்)'' என்று இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
6994 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
கனவில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான். மேலும், இறைநம்பிக்கையாளர் காணும் (உண்மையான) நல்ல கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
இதன் மூலம் நாம் என்ன விளங்கிக் கொள்ள வேண்டும் என்றால், நபி(ஸல்) அவர்களின் உண்மையான உருவத்தில் ஷைத்தான் தோன்ற மாட்டான். ஆனால், வேறொரு உருவத்தில் தோன்றி தன்னை நபி எனக் கூறிக் கொள்வான். அதனால், யார் நபி(ஸல்) அவர்களைக் நேரடியாக கண்டிருக்கின்றார்களோ அவர்கள் தான் தன் கனவில் காண்பவர் நபியா அல்லது ஷைத்தானா என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால், இனி யாரும் நபி(ஸல்) அவர்களை தங்களுடைய கனவில் காண முடியாது என்பதே. (அனைத்தையும் அல்லாஹ் அறிவான்).
நன்றி திரு குமரன்!
'பள்ளித் தலம் அனைத்தும் கோவில் செய்குவோம்' என்பதை திரிதிதுக் கூறியுள்ளார்கள் என்றுதான் சொல்லி உள்ளேன். என் சிறு வயதில் மாற்றுக் கருத்தில் விளக்கப்பட்டது. இதில் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் தான் நானும் தற்போது விளங்குகிறேன்.
சுவனப் பிரியன் என்பது வலையகத்துக்காக வைத்துக் கொண்ட புனைப் பெயர். சுவனத்தை விரும்பாதவர்கள் உலகில் யாரும் உண்டா? எனவே இறப்புக்குப் பின்னர் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்ற வகையில் சுவனப் பிரியன் என்று வைத்துக் கொண்டேன்.
நன்றி திரு நல்லடியார்!
நீங்கள் குறிப்பிட்ட அந்த ஹதீஸின் அடிப்படையில்தான் நானும் விளக்கியுள்ளேன். முகமது நபி எப்படி இருப்பார் என்று பாரதி பார்த்தது கிடையாது. 'என் உருவத்தில் கனவில் சைத்தான் வர முடியாது' என்று தான் அந்த ஹதீஸில் உள்ளது. வேறு உருவத்தில் வந்து 'நான்தான் முகமது நபி'
என்று சைத்தான் கூற வழி உள்ளது.
'இந்த நல்லடியார் என் கனவில் வந்தார், அந்த நல்லடியார் என் கனவில் வந்தார், பத்து நாட்கள் தர்ஹாவில் தங்கியிருக்க சொன்னார்' என்றெல்லாம் நம் பெணகள் கனவை நம்பி தர்ஹாவில் காலம் தள்ளுவதை நாம் பார்க்கிறோமே! கனவில் வந்தவர் நல்லடியாராக இருந்தால் இணை வைத்தலுக்கு துணை போக மாட்டார். மனிதர்களை வழி கெடுக்க இது பொன்ற விளையாட்டுகளை விளையாட சைத்தானால் முடியும் என்பது இதிலிருந்து நாம் விளங்க முடிகிறது. இது தவிர வேறு ஏதும் விளக்கங்கள் இருந்தால் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.
மேலும் உங்களின் பதிவுகளையும், நேச குமாருடன் நீங்கள் நடத்திய வாதங்களையும் தொடர்ந்து படித்து வருபவன். அனைத்துக்கும் மிகவும் பொறுமையாக பதில் சொல்லி இருந்தீர்கள்.
நன்றி திரு தங்கமணி!
பள்ளி என்ற வார்த்தை திரித்துக் கூறப் பட்டதாகத்தான் கூறியுள்ளேன். உங்கள் கருத்து தான் என் கருத்தும்.
முகத்தை மூடச் சொல்லி இஸ்லாம் சொல்லவில்லை. முகத்தையும் கைகளையும் தவிர மற்ற கவர்ச்சி தரக் கூடிய இடங்களை வெளிக் காட்டாமல், இறுக்கமான உடைகளை தவிர்க்க சொல்லித்தான் குர்ஆனிலும் முகமது நபியின் கட்டளைகளிலும் காண முடிகிறது. சிலர் அதிக பட்சமாக முகத்தையும் மூடிக் கொண்டால் அது அவர்களின் சொந்த விருப்பமே!
நன்றி ஜெயஸ்ரீ அவர்களே!
நான் இதுவரை கேள்விப் படாத கவிதை! இது பாரதியார் எழுதியதா? அது பற்றி ஏதும் குறிப்பிடவில்லையே!
treat all the schools as temples.This meaning was only taught to us in our school days.
மன்னிக்கவும் கவனப்ரியன் அவர்களே விவரம் குறிப்பிடத் தவறியதற்கு. இந்தப் பாடல்
பாரதியார் எழுதியதுதான். பாரதியார் திரைப்படத்தில் கூட இது பற்றிய ஒரு scene வரும்.
நன்றி திரு அப்துல் குத்தூஸ்!
நல்லடியாருக்கு ஆதாரத்தோடு விளக்கியுள்ளீர்கள். உங்கள் ஆக்கங்களையும் பல முறை படித்துள்ளேன்.
மேலும் பின்னூட்டம் இட்ட கீதா சம்பந்தம் அவர்களுக்கும், ஆதவன் அவர்களுக்கும் நன்றிகள் பல.
நன்றி அப்துல் குத்தூஸ் மற்றும் சுவனப்பிரியன்,
உங்கள் விளக்கம் போதுமானதாக இல்லை. மன்னிக்கவும்!
//'என் உருவத்தில் கனவில் சைத்தான் வர முடியாது' என்று தான் அந்த ஹதீஸில் உள்ளது. வேறு உருவத்தில் வந்து 'நான்தான் முகமது நபி'
என்று சைத்தான் கூற வழி உள்ளது.// - சுவனப்பிரியன்
//நபி(ஸல்) அவர்களின் உண்மையான உருவத்தில் ஷைத்தான் தோன்ற மாட்டான். ஆனால், வேறொரு உருவத்தில் தோன்றி தன்னை நபி எனக் கூறிக் கொள்வான். அதனால், யார் நபி(ஸல்) அவர்களைக் நேரடியாக கண்டிருக்கின்றார்களோ அவர்கள் தான் தன் கனவில் காண்பவர் நபியா அல்லது ஷைத்தானா என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால், இனி யாரும் நபி(ஸல்) அவர்களை தங்களுடைய கனவில் காண முடியாது என்பதே. (அனைத்தையும் அல்லாஹ் அறிவான்).// - அப்துல் குத்தூஸ்
ஷஹீஹ் புஹாரி (பகுதி-1,புத்தகம்-3;ஹதீஸ் எண்:110) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸில் "என்னைக் கனவில் கண்டவர் நிச்சயமாக என்னையே கண்டவராவார்; என்னைப்போன்ற உருவில் தோன்றுவது சைத்தானுக்கு சாத்தியப்படாதது" என்று தெளிவாகச் சொல்லியுள்ள போது,
//ஆனால், வேறொரு உருவத்தில் தோன்றி தன்னை நபி எனக் கூறிக் கொள்வான். // என்பது யூகத்தின் அடிப்படையிலான ஹதீஸில் சொல்லப்படாத உபரித் தகவலாக இருக்கிறது. நபி ஸல். அவர்களின் உருவில் சைத்தான் கனவில் வர முடியாது தெளிவாகச் சொல்லப்பட்டதை அப்படி வந்தால் அது நபியல்ல;சைத்தான்!" என எதிர் அர்த்தம் கொண்டு விளங்கிக் கொள்வது முரன்பாடாகத் தெரிகிறது.
//அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: ''நபி(ஸல்) அவர்களுக்குரிய தோற்றத்தில் (அவர்களின் அங்க லட்சணங்களுடன்) அவர்களைக் கண்டால்தான் (நபி(ஸல்) அவர்களைக் கனவு கண்டதாகக் கருதப்படும்)'' என்று இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.//
இதைத்தான் நானும் சொல்கிறேன். நபி ஸல் அவர்கள் இனி யார் கனவிலும் வர மாட்டார்கள் என்பதற்கு நேரடியான அறிவிப்பு இருந்தால் சுட்டவும்.
முல்லா அலி காரி ரஹ் அவர்கள் மிஷ்காத் விளக்கவுரையில், நபி ஸல்.. அவர்களை கனவில் கானபது பற்றிய ஹதீஸுக்கு, "நபியைக் கனவில் கண்டவர் அவரை நேரில் பார்த்தவர் போல என்ற போதிலும் நபிகளாரை நேரில் கண்ட சஹாபிகளுக்கு இணையான அந்தஸ்திலுள்ளவர் இல்லை" (மிஷ்காத் பகுதி-1, பக்கம்-24) என்றும் இன்னொரு விளக்கத்தில் "நபி ஸல்..அவர்களைக் கனவில் கண்டவர்களுக்கு விரைவில் நேரில் பார்க்கும் பாக்கியத்தைக் அல்லாஹ் வழங்குவான்" என்றும் விளக்கியுள்ளார்கள். இவ்விளக்கம் வேண்டுமானால் முஹம்மது நபி காலத்தைய மக்களுக்கு மட்டும் பொருத்தமானது எனக் கொள்ளலாம்.
நான் புரிந்து கொண்டவற்றைக் கொண்டு விளக்க முயற்சித்துள்ளேன். தவறு இருப்பின் அல்லாஹ் பிழை பொருப்பானாக!
//'இந்த நல்லடியார் என் கனவில் வந்தார், அந்த நல்லடியார் என் கனவில் வந்தார், பத்து நாட்கள் தர்ஹாவில் தங்கியிருக்க சொன்னார்' என்றெல்லாம் நம் பெணகள் கனவை நம்பி தர்ஹாவில் காலம் தள்ளுவதை நாம் பார்க்கிறோமே! கனவில் வந்தவர் நல்லடியாராக இருந்தால் இணை வைத்தலுக்கு துணை போக மாட்டார். மனிதர்களை வழி கெடுக்க இது பொன்ற விளையாட்டுகளை விளையாட சைத்தானால் முடியும் என்பது இதிலிருந்து நாம் விளங்க முடிகிறது//
மறுக்கவில்லை! பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூட அல்லாஹ்வை நம்பாமல் அவ்லியாக்களை நம்பி தர்ஹாவில் தங்கி ஈமானை இழந்து வழிகெடுகின்றனர். நான் சொல்ல வந்தது முஹம்மது நபியைக் கனவில் கண்டவர் முஹம்மது நபியைத்தான் கனவில் கண்டார்; முஹம்மது நபி உருவில் வந்த சைத்தான் அல்ல! என்பதே. மற்ற வலிமார்கள் பெயரால் சொல்லப்படும் கட்டுக் கதைகளையோ அல்லது கனவில் வந்தார்கள் என்பதையோ பற்றியல்ல என்பதை அறியவும்.
நபி ஸல்.. அவர்கள் உருவத்தில் சைத்தான் தோன்ற முடியாது என்ற தெளிவான விளக்கம் இருக்கும் போது, மாற்றுக் கருத்தில் விவாதித்து குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை என்பதே என் விருப்பம். மேலும் கனவின் விளக்கம் பற்றியும் நிறைய அறியவேண்டியுள்ளதால் நாம் அறியாத மார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயத்தை தகுந்த அறிஞர்களின் உதவியுடன் விளங்க முயற்சிக்க வேண்டுமே தவிர நாமே முடிவுக்கு வந்து தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது.
அன்புடன்,
திரு நல்லடியார்!
முதலில் முகமது நபியை நேரில் பார்க்காமல், அவர் இப்படித்தான் இருப்பார் என்று தெரியாமல் எப்படி கனவில் வந்தது நபிதான் என்று முடிவு செய்ய முடியும் என்பது தான் என் கேள்வி. தூங்கும் போது ஒரு சிலரின் நினைவுகளோடு நாம் படுக்கும் போது, அவர்கள் நம் கனவில் வருவது நாம் அனுபவ பூர்வமாக உணர்ந்தவை. அப்படி வருபவர்கள் நாம் அன்றாடம் நேரில் பார்த்தவர்களாக இருப்பார்கள். உங்கள் திருப்திக்காக ஒரு சில சவூதி ஆலிம்களிடமும் இது பற்றி கேட்டேன். அவர்கள் 'கனவில் வந்தது நபி என்று எப்படி தெரிந்து கொண்டார்' என்று என்னிடமே கேள்வியை திருப்பி கேட்டார்கள். மேலே குறிப்பிட்ட அந்த ஹதீதிலேயே இதற்கான பதிலும் உள்ளது என்கிறார்கள்.
அதிலும் உங்கள் கருத்துப்படி மத்ரஸாவில் ஏழு வருடம் ஓதி பட்டம் வாங்கியவர்தான் மார்க்கம் சொல்ல வேண்டும் என்று சொல்கிறீர்களா? அந்த ஆலிம்களே எந்த மதராஸாவிலும் படிக்காத அதிகம் எழுத்தறிவில்லாத நபியின் திண்ணைத் தோழர்களின் விளக்கங்களைத்தான் அரபியில் எழுதி வைத்திருக்கிறார்கள். இவை அனைத்துமே தற்போது தமிழில் கிடைக்கின்றன. இணையத்திலும் தேவையான தகவல்கள் தற்போது கிடைக்கிறது. எனவே மார்க்கத்தை சொல்ல ஒரு குறிப்பிட்ட வர்க்கம் தான் இருக்க வேண்டும் என்பதே இஸ்லாத்துக்கு முரணானது என்பது என் கருத்து.
மீண்டும் நல்லடியார் அவர்களுக்கு,
ஹதீஸ்களை விளக்குவதற்கு தகுதியானவர் ஹனபி அல்லது ஷாபி மதர்ஸாக்களில் படித்து பட்டம் பெற்றவர்களால் தான் முடியும் என்ற கொள்கையில் தாங்கள் இருந்தால் கீழ்வருபவற்றைத் தவிர்த்துக் கொள்ளவும்.
உங்களின் கூற்றைக் காணும் பொழுது, நீங்கள் கனவு சம்பந்தமான விடயத்தில் குழப்பம் அடைந்தவராகவே காண இயலுகின்றது.
//* நான் சொல்ல வந்தது முஹம்மது நபியைக் கனவில் கண்டவர் முஹம்மது நபியைத்தான் கனவில் கண்டார்; முஹம்மது நபி உருவில் வந்த சைத்தான் அல்ல!என்பதே.*//
நபி(ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறிவிட்டார்கள்: என் உருவில் சைத்தான் வரமாட்டான் எனபதாக. ஆனால் நீங்கள் முஹம்மது நபி உருவில் வந்த சைத்தான்? என்பது ஒரு முரண்பாடு அல்லவா?
6993. 'கனவில் என்னை காண்கிறவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்.' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
மேற்கண்ட ஹதீஸில் 'விழிப்பிலும் என்னைக் காண்பார்' என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்றுக்கு என்ன விளக்கம் கொடுக்கப் போகின்றீர்? விழிப்பில் ஒருவரைக் கண்டால் அவர் உயிருடன் இருப்பதாக அர்த்தம் ஆகாதா? அதனால், நபி(ஸல்) இப்பொழுதும் உயிருடன் இருந்தால்தானே கனவில் காண்பவருக்கு காட்சி அளிக்க முடியும்?
ஒவ்வொரு ஹதீஸிற்கும் நேரடி விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தால் நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துக்கள் அனைத்தையும் விட வேண்டிய கட்டாயத்திற்கு அல்லவா ஆளாக நேரிடும்.
சகோ.அப்துல் குத்தூஸ்,
வேறு உருவத்தில் வந்து 'நான்தான் முகமது நபி' என்று சைத்தான் கூற வழி உள்ளது. என்று சகோ.சுவனப்பிரியன் சொன்னதற்கான என் மறுப்பாக ஷஹீஹ் புஹாரி (பகுதி-1,புத்தகம்-3;ஹதீஸ் எண்:110) இல் குறிப்பிடப்பட்டுள்ள தீஸில் "என்னைக் கனவில் கண்டவர் நிச்சயமாக என்னையே கண்டவராவார்; என்னைப்போன்ற உருவில் தோன்றுவது சைத்தானுக்கு சாத்தியப்படாதது" என்று தெளிவாகச் சொல்லியுள்ள போது,
//ஆனால், வேறொரு உருவத்தில் தோன்றி தன்னை நபி எனக் கூறிக் கொள்வான். // என்பது யூகத்தின் அடிப்படையிலான ஹதீஸில் சொல்லப்படாத உபரித் தகவலாக இருக்கிறது. நபி ஸல். அவர்களின் உருவில் சைத்தான் கனவில் வர முடியாது தெளிவாகச் சொல்லப்பட்டதை அப்படி வந்தால் அது நபியல்ல;சைத்தான்!" என எதிர் அர்த்தம் கொண்டு விளங்கிக் கொள்வது முரன்பாடாகத் தெரிகிறது. என்று சொன்னதைக் கவனிக்காமல் சற்று நிதானமிழந்து தாங்கள் வார்த்தையை உதிர்த்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.
மற்றபடி என் புரிந்து கொள்ளலை விரிவாக பிறகு வைக்கிறேன்.
அன்புடன்,
நல்லடியார்,
பாரதியும் இஸ்லாமும் என்ற தலைப்பில் மாலன் குறிப்பிடும் ரயில்வே ஸ்தானம் கதை, பலதார மணத்தை இகழ்ந்துரைப்பதற்காகவே பாரதியால் எழுதப்பட்டது என்று மாலனே கீழ்க்காணுமாறு குறிப்பிடுகிறார்:
"இஸ்லாமியர்களிடையே உள்ள இரண்டு வழக்கங்கள் மீது பாரதிக்கு உடன்பாடில்லை. ஒன்று அவர்களிடையே உள்ள, கோஷா என்னும் பர்தா அணியும் வழக்கம். அது அவர்களுக்குப் பாதுகாப்பு என்ற வாதத்தை பாரதி ஏற்பதில்லை.' கனி கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பேனோ?' ' வன்ன முகத்திரையைக் களைந்திடென்றேன், நிந்தன் மதங் கண்டு துகிலினை வலிதுரிந்தேன்' என்றெல்லாம் எழுதி மூலம் ஒரு பெண்ணை அடைய நினைப்பவருக்கு இந்தத் துணித்திரை பெரும் அரண் அல்ல என்று சுட்டிக்காட்டுக்கிறார்.
பலதார மணத்தை இகழ்ந்துரைப்பதற்காகவே ரயில்வே ஸ்தானம் கதை எழுதப்படுகிறது. பலதார மணம் செய்து கொள்பவர்கள் ஒரு மனைவியைத் தவிர மற்றவர்களுக்கு மணவிலக்குக் கொடுத்து, அவர்கள் மற்றவர்களை மணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற யோசனை அந்தக் கதையில் வைக்கப்படுகிறது. இந்த யோசனையை முகமது நபியே தனது கனவில் தோன்றிச் சொன்னதாக பாரதி எழுதுகிறார்."
http://maalanblog.blogspot.com
முஸ்லிம் ஆண்களுக்கு நான்கு பெண்கள்வரை மணமுடித்துக் கொள்ள இறைவன் அனுமதி அளித்திருக்கிறான். பார்க்க: அல்-குர் ஆன் 004:003.
'பாரதியின் கனவில் வந்தது யார்?' என்ற முடிவிற்கு வருவது அத்துணைக் கடினமா என்ன?
//* நல்லடியார் said...
சற்று நிதானமிழந்து தாங்கள் வார்த்தையை உதிர்த்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். *//
அல்லாஹ் அனைத்தையும் அறிவான்.
சுவனப்பிரியன்,
//முதலில் முகமது நபியை நேரில் பார்க்காமல், அவர் இப்படித்தான் இருப்பார் என்று தெரியாமல் எப்படி கனவில் வந்தது நபிதான் என்று முடிவு செய்ய முடியும் என்பது தான் என் கேள்வி.//
கனவுக்கு ஆங்கிலத்தில் DREAM (அரபியில் ருஃயா) என்கிறோம். இரவுத் தூக்கத்தில் காணும் கனவை DREAM என்றும் பகலில் அல்லது விழித்திருக்கும் போது கற்பனை செய்வதை (DAY DREAM) பகல் கனவு என்றும் சொல்கிறோம். இரவில் காணும் கெட்ட அல்லது பயங்கரக் கனவை NIGHTMARE (அரபியில் ஹுலும்) என்கிறோம்.
கனவில் கண்ட உருவத்தை வைத்து அது இன்னார்தான் என்று புரிந்து கொள்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். தெளிவாக ஞாபகத்தில் இருக்கும் கனவுப் பிம்பங்களில் குழப்பம் இல்லை. அக்கனவில் வந்தவர் ஏற்கனவே பார்த்த, பழகிய, பேசிய, அறிந்த நபராக இருக்கலாம் அல்லது அவ்வாறு இல்லாமலும் இருக்கலாம். பரிச்சயமான உருவம் மட்டும்தான் கனவில் வர வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. கனவு என்பதே கட்டுப்பாடுகளை மீறி வருவதுதான்.
பரிச்சயமான ஒருவர் பழகிய இயல்புக்கு மாறாகக் கனவில் வரலாம். சில சந்தர்ப்பங்களில் கறபனையிலும் நினைத்தது இராதவற்றைக் கனவில் செய்பவராகக் காணப்படலாம். மலை மீதிருந்து குதிப்பது போன்றோ அல்லது பயங்கரமான ஆபத்தில் சிக்கிக் கொண்டுள்ளது போன்றோ கனவில் வரலாம். கனவில் கண்ட உருவத்துடன் நமக்கு பரிச்சயமான உருவம் கச்சிதமாகப் பொருந்தலாம் அல்லது அரைகுறையாகவும் பொருந்தலாம். நல்ல கனவுகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருகின்றன. கெட்ட கனவுகள் சைத்தானின் புறத்திலிருந்து வருகின்றன. இரண்டுமல்லாத வகைக் கனவுகள், காண்பவரின் ஆழ்மனம் ஏற்படுத்தும் பிரமைகள். இதுதான் கனவின் பொதுவான இயல்பு.
குர்ஆன் ஹதீஸில் சொல்லப்பட்ட விசயங்களை அப்படியே நம்ப வேண்டும் என்பது உண்மையான முஸ்லிமின் கடமை. தர்க்க ரீதியான கேள்விகள் எல்லா நேரத்திலும் பொருந்தாது. உதாரணமாக,
ஈஸா அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் உலக முடிவின் போது இவ்வுலகில் வருவார்கள் என்பதில் முஸ்லிம்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஈஸா அலைஹி.. இவ்வுலகில் தோன்றும் போது அவர்கள் பற்றிய குறிப்புகளை குர்ஆன் ஹதீஸ்கள் மூலம் உறுதி செய்தே நம்புவோம். குர்ஆன் -ஹதீஸ் அறிவிப்புகளின் படி ஈஸா அலைஹி..அவர்கள் இவ்வுலகில் வரும்போது, இதற்கு முன் அவர்களைப் பார்த்திருந்த எவரும் உயிருடன் இருக்க மாட்டார். எனினும் குர்ஆன்-ஹதீஸை ஆதாரங்ளாகக் கொண்டு வந்திருப்பது ஈஸாதான் என்று நம்புவோம்.
அதேபோல், யூசுப் அலைஹி... அவர்கள் (குர்ஆன் வசனம் 12:04) "என் அருமைத் தந்தையே, பதினொரு கிரகங்களும் ஒரு சூரியனும் எனக்கு சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) கண்டேன்" என்றார்கள். இதில் சூரியக் குடும்பத்திலுள்ள கிரகங்கள் ஒன்பது என்றும் சமீபத்தைய கண்டுபிடிப்பில் பத்து என்றும் இருக்கின்றபோது "பதினொன்று" என்ற அறிவியலால் இதுவரை நிரூபிக்கப் படாத குறிப்பு உள்ளதைப் பற்றி தர்க்கிக்காமலும் பதினொரு கிரகங்களை கனவில் கண்டதன் மூலம் அவற்றை முன்பே பார்த்திருக்க வேண்டும் என்ற ஆராய்ச்சிக்குச் செல்லாமலும் அதிலுள்ள செய்தியைத்தான் எடுத்துக் கொள்வோம்.
நம் விவாதத்தில் முஹம்மது நபியை நேரில் பார்த்திராத ஒருவர், கனவில் வந்தது முஹம்மது நபி அவர்கள்தான் என்று எப்படி முடிவு செய்ய முடியும் என்பதற்கு, என் உருவத்தில் சைத்தான் கனவில் வர முடியாது. என்னைக் கனவில் கண்டவர் என்னையே காண்பார்" என்ற ஹதீஸிலுள்ள விளக்கமே போதுமானது. இந்த ஹதீஸை நம்பும் எவரும் முஹம்மது நபியைக் கனவில் கண்டால், அன்னாரே கனவில் வந்ததாகத்தான் நம்ப வேண்டும். முஹம்மது நபியை நேரில் கண்டருக்கும் கனவில் கண்டவருக்கும் வித்டியாசம் உள்ளது. வாழ்நாளில் நேரிலும் கனவிலும் கண்டவர்கள் "சஹாபி" என்ற அந்தஸ்தைப் பெறுகிறார். பின்னாளில் கனவில் மட்டும் கண்டவருக்கு அந்த அந்தச்தைப் பெற முடியாது என்பதே பெரும்பாலான அறிஞர்களின் முடிவாக இருக்கிறது.
குர்ஆனும் ஹதீஸும் உலகம் அழியும் வரை என்னெறென்றும் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய நற்செய்திகள். நபி ஸல். அவர்களை கனவில் காண்பது பற்றிய ஹதீஸ்கள் அன்றைய காலகட்டத்திற்கு மட்டும் பொருந்தும் என்பது உண்மையான முஸ்லிமின் நம்பிக்கைக்கு எதிரானது. குர்ஆனிலும் ஹதீஸிலும் உள்ளவற்றில் சில இக்காலத்திற்கு பொருந்தாது என்று சொல்வது எப்படி அபத்தமோ அதே போல்தான் மேற்குறிப்பிட்ட ஹதீஸ் அன்றைய காலத்தில் நபிகளாரை நேரில் கண்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும்.
இப்னு ஹஜர் அவர்கள் எழுதியுள்ள விளக்க உரையில் முஹம்மது பின் ஸிரீன் (ரஹ்) அவர்களிடம் எவரேனும் முஹம்மது ஸல். அவர்களைக் கனவில் கண்டதாகச் சொல்லக் கேட்டால், அவர் பார்த்தவற்றைப் பற்றி விவரிக்கச் சொல்லி, அவ்வர்ணனை நபிகளைப் பற்றிய வர்ணனைக்கு எதிராக இருப்பின், "நீ அவரைப் பார்க்கவில்லை!" என்று விளக்கமளிப்பார்கள் என்ற விளக்க உரைக்கு ஆதாரப்பூர்வமான தொடர் அறிவுக்குகள் உள்ளன.
மேலும் அல்-ஹகீமில் ஆசிம் பின் குழைப் என்பவர் தனது தகப்பானார் மூலம் அறிவிக்கப் பட்டதாகச் சொல்வதாவது, "இப்னு அப்பாஸ் அவர்களிடம், நான் முஹம்மது ஸல். அவர்களைக் கனவில் கண்டேன் என்று சொன்ன போது, "எனக்கு அதைப்பற்றி விவரி" என்றார்கள். முஹம்மது நபி ஸல் அவர்கள் ஹஸன் பின் அலி ரலி... அவர்கள் சாயலில் இருந்ததாகச் சொன்னதற்கு, இப்னு அப்பாஸ் ரலி.. அவர்கள் "நீர் அவரைக் கண்டீர்! " என்றார்கள். (இந்த ஹதீஸின் வரிசையும் தெளிவாக உள்ளது)
மேலும் முஸ்னத் அஹ்மதில், யஸீத் அல்-ஃபார்ஸ் ரலி..அவர்கள், "இப்னு அப்பாஸ் அவர்களின் ஆட்சிக்காலத்தில் நான் அல்லாஹ்வின் தூதரைக் கனவில் கண்டேன்" என்று இப்னு அப்பாஸ் ரலி..அவர்களிடம் சொன்ன போது அல்லாஹ்வின் தூதர், "என் உருவில் சைத்தான் தோன்ற முடியாது; யார் என்னைக் கனவில் கண்டாரோ; அவர் என்னை உண்மையில் கண்டவரே" என்றுள்ளார்கள். ஆகையால் நீர் கண்ட கனவை எங்களுக்கு விவரியும்" என்றார்கள்.
நான் சொன்னேன் "அவர், வெள்ளைக்கும் கருப்புக்கும் இடைப்பட்ட நிறத்தில், சிரித்த முகமாக கண்களைச் சுற்றி (குஹ்ல் உடன்), இலட்சனமான முகமாக, மார்பில் அங்குமிங்கும் ஊசலாடும் தாடியுடன் கண்டேன்" என்றதற்கு அவ்ஃப் ரலி..அவர்கள் " நான் இவற்றைப் பற்றி முழுமையாக அறிந்தவனில்லை" என்றார்கள். இப்னு அப்பாஸ் அவர்கள்" நீர் விழித்திருக்கும் போது அவரைக் கண்டிருந்தால், அவரைப் பற்றி இன்னும் துல்லியமாக விவரித்திருக்க முடியும்" என்றார்கள்.
இதன் மூலம் நேரில் கண்டிராத போதும் கனவில் கண்டதாக சொன்னக் குறிப்புகளை வைத்து நேரில் கண்டவர்கள், அக்கனவில் வந்தது முஹம்மது நபியா இல்லையா என்று விளக்கியுள்ளார்கள். மேலும் முஹம்மது நபியைக் கனவில் கண்டவரின் உள்ளுணர்வுக்குத் தெரியும் கனவில் கண்டது பெருமானாரா? அல்லது வேறு யாரையும் கண்டுவிட்டு பெருமானார் என்று குழம்பிக் கொண்டுள்ளோமா? என்று. அத்தகைய அனுபவத்தைப் பெறாமல் யூகங்களால் தற்கிப்பதில் என்ன தெளிவு கிட்டும்?
//உங்கள் திருப்திக்காக ஒரு சில சவூதி ஆலிம்களிடமும் இது பற்றி கேட்டேன். அவர்கள் 'கனவில் வந்தது நபி என்று எப்படி தெரிந்து கொண்டார்' என்று என்னிடமே கேள்வியை திருப்பி கேட்டார்கள். மேலே குறிப்பிட்ட அந்த ஹதீதிலேயே இதற்கான பதிலும் உள்ளது என்கிறார்கள்.//
பெருமானாரை ஒவ்வொரு முஸ்லிமும் தான் மிகவும் நேசிக்கும் அனைத்தையும் விட நேசிக்க வேண்டும். நேரில் பார்த்திராமல், அன்னாரின் நற்பண்புகள் மற்றும் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை வரலாற்றை அறிந்து நம்புவதற்குத்தான் ஈமான் என்கிறோம். நேரில் பார்த்திராத ஒருவர் மீது கேள்விப்பட்டு நேசம் கொள்ள முடியும் என்பது சாதியமாக இருக்கும் போது தன் கனவில் வந்தவர், முஹம்மது நபிதான் என்று உள்ளுணர்வுகள் சொல்லும் போது நம்புவதற்கு என்ன கஷ்டமிருக்கிறது?
இன்னொருவகையிலும் பார்க்கலாம். உதாரணமாக ஒருவரது கனவில் ஒருவர் மது பரிமாறுவது போல வந்தால் ( நவூதுபில்லாஹ்) நிச்சயம் கனவில் வந்தவர் முஹம்மது நபியாக இருக்க முடியாது. ஏனென்றால் மது அருந்துவது ஹராம் என்பது குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் உறுதி செய்யப்பட்ட ஒன்று. இப்படி எக்காலத்திற்கும் அல்லாஹ் தடுத்திருப்பதை எந்தச் சூழலிலும் முஹம்மது ஸல்...அவர்கள் மீறி இருக்க மாட்டார்கள் என்பதை மனதில் வைத்து எளிதில் முடிவுக்கு வரலாம்.
கனவில் வந்தவர் முஹம்மது நபியா? அல்லது அவர் உருவத்தில் வந்த வேறு யாருமா? என்ற விவாதமே முஹம்மது நபியைக் கனவில் கண்டவர் விசயத்தில் தேவையற்றதாகி விடுகிறது. முஹம்மது நபிக்குச் சொல்லப்பட்டுள்ள பண்புகளுடன், நேரில் எப்படி இருந்ததாக அறிவுப்புகள் மூலம் அறிய முடிகிறதோ அதே உவமானங்களுடன் பொருந்தினால் மட்டுமே, கனவில் வந்தது முஹம்மது நபி என்றும், மாறாக வேறு விதமாக தோன்றி இருந்தால் கனவில் காணப்பட்டவர் முஹம்மது நபி ஸல் அல்ல என்றும் முடிவுக்கு வரலாம்.
என் உருவத்தில் சைத்தான் வரமுடியாது என்ற செய்தியே மேற்கண்ட குழப்பத்திற்கு முடிவு கட்டிவிடுகிறது.
//மத்ரஸாவில் ஏழு வருடம் ஓதி பட்டம் வாங்கியவர்தான் மார்க்கம் சொல்ல வேண்டும் என்று சொல்கிறீர்களா? அந்த ஆலிம்களே எந்த மதராஸாவிலும் படிக்காத அதிகம் எழுத்தறிவில்லாத நபியின் திண்ணைத் தோழர்களின் விளக்கங்களைத்தான் அரபியில் எழுதி வைத்திருக்கிறார்கள். இவை அனைத்துமே தற்போது தமிழில் கிடைக்கின்றன. இணையத்திலும் தேவையான தகவல்கள் தற்போது கிடைக்கிறது. எனவே மார்க்கத்தை சொல்ல ஒரு குறிப்பிட்ட வர்க்கம் தான் இருக்க வேண்டும் என்பதே இஸ்லாத்துக்கு முரணானது என்பது என் கருத்து. //
அப்படிச் சொல்லவில்லை. குர்ஆன்-ஹதீஸுக்கு விளக்கம் சொல்பவர்கள் அவை அருளப்பட்ட சூழல், சந்தர்ப்பம் போன்றவற்றிலும் இஸ்லாமிய வரலாற்றை நன்கு அறிந்தும் இருந்தால், அரபியில் சொல்லப்பட்டிருப்பதன் சரியான மொழியாக்கத்தைக் குழப்பமின்றி தெளிவாகச் சொல்ல முடியும் என்பது என் அபிப்ராயம். எந்த மொழ்யிலும் மொழி பெயர்ப்பின் மூலம் அம்மொழியில் சொல்லப்பட்டவை இதுதான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
குர்ஆனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த மொழியியலாளர்கள் கூட தங்கள் முன்னுரையில், அல்லாஹ் என்ன சொல்லி இருக்கிறான் என்பதை தாங்கள் விளங்கிக் கொண்ட வரையில் ஷரீஅத்திற்கு மாற்றமின்றி மொழி பெயர்த்துள்ளோம். உண்மையில் அல்லாஹ் சொல்ல விரும்பியதை அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
குர்ஆன் உலக மக்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எளிமையாக அருளப்பட்டுள்ளது என்பது மறுக்கவியலாத உண்மை. அதே சமயம் மொழி பெயர்ப்பிலும் புரிந்து கொள்ளலிலும் உள்ள குறைபாட்டால் சொல்லப்பட்ட விசயத்தை குழப்பிக் கொள்ள அல்லது முழுமையாகப் புரியாமலிருக்க வாய்ப்புண்டு.
உதாரணமாக, ஹஜ் முடிந்து இஹ்ராம் உடையைக் களைந்த உடன் வேட்டைக்குச் செல்லுங்கள் என்று குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. மொழி பெயர்ப்பை மட்டும் வைத்து புரிந்து கொண்டால் ஹஜ்ஜை நிறைவேற்றியதும் வேட்டைக்குச் செல்லவேண்டும் என்றே புரிந்து கொள்வோம். ஆனால் உண்மையில் இஹ்ராம் உடையில் இருக்கும் போது வேட்டைக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது. ஹஜ் முடிந்து இஹ்ராம் உடையைக் களைந்த உடன் வேட்டையாடலாம் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பது புலனாகும்.
மொழிபெயர்ப்பைப் புரிந்து கொள்பவர்களை விட அம்மொழிபெயர்ப்பின் நுணுக்கங்களை அறிந்தவர்களின் உதவியுடன் அறிந்து கொண்டால் எந்த விசயமும் நன்கு தெளிவாகும். நபிகளாரின் தோழர்கள் நபிகள் சொன்னதைப் புரிந்து கொள்வதில் சிரமமிருந்திருக்காது. அரபியல்லாதவர்கள் புரிந்து கொண்டிருப்பதை விட அரபி அறிந்தவர்கள் நன்கு விளங்கி புரிந்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
அப்துல் குத்தூஸ்,
இஸ்லாத்தின் (மத்ஹப்) சட்டப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றினாலோ அல்லது எதையும் பின்பற்றாமல் சுயமாகப் புரிந்து கொண்டாலே போதும் என்றோ தேவையற்ற தர்க்கங்களில் ஈடுபட்டு, என் அறிவுத்தேடலை ஒரு வரம்பிற்குள் கொண்டுவர விரும்பவில்லை.
முக்கியமாக, நான் மார்க்கத்தை முழுமையாகக் கற்றவனல்ல. நான் புரிந்து கொண்டதை இணையத்தில் கிடைக்கும் குறிப்புகளை, குர்ஆன்-ஹதீஸுடன் ஒப்பிட்டு ஓரளவு விளக்க முயற்சித்துள்ளேன். என் விளக்கம்தான் சரி என்றோ அல்லது பிறரின் விளக்கங்கள் குறைபாடுடையவை என்றோ சொல்லவில்லை.
முடிவற்ற விவாதங்களின் போது "அவரவர் மார்க்கம் அவரவருக்கு; மிக்க ஞானமுள்ளவன் அல்லாஹ்வே!" என்று ஒதுங்கிக் கொள்வதே சாலச்சிறந்தது. நான் விளக்க முயற்சித்ததில் தவறுகள் இருப்பின் பிழை பொறுத்து மன்னிக்க அல்லாஹ் போதுமானவன்!
இஸ்லாம் பற்றி மகாகவி பாரதியின் கண்ணோட்டத்தை விளக்க முயன்ற உங்களின் அருமையான பதிவில் நான் புரிந்து கொண்டிருந்ததற்கு மாறான தகவல் இருந்ததால் விவாதம் திசை திரும்பி பின்னூட்டமும் நீண்டு விட்டது. பொதுவான வாசகர்கள் மன்னிப்பார்களாக!
மற்றபடி .தங்களின் பதிவுக்கும் விளக்கங்களுக்கும் நன்றி!
//மாறாக வேறு விதமாக தோன்றி இருந்தால் கனவில் காணப்பட்டவர் முஹம்மது நபி ஸல் அல்ல என்றும் முடிவுக்கு வரலாம்.//
திரு நல்லடியார்!
'பலதார மனம் தவறு' என்று முகமது நபி கனவில் வந்து சொன்னதாகத்தான் பாரதியார் சொல்லி இருக்கிறார். "இறைவன் அனுமதித்த ஒரு காரியம், முகமது நபியும் பல திருமணங்கள் செய்திருக்கும் போது முகமது நபி எப்படி தடுததிருக்க முடியும்? "என்ற கேள்வி உங்களுக்கு ஏன் வரவில்லை?
திரு தாமஸ் !
நீங்கள் என்ன பாலசந்தர் ரசிகரா? 'என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ அவருடைய மருமகளின் அப்பா என் மகனுக்கு மாமனார்' என்ற ரீதியில் அல்லவா போகிறது உங்கள் பின்னோட்டம்.
//'பலதார மனம் தவறு' என்று முகமது நபி கனவில் வந்து சொன்னதாகத்தான் பாரதியார் சொல்லி இருக்கிறார். "இறைவன் அனுமதித்த ஒரு காரியம், முகமது நபியும் பல திருமணங்கள் செய்திருக்கும் போது முகமது நபி எப்படி தடுததிருக்க முடியும்? "என்ற கேள்வி உங்களுக்கு ஏன் வரவில்லை?//
சுவனப்பிரியன்,
பாரதியார் முஹம்மது நபியைக் கனவில் கண்டதாகச் சொல்வதைப் பற்றி மேற்கொண்டு சொல்ல என்ன இருக்கு? பாரதியார் ஒரு கவிஞர் அவ்வளவுதான். அவர் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டியதென்ற அவசியம் இல்லையே? கவிதைக்கு பலம் சேர்க்க கற்பனையாகக் கூட சொல்லி இருக்கலாம்.
அல்லாஹ் அனுமதித்ததை பெருமானார் தடுத்தார்கள் என்று பாரதி என்ன? யார் சொன்னாலும் புறந்தள்ள வேண்டியதுதான்.
பாரதியாருக்கு முஸ்லிம்களைப் பற்றிய தெளிவான புரிந்து கொள்ளல் இல்லை என்பது " திக்கை வணங்கும் துருக்கர்" என்ற அவரின் கவிதை வரிகளின் மூலம் அறியலாம்.
கனவில் பெருமானாரைக் கனவில் காண்பது பற்றி விவாதம், நான் பாரதியார் கண்டார் என்பதை முன்னிருத்திச் சொல்லவில்லை.
நன்றி திரு வஹ்ஹாபி!
மிகுந்த சிரமம் எடுத்து ஆதாரங்களைப் பதிந்திருக்கிறீர்கள். ஏற்கெனவே ஒரு முடிவை நல்லடியார் எடுத்து விட்டதால்தான் நம் கருத்துக்கு உடன் பட மறுக்கிறார்.
குர் ஆன் - ஹதீஸினால் ஒரு முஸ்லிமைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
எனவே, தவறான முடிவுக்கு வரவேண்டாம்.
நல்லடியாருக்கு சுவனப்பிரியன், அப்துல்குத்தூஸ் மற்றும வஹ்ஹாபி ஆகியோர் அழகாக விளக்கியுள்ளார்கள்.
கீழ்கண்ட ஹதீஸை அப்துல்குத்தூஸ் சுட்டிக்காட்டியிருந்தும், நல்லடியார் கண்டுக்கொண்டதாக தெரியவில்லை.
//'கனவில் என்னை காண்கிறவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்.' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.//
அன்பின் சுவனப்பிரியன்,
//முகமது நபி காலத்தில் அவரை நேரில் பார்க்காத எவரும் கனவிலும் பார்க்க முடியாது என்பது முகமது நபியின் கூற்று.//
முஹம்மது நபியவர்களின் கூற்றை எழுதும்போது, நாம் கேட்ட பயான்களில் புரிந்துக்கொண்ட கருத்துகளையோ அல்லது நாம் படித்த நபிமொழியின் கருத்துகளையோ - நபியவர்களின் கூற்று என்று எழுதிவிடுவதை தவிர்க்க வேண்டும். (நபிமொழிகள் கூறும் கருத்து என்று குறிப்பிடலாம். தவறில்லை). நபியிக என்பதை ரஸூலிக என்று மாற்றி சொல்வதைக்கூட முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கண்டித்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்திருக்கலாம்.
இதனை நட்பு ரீதியில் சுட்டிக்காட்டுவதாக எண்ணிக்கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
அலுவலகம் புதிய இடத்துக்கு மாறுவதால் ஒரு வாரம் உடனுக்குடன் உங்களின் பின்னூட்டமும், அதற்கான பதிலும் வராது. புதிய அலுவலகம் தயார் ஆனதும் வழக்கம் போல் உடனுக்குடன் எண்ணங்களை பரிமாறிக் கொள்வோம்.
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.
Post a Comment