Followers

Monday, February 13, 2006

சேர நாட்டுக்குப போவோமா!

சேர நாட்டுக்குப போவோமா!

நேற்று என் மலையாள நண்பர் ஜார்ஜ் மேத்யூ அறைக்கு செனறபோது ஆசியாநெட்டில் செய்திகள் பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு செய்தி என் மனதில் ஆழ பதிந்து விட்டது. கேரளா மூவாற்றுப்புழை என்ற கிராமத்தில், பவானி என்ற பெண்மனி ஆசிரியையாக வேலை செய்து வந்தார். திருமணமும் நடந்தது. பவானிக்கு குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால் பாருங்கள் திருமணமாகி இருபது வருடங்களாக இறைவன் குழந்தை பாக்கியத்தை கொடுக்கவில்லை. இதில் நான்கு வருடத்திற்கு முன்பு கணவனும் இறந்து விடுகிறார். இருந்தும் குழந்தை வேண்டும் என்ற ஆவல் மட்டும் குறையவில்லை.

எனவே குழந்தை பாக்கியம் வேண்டி இன்னொரு திருமணமும் செய்து கொண்டார். ஆனால வயது அதிகமாகி விட்டதால் கருத்தரிப்பது கடினம் என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். இருந்தும் குழந்தை ஆசையில் டெஸ்ட் ட்யூப் மூலமாக பிள்ளை பெற்றுக் கொள்ள விருப்பப்பட்டார். அவர் நினைத்தபடியே அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தைக்கு கண்ணன் என்ற பெயரிட்டார். 'பவானி கண்ணனை இவ்வளவு பிரியமாக வளர்க்கிறாளே குழந்தைக்கு பத்து பதினைந்து வயதாகும்போது தாய் உயிரோடு இருப்பாளா?' என்று அக்கம பக்கத்தில் உள்ளவர்கள் பேசிக் கொண்டனர். அய்ம்பது வயதுக்குப்பிறகு பிறந்த குழந்தையாதலால் ஆசியாநெட் நிறுவனத்தார் குழந்தை பிறந்தவுடன் பேட்டியும் எடுத்தனர்.

இரண்டரை வயதான கண்ணனோடு பவானியின் வாழ்க்கை சந்தோஷமாக கழிந்தது. நேற்று தன. குழந்தையுடன் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார் பவானி. சமையல் வேலை முடிந்து கண்ணனை தேடி இருக்கிறார். கண்ணன் குளிப்பதற்காக பெரிய பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வைத்துள்ளார் பவானி. விளையாட்டாக கொல்லைப்பறம் சென்ற கண்ணன் அந்த பாத்திரத்தில் விழுந்து விட்டான். விழுந்த கண்ணனுக்கு அதிலிருந்து வெளியேற முடியவில்லை. பிறகு என்ன தவமிருந்து பெற்றெடுத்த குழந்தையை பிணமாகத்தான் தூக்கினார் பவானி. அதே ஆசியாநெட் இறப்பையும் படம் பிடித்து ஒளிபரப்பியது. அந்த தாய் குழந்தையைப் பார்த்து கதறி அழுதது கலங்காத என் கண்களையும் கண்ணீர் வர வைத்து விட்டது.

மனிதன் என்னதான் முயற்ச்சித்தாலும் இறைவன் முன்னால் தோற்று விடுகிறான் அல்லவா?

7 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Hope it's not this person. :(

http://www.vikatan.com/av/2006/jan/15012006/av0201.asp

-Mathy

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

http://i1.tinypic.com/np52y0.jpg

http://i1.tinypic.com/np536t.jpg

some images from vikatan.

some text from vikatan:
ஒரு தாலாட்டை ரொம்ப காலமா என் தொண்டைக் குழிக்குள்ள புதைச்சு வெச்சிருந்தேன். பகவான் பாதம் படறதுக்காக பாறையாகக் கிடந்த அகலிகை மாதிரி, இந்த வீட்டுக்குள்ள ஒரு குழந்தைச் சத்தம் கேட்காதானு இவ்வளவு காலம் ஏங்கிக் கிடந்தேன். என் எல்லா ஏக்கத்தையும் துக்கத்தையும் துடைச்சுட்டான் சூரஜ். இவனுக்கு நான் அம்மா. ஆனா, எனக்கு இவன்தான் சாமி!’’



& கண்கள் பனிக்கப் பேசுகிறார் பவானியம்மா... 62 வயசில் குழந்தை பெற்ற அம்மா!

ஆச்சரியங்களாலான வீடு ‘கருணா ஹவுஸ்’. கேரளத்தின் மூவாற்றுப்புழாவில் ‘பேபி டீச்சர் வீடு’ என பவானியம்மாவின் வீடு இப்போது ரொம்பப் பிரபலம்.

‘‘அறுபத்திரண்டு வயசுல அம்மாவானு சிலருக்கு வேடிக்கையா இருக்கலாம், ஆனா, எனக்கு இது வாழ்க்கை!’’ எனத் தன் கதையை சொல்லத் தொடங்குகிறார் சூரஜின் அம்மா.

‘‘வெள்ளூர் குன்னம்தான் என்னோட கிராமம். எனக்கு முன்னால இரண்டு அக்காக்கள் கல்யாணத்துக்காகக் காத்திருந் தாங்க. அப்போ எனக்குப் பதினெட்டு வயசு. ராமச்சந்திரன்கிறவரைக் காதலிச்சேன். அவர் சொல்றது மட்டும்தான் எனக்கு வேதவாக்கு. அக்காக்களோட வாழ்க்கை, குடும்பத்தோட மரியாதைனு எதைப் பற்றியும் யோசிக்காம ஒரு ராத்திரியில் வீட்டை விட்டு வெளியேறிட்டேன்.

சந்தோஷமாதான் ஆரம்பிச்சுது வாழ்க்கை. அவசரப்பட்டு குழந்தை பெத்துக்க வேணாம், கொஞ்ச நாள் போகட்டும்னு நினைச்சோம். டீச்சர் டிரெய்னிங் முடிச்சிருந்த எனக்கு, பக்கத்திலேயே ஒரு ஸ்கூலில் டீச்சர் வேலை கிடைச்சுது. அவரும் வேலைக்குப் போயிட்டிருந்தார். எனக்கு இருபத் தஞ்சு வயசு இருக்கும்போது, குழந்தை பெத்துக்கலாம்னு முடிவெடுத்தோம். ஆனா, அவரோட உயிரணுக்கள் அதுக்குத் தகுதியா இல்லைனு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. நானும் அவரும் குழந்தை வரம் கேட்டுக் கோயில் கோயிலா போனோம். ‘என்கிட்டே இருக்கிற எல்லாத்தையும் எடுத்துக்கோ; ஒரு குழந்தையை மட்டும் எனக்குக் கொடு!’னு தினம் தினம் சாமியைக் கும்பிடுவேன். சாமிக்கு என்ன புரிஞ்சுதோ, திடீர்னு ஒரு நாள், இவருக்கு வயித்துவலி வந்து டாக்டரிடம் போனா, கேன்சர்னு சொன்னாங்க. அடுத்த, ரெண்டு மூணு மாசத்திலேயே இறந்துபோயிட்டார்.

சின்ன வயசில் வீட்டைவிட்டு ஓடி வந்துட்டதால, உறவுன்னு யாரும் இல்லை. தனியாவே இருந்தேன். என்னோட வேலையும் டீச்சர் என்பதால், தினமும் என்னைச் சுத்தி நூற்றுக்கணக்கான குழந்தைகள் இருக்கும். மனசு என்னை பாடாப் படுத்துச்சு. இதில் ஒரு குழந்தை எனக்குக் கிடைக்காதா, யாராச்சும் ஒரு குழந்தை என்னை ‘அம்மா’னு கூப்பிடாதானு ஏக்கமா இருக்கும். தினம் தினம் அழுவேன்.



அப்போ எனக்கு ஆறுதலா வந்தவர் விஸ்வநாதன். என் கணவர் ராமச்சந்திரனின் நண்பர் அவர். அவர் என்மேல் காட்டின அன்பு, அக்கறை, பிரியத்தை நான் காதல்னு நம்பிட்டேன். குருவாயூர் கோயில்ல கல்யாணம் செஞ்சுக்கிட்டோம். இதுவும் சந்தோஷமாதான் ஆரம் பிச்சுது. என்னோட எல்லாத் துன்பங்களும் தூர ஓடிடும்னு நம்பினேன். ஆனா, ரெண்டு வருஷமாகியும் எங்களுக்குக் குழந்தை இல்லை. எனக்கிருந்த ஆசையெல்லாம் ஒரு குழந்தை வேணும், அவ்வளவுதான்! அதுக் காக விஸ்வநாதனுக்கு அவ்வளவு அனுசரணையா இருந்தேன். ஆனா, அவருக்கு என் மேல லேசா சலிப்பு வந்துடுச்சு. என்னைவிட அஞ்சு வயசு சின்னவர் வேற. ஒரே வீட்டுக்குள்ள வேற வேற உலகத்தில் வாழ ஆரம்பிச்சதும், ரொம்பக் கஷ்டமாயிடுச்சு.

‘என் வாழ்க்கைதான் இப்படி ஆகிருச்சு. இவரும் எதுக்கு என்னோடு கஷ்டம் சுமக்கணும்னு தோணுச்சு. அவருக்கு நானே இன்னொரு கல்யாணம் செய்து வைக்க பேப்பர்ல விளம்பரம் கொடுத்தேன். உலகத்திலேயே கணவனுக்கு பெண் தேடிய மனைவி நானாதான் இருப்பேன். கிட்டத் தட்ட இருநூறு வரன்கள் வந்து, அதில் சுஜாதானு ஒரு பெண்ணை எனக்குப் பிடிச்சுது. அவங்க ரெண்டு பேருக்கும் நானே முன்னாடி நின்னு கல்யாணம் செஞ்சு வெச்சேன். ஊரே அப்போ என்னை விநோதமாப் பார்த்தது. நான் எதைப் பற்றியும் கவலைப்படலை. என் மனசுக்கு அதுதான் சரின்னு பட்டது. செஞ்சுவெச்சதும் ஒரு நிம்மதி.

விஸ்வநாதனும் சுஜாதாவும் தனிக் குடித்தனம் போனாங்க. நான் மறுபடியும் தனியே வீட்டுக்குள் முடங்கினேன். அப்போ எனக்கு ஆறுதலா இருந்தது ஸ்கூல் மட்டும்தான். எனக்குதான் பேபி இல்லையே தவிர, எல்லோருக்கும் நான் பேபி டீச்சர். அடூர் கோபால கிருஷ்ணனின் ‘மதிலுகள்’ படம் மாதிரி ஆகிப்போச்சு என் வாழ்க்கை.

அதில் ஒரு எழுத்தாளனைத் தூக்கி ஜெயிலில் போட்டுருவாங்க. அங்கே அவன் ரொம்பச் சிரமப்படுவான். ஜெயிலின் மதில்சுவருக்கு அந்தப் பக்கம் பெண்கள் சிறை. அங்கேயிருக்கிற முகம் தெரியாத ஒரு பெண்ணுடன் அவனுக்குக் காதல் வரும். அப்போ ஜெயில், அவனுக்கு இஷ்டமான ஒரு இடமா மாறிப் போயிடும். ஜெயில், அவனுக்கு சொர்க்கமா மாறிட்டு இருக்கும்போது, அவனை விடுதலை பண்ணிடுவாங்க. அதுமாதிரிதான் என்னோட வாழ்க்கையும். முதல் கணவரை கேன்சருக்குக் கொடுத்தேன். இரண்டாவது கணவருக்கு அவரோட சந்தோஷத்துக்காக, நானே பெண் பார்த்துக் கல்யாணம் செய்து அனுப்பி னேன். மிச்சம் இருப்பது ஸ்கூல் மட்டும்தானே! திடீர்னு ஸ்கூலில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க. ‘உங்களுக்கு இன்னும் ஆறு மாசம் தான் இருக்கு, நீங்க ஓய்வு பெறப் போறீங்க’ன்னாங்க. எனக்குனு இருந்த ஒரே ஒரு உலகமும் அறுந்து சரிந்த மாதிரி இருந்தது.

என்ன பண்றதுனு தெரியலை. தினம் நூத்துக்கணக்கான குழந்தைகளோட இருந்த நான் திடீர்னு அநாதை ஆகிட்டேன். அப்போதான் ஒரு பத்திரிகையில் டெஸ்ட் டியூப் பேபி பற்றி எழுதி இருந்தாங்க. அதுவும் 56 வயசில் அப்படி ஒருத்தங்க குழந்தை பெத்துக்கிட்டதா ஒரு நியூஸ் அது. என் தோழி லிசியிடம், ‘நானும் அப்படி ஒரு குழந்தை பெத்துக்க விரும்பறேன்’னு சொன்னேன். லிசிக்கு அதிர்ச்சி. ‘ஒருவேளை உனக்கு ஒரு குழந்தை பிறந்து அது இந்த உலகத்தைத் தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னால, உனக்கு ஏதாவது ஆயிடுச்சுனா, அது அந்தக் குழந்தைக்கு எவ்வளவு பெரிய துன்பம்?’னாங்க. சரியான கேள்விதானே!

என்ன பண்ணலாம்னு யோசிச் சேன். ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்க, நான் இன்னும் இருபது வருஷமாவது வாழணும். அது அப்புறம். முதல்ல, என்னால குழந்தை பெத்துக்க முடியுமான்னு ஒவ்வொரு ஆஸ்பத்திரியா ஏறி இறங்கினேன். திருவனந்தபுரத்தில் இருக்கிற ஐ.வி.எப். மருத்துவமனையில், ‘முயற்சி பண்ணிப் பார்ப் போம்’னாங்க. கடவுள் என்னைக் கைவிடலை.



ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஐம்பது வயசைக் கடந்துட்டா, உடம்பு பல விதங்களில் ஒத்துழைக்க மறுக்கும். கர்ப்பப்பையில் ஒரு கருவைத் தாங்கி வளர்க்கும் பக்குவமும், உடல் ஆரோக்கியமும் வேணுமே! நான் டெஸ்ட்டியூப் குழந்தைக்குச் சம்மதிச் சேன். ‘உங்களுக்குக் கருவை உருவாக்கும் அணுக்களைத் தர, யாராவது இருக்காங்களா?’னு கேட்டாங்க. நான் விஸ்வநாதனிடம் உதவி கேட்டுப் போனேன். அவர் என்னை அசிங்கமா திட்டி அனுப்பிட்டார். பிறகு யாரோ ஒரு டோனரின் உதவியுடன் எனக்குக் கருத்தரிப்பு நடந்தது. அப்படித்தான் கிடைச்சான் சூரஜ்!’’ & சிரிக்கிறார் பவானியம்மா.

செயற்கை முறையில் கருத்தரிக்கும் முறை இன்று பழக்கத்தில் வந்துவிட்டாலும், அந்தக் கருவைச் சுமக்கும் தாய்க்கு, அதற்கான ஆரோக்கியமும் மன பலமும் உடல்பலமும் இருக்க வேண்டும். 62 வயதில் பவானியம்மாவுக்கு மனம்தான் மருந்தாக இருந்திருக்கிறது. கேரளத்தில் மூத்த வயதில் குழந்தை பெற்றுக்கொண்ட ஒரே பெண் பவானியம்மாதான். உலகத்தில் மூன்றாவது இடம் பவானிக்கு.

‘‘இப்போதான் நான் வாழத் துவங்கியிருக்கேன். என் வீட்டுக்கே ஒரு வெளிச்சம் வந்திருக்கு. குறை மாசக் குழந்தை போலப் பிறந்த சூரஜை இப்போ திடகாத் திரமான குழந்தையா வளர்த்திருக்கேன். என் வேண்டுதலெல்லாம் இவனுக்கு இருபது வயசாகிற வரைக்கும் நான் உயிரோடு இருக்கணும். இவனை ஆளாக்கிட்டா அது போதும் இந்த ஜென்மத்துக்கு!

அதுக்குத் தேவையான தெம்பு வேணும்னு உற்சாகமா சாப்பிட றேன். ஓடியாடி வேலை செய்ய றேன். சூரஜ் என்னை ‘அம்மா’னு கூப்பிடுற ஒவ்வொரு முறையும் என கனவு நனவானதை நினைச்சு மகிழ்ந்துக்கிறேன். இன்னொரு பக்கம், நான் என்னோட பதினெட் டாவது வயசில் என் அம்மாவை அழ வெச்சுட்டு ஓடி வந்ததை நினைச்சு அழறேன். ‘எல்லாம் தெரி யும்’னு அன்னிக்கு ஓடி வந்துட்டேன். ஆனா, ஒவ்வொண்ணையும் கத்துக்க எவ்வளவு கஷ்டங்கள் சுமக்க வேண்டியிருக்குனு இப்போ தான் புரியுது. உறவுகளின் அருமையும் தெரியுது.

‘என்கிட்டே இருக்கிற எல்லாத்தை யும் எடுத்துக்கோ; ஒரு குழந்தையை எனக்குக் குடு’னு நான் தினம் தினம் கடவுளிடம் வேண்டினேன். அது போலவே கடவுள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு, ஒரு குழந்தையைக் கொடுத்துட்டார். வந்த குழந்தை நான் இழந்த எல்லா சந்தோஷங்களையும் சேர்த்து எடுத்துட்டு வந்திருச்சு!’’ எனச் சிரிக்கிற அம்மாவைப் பார்த்து, தன் சின்னக் கைகள் தட்டிச் சிரிக்கிறான் குட்டிப் பயல் சூரஜ்!



--00--

//மனிதன் என்னதான் முயற்ச்சித்தாலும் இறைவன் முன்னால் தோற்று விடுகிறான் அல்லவா? //

the entire post is ok. i dont appreciate the above lines.

-Mathy

சிறில் அலெக்ஸ் said...

இந்த மாதிரி ஒரு வெற்றி அந்தக் கடவுளுக்குத்தேவையா?

:(

Santhosh said...

ஆகா ஷகிலா நாடு சே சேர நாடு அப்படின்னு சென்ன உடனே சரி ஏதோ ஒரு அழகிய கதை இருக்க போகுதூன்னு நினைச்சேன் பாத்தா இப்படி பீல் பண்ண வெச்சிடிங்களே இது நியாயமா?

suvanappiriyan said...

மதி, சிறில் அலெக்ஸ், சந்தோஷ் ஆகிய அனைவருக்கும் மடல் இட்டமைக்கு நன்றி. விகடன் மூலம் மேலும் சில விபரங்கள் கிட்டியது.

//மனிதன் என்னதான் முயற்ச்சித்தாலும் இறைவன் முன்னால் தோற்று விடுகிறான் அல்லவா? //

the entire post is ok. i dont appreciate the above lines.

நான் அவ்வாறு எழுதியதன் நோக்கம் ஒவ்வொரு மனிதனும் அது நானாக இருந்தாலும் நம் வாழ்க்கையில் ஏற்படும் இது போன்ற இழப்புகளில் இருந்து, இறைவனைப் பற்றிய நம்பிக்கையும் நல்லொழுக்கமும் ஒவ்வொருவருக்கும் மேலும் வலுப்பெற வேண்டும் என்று கருதியே!

சீனு said...

//இந்த மாதிரி ஒரு வெற்றி அந்தக் கடவுளுக்குத்தேவையா?//

மனிதன் செய்த தப்புக்கு கடவுளை ஏன் சொல்றீங்க? அந்த அம்மாவுக்கு குழந்தை பிறந்ததை நான் விகடனில் வாசித்த போதும், பின் அதுவே இறந்த போது வாசித்த போதும், நான் நினைத்தது, இவை எல்லாவற்றிற்கும் காரணம் அந்த அம்மாதான். தன் சுயநலத்திற்காக அவர் இந்த வயதில் குழந்தை பெற்றுக் கொண்டது ஏற்புடையதாக நான் நினைக்கவில்லை. குழந்தை செல்வம் இல்லாமல் இருக்கும் வேதனை ஒரு பெண்ணுக்கு மிக மிக வேதனை தான். ஆனால், வயது கடந்துவிட்ட பொழுது குழந்தை பெறுவது பற்றி சற்று யோசித்து பாருங்கள். அந்த குழந்தைக்கு 15 - 20 வயதாகும் பொழுது அது பெற்றோரை இழந்த (மன்னிக்க) குழந்தையாக கஷ்டப்படும். 15 - 20 வயது என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான வயது. அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வயது.

மற்றபடி, அந்த அம்மாவுக்காக என்னால் பரிதாபம் மட்டுமே பட முடியும். அவர்கள் நம்பும் கடவுள் அவருக்கு மன அமைதியை கொடுக்கட்டும்.

கால்கரி சிவா said...

குழந்தை பிறந்தது - மனிதனின் வெற்றி

குழந்தை இறந்தது - மனிதனின் கவனமின்மை

கடவுள் நல்லவராக இருந்திருந்தால் மனிதனுக்கு கவனத்தை தந்திருப்பார்.

மற்றபடி அந்த தாயின் துயரத்திற்காக சில மணிநேரம் விசனப் பட்டேன் - ஆ.வி செய்ட்தியைப் படித்து