ஜோதிடமும், வாஸ்துவும், இஸ்லாமும்
நம்முடைய முன்னேற்றத்துக்கு இறைவனின் கருணையும், கடுமையான உழைப்பும், திட்டமிடலுமே! அதை விடுத்து படித்தவர்கள் முதல், பாமரர்கள் வரை ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் மூழ்கி கிடப்பது வேதனையிலும் வேதனை. நம் நாட்டின் ராக்கெட் டை ஏவுவதிலிருந்து, சமீபத்தில் நடந்த திமுக மாநாடு வரை ஜோதிடர்களின் ஆலோசனைப் படி ராகு காலம் பார்த்து நடத்தப்படுகிறது. இப்படி நேரம் காலம் பார்த்து நடத்துபவர்கள் தங்களை பகுத்தறிவாதிகள் என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள். இந்த ஜோதிடமும் அதைச் சார்ந்த வாஸ்து சாஸ்திரம் முதலானவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளதா? என்றால் அதுவும் இல்லை.
மானசரா, மயாமாதம், மனுஷாவியா(ஏதாவது புரிகிறதா) போன்ற நூல்களின் அடிப்படையில்வாஸ்து சாஸ்திரம் கடை பிடிக்கப் படுவதாக அறிய முடிகிறது. வாஸ்து பற்றி விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தால் ரூ அய்ந்து கோடி வழங்கப்படும் என்று ஆந்திர மாநிலம் அய்தராபாத்தில் உள்ள ஜன விஞ்ஞான வேதிகா (ஜே.வி.சி) நிறுவனம் அறிவித்துள்ளது. இது பற்றி அதன் அமைப்பாளர் டி.வி.ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 'மதம் மற்றும் நம்பிக்கையின் பெயரால்சிலர் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். 'ஆஸ்துமா' மருத்துவத்துக்கு மீன் மருத்துவம் என்பதும் இது போன்ற செயல் ஆகும். ஒரு கட்டிடம் என்பது கட்டிட அமைப்பின் முறைப்படி கட்டப்பட வேண்டுமே தவிர 'வாஸ்து' முறைப்படி அல்ல. வாஸ்து பற்றி விஞ்ஞான ரீதியாக நிரூபித்தால் ரூ5 கோடி வழங்கத் தயார்' என்று கூறினார்.
தினத்தந்தி 20-6-2005
இது ஒரு புறம் இருக்க முஸ்லிம்களிலும் ஒரு சிலர் ஜோதிடத்திலும், சூன்யத்திலும் நம்பிக்கை வைத்து தங்களின் வாழ்நாளை வீணாக்கி வருகின்றனர். தாயத்து தகடுகள் என்று எழுதுபவருக்கே புரியாத மொழியில் எதை எதையோ எழுதி வைத்து, அதை வீடுகளில் தொங்க விடுகிறார்கள். உடம்பில் தாயத்தாக கட்டிக் கொள்கிறார்கள். 786 என்ற எண் புனிதமானது என்று எண்ணுகிறார்கள். (ஒரு சினிமாவில் எதிரி சுடும் போது ரஜினி கழுத்தில் கிடக்கும் 786 என்ற டாலர் அவர் உயிரை காப்பாற்றும்) பத்திரிக்கைகளில் வரும் ராசி பலனில் நம்பிக்கை வைக்கிறார்கள். இப்படியான பல தவறான நம்பிக்கைகளில் முஸ்லிம்கள் வீழ்ந்து கிடக்கிறார்கள். இது போன்ற நம்பிக்கைகளைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
முகமது நபி கூறுகிறார், 'எவன் ஜோதிடன் அல்லது குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதை நம்புகிறானோ அவன் முகம்மதுக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தை நிராகரித்தவன் ஆவான்'
ஆதாரம்: அஹமத்
பத்தரிக்கைகளில் வரும் ராசி பலன்களில் நம்பிக்கை வைப்பதும் இந்த வகையை சேர்ந்ததுதான். அதிலுள்ள கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் அமைந்த வான சாஸ்திரங்களை ஒருவன் நம்பினால் அவனும் இறை மறுப்பாளன் ஆகிறான். இதைப்பற்றி முகமது நபி கூறும் போது,
'இறைவனின் அருளாலும், அவனுடைய கருணையாலும்தான் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர் இறைவனை நம்பியவர் ஆவார். இன்னின்ன நட்சத்திரங்களால்தான் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர் இறை நிராகரிப்பாளரும், நட்சத்திரத்தையே வணங்கியவராவார்' என்றார்.
ஆதாரம்: புகாரி
'யார் தாயத்தைக் கட்டி தொங்க விட்டுக் கொள்கிறாரோ திண்ணமாக அவர் இறைவனுக்கு இணை வைத்து விட்டார்' என்பது நபி மொழி.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர்
நூல்:அஹ்மத்
'சூன்யக்காரன் எங்கு சென்றாலும் ஒரு போதும் வெற்றி பெற மாட்டான்' அல் குர்ஆன் (20:69)
ஒவ்வொரு ஊரிலும் சூன்யம் எடுக்கிறேன் பேர்வழி என்று சாமியார்கள், மௌலானாக்கள் என்று பல போலிகளிடம் நகைகளையும் பணத்தையும் இழந்த கதைகள் பத்திரிக்கைகளில் ஏராளம். மறைவான விஷயங்கள் இறைவனைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். அப்படி தெரியும் என்று அவன் வாதிட்டால் இறைவனின் வல்லமையோடு அவன் போட்டி போடுகிறான். இத்தகைய ஏமாற்றுப் பேர்வழிகள்மணலில் கோடு கிழித்துப் பார்ப்பது, சோழி போட்டுப் பார்ப்பது, கை ரேகை பார்ப்பது,பீங்கானில் நீர் ஊற்றிப் பார்ப்பது, கண்ணாடியில் பார்ப்பது போன்ற பல் வேறு வழி முறைகளைக் கையாள்கிறார்கள். இவர்கள் ஒரு முறை உண்மை கூறினால் 99 தடவை பொய சொல்பவர்களாகவே இருக்கின்றனர்.இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளிடமிருந்து நாம் தான் நம் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
2 comments:
சரியாக சொன்னீர்கள்...
அதிலும் நீங்க சற்று கவனித்தால், இந்த சோதிடப்பிரியர்கள் சோதிடத்தில் அவர்களுக்கு ஏதாவது நன்மை நடக்கும் என்று சொன்னால் மட்டுமே நம்புவார்கள். தீங்கு ஏதாவது சொன்னால், உள்ளே இருக்கும் பகுத்தறிவு எட்டி குதித்து, சோதிடத்தைச் சாடும். துன்பத்தை தாங்கிக் கொள்ளும் பக்குவம் இல்லாதவர்களும், சோம்பேறிகளும், "உழைக்காமல் முன்னேறுவது எப்படி?" என்று யோசிப்பவர்கள் மட்டுமே..சோதிடத்தை நம்ப ஆரம்பித்து.. பிறகு சோதிடத்தை மட்டுமே நம்பும் நிலைக்கு வந்துவிடுகின்றனர்.
நன்றி திரு தமிழ்தாசன்!
பாமரர்களின் அறியாமையில் பிழைப்பு நடத்தும் இது போன்ற ஏமாற்றுக் காரர்களை பிரச்சாரத்தின் மூலமே ஒழிக்க முடியும். நம் அரசாங்கமும் ஏதாவது சட்ட திருத்தம் இதற்கு கொண்டு வந்தால் நல்லது.
Post a Comment