வெறுப்பின் நெருப்பை ப்பூவென ஒதுக்கித் தள்ளிய கொள்கைக் குன்று!
உணவு கொண்டு வந்தவர் முஸ்லிமாக இருந்ததால் வெறியும் வன்மமும் நிறைந்த ஆசாமி ஒருவர் ஆர்டரையே ரத்து செய்ய, உணவைக் கொடுத்து அனுப்பிய ஜோமாட்டோ நிறுவனமோ ‘உணவுக்கு மதம் இல்லை. உணவுதான் மதம்’ என ஓங்கி முழங்க, சமூக வலைத்தளங்களில் இந்த பதில் காட்டுத் தீயாகப் பரவ, இன்னும் ஒரு படி மேலாக அந்த நிறுவனத் தலைவர் தீபிந்தர் கோயலோ பன்மைத்தன்மையைக் கொண்டாடுவதற்காக வணிக இழப்பையும் ஏற்கத் தயார் என்று அறிவித்திருக்கின்றார்.
‘பன்மைத்தன்மையைத் தன் தனித்தன்மையாகக் கொண்ட தேசம்தான் இந்தியா என்பதிலும் வெவ்வேறு தனித்தன்மைகளையும் அடையாளங்களையும் கொண்ட எங்களின் பல்வகையான வாடிக்கையாளர்களைப் பெற்றிருப்பதிலும் நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம். நாங்கள் பெரிதும் போற்றுகின்ற மாண்புகளைத் தூக்கிப் பிடிப்பதற்காக வணிகத்தை இழப்பதில் எங்களுக்கு வருத்தமில்லை’ என்று ட்விட் செய்திருக்கின்றார் தீபிந்தர்.
வெறுப்பும் வன்மமும் பிடித்த வெறியர்கள் மூர்க்கத்தனமாக பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்ற இன்றையச் சூழலில் ‘நாட்டின் பன்மைத் தன்மையைக் கொண்டாடுகின்ற’ எண்ணத் தெளிவுடனும், ‘வணிக இழப்பையும் சந்திக்கத் தயார்’ என்கிற தீரத்துடனும் வெறுப்புக்கும் வன்மத்துக்கும் சிவப்புக் கொடி காட்டி நின்று தலை சிறந்த இந்தியராக மிளிர்கின்றார் தீபிந்தர் கோயல்.
தீபிந்தர்கள் பெருகட்டும்.
தீபிந்தர்களே வெல்லட்டும்.
தீபிந்தர்களே வெல்லட்டும்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.