Followers

Monday, February 13, 2006

சேர நாட்டுக்குப் போவோமா! -இரண்டு

சேர நாட்டுக்குப் போவோமா! -இரண்டு

முன்பெல்லாம் ஒரு பாடல் பிறக்க மூன்று நாட்கள் நான்கு நாட்கள் தேவைப்படும். பாடலின் தரமும் மனதிலேயே நெடுநாட்களுக்கு தங்கியிருக்கும்.ஆனால் இப்பபொழுது எல்லாம் பாடல்கள் அதிகமாக கம்ப்யூட்டர் துணை கொண்டு இசைக்கப்படுவதால் மனதைத் தொடுவதில்லை.ஒரு நல்ல ட்யூன் கிடைத்தால் போதும். அதை சீவி சிங்காரித்து, நடை போட்டு, உடை போட்டுசிம்பொனி ரேஞ்சுக்குநம்ம மென் பொருள் நமக்குத் தேவையானதை கொட்டி விடுகிறது.(ஏ.ஆர்.ரஹ்மான் உபயம்). இது போன்ற பாடல்களை மேடையில் பாடி இசைப்பதற்கு இளையராஜா.ரஹ்மான் போன்றவர்களுக்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம் ஆனால் நானோ,நீங்களோ இது போன்ற கச்சேரிகளைப் பண்ண முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் கேரளாவில். எப்படி?

ஒரு இன்னிசைக் கச்சேரியில் பாடகரும் பாடினார். வாத்திய கருவிகளும் இசைத்தது. எல்லாம் எங்கிருந்து? மேடைக்குப் பின்னால் குறுந்தகட்டில் பாடல் ஓடிக் கொண்டிருக்கும். அதற்கேற்ப பாடகரும், வாத்திய கருவி இசைப்பவர்களும் அபாரமாக நடிப்பார்கள். நம் கவுண்டமணியும், கார்த்திக்கும் உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு கதையிலும் நடிப்பார்கள் அல்லவா! அதைப்போல. காசையும் வாங்கிக் கொண்டு ரசிகர்களுக்கு ஏமாளிப் பட்டத்தையும் சேர்த்தே கொடுத்திருக்கிறார்கள்.

இதைப்பற்றி கேரள இசை விமர்சகர் ரவி மேனன் தொலைக்காட்சிப் பேட்டியில் கூறும்போது, 'இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ரசிகர்களை ஏமாற்றி இது போன்று பணம் பறிப்பதை சட்டப்படி தண்டிக்க வேண்டும் சமீபத்தில் வளைகுடாவில் நடந்த இன்னிசைக் கச்சேரியில் இதே போன்ற நாடகம் ரசிகர்களுக்கு தெரிந்து போய் பெரும் பிரச்சனையாகி உள்ளது. இதில் உண்மையிலேயே உயிரைக் கொடுத்து இன்னிசைக் கச்சேரி நடத்துபவர்களின் மதிப்பு இது போன்ற போலிகளால் சரிய வாய்ப்புள்ளது' என்கிறார். நம் தமிழ் நாட்டில் இது போன்ற சம்பவம் ஏதும் நடந்துள்ளதா என்று தெரியவில்லை. இனி கச்சேரிகளுக்குச் சென்றால் முன் வரிசையில் உட்கார்ந்து ஒவ்வொரு பாடலுக்கும் இது போலியா அல்லது அசலா என்று கண்காணிக்க வேண்டியிருக்கும்.

No comments: