பதவிக்காகவும், பணத்துக்காகவும், இன்னும் பல ஆதாயம் கருதியும் தலைவர்களின் கால்களில் தொண்டர்கள் விழுந்து கிடப்பதையும், பாத பூஜை செய்வதையும் நாம் காண்கிறோம்.
மத குருமார்களோ, தலைவர்களோ யாராயினும் அவர்களும் மனிதர்களே!
அவர்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம் தேவைப்படுகின்றன.
மற்றவர்களைப் போல், அதை விட அதிகமாகவே அவர்களுக்கும் ஆசைகள் உள்ளன.
போட்டி, பொறாமை, பழிவாங்குதல், பெருமை, ஆணவம் போன்ற எல்லா பலவீனங்களும் அவர்களிடமும் உள்ளன.
(தனக்கு சாதகமாக தீர்ப்பு எழுத நீதிபதிக்கு கையூட்டு கொடுக்க முயன்றதாகவும் அதன் தொலைபேசி உரையாடல் வெளியானதால் நீதிபதியே மாற்றப்பட்ட கூத்துகளும் தினமும் நடந்து வருகிறது.)
மற்றவர்களைப் போலவே மலஜலத்தைச் சுமந்தவர்களாக அவர்களும் உள்ளனர்.
இதெல்லாம் தெரிந்திருந்தும் மனிதன் இத்தகையவர்களிடம் தன்மானத்தையும், மரியாதையையும் இழந்து விடுகிறான். படைத்த இறைவனுக்கு மட்டுமே சிரம் தாழ்த்த வேண்டும் என்பதை உணராததே இந்த அவலத்துக்குக் காரணம்.
அகில உலகுக்கும் ஒருவன் தான் எஜமான்; மற்ற அனைவரும் அவனுக்கு அடிமைகள் என்பதை அறிந்தால் இத்தகைய இழிவை மனிதன் தன் மேல் சுமத்திக் கொள்ள மாட்டான்.
முஸ்லிம் சமுதாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தம் உயிரினும் மேலாக மதிக்கின்றது. மற்ற எந்த மதத்தவரும் தம் தலைவர்களை மதிப்பதை விட அதிமதிகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம் சமுதாயம் மதிக்கின்றது. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வணங்கியதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் வந்தவர்களும் அவர்களை வணங்குவதில்லை.
பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்றாலும் மனிதன் உழைத்துப் பெறுகின்ற கல்வி, பதவி, செல்வாக்கு, ஆற்றல் போன்ற தகுதிகளில் மனிதர்களிடையே வேறுபாடு இருப்பதை மறுக்க முடியாது. இந்த உயர்வு தாழ்வில் நியாயமும் உள்ளது.
மனிதன் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்று விட்டாலோ, சிறந்த பதவியை அடைந்து விட்டாலோ, அதிகாரத்துக்கு வந்து விட்டாலோ, மற்றவர்களை விட ஏதாவது திறமை அதிகப்படியாக அவனிடம் இருந்து விட்டாலோ இவற்றைப் பெறாத இன்னொருவன் அவனுக்குச் சரணாகதி அடைகின்றான். அவனுடைய கால்களில் விழுகின்றான்.
அரசியல் தலைவர்களுடைய கால்களில் விழும் கட்சிகளின் தொண்டர்களையும், செல்வந்தர்களின் கால்களில் விழும் ஏழைகளையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
தன்னை விடச் சிறந்தவன் என்று ஒருவனைப் பற்றி என்னும் போது அவனுடைய கால்களில் விழ வேண்டும் என்று மனிதன் நினைக்கின்றான். இப்படி விழுவது தன்னுடைய சுயமரியாதைக்கு இழுக்கு என்பது தெரிந்தும் கூட அவன் இவ்வாறு செய்து கொண்டு தான் இருக்கின்றான்.
இப்படிச் செய்வதிலிருந்து லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை - என்ற தத்துவம் மனிதனைத் தடுத்து நிறுத்துகின்றது.
'கடவுளுக்கு மாத்திரம் தான் மனிதன் அடிமை. கடவுளைத் தவிர அத்தனை பேரும் சமமானவர்கள் தாம் என்ற எண்ணத்தை இந்தக் கொள்கைப் பிரகடனம் ஏற்படுத்துகின்றது.
அனைவரும் நம்மைப் போலவே மல ஜலத்தைச் சுமந்து கொண்டு இருப்பவர்கள் என்பதையும். அனைவரும் தாய் வயிற்றிலிருந்து உருவானவர்கள் என்பதையும் எல்லா மனிதர்களும் நினைக்க ஆரம்பித்து விட்டால் தன்னப் போல உள்ள மனிதனின் காலில் விழ மாட்டார்கள். தன் காலில் மற்றவர்கள் விழ வேண்டும் என்று எதிர்பார்க்கவும் மாட்டார்கள்.
இதைத் தான் திருக்குர்ஆன் மிக அழுத்தமாகவும், ஆழமாகவும் பின்வருமாறு கூறுகின்றது.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிரிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். திருக்குர்ஆன் 49:13
மனிதர்களே என்று உலக மக்கள் அனைவரையும் அல்லாஹ் அழைத்து தொடர்ந்து கூறுவதைப் பாருங்கள். உங்கள் அனைவரின் மூலப் பிதா ஒரு ஆண் தான். உங்கள் அனைவரின் மூலத் தாய் ஒரு பெண் தான்.
ஒரு தாய், ஒரு தந்தையிலிருந்து படைக்கப்பட்ட உங்களைக் குடும்பங்களாகவும், கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கியிருப்பது நீங்கள் உங்களை ஒருவரையொருவர் அடையாளம் காண்பதற்காகத் தான். உயர்வு தாழ்வு பாராட்டுவதற்கு அல்ல என்று குர்ஆன் பிரகடனம் செய்கின்றது.
இதற்குச் சான்றாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த சில நிகழ்வுகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள் என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர் என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் '(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ? எனக் கேட்டார்கள். 'மாட்டேன் என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)
நூல்: அபூதாவூத் 1828
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின் பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் 'பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுகை நடத்துங்கள் என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 624
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற தோழர் அனஸ் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்.
நாங்கள் ஒரு அவையில் அமர்ந்திருப்போம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு வருவார்கள். அவர்களின் வருகைக்காக நாங்கள் யாருமே எழுந்து நிற்க மாட்டோம். இப்படி எழுந்து நிற்பதை அவர்கள் தடை செய்து இருக்கிறார்கள். மேலும் எழுந்து நிற்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதே இதன் காரணம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: அஹ்மத்
எழுந்து நின்று கூட தமக்கு மரியாதை செய்யக் கூடாது என்ற அளவுக்கு சுயமரியாதை மிக்க ஒரு சமுதாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் இதற்குக் காரணம் லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை - என்ற அடிப்படைக் கொள்கை தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னராகவும், மார்க்கத்தின் தலைவராகவும் இருந்தார்கள். அன்றைய நிலையில் அவர்கள் தாம் மிகப் பெரிய வல்லரசின் அதிபராக இருந்தார்கள். அவர்களுடைய சாம்ராஜ்யம் தான் அன்றைக்கு இருந்த ஆட்சிகளில் வலிமை மிக்கதாக இருந்தது.
இவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தும் கூட தம்முடைய தோழர்கள் தமது காலில் விழுவதையும், தமக்காக எழுந்து நிற்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்பாததற்குக் காரணம் என்ன?
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற கொள்கைப் பிரகடனமே காரணம். அந்தக் கொள்கைக்கு மாறு செய்யக் கூடாது என்பதற்காக இப்படி நடந்து கொண்டார்கள் என்பது தான் உண்மை.
-இஸ்லாத்தில் கடவுள் கொள்கை by P Jainul Abdeen 1
38 comments:
அஸ்ஸலாமுஅலைக்கும் சகோ....
எந்த கூடுதல் சக்தியும் இல்லாத தன்னைப்போல
மனிதனை மனிதனாக எண்ணினால் உலகில் மோசடிகள்,ஏமாற்றுதல் முடிவுக்கு வரும்....
assalaamu alaikum,
a thoughtful post. jazakkallah for sharing.
அலைக்கும் சலாம் சகோ ஹாஜா மைதீன்!
//அஸ்ஸலாமுஅலைக்கும் சகோ....
எந்த கூடுதல் சக்தியும் இல்லாத தன்னைப்போல
மனிதனை மனிதனாக எண்ணினால் உலகில் மோசடிகள்,ஏமாற்றுதல் முடிவுக்கு வரும்...//
உண்மைதான் சகோ. அதிலும் இந்த அறிவுரைகள் யாவும் நமது நாட்டுக்கு சாலப் பொருந்தும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அலைக்கும் சலாம் சகோ ஆஷிக்!
//a thoughtful post. jazakkallah for sharing.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சுயமரியாதையை இழந்து வாழ்பவர்களுக்கு மற்றவர் காலில் விழுவது ஒரு பிரச்சினையேயில்லை. விழுபவருக்கு ஏதோ ஒரு வகையில் ஒரு லாபம் கிடைக்கிறது. மற்றவருக்கோ ஒரு அல்ப சந்தோஷம்.முஸ்லிம்களே இதை செய்வது மிகவும் வருத்ததிற்குரியது.உலகிலேயே மாமனிதராக கருதப்படும் நபிகள் நாயகமே இதை விரும்பாததை நினைத்தாவது இரு தரப்பினரும் திருந்த வேண்டும். ஹதீஸ்களைப் பகிர்ந்த்ததுக்கு நன்றி.
வாழ்த்துக்கள். அதே மனிதனை அதாகப்பட்டது வெரும் மனிதனை இஸ்லாமில் இல்லை என்பதற்காக மட்டும் காஃபிர் என்று ஏளனம் செய்வது ஏனாம்?
அஸ்ஸலாம் அலைக்கும் ....
சகோ சுவனப்பிரியன் அவர்களே ,
இப்ப அதிகமாக ஆக்கப்பூர்வமா எழுதிட்டே வரீங்க ....
தொடருங்கள் , வாழ்த்துக்கள்
சகோ நல்ல பதிவு...
இதை அனைவரும் கடைபிடித்தால் நன்றாகத்தான் இருக்கும்.
இதிலிருந்து ஒரு வசனத்தை மட்டும் எடுத்து ஒரு பதிவிட்டு சில கேள்விகளையும் கேட்டு விட்டேன்.
இதை தவறாக என்ன வேண்டாம். ஆரோக்யமான சிந்தனைக்கு மட்டுமே வித்திடுவீர்கள் என நம்புகிறேன் . நன்றி
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2012/02/blog-post_07.html
//Anonymous said...
வாழ்த்துக்கள். அதே மனிதனை அதாகப்பட்டது வெரும் மனிதனை இஸ்லாமில் இல்லை என்பதற்காக மட்டும் காஃபிர் என்று ஏளனம் செய்வது ஏனாம்?//
நிறையபேர் "காபிர்" என்றால் ஏதோ ஏளனம் செய்வது என்று பொருள் கொள்கிறார்கள்.."காபிர்" என்பதன் பொருள் "இறை நிராகரிப்போர் " - ஓரிறைவனைதவிர்த்து, கடவுள் இல்லை என்று மறுப்போரும், பல தெய்வ நம்பிக்கை உடையோரையும் இஸ்லாம் "காபிர்" அதாவது "இறை நிராகரிப்போர்" என குறிப்பிடுகிறது..இதில் ஏளனம் கிடையாது..
சகோ என்றென்றும் பதினாறு!
//சுயமரியாதையை இழந்து வாழ்பவர்களுக்கு மற்றவர் காலில் விழுவது ஒரு பிரச்சினையேயில்லை. விழுபவருக்கு ஏதோ ஒரு வகையில் ஒரு லாபம் கிடைக்கிறது. மற்றவருக்கோ ஒரு அல்ப சந்தோஷம்.முஸ்லிம்களே இதை செய்வது மிகவும் வருத்ததிற்குரியது.உலகிலேயே மாமனிதராக கருதப்படும் நபிகள் நாயகமே இதை விரும்பாததை நினைத்தாவது இரு தரப்பினரும் திருந்த வேண்டும். ஹதீஸ்களைப் பகிர்ந்த்ததுக்கு நன்றி.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அனானி!
//வாழ்த்துக்கள். அதே மனிதனை அதாகப்பட்டது வெரும் மனிதனை இஸ்லாமில் இல்லை என்பதற்காக மட்டும் காஃபிர் என்று ஏளனம் செய்வது ஏனாம்?//
குஃப்ர் என்ற வார்த்தையிலிருந்து பிறந்ததுதான் காஃபிர் என்ற வார்த்தையும். உங்களுக்கு அரபி தெரியவில்லை என்றால் கூகுளில் சென்று இறை மறுப்புக்கு அரபு வார்த்தை என்ன என்பதை கொஞ்சம் தட்டிப் பாருங்கள். காஃபிர் (Infidel) என்ற பதமே வரும். ஒருவன் முஸ்லிம் பெயரை வைத்துக் கொணடு இறை மறுப்பாளனாக இருந்தால் அவனும் காஃபிராகி விடுகிறான். இது ஒன்றும் அவமானச் சொல் அல்ல. ஒருவனின் நடத்தையை குறிக்கும் பெயர். அடுத்து இந்த பெயர் எவருக்கும் பிறப்பினாலும் வருவதல்ல. ஒருவனின் நடத்தையினால் வருவது.
வஅலைக்கும் சலாம்! சகோ நாசர்!
//அஸ்ஸலாம் அலைக்கும் ....
சகோ சுவனப்பிரியன் அவர்களே ,
இப்ப அதிகமாக ஆக்கப்பூர்வமா எழுதிட்டே வரீங்க ....
தொடருங்கள் , வாழ்த்துக்கள்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சகோ புரட்சி மணி!
//இதிலிருந்து ஒரு வசனத்தை மட்டும் எடுத்து ஒரு பதிவிட்டு சில கேள்விகளையும் கேட்டு விட்டேன்.
இதை தவறாக என்ன வேண்டாம். ஆரோக்யமான சிந்தனைக்கு மட்டுமே வித்திடுவீர்கள் என நம்புகிறேன் . நன்றி//
தவறாகவெல்லாம் எண்ண மாட்டேன். இந்த இறை வேதம் முஸ்லிம்களான எங்களுக்கு மட்டும் உரியதல்ல. இந்த உலகில் உள்ள அனைத்து மானிடருக்கும் பொதுவானது. உங்களுக்கு சொந்தமான ஒன்றை நீங்கள் ஆராயாமல் வேறு யார் ஆராய முடியும்?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோ மர்மயோகி!
//நிறையபேர் "காபிர்" என்றால் ஏதோ ஏளனம் செய்வது என்று பொருள் கொள்கிறார்கள்.."காபிர்" என்பதன் பொருள் "இறை நிராகரிப்போர் " - ஓரிறைவனைதவிர்த்து, கடவுள் இல்லை என்று மறுப்போரும், பல தெய்வ நம்பிக்கை உடையோரையும் இஸ்லாம் "காபிர்" அதாவது "இறை நிராகரிப்போர்" என குறிப்பிடுகிறது..இதில் ஏளனம் கிடையாது..//
வருகைக்கும் அனானிக்கு கொடுத்த விளக்கத்திற்க்கும் நன்றி!
திரு வேதம் கோபால்!
//சுவனபிரியன்
அறநிலைதுறை கட்டுபாட்டில் இருக்கும் கோயில்களில் தமிழிலும் அர்சனை செய்ப்படும் என்று போர்ட்டு உள்ளது. சில இடங்களில் தமிழிலும் அர்சனை செய்கிறார்கள் ஆனால் பல இடங்களில் தமிழ் அர்சனை செய்ய ஆட்கள் இல்லை. அது சரி நீங்கள் எப்பொழுது ஒலிபெருக்கியில் தமிழில் நமாஸ் படிப்பீர்கள். ஏன் என்றால் நீங்கள் தினம் ஐந்து முறை ஒலிபெருக்கியில் நமாஸ் சொல்லும் போது ” அல்லாவை தவிற வேறு கடவுள் இல்லை” என்பதையும் சொல்கிறீர்கள் என்கிறார்கள் இது உண்மையா ?//
இஸ்லாம் ஒரு உலகலாவிய மதம். ஆப்ரிக்காவுக்கு நீங்கள் சென்றாலும் பாங்கு ஒலியைக் கேட்டு இங்கு ஒரு பள்ளிவாசல் இருக்கிறது என்ற முடிவுக்கு வருவீர்கள். அதேசமயம் குர்ஆன் அரபி மொழியில் இருப்பதால் அரபி தேவ மொழியாகி விடாது. ஏனெனில் உலகில் உள்ள அனைத்து மூல மொழிகளுக்கும் இறைவன் வேதத்தை அருளியதாக குர்அனிலேயே கூறுகிறான். எனவே ஒரு முஸ்லிம் தனது தாய் மொழி தமிழை எப்படி நேசிக்கிறானோ அதே அளவுகோலோடுதான் மற்ற உலக மொழிகளையும் பார்க்க வேண்டும் என்பது இஸ்லாமிய கோட்பாடு.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிரிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
திருக்குர்ஆன் 49:13
அஸ்ஸலாமு அலைக்கும் வரமதுல்லாஹ்!!
தன் தலையின் பெறுமதி உணர்ந்தவர்கள் சிந்திக்க வேண்டிய பதிவு!!
எத்தனையோ பேர் தலை வணங்கிய சில இன்று தலை குனிந்திருக்கின்றனர், சிக்கிக் கொண்ட வழக்குகளில்..
அவர்கள் தலைகுனிந்து நிற்க அவர்களுக்கு தலை குனித்தவர்களை என்னவென்பது?
ஒவ்வொருவரின் தகுதியும் தராதரமும் அறிந்தவன் இறைவன் மட்டுமே! அறியாதவர்களுக்கு குனியும் தலைகளை விட ஆற்றலும் அறிவும் உடைய இறைவனுக்கு குனிந்த தலைகளே சிறந்தவை..
அல்ஹம்துலில்லாஹ்!! என் தலையையும் சிறப்புராஸ் செய்த இறைவனுக்கே புகழ்!!!
அஸ்ஸலாமு அலைக்கும்
மிகவும் நல்ல பதிவு
பகிர்வுக்கு நன்றி சகோ
சகோ ஜல்ஹா!
//ஒவ்வொருவரின் தகுதியும் தராதரமும் அறிந்தவன் இறைவன் மட்டுமே! அறியாதவர்களுக்கு குனியும் தலைகளை விட ஆற்றலும் அறிவும் உடைய இறைவனுக்கு குனிந்த தலைகளே சிறந்தவை..
அல்ஹம்துலில்லாஹ்!! என் தலையையும் சிறப்புராஸ் செய்த இறைவனுக்கே புகழ்!!!//
அழகாக சொன்னீர்கள். நம் தலைகள் இறைவனைத் தவிர வேறு எந்த சக்திக்கும் தலை வணங்காமல் இருக்க வேண்டும். அதுதான் ஒரு மனிதனுக்கு உண்மையான சுயமரியாதை.
வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!
வஅலைக்கும் சலாம்! சகோ ஹைதர் அலி!
//அஸ்ஸலாமு அலைக்கும்
மிகவும் நல்ல பதிவு
பகிர்வுக்கு நன்றி சகோ//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Alhamthulillaah!
Good msg!
நண்பர் சுவனபிரியன், மனிதனை மனிதன் வணங்குவது தவறு என்று சொல்ல வருகிறீர்கள். சரி எனதான் படுகிறது. ஒரு கேள்வி, முகமதும் ஒரு மனிதர் தானே? எதற்கு அவரை பற்றி சொல்லும் பொழுதெல்லாம் இஸ்லாமியர் கூடவே ஸல் அல்லது PBUH என்று சொல்கிறீர்கள்? அதை சொல்லாமல் விட்டால் தான் என்ன? ஏதோ கடவுள் மாதிரி அவர் உங்களை எப்போதும் மேலிருந்து வேவு பார்த்து சொல்லாமல் விட்டோரை தண்டிப்பார் போல் அல்லவா பயப்படுகிறீர்கள. அது போலவே அவர் ஒரு மனிதர் தான் எனும் பட்சத்தில், அவரை படம் வரைந்தால் என்ன தவறு? எதற்காக இஸ்லாமியர் அவரை வரைந்தால் கொந்தளிக்கிறார்கள்? மனிதனை மனிதன் வரைவது தவறா?
அஸ்ஸலாம் அலைக்கும் வரஹ்....
சகோ.சுவனப்பிரியன்,
தெரிவிக்கப்பட வேண்டிய மிகவும் அவசியமான கருத்துக்கள் கொண்ட ஒரு பதிவு. நன்றி சகோ.
காஃபிர் என்பது மரியாதைக்குறிய சொல் எனில் துலுக்கன் என்பதும் மரியாதைக்குறிய சொல்.
அலைக்கும் சலாம் சகோ ஆஷிக்!
//சகோ.சுவனப்பிரியன்,
தெரிவிக்கப்பட வேண்டிய மிகவும் அவசியமான கருத்துக்கள் கொண்ட ஒரு பதிவு. நன்றி சகோ.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//Alhamthulillaah!
Good msg!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ சீனி!
அனானி!
//காஃபிர் என்பது மரியாதைக்குறிய சொல் எனில் துலுக்கன் என்பதும் மரியாதைக்குறிய சொல்.//
முன்பு உலகை ஆண்ட வல்லரசுகளில் துருக்கியும் இருந்ததால் முஸ்லிம்கள் அனைவரையுமே துருக்கர்கள் என்று கூறும் வழக்கம் இருந்தது. ஆனால் இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிமும் துருக்கியிலிருந்து வரவில்லை. ஒரு சில ஆரம்ப கால முஸ்லிம்கள் அரபு நாடுகளில் இருந்து வந்து கடற்கரையோரம் குடியேறியவர்கள். மற்ற 90 சதவீத முஸ்லிம்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். இஸ்லாத்தால் கவரப்பட்டு முஸ்லிமகளாக மாறியவர்கள். எனவெ இந்திய முஸ்லிம்களை பார்த்து துருக்கர்கள் என்று கூறுவது வரலாறு தெரியாமல் பேசப்படும ஒரு பேச்சே! என்னைப் பார்த்து ஒருவர் துருக்கர் என்று விளித்தால் அவரைப் பார்த்து பரிதாபம்தான் பட முடியும். :-)
திரு கணேசன்!
//சரி எனதான் படுகிறது. ஒரு கேள்வி, முகமதும் ஒரு மனிதர் தானே? எதற்கு அவரை பற்றி சொல்லும் பொழுதெல்லாம் இஸ்லாமியர் கூடவே ஸல் அல்லது PBUH என்று சொல்கிறீர்கள்? அதை சொல்லாமல் விட்டால் தான் என்ன? ஏதோ கடவுள் மாதிரி அவர் உங்களை எப்போதும் மேலிருந்து வேவு பார்த்து சொல்லாமல் விட்டோரை தண்டிப்பார் போல் அல்லவா பயப்படுகிறீர்கள.//
தண்டிப்பார் என்பதற்காக இதனை முஸ்லிம்கள் செய்யவில்லை. இது ஒரு பிரார்தனை. 'அவர் மீது அமைதி உண்டாகட்டும்: இறைவா அவரை பொருந்திக் கொள்வாயாக' என்ற ரீதியில் அவருக்காக நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். எங்களுக்கு அருமையான ஒரு வாழ்க்கைத் திட்டத்தை இறைவனிடமிருந்து பெற்றுத் தந்தவருக்காக எங்களால் முடிந்த சிறு காரியமே அவர் மேல் ஸலவாத் கூறுவது. பெரும் பெரும் பதவி வகிதத அறிஞர்கள் பலர் வெளியே வரும் போது எலிகளின் சிலையையும், மற்ற உயிரினங்களின் சிலையையும் பயபக்தியோடு வணங்கி தனது பகுத்தறிவை அடகு வைத்திடும்போது படிக்காத பாமர முஸ்லிம் ஒருவன் நெஞசுயர்த்தி ஏக இறைவனுக்கு மட்டுமே தனது தலையை சாய்ப்பதற்கு முகமது நபியும் ஒரு காரணம் அல்லவா!
// அது போலவே அவர் ஒரு மனிதர் தான் எனும் பட்சத்தில், அவரை படம் வரைந்தால் என்ன தவறு? எதற்காக இஸ்லாமியர் அவரை வரைந்தால் கொந்தளிக்கிறார்கள்? மனிதனை மனிதன் வரைவது தவறா?//
தவறு என்பதை நாம் நிதர்சனமாக நமது நாட்டிலேயே பார்த்து வருகிறோமே! இங்குள்ள சாமி சிலைகள் எல்லாம் யார்? எல்லாம் அந்தந்த கிராமத்தில் ஊரில் வாழ்ந்த பணக்காரர்களோ அல்லது சாமியார்களோ அல்லவோ காலப்போக்கில் அவர்களே கடவுளாக்கப்பட்டனர். இதற்கு காரணம் அவர்களின் உருவங்களை வரைந்ததே! முகமது நபி காலததிலேயே அவரது தோழர் ஒருவர் அவரது உருவத்தை வரைவதற்கு அனுமதி கேட்டபோது மறுத்து விட்டதை பார்க்கிறோம். தான் இறந்து போகும் தருவாயில் கூட தனது சமாதியை உயர்த்தி கட்ட வேண்டாம். எனது சமாதியில் வந்து யாரும் பிரார்த்தனை புரிய வேண்டாம் என்று சொன்னதை பார்க்கிறோம்.
இவ்வளவு ஏன்? மதங்களே இல்லை என்ற பெரியாருக்கு இன்று சிலை வைத்து பிறந்த நாள் அன்று மாலைகள் அணிவித்து மகிழ்கிறோமே! அந்த சிலைக்கு ஏதாவது விளங்குமா? இது வீரமணிக்கு தெரியாதா? இங்கும் மனிதன் தனது பகுத்தறிவை அடகு வைத்து விடுகிறான். இது போன்ற கூத்துகளெல்லாம் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் முகமது நபியை கற்பனையாகக் கூட யாரையும் வரைய விடுவதில்லை.
//கோவி.கண்ணன் said...
காவடி எடுப்பது அலகு குத்துவது உள்ளிட்டவை மூட நம்பிக்கை என்றாலும் கூட அவ்வாறு செய்பவர்கள் பிறருக்கு என்ன கேடு செய்கிறார்கள் என்று கேட்டுக்கொள்ளும் போது இத்தகைய மூட நம்பிக்கைகளை விமர்சனம் செய்வது வேலையற்ற வேலை என்றே நினைக்கிறேன், உடலை வருத்தும் வழிபாட்டு முறைகள் இல்லாத மதச் சமூகமே இல்லை என்னும் போது இவை சமூகக் குற்றமாக, சீர்கேடாக பார்க்க ஒன்றும் இல்லை என்றே கருதுகிறேன்.//
SOURCE: http://govikannan.blogspot.com/2012/02/2012.html
இருக்கிற மூட நம்பிக்கைக்கு எப்படியெல்லாம் சப்பைக்கட்டு கட்டுபவரே!
பிற சமயங்களின் மீது இட்டுகட்டப்படுபவைகளுக்கு முட்டுக்கொடுத்து தூபம் போட்டு வெறியாட்டம் ஆடுவதில் முன்னிலை வகிப்பது ஏன்? திரும்பிப்பார் !!!
click to watch video
////////
கோவி.கண்ணன் மாரியம்மன் கோயில் காவடி ////////
//கோவி.கண்ணன் said...
காவடி எடுப்பது அலகு குத்துவது உள்ளிட்டவை மூட நம்பிக்கை என்றாலும் கூட அவ்வாறு செய்பவர்கள் பிறருக்கு என்ன கேடு செய்கிறார்கள் என்று கேட்டுக்கொள்ளும் போது இத்தகைய மூட நம்பிக்கைகளை விமர்சனம் செய்வது வேலையற்ற வேலை என்றே நினைக்கிறேன், உடலை வருத்தும் வழிபாட்டு முறைகள் இல்லாத மதச் சமூகமே இல்லை என்னும் போது இவை சமூகக் குற்றமாக, சீர்கேடாக பார்க்க ஒன்றும் இல்லை என்றே கருதுகிறேன்.//
SOURCE: http://govikannan.blogspot.com/2012/02/2012.html
இருக்கிற மூட நம்பிக்கைக்கு எப்படியெல்லாம் சப்பைக்கட்டு கட்டுபவரே!
பிற சமயங்களின் மீது இட்டுகட்டப்படுபவைகளுக்கு முட்டுக்கொடுத்து தூபம் போட்டு வெறியாட்டம் ஆடுவதில் முன்னிலை வகிப்பது ஏன்? திரும்பிப்பார் !!!
click to watch video
////////
கோவி.கண்ணன் மாரியம்மன் கோயில் காவடி ////////
சகோ உண்மைகள்!
//இருக்கிற மூட நம்பிக்கைக்கு எப்படியெல்லாம் சப்பைக்கட்டு கட்டுபவரே!//
இது அவரது நம்பிக்கை. இதில் நான் ஒன்றும் கருத்து சொல்வதற்க்கில்லை.
வருகைக்கும் கருததைப் பதிந்தமைக்கும் நன்றி!
திரு வேதம் கோபால்!
//தினம் நீங்கள் நமாஸில் சொல்லும் வாசகம்தான் என்ன ? சற்று தமிழில் விளக்கமுடியுமா?//
அல்லாஹு அக்பர் : இறைவன் மிகப்பெரியவன்
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் : ஏக இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் : ஏக இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :முஹம்மது அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் : முஹம்மது அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
ஹய்ய அலஸ் ஸலா(த்), ஹய்ய அலஸ் ஸலா(த்) : தொழுகையின் பக்கம் வாருங்கள், தொழுகையின் பக்கம் வாருங்கள்
ஹய்ய அலல் ஃபலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் : வெற்றியின் பக்கம், வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள்
அல்லாஹு அக்பர் : இறைவன் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் : இறைவன் மிகப்பெரியவன்
லா இலாஹ இல்லல்லாஹ் : ஏக இறைவனைத் தவிர வேறு இறைவனில்லை
//தமிழில் நமாமஸ் படிக்கலாமா கூடாதா. நேரான பதில் (படிக்கலாம் என்றால் ஏன் படிப்பதில்லை கூடாது என்றால் அதற்கான காரணம் என்ன)//
நமாஸ் படிக்கும் போது முடிவில் தொழக் கூடியவர் தொழுகையிலேயே அவருக்கான பிரார்த்தனையைச் செய்ய வேண்டும். அதை அவரவர் சொந்த மொழியிலேயே கேட்கிறார்கள். ஏனெனில் எல்லோருக்கும் அரபி தெரியாது. இறைவனுக்கோ எல்லா மொழிகளும் தெரியும். உலக ஒற்றுமைக்காக ஆரம்பத்தில் அரபியில் தொழ ஆரம்பிக்கும் ஒருவர் முடிக்கும் தருவாயில் தனது சொந்த மொழியில் நமாஸை முடிக்கிறார். இங்கு மொழிக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை நாம் விளங்குகிறோம்.
திரு மயில் வாகனன்!
//ஆனால் இந்தக் கருத்தை முன்மொழியும் தாங்கள், ‘தமிழ் அர்ச்சனை செய்ய வேண்டும்’ என்றும் கூறுவது சமஸ்கிருததத்தை மற்ற மொழிகளுக்குச் சமமாகத் தாங்கள் மதிக்காததாலா?//
நான் மதிக்காததால் அல்ல! தமிழ் நீச மொழி என்றும் சமஸ்கிரதமே தேவ மொழி என்றும் நமது சான்றோர்கள் கூறியதாலேயே இந்த கேள்வி வருகிறது.
திரு திராவிடன்!
//இரண்டாவதாக “லாஹிலாஹா ஹிள்ளல்லா” தமிழ்படுத்தி நீங்கள் பாங்கு கூற முடியுமா?இதுவே வேதம் கோபால் சாரின் கேள்வி?//
உலக ஒற்றுமைக்காக என்று முன்பே கூறியுள்ளேன். 'ஜன கன மன' என்று நமது தேசிய கீதத்தை ஒரு வங்காள மொழியில் பாட வேண்டிய அவசியம் என்ன? ஏன் அதை தமிழ்ப்படுத்தவில்லை என்று சிந்தித்தீர்கள் என்றால் உங்களின் கேள்விக்கு விடை கிடைக்கும். அடுத்து இங்கு சவுதியில் பள்ளிவாசலில் தொழுகைக்கு பிறகு விளக்க உரை 15 அல்லது 20 நிமிடம் நடைபெறும். பல மொழிகளை உடையவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தேமதுர தமிழில் பொழிப்புரை கூறப்படும். சவுதி பள்ளியிலேயே தமிழில் மொழி பெயர்த்து அதுவும் ஸ்பிக்கர் துணை கொண்டு பள்ளிக்கு வெளியிலும் சொல்லப்படுகிறது. இதிலிருந்தே அரபு மொழி தேவ மொழி இல்லை என்றும் தெரிந்து கொள்கிறோம். முகமது நபி தமிழராக இருந்திருந்தால் குர்ஆன் தமிழிலேயே இறங்கியிருக்கும்.
////இது போன்ற கூத்துகளெல்லாம் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் முகமது நபியை கற்பனையாகக் கூட யாரையும் வரைய விடுவதில்லை.//
சரி சுவனபிரியன், நீங்கள் சொல்வது முகமதை நல்லா படியாய் வரைவதற்கு தானே பொருந்தும். கிண்டல் செய்யும் கார்ட்டூன் படங்களை கொண்டு யாரும் அவரை ஒன்று வழிபட போவதில்லையே. அத்தகைய கார்டூன் படங்களுக்கு ஒன்றும் யாரும் மாலை போட்டு வணங்க போவதில்லை. பிறகு அதை போய் எதிர்ப்பானேன்? மனிதனை மனிதன் கார்டூன் வரைவது தவறா? நீங்கள் கூட மனிதர்களை கார்ட்டூன் படங்கள் வரைபவர் ஆயிற்றே?
// தண்டிப்பார் என்பதற்காக இதனை முஸ்லிம்கள் செய்யவில்லை. இது ஒரு பிரார்தனை. 'அவர் மீது அமைதி உண்டாகட்டும்: இறைவா அவரை பொருந்திக் கொள்வாயாக' என்ற ரீதியில் அவருக்காக நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.//
நீங்கள் சொல்வது பொறுத்தமாய் இல்லையே. லாஜிக் உதைக்கிறதே. முகமது ஒரு மனிதர். ஏற்கனவே இறந்து விட்டார். உங்கள் நம்பிக்கை படி அவர் அல்லாவின் தூதர் வேறு. அப்படியானால் அவர் மரணத்துக்கு பின் உங்கள் சட்டங்களின் படி அவர் சொர்க்கம் போய் இருக்க வேண்டும் (அல்லா தேர்ந்து எடுத்த தூதுவரே சொர்க்கம் புகவில்லை என்றால் எப்படி). ஏற்கனவே சொர்க்கத்தில் உள்ள ஒருவருக்கு பிரார்த்தனை எதற்கு? ஏற்கனவே சொர்க்கத்தில் உள்ள ஒருவருக்கு அமைதி உண்டாக பிரார்த்தனை என்பது வேடிக்கையாய் உள்ளதே. சொர்க்கத்தில் உள்ளவர்கள் மன அமைதி இல்லாமல் இருப்பவர்களா? பூமியில் உள்ளவர்கள் வேண்டினால் தான் இறைவன் சொர்க்கத்தில் உள்ளவர்க்கு அமைதி அளிப்பானா என்ன? எனக்கு என்னவோ, பிற மதத்தவர் மூட நம்பிக்கையில் மனிதரை மனிதர் உயர்த்தி வணங்குவது போல இஸ்லாமியரும் மூட பழக்கத்தில் ஒரு மனிதருக்கு போய் பயத்தில் ஸல், pbuh என்றெல்லாம் சொல்வதாய்படுகிறது.
திரு கணேசன்!
//சரி சுவனபிரியன், நீங்கள் சொல்வது முகமதை நல்லா படியாய் வரைவதற்கு தானே பொருந்தும். கிண்டல் செய்யும் கார்ட்டூன் படங்களை கொண்டு யாரும் அவரை ஒன்று வழிபட போவதில்லையே. அத்தகைய கார்டூன் படங்களுக்கு ஒன்றும் யாரும் மாலை போட்டு வணங்க போவதில்லை. பிறகு அதை போய் எதிர்ப்பானேன்? மனிதனை மனிதன் கார்டூன் வரைவது தவறா? நீங்கள் கூட மனிதர்களை கார்ட்டூன் படங்கள் வரைபவர் ஆயிற்றே?//
முகமது நபியை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கில் வரைவதை முஸ்லிம்கள் எப்படி ஒப்புவார்கள்? எம்.எஃப்.ஹூசைன் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்தது கண்டிப்பாக கண்டிக்கத் தக்கது. எவரும் புனிதமாக கருதுபவைகளை கார்ட்டூன் ஆக்குவது சம்பந்தபபட்டவர்களை கோபப்படுத்தாதா? நான் வரையும் கார்ட்டூன்கள் அரசியல் சம்பந்தமாகவும் நகைச்சுவைக்காகவும் உள்ளதாயிருக்கும். எவரின் புனிதமான உருவங்களை நான் கேலிச்சித்திரமாக்கவில்லை. குழந்தைகளுக்கு பாடம் நடத்தவோ அல்லது நமது செய்தியை எளிதாக விளக்கவோ மருத்துவ படிப்புக்காகவோ படம் வரைவதை இஸ்லாம் தடுக்கவில்லை. மரியாதைக்குரியவர்களின் உருவங்களை வரைவதையும் சிலைகளாக வடிப்பதையுமே இஸ்லாம் தடுக்கிறது.
தேவர் சிலையை சில விஷமிகள் சேதப்படுத்தினாலேர் இமானுவேல் சிலையயோ பெரியாரின் சிலையையோ எவராவது சேதப்படுத்தினால் எததனை தலைகள் உருள்கின்றன என்பதை அனுபவ பூர்வமாக நாம் பார்த்து வருகிறோமே!
எங்க அப்பா அம்மா காலில் விழுந்து வணங்குவதில் உங்களுக்கு என்ன வருத்தம் ?
திரு கபிலன்!
//எங்க அப்பா அம்மா காலில் விழுந்து வணங்குவதில் உங்களுக்கு என்ன வருத்தம் ?//
அதானே! எனக்கு என்ன வருத்தம்? அது உங்களின் நம்பிக்கை. இதில் நான் தலையிட முடியாது. ஒரு முஸ்லிம் இறைவனைத் தவிர வேறு யாரின் காலிலும் விழக் கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை. அதே நேரம் தாய் தந்தையரை கண் கலங்காமல் காப்பாற்ற சொல்வதும் அதே இஸ்லாம் தான்.
.
.
.
சொடுக்கி >>>> இஸ்லாம் தாயின் காலில் விழுந்து வணங்குவதை ஏன் தடுக்கிறது? <<<<< விளக்கம் பெறுங்கள்.
.
.
Post a Comment