Followers

Sunday, July 24, 2011

தாய்நாட்டுக்காக மறைமுகமாக உதவிடும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்!

சென்னை:வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தாயகத்திற்கு பணம் அனுப்புவது கடந்த 7 ஆண்டுகளில் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகில், அதிக அளவில் தாயகத்திற்கு பணம் அனுப்புவோரில் இந்தியர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.உலகில், 190 நாடுகளில், 2கோடியே 70 லட்சம் இந்தியர்கள் வசிப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், பல்வேறு பணிகளில் ஈடுபட்டு, திரட்டும் வருவாயில், குறிப்பிடத்தக்க தொகையை, இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தாருக்கு அனுப்புகின்றனர்.

இந்தியாவில்கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச்சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் வெளிநாடுகளில்வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக, கேரளாவில் இருந்து பணி வாய்ப்புதேடி அரபு நாடுகளுக்கு செல்கின்றவர்கள், அதிக அளவில் தாயகத்திற்கு பணம் அனுப்புகின்றனர்.அதுபோன்று, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா,பிரான்ஸ் நாடுகளுக்கு செல்லும் பஞ்சாபியர்களும், அதிகத் தொகையை தாயகத்திற்கு அனுப்பி வருகின்றனர். இவ்வாறு உலகில் வசிக்கும் இந்தியர்கள், தாயகத்திற்கு அனுப்பும் தொகை கடந்த 8 ஆண்டுகளில் 162 சதவீதம் உயர்ந்துள்ளதாக, உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டுவெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவிற்கு 2,100கோடி டாலர் அனுப்பி இருந்தனர். இது, சென்ற 2010ம் ஆண்டு 5,500கோடி டாலராக (2 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.

உலகில், இந்தியர்களைப்போல், எந்த ஒரு வெளிநாட்டவரும், தங்கள் தாயகத்திற்கு இந்த அளவிற்கு பணம் அனுப்பியதில்லை.எனவே, வெளிநாடுகளில் வசிக்கும் அயல்நாட்டவர், தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளதாக, உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 8 ஆண்டுகளில் (2009ம் ஆண்டு நீங்கலாக), வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாயகத்திற்கு பணம் அனுப்புவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2004ம் ஆண்டு, வெளிநாடு வாழ்இந்தியர்கள், இந்தியாவிற்கு அனுப்பிய தொகை, 1,875கோடி டாலராக இருந்தது. இது, 2005ம் ஆண்டு 2,212கோடி டாலராகவும், 2006ம் ஆண்டு 2,833கோடி டாலர் என்ற அளவிலும்அதிகரித்துள்ளது.கடந்த 2007ம் ஆண்டு, வெளிநாடு வாழ் இந்தி யர்கள், தாயகத்திற்கு 3,721கோடி டாலர் அனுப்பியுள்ளனர். இது, 2008ம் ஆண்டு 4,994கோடி டாலராகவும், 2009ம் ஆண்டு 4,925கோடி டாலர் என்ற அளவிலும்உயர்ந்துள்ளது. 2008 ஆண்டு, உலக பொருளாதார நெருக்கடியின் எதிரொலியால், 2009ம் ஆண்டு இந்தியர்கள் அனுப்பிய தொகை சற்றே குறைந்தது.வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணம், அவர்களின் குடும்பத்தாருக்கு மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரவளர்ச்சிக்கும் மறைமுகமாக உதவுகிறது.

இந்தியாவில் ரியல் எஸ்டேட், கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், அயல் நாட்டு இந்தியர்களின் முதலீடு குவிந்து வருகிறது.அதனால், வெளிநாடுகளில் பணியாற்றி விட்டு, இந்தியா திரும்பு வோரின் உடமைகளை பாதுகாக்கவும், ஆதரவளிக்கவும்தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அவசி யம்.'இத்தகையோருக்கு வழி காட்டுவதற்காகவே உருவாக்கப்பட்டது தான், 'ரிடர்ன் டுஇந்தியா டாட் காம்' இணைய தளம்' என்கிறார் எனர்கேட்நிறுவன தலைமை செயல்அதிகாரி ரகு ராஜகோபால்.இந்த இணையதளம், அமெரிக்காவில் இருந்து திரும்புவோரின் உடைமைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்துசேர்ப்பது முதல், பணிவாய்ப்பு, குடியிருப்பு உள்ளிட்ட அனைத்துவசதிகள் வரை செய்து தருகிறது.இதனால், இந்தியா திரும்புவோர், எவ்வித சிரமமுன்றி தாயகத் தில் வாழலாம் என்கிறார் ரகு ராஜகோபால்.

வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தாய்நாடு திரும்புவதாக கூறப்படுகிறது. அதே சமயம், இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் 6 முதல் 8 லட்சம்பேர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.உலகளவில், சீனர்கள் தான் அதிக அளவில் வெளிநாடுகளில் வசிப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. சீனா, ஹாங்காங்,தைவான் ஆகிய நாடுகளைச்சேர்ந்த 3கோடியே 50 லட்சம்பேர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அதனால், வெளிநாடு வாழ் அன்னியர் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. எனினும், இந்த எண்ணிக்கையில் ஹாங்காங்,தைவான் நாடுகளைசேர்க்கக் கூடாது என்று புள்ளியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.அவ்வாறுசேர்த்தால், இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்த்து ஒன்றுபட்ட இந்தியாவாக கணக்கிடவேண்டும். இந்த கணக்கீட்டின் படி, அயல் நாடுகளில் வாழ்வோர் பட்டிய லில், இந்தியா முதலிடத்தை பெறும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டாவது இடத்தில் சீனாகடந்த 2010ம் ஆண்டு, தாயகத்திற்கு அதிக தொகை அனுப்பியநாட்டவரில் சீனர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.வெளிநாடு வாழ்சீனர்கள், தங்கள் நாட்டிற்கு 5,100கோடி டாலர், அனுப்பி யுள்ளனர்.அடுத்த இடங்களில், மெக்சிகோ (2,260கோடி டாலர்),பிலிப்பைன்ஸ் (2,130கோடி டாலர்), பிரான்ஸ் (1,590 கோடி டாலர்) ஆகிய நாடுகள் உள்ளன.

-தின மலர்
24-07-2011
-------------------------------------------------------------------------------------
இவ்வளவு தியாகங்களை செய்து பொருளீட்டி நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வைத்திருக்கும் உள் நாட்டு மக்களை நமது தூதரகங்கள் நடத்தும் விதம் கொடுமையானது. படிப்பறிவில்லாத ஒரு சில இந்தியர்களை நமது தூதரகத்தில் வேலை செய்பவர்கள் ஆட்டி வைக்கும் விதம் நமக்கு எரிச்சலை தருகிறது. ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? விபரம் புரியாதவனை அன்போடு சொல்லி விளக்குவதை விட்டு விட்டு 'இன்னும் ஆயிரம் வாட்டி சொல்லனுமா? அறிவு இல்லே? இது கூட நான்தான் சொல்லித் தரணுமா?' என்று அந்த மக்களிடம் இவர்கள் எரிந்து விழுவதை சமீபத்தில் நேரிடையாக பார்த்தேன்.

கூலி வேலைக்கும், ஹெல்பராகவும், ஹவுஸ் மேடாகவும் வரும் பல அன்பர்கள் படித்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு சட்டங்களை விபரமாகவும் விளக்கமாகவும் எடுத்துச் சொல்ல பல மொழி தெரிந்தவர்களை ரிஷப்சனில் நிறுத்துவதால் அரசுக்கு என்ன நட்டம் வந்து விடப் போகிறது.

அவனது வாழ்நாள் முழுக்க அவனது ரத்தத்தை வரியாக களவாடும் அரசு அவனது தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டுமல்லவா? ஏதோ ஓர் குக்கிராமத்திலிருந்து வந்த ஒரு தமிழருக்கு ஹிந்தியும் சரியாக தெரியவில்லை. அரபியும் அந்த அளவு சுத்தம் இல்லை. ஹிந்தி மொழி பேசக் கூடியவர்கள் போடும் சத்தத்தில் இன்னும் கூனி குறுகிப் போய் அவர் பவ்யமாக பேசிக் கொண்டிருந்ததைப் பார்க்க பாவமாக இருந்தது. பிறகு நான் சென்று அவருக்கு என்ன தேவை என்பதை அந்த அதிகாரிக்கு விளக்கும் படி ஆனது. ஹிந்தி மொழி படிக்க வேண்டாம் என்று கூச்சல்போடும் நமது திராவிட குஞ்சுகளை இங்கு நினைத்துப் பார்த்தேன்.

“பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா?”

என்ற கலைஞரின் கதை இன்று பலரின் நிஜ வாழ்க்கையாகியிருக்கிறது. வெளிநாடு வந்தவர்களில் 50 சதவீதமானோர் சந்தோஷத்திலும்(ஓரளவு படிப்பு தொழில் திறமையோடு வருபவர்கள்) மற்ற 50 சதவீதமானோர் சிக்கலிலும்(படிப்பும், தொழில்கல்வியும் இல்லாதவர்கள்) வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

போனது போகட்டும். இனி வரும் காலங்களிலாவது படிப்பையும் தொழிற் கல்வியையும் கற்றுக் கொண்டு சிறந்த ஊதியத்தில் வந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் நன் மக்களாக மாற வேண்டும். அதற்கு அரசாங்கம் தன்னால் ஆன முயற்ச்சிகளையும் எடுக்க வேண்டும்.

4 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோ.சுவனப்பிரியன்,
//இவ்வளவு தியாகங்களை செய்து பொருளீட்டி நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வைத்திருக்கும் உள் நாட்டு மக்களை நமது தூதரகங்கள் நடத்தும் விதம் கொடுமையானது.//

எல்லாமே ஓட்டு... சகோ.. ஓட்டு..!

"வெளிநாட்டில் இருக்கிறவன் ஓட்டு போடுறதில்லை... அப்படியே விபரம் அறிந்து பணம் கட்டி ஃபாரம் வாங்கி பூர்த்தி செய்து ஓட்டு போட்டாலும்... இவர்களால் அப்படி ஒன்றும் தொகுதியின் வெற்றி நிலவரத்தை தொட்டு நகர்த்தக்கூட முடியாது" என்ற இளக்காரம்தான் சகோ..!

இதற்கு ஒரே வழி...

//உலகில், 190 நாடுகளில், 2கோடியே 70 லட்சம் இந்தியர்கள் வசிப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.//

இந்த வெளிநாடுவாழ் இந்தியர்க்கு என்று தனியாக சில பாராளுமன்ற தொகுதிகள் வேண்டும்..!

அது மட்டும் கிடைத்துவிட்டால்... அப்புறமா பாருங்கள்... தூதரகங்கள் எப்படி நம்மை நோக்கி ஓடிவருகின்றன என்று..!

suvanappiriyan said...

நண்பர் வலையகம்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரே. இணைக்க முயற்ச்சிக்கிறேன்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ ஆஷிக்!

//இந்த வெளிநாடுவாழ் இந்தியர்க்கு என்று தனியாக சில பாராளுமன்ற தொகுதிகள் வேண்டும்..!

அது மட்டும் கிடைத்துவிட்டால்... அப்புறமா பாருங்கள்... தூதரகங்கள் எப்படி நம்மை நோக்கி ஓடிவருகின்றன என்று..!//

கிடைத்தால் சந்தோஷமே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ !

Rabbani said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இவ்வாறு வெளிநாட்டில் கஷ்டப்பட்டு நாம் ஈட்டும் இந்த பணத்திற்கு வரி விதிக்காமல் இருந்தாலே போதும் அது கூட இப்பம் கொண்டுவரப்போகிறார்கள் என்று கிளப்புகிறார்கள்