Followers

Wednesday, April 03, 2013

இன்றும் சாதிகள் இருக்குதடி பாப்பா!



இந்த படை எங்கே கிளம்பி விட்டது? இரட்டைக்குவளை டீக்கடைகளை அடித்து நொறுக்கவா?

ஊர்த்தெருவுக்குள் சேரிப்பிள்ளைகள் செருப்பு போட்டு நடக்க அனுமதிக்காத கிராமங்களை திருத்தவா?

சேரி மக்களை அனுமதிக்காத கோயில் கதவை திறந்து விட புறப்பட்டு விட்டதா?

சாதிகளற்ற சமுதாயம் உருவாக்கிட கலப்புத்திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு அளித்திட புறப்பட்டு விட்டதா?

இயற்கையின் நீர் நிலைகள் அனைவருக்கும் சொந்தம் என்று கூறி தலித்துகளை ஊர்ப்பொது குளத்துக்கு நீர் அருந்த அழைத்து செல்ல புறப்பட்டு விட்டதா?

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க புறப்பட்டு விட்டார்களோ!

இதில் எதுவும் இல்லையென்றால் அப்புறம் என்னய்யா ஒரே நாடு! ஒரே மக்கள்! ஒரே சட்டம்! எனும் கோஷம் உங்களுக்கு? சாதி கட்டமைப்பை பாதுகாத்து வைத்துக்கொண்டு, நாமெல்லாம் ஒன்று, நமக்குள் வேறுபாடுகள் இல்லை,இந்த நாடு இந்து நாடு,இந்து மக்கள் சொந்த நாடு என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறீர்களே.என்னய்யா ஏமாற்று வேலை இது? இளைஞர்களே சிந்தித்து பார்க்க மாட்டீர்களா?


Thanks: Rajesh Deena

இந்தியாவில் உள்ள சிறுபான்மையினத்தவரான முஸ்லிம்களையும் கிறித்தவர்களையும் இந்து மதத்துக்குள் எப்படியாவது கொண்டு வந்து விட வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றுகிறது இந்த ஆர்எஸ்எஸ் கூட்டம். பவுத்தத்தையும், கிறித்தவத்தையும் இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே தற்போது ஆக்கி விட்டனர். மிஞ்சி இருப்பது இஸ்லாம் ஒன்றுதான். எனவே தான் இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்களின் மீதும் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் தங்களின் இனத்தவர்களைக் கொண்டு அடக்கு முறைகளை ஆங்காங்கு இந்த கும்பல் ஏற்படுத்தி வருகிறது. குஜராத்தில் இவ்வளவு கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டும் ஒரு முஸ்லிம் கூட இந்து மதத்தின் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. எனவே இன்னும் ஆண்டுகள் பல ஆனாலும் இஸ்லாத்தை இந்து மதத்தின் ஒரு பிரிவாக ஆக்கும் இவர்களின் கனவு பலிக்கப் போவதில்லை. அதற்கு பதில் இத்தனை கொடுமைகளையும் தீண்டாமைகளையும் தாங்கிக் கொண்டு இன்னும் இந்து மதத்திலேயே இருந்து வரும் தலித் மக்களின் முன்னேற்த்திற்காக இந்துத்வாவாதிகள் பாடுபட்டால் அதுதான் அவர்கள் இந்து மதத்துக்கு செய்யும் சேவையாக மாற்றாரால் பார்க்கப்படும். தலித்களும் இந்து மதத்திலேயே தங்கி விடுவார்கள். அதை விடுத்து இஸ்லாமியர்களை அழிப்பதையே தங்களின் கொள்கையாக கொண்டிருப்பார்களேயானால் அத்தகைய இந்துத்வவாதிகளுக்காக நாம் பரிதாபம்தான் பட முடியும்.

இவ்வளவு அறிவியல் வளர்ச்சியும் ஊடக வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கும் இந்த கால கட்டத்திலும் காதலித்த குற்றத்திற்காக தலித் பெண்களும், இளைஞர்களும் எந்த அளவு கொடுமைபடுத்தப்படுகிறார்கள் என்பதை இந்தியா டுடே யில் வந்த நீண்ட கட்டுரையை படித்துப் பாருங்கள். நமது தமிழகத்தின் சாதி வெறி எந்த அளவு இந்த மக்களை பாடாய்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

--------------------------------------------------------------------

இன்றும் சாதிகள் இருக்குதடி பாப்பா!


தர்மபுரிக்குப் பின் - காதலின் பெயரால் சாதியக் கொலைகள் - பாலியல் வன்கொடுமைகள்

செல்வி வீட்டினுள் அமர்ந்து காய் நறுக்கிக் கொண்டிருக்கிறார். திடுமென்று உள்ளே நுழைந்த கும்பல் ஒன்றைப் பார்த்து அதிர்ந்து எழுந்து நிற்கிறார். கும்பலில் ஒருவரைப் பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் செல்வியின் சித்தப்பா. அந்தக் கும்பல் செல்வியை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கின்றது. மொத்த தெருவும் வேடிக்கை பார்க்க, செல்வியை தரதரவென்று இழுத்துக்கொண்டே சென்று வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்கிறார்கள். என்ன காரணம்? செல்வி ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது கணவர் முத்து தலித் சமூகத்தைச் சார்ந்தவர். இருவரும் பெற்றோரை எதிர்த்துக்கொண்டு திருமணம் செய்துகொண்டு வெளியூரில் தலைமறைவாக குடும்பம் நடத்தி வந்தனர். அவர்கள் வாழும் இடத்தைத் தெரிந்துகொண்ட செல்வியின் குடும்பத்தினர் அவரை இழுத்துச் சென்று வேறொரு ஊரில் உறவினர் வீட்டில் அவரை வைத்தனர். மனைவியை அழைத்துச்செல்ல தனியாக வரும்படி முத்துவுக்கு அழைப்பு விடுத்தனர் செல்வியின் உறவினர்கள். சூழ்ச்சியை உணர்ந்துகொண்ட முத்து நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவை அளிக்கிறார். நீதிபதியின் உத்தரவின் பேரில் செல்வியின் பெற்றோர் அவரைக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஆனால் வருவதற்குமுன் ‘நான் இஷ்டப்பட்டுத்தான் பெற்றோருடன் சென்றேன். முத்துவிடம் வாழ விரும்பவில்லை’’ என்றுதான் சொல்லவேண்டும் என்று மிரட்டி அழைத்துவந்தனர். செல்வியோ நீதிமன்றத்தில் ‘கணவருடன் செல்லவே விருப்பம்’ என்று கூறிவிட நீதிபதியின் உத்தரவின்பேரில் மீண்டும் அவர் கணவருடன் சேர்ந்தார். அவர் கழுத்தில் இருந்த நகைகளை எல்லாம் கழற்றிக்கொண்டு ‘தொலைந்துபோ’ என்று அனுப்பிய பெற்றோர் நீதிமன்றம் வரை விஷயம் சென்றுவிட்டதால் இனி எதுவும் செய்யமுடியாது என்று விட்டுவிட்டனர். இது விழுப்புரம் மாவட்டத்தில் நடந்தது. இருவரையும் கொல்லவே திட்டம் தீட்டப்பட்டதாக முத்து கூறுகிறார். முத்து புத்திசாலித்தனமாக ஆள்கொணர்வு மனு அளித்ததால் அவரது உயிரும், செல்வியும் உயிரும் தப்பித்தன. இப்படியான தப்பித்தல்கள் எப்போதும் சாத்தியம் இல்லை என்கின்றன அண்மைய சம்பவங்கள்.

சாதியின் பெயரால் நிகழும் படுகொலைகள் அண்மையில் அதிகரித்துள்ளன. பொதுவாக கௌரவக் கொலைகளில் பெண்களை கொல்லுவதே வழக்கம். ஆனால் தற்போது ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணும், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆணும் காதலித்தால், பெண் வீட்டாரால் ஆண் கொல்லப்படுவதாக இது மாறி இருக்கிறது. இதற்கு சேத்தியாத்தோப்பு சென்னிநத்தம் கோபாலகிருஷ்ணனின் மரணமே சான்று. கோபாலகிருஷ்ணன் என்கிற சீமான் பி.காம் இரண்டாமாண்டு மாணவர். அவருக்கும் உடன் பயின்ற துர்காவுக்கும் காதல். துர்கா வன்னிய சாதியைச் சேர்ந்தவர். இரவு 7 மணிக்கு மின்சாரம் இல்லாமல் ஊர் இருட்டாக இருந்ததால் துணைக்கு வீடுவரை வருமாறு துர்கா கோபாலகிருஷ்ணனை அழைக்க, அவரும் தெருமுனை வரை துணைக்குச் சென்றிருக்கிறார். இதைப் பார்த்துவிட்ட துர்காவின் குடும்பத்தினர் அவரை அடித்ததை துர்கா பார்த்திருக்கிறார். ’’அவராக வரவில்லை. நான் தான் துணைக்கு அழைத்துவந்தேன். என் வீட்டில் அவரைப் பார்த்துவிட்டதால், அவரைத் தாக்கத் தொடங்கினார்கள். அதன்பின் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது’ என்று துர்கா காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார். இனி கோபாலகிருஷ்ணனின் தாய் வனசுந்தரியின் வார்த்தைகளில்...

‘’என் மகனைக் காணலை. நைட்டு வரலைன்னதும், சர்க்கரை ஆலைக்கு வேலைக்குப் போயிருப்பான்னு நெனைச்சேன். அவன் செலவுக்கு அவன் சொந்தமாக சம்பாதிச்சுக்கிட்டான். நான் வயக்காட்டுக்கும், கட்டட வேலைக்கும் போறவ. பெத்தவங்களைக் கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு அவனே காலைல காலேஜுக்குப் போயிட்டு, நைட் ஷிப்ட் சர்க்கரை ஆலைக்கும் போவான். அன்னைக்கும் அப்படித்தான் போனான்னு நெனைச்சேன். மறுநாள் காலையிலையும் வரலை.அதனால சந்தேகமாச்சு. எல்லா இடத்துல தேடியும் கிடைக்கலை. அன்னிக்குப் பூரா பார்த்துட்டு, மறுநாள் போலீஸ்ல புகார் குடுக்கப்போனப்போ. என் புகாரை போலீஸ்ல வாங்கலை. எங்கேயாவது இருப்பான் தேடுன்னு சொன்னாங்க. அப்புறம் என் வீட்டுக்காரர் மத்த ஆளுங்களை அழைச்சுக்கிட்டு போனப்போ’ என்றவரை இடைமறித்தார் கோபாலகிருஷ்ணனின் தந்தை மாயகிருஷ்ணன். ‘’நான் போனப்போ போலீஸ் என்கிட்ட ‘இப்பத்தான் புகார் குடுக்க வர்றியா? கோபால கிருஷ்ணன் அப்பாதானேன்னு கேட்டாங்க? அவங்களுக்கு எப்படித் தெரியும். என் புள்ள காணா போனது. ஏற்கனவே அவனை கொலை பண்ணின விஷயம் போலீஸுக்குத் தெரிஞ்சிருக்கு. ஆனா ஒண்ணுமே சொல்லலை. 8 நாள் கழிச்சு புள்ளையை வயக்காட்டுல சேறு பூசி மறைச்சு வைச்சிருந்ததைக் கண்டுபிடிச்சோம். போலீஸுக்கும் கொன்னவங்களுக்கும் கள்ளக்கூட்டு இருக்கு’’ என்றார்.

‘’புள்ள கழுத்துல வெட்டியிருந்தாங்க. முதுகெல்லாம் வெட்டுக்காயம் இருந்துச்சு. கழுத்து காயத்துலேர்ந்து புழுவா கொட்டுச்சு.’’ சொல்லும்போதே கண்ணீர் விட்டார் வனசுந்தரி. ‘’அவங்க என் தம்பியை மட்டும் கொல்லலை. ஒரு குடும்பத்தையே அழிச்சிட்டாங்க. அவன் தான் ஒரே பையன். நாங்க மூணு பொண்ணுங்க. நான் எம்.எஸ்.சி படிக்கிறேன். படிச்சிட்டு ரெண்டு வருஷம் வேலைபார்த்து குடும்பத்துக்குக் கொடுத்துட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சிருந்தேன். ஆனா நான் இனிமே கல்யாணத்தைப் பத்தியெல்லாம் யோசிக்க முடியாது. ரெண்டு தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்குடுக்கணும்’’ என்றார் அவரது சகோதரி பார்வதி. பெற்றோரைப் பொருத்தவரை கோபாலகிருஷ்ணன் காதலித்தார் என்பதையே நம்பமறுக்கிறார்கள். ஆனால் பார்வதியோ ‘’என் தம்பி காதலிச்சதா ஃபிரண்ட்ஸ் சொல்றாங்க. அப்படியே காதலிச்சிருந்தால் அதிலென்ன தப்பு? இந்தக் காலத்துல யாரு காதலிக்கலை? அதுக்காக வெட்டுவாங்களா? இதுக்கெல்லாம் காரணம் ராமதாஸும் காடுவெட்டி குருவும்தான். போற இடத்துல எல்லாம் காதலிக்கிறவங்களை சும்மா விடாதீங்க பேசிப்பேசி உசுப்பேதுறாங்க. இந்தப் பேச்சைக் கேட்டுத்தான் அந்தப் பொண்ணு வீட்ல என் தம்பியைக் கொன்னுட்டாங்க’’ என்று அழுகையுடன் வெடிக்கிறார் பார்வதி. இப்படி பலரின் கண்ணீருக்கும் பின்னால் பெரிய கதை இருக்கிறது. ஒவ்வொரு இழப்பிற்கும் பின்னால் சாதிய வன்மம் இருக்கிறது. துர்காவின் தந்தை ரவி, அவருடைய பாட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

விழுப்புரம் பள்ளிநேலியனூரைச் சேர்ந்த கோகிலா பறையர் வகுப்பைச் சேர்ந்த தலித் பெண். அவருடைய கணவர் கார்த்திகேயன் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த தலித் இளைஞர். இருவரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டு அவரவர் வீட்டில் வாழ்ந்தனர். ’’அவங்களுக்கு எங்க காதல் தெரிஞ்சு வேற மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க. அருந்ததியனுக்குப் பொண்ணு குடுக்க மாட்டோம்னு சொன்னாங்க. ஆனா கோகிலா பிடிவாதமா இருந்தா. ஒருநாள் திடீர்னு போன் பண்ணி வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க. நாளைக்கு வீட்டுக்கு வந்து பொண்ணு கேளுன்னு சொன்னா. நானும் சந்தோஷமா தூங்கப் போனோம். ஆனா விடியறதுக்குள்ள அவ உயிரோட இல்லை. 11 மணி போல அவ கத்திக்கிட்டே வீட்டுக்கு வெளியே ஓடி வந்ததை அவங்க தெருவுல இருந்தவங்க பார்த்ததா என்கிட்ட சொன்னாங்க. அவ விஷம் குடிச்சதா அவங்க வீட்ல சொல்றாங்க. ஆனா அதுக்கு வாய்ப்பில்லை. அவளோட சொந்தக்காரங்களும் அம்மா அப்பாவும் இந்தக் கொலையை மறைக்கிறாங்க’’ என்று குற்றம் சாட்டும் கார்த்திகேயன் திருமணம் செய்துகொண்டதற்கான பதிவு சான்றிதழைக் காண்பிக்கிறார். வழக்கறிஞர் லூசி இந்த விஷயத்தை கையிலெடுத்துப் போராடி வருகிறார். அவருக்கும் மிரட்டல்கள் வந்தவணணம் இருப்பதாக லூசி கூறினார்.

கொல்வது ஒருவகை என்றால், தற்கொலைக்குத் தூண்டுவது இன்னொரு வகை. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எம்.குன்னத்தூரைச் சேர்ந்த தலித் இளைஞர் கண்ணனுக்கும் கிளாப்பாளையத்தைச் சேர்ந்த வன்னியப் பெண் கற்பகத்துக்கும் காதல். செங்கல்சூளையில் வேலை செய்யும்போது இருவருக்கும் காதல் பிறந்தது. காதல் விவகாரம் வீட்டுக்குத் தெரியவரவே, அவர்கள் இருவரும் வெளியூருக்குத் தப்பிவிட்டனர். திருமண ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தபோது, உள்ளூரில் தங்கள் பெண்ணைக் கடத்திவிட்டதாக கண்ணன்மீது புகார் கொடுத்தனர் கற்பகத்தின் பெற்றோர். கண்ணனின் நெருங்கிய உறவினரைப் பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரிக்கும்போது பார்த்து கண்ணன் அவருக்கு செல்பேசியில் அழைக்க அதன்மூலம் அவர்கள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டனர். அவர்கள் இருவரையும் பிடித்துவந்து காவல் நிலையத்தில் வைத்துப் பஞ்சாயத்து செய்து பிரித்து அனுப்பிவிட்டனர். ‘’என் அண்ணன் வீட்டுக்கு வராமல் நேரா செங்கல் சூளைக்குப் போறதுக்கு பஸ் ஏறிடுச்சு. திருக்கோவிலூர் போனப்போ போன் போட்டு, செங்கல் சூளைக்கா போறே? அங்கே மேஸ்திரி எல்லாம் எங்க சாதிதான். உன்னை அங்கேயே போட்டுத் தள்றோம்னு கற்பகம் வீட்ல மிரட்டினதால் அண்ணன் பஸ்ஸை விட்டு இறங்கி அப்படியே வீட்டுக்கு வந்துருச்சு. அண்ணன் அழுது அன்னிக்குத்தான் பார்த்தேன். நைட்டெல்லாம் அழுதுது. வீட்டுக்கு எதிர்ல இதோ இருக்கு பாருங்க..இந்த ரூம்லதான் அண்ணன் படுத்திருந்துச்சு. காலைல கதவைத் திறக்கலை. இதோ இந்த சன்னல் வழியா பார்த்தோம். இதோ இந்த ஃபேன்லதான் தூக்கு போட்டுத் தொங்குச்சு’’ என்று காண்பிக்கிறார் கண்ணனின் தங்கை கௌரி. இதுகுறித்து எந்த பிரக்ஞையும் இல்லாமல் தன் வேலையைப் பார்த்துக்கொண்டே இருக்கும் லோகம்பாளைப் பார்த்து பெருமூச்சுடன் சொல்கிறார் ‘’அதுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கு. அதுக்கு ஒண்ணும் தெரியாது’’ என்கிறார் கௌரி. தற்போது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிவாகி இருக்கிறது. கற்பகத்தின் எண்ணை எப்போது தொடர்புகொண்டாலும் அணைத்துவைக்கப்பட்டிருக்கிறது. எண் மட்டுமல்ல, அவர்களின் காதலும்தான்.

காதலிப்பவர்களைக் கொல்வது ஒரு வகை. காதலர்கள் தப்பிவிட்டால் அகப்பட்ட நண்பர்களைக் கொல்வது இன்னொரு வகை. காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியா பண்ருட்டியில் உறவினர் வீட்டில் தங்கி கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். பிரியாவின் பள்ளிக்காலத்து நண்பர்களான சிவகண்ணனும் சரண்யாவும் காதலர்கள். சிவகண்ணனும் பிரியாவும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே ஊர். சரண்யா செருவத்தூரைச் சேர்ந்த வன்னிய பெண். சிவகண்ணனும் சரண்யாவும் காதலுக்கா ஊரைவிட்டு வெளியேறிவிட, அவர்கள் எங்கே என்று தேடத்தொடங்குகிறது சரண்யாவின் குடும்பம். ‘’நீதானே அவர்களுக்குத் தோழி. எங்கே போனார்கள் என்று உனக்குத் தெரியாதா?’ என்று பிரியாவை தொடர்ந்து செல்போன் மூலம் நச்சரிக்கிறார்கள். அவருக்கு நிஜமாகவே தெரியாததால் தெரியவில்லை என்கிறார். ’’இதை நம்பாம எங்க வீட்டுக்கு வந்து விசாரிச்சாங்க . அவளை செல்போன்ல மிரட்டினதாவும் சொன்னா இதெல்லாம் நடக்கும்போது காலேஜுக்கு ஸ்டடி ஹாலிடேஸ் விட்டிருந்தாங்க. அதனால் வீட்லயே இருந்தா. ஹால்டிக்கெட் வாங்க காலேஜுக்கு போகவேண்டி இருந்துச்சு. எப்பவும் ஃபிரண்ட்ஸோட இருக்குற பிரியா ஒவ்வொருத்தரும் ஹால் டிக்கெட் வாங்க ஒவ்வொரு நேரத்துல வந்ததால அவ அன்னிக்கு தனியா இருந்தா. அவ காலேஜ் காம்பவுண்ட்டை விட்டு வெளியே வந்ததை பார்த்திருக்காங்க. அப்புறம் காணலை. நாங்க தேடாத இடமில்லை. மனசுக்கு ஏதோ தப்பா தோணிக்கிட்டே இருந்துச்சு. காலேஜ்லேர்ந்து ஏழு கிலோமீட்டர் தள்ளி இருக்கிற ஒரு குளத்துகிட்ட வாக்கிங் போனவங்க சில பேர் அவளோட பை ரோட்ல கிடந்ததைப் பார்த்து தகவல் சொன்னாங்க. சந்தேகப்பட்டு குளத்தைப் பார்த்தோம். பிணமா மிதந்துக்கிட்டு இருந்தா. உடம்பெல்லாம் காயம். ஆனா அவ தற்கொலை செஞ்சுக்கிட்டதா போலீஸ் சொன்னது. அந்தக் குளத்தில் கழுத்தளவுதான் தண்ணி இருக்கு. அதுக்குள்ள போய் தற்கொலை செஞ்சுக்க நீச்சல் தெரிஞ்ச பிரியா முடிவு பண்ணியிருக்கமுடியுமா?’’ என்கிறார் ப்ரியாவின் சகோதரர் மோகன் தாஸ். நெல்லிக்குப்பம் காவல்துறை ஆய்வாளர் குருமூர்த்தியை தொடர்புகொண்டபோது ‘’சிபிசிஐடி விசாரணை கேட்டு போராட்டம் பண்ணினாங்க. அதனால் சிபிசிஐடிக்கு பரிந்துரை பண்ணியிருக்கு. இதுக்கு மேல் இந்தக் கேஸ் பத்தி நான் எதுவும் சொல்வதற்கில்லை’’ என்றார்.





பிரியாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட குளம்

இதுவரை நாம் பார்த்த காதல்களில் எல்லாமே ஆண்கள் தலித்துகளாகவும் பெண்கள் ஆதிக்க சாதியினராகவும் இருந்தனர். இந்தக் காதலில் சிட்டாம்பூண்டியைச் சேர்ந்த காவேரி தலித் பெண். வெங்கத்தூரைச் சேர்ந்த நாராயணமூர்த்தி என்கிற சிவா வன்னியர். இவர்கள் காதலித்து ஊரைவிட்டுச் சென்று திருமணம் செய்துகொண்டனர். ஒருவாரம் கழித்து ஊர் திரும்பிய காவேரியை வீட்டில் சந்தேகப்பட்டு கேட்டபோது அவர் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்ததாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் சிவா வந்து அழைக்கவே அதன்பின் விஷயம் தெரிந்து சீர் செனத்தியுடன், நகைகளுடன் பெண்ணை மாப்பிள்ளையுடன் அனுப்பி வைத்திருக்கிறார்கள். திருவண்ணாமலையில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் சிவாவும் காவேரியும் தனிக்குடித்தனம் போனார்கள். ’’என் மக நல்லா வாழ்வான்னு நெனைச்சேன். ஆனா எப்பவும் சாதிசொல்லித் திட்டிக்கிட்டே இருந்துருக்காங்க. பையனோட அம்மா மச்சவல்லி எப்பவும் பையன்கிட்ட இவளோட சாதியைச் சொல்லி திட்டுறதும் உடனே அந்தக் கோபத்தையெல்லாம் இவ மேல் காட்டுறதுமா போயிருக்கு வாழ்க்கை. அடிதடி ரகளையெல்லாம் நடந்துருக்கு. என் பையன் சபரிமலைக்கு மாலை போட்டான். அதுக்கு வரச்சொல்லி காவேரிக்கு சொல்லி அனுப்பிச்சோம். இங்கே வர கிளம்பினப்போ, உன் சாதிசனம் கூட பேச்சு வச்சுக்கக்கூடாது, அங்கே போகக்கூடாதுன்னு சொல்லித் தடுத்திருக்காங்க. ஆனா அவ கேட்காம கிளம்பி இருக்கா. அடிச்சிருக்காங்க. இதெல்லாம் அப்புறமாத்தான் தெரியும் எங்களுக்கு. திண்டிவனத்துல இருக்குற டாக்டர் ராமதாஸ் ஆஸ்பத்திரியில அவ பிணம் கெடக்குறதா சொன்னாங்க. போய்ப் பார்த்தோம். விஷம் குடிச்சிருக்கான்னு சொன்னாங்க. அதுக்கு வாய்ப்பே இல்லை. அவ உடம்பெல்லாம் கீறலும் காயமுமா இருந்துச்சு. இவங்கதான் ஏதோ பண்ணிட்டாங்க’’ என்று குற்றம்சாட்டுகிறார் காவேரியின் தாய் கண்ணகி. ஆனால் காவேரியின் கணவர் சிவாவைத் தொடர்புகொண்டபோது அவரது மாமா பொன்னுசாமி ‘’அவங்க சொல்றது பொய். காவேரிக்கு அங்கே போக விருப்பம் இல்லை. ஆனா அவங்க அண்ணன் வரச்சொல்லி டார்ச்சர் பண்ணினதால விஷம் சாப்பிட்டுருச்சு. நாங்க பார்த்து ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போறதுக்குள்ள உயிர் போயிருச்சு. மத்தபடி எதுவும் கிடையாது’’ என்று மறுக்கிறார். தற்கொலைக்குத் தூண்டியதாக இப்போது வழக்கு போடப்பட்டிருப்பதாக பெரியதச்சூர் காவல்துறை ஆய்வாளர் குமார் தெரிவித்தார்.





கோபால கிருஷ்ணனின் உடல் கண்டெடுத்து தூக்கி வரப்படும் காட்சி

தமிழகம் முழுதும் காதல் கொலைகளும், தலித் பெண்கள் மீதான வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் ஒரு சோறு பதமாகவே விழுப்புரம் மாவட்டத்தைப் பார்க்கவேண்டியுள்ளது. வடமாவட்டங்களில் செல்வாக்குடன் இருக்கும் வன்னிய சமூகத்தினர்தான் காவல்துறை உட்பட அரசுத் துறைகளில் அதிகமாக இருக்கிறார்கள். ஆகவே தலித்துகளுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை. தலித் அமைப்புகளை அணுகி அவர்கள் மூலம் போராட்டம் நடத்தினால்தான் பல இடங்களில் வழக்குகளே பதிவு செய்யப்படுகின்றன. வடமாவட்டங்களில் நிலைமை இப்படியென்றால் தென்மாவட்டங்களில் தேவர்களின் ஆதிக்கமும், மேற்கு மாவட்டங்களில் கவுண்டர்களின் ஆதிக்கமும் கோலோச்சுகின்றன.

காதல் திருமணங்களுக்கு எதிராக தலித் அல்லாத சாதிகளைக் கொண்டு ராமதாஸ் கட்ட நினைத்த கூட்டணியின் தற்போதைய நிலை என்ன? வன்னியர்களை உள்ளடக்கிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் அனைத்து சமுதாயப் பேரியக்கத்தின் கூட்டங்கள் கூட்டப்படுகின்றன. ஜனவரி 21 அன்று கோவையில் நந்தினி என்கிற கல்லூரி மாணவி கொல்லப்பட்டார். கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த அவர் ஒரு வன்னிய இளைஞரை காதலித்ததால் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்தச் சம்பவத்தில் வன்னியர்களை கவுண்டர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எந்த ‘நாடகக் காதல்’ மூலம் தலித் இளைஞரக்ள் வன்னியப் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்று ராமதாஸ் குற்றம் சாட்டினாரோ அதே ‘நாடகக் காதல்’ என்கிற அஸ்திரம் இன்றைக்கு இந்தச் சம்பவத்தில் வன்னிய இளைஞர் மீது ஏவப்படுகிறது. சமூக அடுக்கில் தன் சாதிக்குக் கீழ் உள்ள ஒரு சாதியை ஏற்றுக்கொள்ளாத மனநிலைக்கான உதாரணம் இது. ராமதாஸ் கூட்டும் அனைத்து சமுதாய பேரியக்கத்தின் தலைமையை தற்போது ராமதாஸ்தான் அலங்கரிக்கிறார். ஆனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருக்கும் வன்னிய சமுதாயத்தின் தலைவரை, மற்ற சாதிகள் ஏற்றுக்கொள்ளாது என்பதற்கு சாட்சியாக அவர்களின் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்களுக்கு இடையேயான போட்டி வெளிப்பட்டது. இன்றைக்கு மூன்றாகப் பிரிந்துவிட்டது ராமதாஸ் கட்டிய கூட்டணி. பொங்கலூர் மணிகண்டனும் நகைமுகனும் இணைந்து தலித் அல்லாதோர் பாதுகாப்புப்பேரவை என்கிற பெயரில் தனி அமைப்பு தொடங்கி விட்டனர். குமார ரவிக்குமாரும் ராமதாஸுடன் இல்லை. ஆக ராமதாஸின் அனைத்து சமுதாய பேரியக்கம் கலகலத்துப் போயிருக்கிறது.

ராமதாஸ் 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்காகவே இப்படி தலித் அல்லாதோர் வாக்குகளைத் திரட்ட திட்டமிட்டார் என்று குற்றம் சாட்டுகிறார் தொல்.திருமாவளவன். ஆனால் ராமதாஸோ ஆகாயம் - பூமி உள்ளவரை திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறார். ‘’எதைச் செய்ய மாட்டேன் என்று சொல்கிறாரோ அதைச் செய்வதுதான் இதுவரை ராமதாஸைப் பொருத்தவரை நடந்திருக்கிறது. ஆகவே பொறுத்திருந்து பாருங்கள்’’ என்கிறார் தொல்.திருமாவளவன்.

ராமதாஸ் அரசியல் நடத்த பல உயிர்கள் பலியாக வேண்டுமா என்பதே இப்போது எழும் முக்கிய கேள்வி. ’’தர்மபுரி சம்பவத்திற்குப் பின்னே கௌரவக் கொலைகளுடன் தமிழகத்தில் தலித் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைத் தாக்குதல்களும் அதிகரித்திருக்கின்றன’’ என்கிறார் எவிடன்ஸ் கதிர். ’’’’தர்மபுரியில் வன்முறையாளர்களால் அராஜகச் செயல்கள் அரங்கேறிய நவம்வர் 7க்குப் பின்னான நிகழ்வுகளால் மீண்டும் அவர்கள் இருண்ட காலத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது அபாய அறிவிப்பு. தூங்கும் எரிமலையை வெடிக்கச் செய்யும் வேலையை யாரும் செய்யக்கூடாது. தலித் சமூகத்தின் மீதான வன்கொடுமைகளைத் தடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது’’ என்கிறார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ.

சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இந்தியா டுடேயிடம் ‘’சாதிமறுப்பு திருமணம் செய்வதை எதிர்ப்பது என்பது தீண்டாமையின் இன்னொரு வடிவம்.ராமதாஸின் பிரசாரம் தீண்டாமையையும் கௌரவக் கொலைகளையும் ஊக்குவிக்கிறது. இவை தடுத்து நிறுத்தப்படவேண்டும். பொதுவான கொலை வழக்கே கௌரவக் கொலைகளிலும் போடப்படுகிறது. அப்படியல்லாமல் இதற்கென்றெ தனிச்சட்டம் இயற்றப்படவேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் தான் அந்தக் கொலையைச் செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்கிற வகையில் அந்தச் சட்டம் இருக்க வேண்டும்’’ என்றார்.

பா.ம.க. தரப்பில் இதற்கு என்ன பதில் என்று அறிய ராமதாஸை தொடர்புகொண்டபோது மின்னஞ்சலில் கேள்விகளை அனுப்பச் சொல்ல, அப்படி அனுப்பியும் பதில் ஏதும் கிடைக்கவில்லை. .தலித்துகளுக்கு எதிரான மனநிலையை கிளறி விடுவதன் மூலம் சமூகத்தின் சமன் குலைவதை சமுதாய அக்கறை கொண்டோர் கவலையுடன் பார்க்கின்றனர். அரசியல் இயக்கங்கள் எதிர்ப்புகளை ஜனநாயகரீதியாகத் தெரிவிக்கின்றன. ஆனாலும் போன உயிர்கள் திரும்பி வருமா?

இணைப்பு

தர்மபுரி சம்பவத்திற்குப் பின் தமிழகத்தில் நடைபெற்று வரும் கௌரவக் கொலைகளும் தலித் பெண்கள் மீதான தாக்குதல்களும்

1. சென்னிநத்தத்தில் கோபாலகிருஷ்ணன் என்கிற தலித் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டார் (விவரம் : கட்டுரையின் உள்ளே)

2. காந்தளவாடி பிரியா கொலை செய்யப்பட்டார் (விவரம் :கட்டுரையின் உள்ளே)

3. கோகிலா கௌரவக் கொலை செய்யப்பட்டார் (விவர ம்: கட்டுரையின் உள்ளே)

4. சிட்டாம்பூண்டி காவேரி மர்மமான முறையில் இறந்தார் (விவரம்: கட்டுரையின் உள்ளே)

5. எம்.கண்ணனூரைச் சேர்ந்த கண்ணன் தற்கொலைக்குத் தள்ளப்பட்டார் (விவரம் : கட்டுரையின் உள்ளே)

6. கோவையைச் சேர்ந்த நந்தினி கௌரவக் கொலை செய்யப்பட்டார் (விவரம் : கட்டுரையின் உள்ளே)

7. வேலூர் அருகே தலித் பெண் ரோசி கந்தன் என்கிற சாதி இந்துவை காதல் திருமணம் செய்துகொண்டார். கந்தனின் குடும்பத்தினரால் ரோசி 15.12.2012 அன்று தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

8. திருவள்ளூர் அருகே மெதூர் கிராமத்தில் நந்தினி என்கிற சாதி இந்துப் பெண் தலித் இளைஞரான பிரவீனை காதலித்து வந்தார். நந்தினியின் உறவினர்கள் 17.01.2013 அன்று நந்தினியை அடித்து சித்திரவதை செய்து அவரது கழுத்தை அறுத்துள்ளனர். படுகாயமடைந்த நந்தினி சிகிச்சை எடுத்துவருகிறார். இது குறித்து கும்மிடிப்பூண்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

9. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த தலித் பெண் இளையநிலாவும் அவரது காதலரும் பேசிக்கொண்டிருந்தபோது 18.12.2012 அன்று அப்பகுதியைச் சேர்ந்த சாதி இந்துக்கள் அவரது காதலனை கடுமையாகத் தாக்கி இளையநிலாவின்மீது பாலியல் பலாத்காரத்தை பிரயோகிக்க முயன்றுள்ளனர். மன்னார்குடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

10. கடலூர் மாவட்டத்தில் உள்ள சம்பந்தம் காலனி கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் சந்தியா சிதம்பரத்தில் உள்ள புகைப்பட ஸ்டுடியோ ஒன்றில் பணிபுரிந்துவந்தார். ஸ்டுடியோவின் உரிமையாளர் 25.12.2012 அன்று பாலியல் வன்புணர்வுக்கு முயன்று கொலை செய்துள்ளார் என்று சந்தியாவின் பெற்றோர் குற்றம் சாட்டுகிறார்கள்.

11. திருநெல்வேலி மாவட்டம் கருத்தபிள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் 13 வயது ப்ரியா 17.01.13 அன்று மாலை சாதி கிறிஸ்துவரான சினியன் என்கிற 50 வயது நபரால் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். ஆழ்வார்க்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

12. நாமக்கல் மாவட்டம் பெரிய அய்யம்பாளையத்தில் வசித்துவரும் 18 வயது தலித் பெண் கஸ்தூரி கடந்த 30.12.2012 அன்று கிருஷ்ணன், குமார், சிவா ஆகிய மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று சித்திரவதை செய்து பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். நல்லிப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

13. கடலூர் மாவட்டம், குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் சுகந்தி 24.12.2012 அன்று அவரது உறவினர் பாக்யராஜுடன் விருத்தாசலம், மணிமுத்தாறு படித்துறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது 10க்கும் மேற்பட்ட சாதி இந்துக்களால் ஆடை கிழிக்கப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார். பாக்யராஜ் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. விருத்தாசலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

14. செஞ்சி தும்பூர் காலனியைச் சேர்ந்த ரீட்டாராணி என்கிற தலித் பெண், மனிமாறன் என்கிற சாதி இந்துவை காதலித்தார். மணம் செய்துகொள்வதாக வாக்குறுதியளித்து ரீட்டாராணியை தன் பாலியல் தேவைக்கு பயன்படுத்திக்கொண்டார். இது குறித்து செஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

15. கடலூர் மாவட்டம், பென்னடத்தைச் சேர்ந்த தலித் பெண் சத்யாவை, ஆடலரசன் என்கிற சாதி இந்து 2.2.2013 அன்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பென்னடம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

14. பென்னேரி பகுதியில் வசிக்கும் தலித் சிறுமி ரேவதியை சாதி இந்துவான 52 வயது ஜெயசீலன் 26.01.13 அன்று கடத்திச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளார். சோழவரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

16. சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த 16 வயது தலித் சிறுமி இசக்கியம்மாளை சாதி இந்துவான ஞானதுறை கடந்த 17.01.2013 அன்று கடத்திச் சென்று கடுமையாக சித்திரவதை செய்து பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார். சேரன்மகாதேவி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

17.சேலத்தில் 16 வயது தலித் சிறுமி தீபா என்பவரை கடண்டஹ் 16.01.2013 அன்று சாதி இந்துக்கள் இரண்டு பேர் கட்டி வைத்து சித்திரவதை செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

18.. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்த தலித் பெண் ரஞ்சனியை சாதி இந்துவான சரவணன் அடித்துத் துன்புறுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். செய்யாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி : இந்தியா டுடே

7 comments:

Unknown said...

எங்க இல்லை ஜாதி. உங்க மதத்துல இல்லாத கவுரவக்கொலையா? அரேபிய பெண்ணை நீங்கள் திருமனம் செய்ய முடியுமா?

Anonymous said...

இசுலாமியர்களுக்கு ஆகப்பெரும் சவால்...
-----------------------------------
கொஞ்ச நாளைக்கு முன்பு எனது அலுவலகத்திற்கு டிசைன் செய்ய இருவர் வந்தார்கள். போட்டோவை எல்லாம் கொடுத்தார்கள். நான் அதை ஆல்டர் பண்ணிக்கிட்டு இருந்தேன். அதில் ஒரு போட்டோல இருந்தவர் மட்டும் பார்ப்பதற்கு இசுலாமியர் போல் இருந்தார் ஆனால் அவரும் இந்து தான். அதைப் பார்த்த ஒருவர் என்னடா... முஸ்லிம் மாதிரி... தீவிரவாதி மாதிரி இருக்கான் என்றார். அவரிடம் நான் விவாதித்து இருப்பேன். என்னோடு வேலை பார்க்கும் என் இசுலாமியர் நண்பரின் முகத்தை பார்த்தேன். எந்த சலனமும் இன்றி வேலை செய்து கொண்டு இருந்தார். என் நண்பரை சங்கடப்படுத்த விரும்பாமல் நானும் அமைதியாகி விட்டேன். அந்த சம்பவம் இன்றுவரை என் நெஞ்சை அறுத்துக் கொண்டே இருக்கிறது...

அப்போது என் மனதிற்குள் தோன்றியது " இவர் தீவிரவாதிகளை நேரில் பார்த்திருக்க மாட்டார், அவர்களோடு பேசியிருக்க மாட்டார், அவர்களின் குணாதிசயம் என்ன என்பதும் இவருக்கு தெரியாது. அதுபோலவே முஸ்லிம்களோடும் பழகி இருக்கமாட்டார், முஸ்லிம்களின் எண்ணம், சிந்தனை, நேயம் இவை எதுவும் இவருக்கு தெரியாது. ஆனால் முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்ற நம்பிக்கை அதாவது பொதுப்புத்தி மட்டும் அசைக்க முடியாமல் இருக்கிறது.

அவரது எண்ணத்திற்கு அடிப்படை காரணம், எல்லோரும் சொல்கிறார்கள், எல்லோரும் நம்புகிறார்கள் நாமும் சொல்வோம், நாமும் நம்புவோம் என்ற பொதுப்புத்தி தானே... இந்த பொதுப்புத்தியை மாற்ற என் சகோதரர்களாகிய இசுலாமியர்களிடம் என்ன திட்டம் இருக்கிறது? இந்த பொதுப்புத்தி உங்களை வாழவிடாமல் சீரழிக்கிறது என்பதை உணருகிறீர்களா? உணர்ந்து கொண்டால் மட்டும் போதுமா?? என்ன செய்யப் போகிறீர்கள்??? மாற்று சிந்தனையை உருவாக்குங்கள் உங்களோடு பயணிக்க எம் போன்றவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடு....

- அங்கனூர் தமிழன் வேலு

suvanappiriyan said...

திரு ஜெய்சங்கர்!

//எங்க இல்லை ஜாதி. உங்க மதத்துல இல்லாத கவுரவக்கொலையா?//

முஸ்லிம்களிலும் பல பெண்கள் அங்கு செல்வதும் அங்கிருந்து இங்கு வருவதும் காதலால் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. அதற்காக சிலர் கண்டிக்கலாம். கொலை செய்யும் அளவுக்கு செல்வதில்லை. அப்படி நடந்திருந்தால் மீடியாக்கள் சும்மா விடுமா?

//அரேபிய பெண்ணை நீங்கள் திருமனம் செய்ய முடியுமா?//

தாராளமாக...அந்த பெண்கள் கேட்கும் மஹர் தொகையை கொடுக்க சக்தியிருந்தால் யார் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். பல திருமணங்கள் சிறப்பாக நடந்துள்ளது. அடுத்த மாதம் எனது ஹைதராபாத் நண்பனுக்கு ஜெத்தாவில் திருமணம் முடிக்க இரு வீட்டாரும் நிச்சயம் செய்துள்ளார்கள். இஸ்லாத்தில் இதற்கு எந்த தடையுமில்லை.

ஆக பாதிக்கப்பட்ட தலித்களுக்கு ஆதரவு தெரிவிக்க மனது வரவில்லை... :-(

Anonymous said...

டாக்டர் அன்புராஜ் said…

முஸ்லீம்களுக்குள் சாதி உண்டு.காதியானி சுன்னி சியா, பேரா மரைக்காயர் லெப்பை அன்சாரி இப்படி 72 பிாிவுகள் உள்ளன என்பதை மறந்து விடாதே தம்பி. சாதிகள் கலந்து கொண்டுதான் இருக்கின்றது. சீர்திருத்தங்கள் மிக வேகமாக பரவி வருகின்றது. அதை கெடுப்பதே இப்படி எழுதித் தொலைக்கும் தங்களைப் போன்ற சமூக பயங்கரவாதிகள்தாம்.

suvanappiriyan said...

டாக்டர் அன்புராஜ்!

//முஸ்லீம்களுக்குள் சாதி உண்டு.காதியானி சுன்னி சியா, பேரா மரைக்காயர் லெப்பை அன்சாரி இப்படி 72 பிாிவுகள் உள்ளன என்பதை மறந்து விடாதே தம்பி.//

இந்த பிரிவுகளெல்லாம் தமிழகத்தில்தான். அரபு நாடுகளில் சென்று இந்த பிரிவின் பெயர்களை சொன்னால் சிரிப்பார்கள். அடுத்து இந்த பிரிவுகளின் பெயரால் கௌரவக் கொலைகள் ஏதும் நடந்துள்ளதா நமது தமிழக வரலாற்றில். ஆனால் உங்கள் இனத்தில் தினமும் இவ்வாறான செய்திகளைப் பார்க்கிறோம். பத்திரிக்கைகளில் வருவது மிகக் குறைவே. வராத கெலைகள் கணக்கில் அடங்காது. பெரியார் இவ்வளவு பாடுபட்டே நிலைமை மாறவில்லை.

//சீர்திருத்தங்கள் மிக வேகமாக பரவி வருகின்றது. //

தினமும் காதலித்த குற்றத்திற்காக தலித்களை கொலை செய்வதா? :-)

//அதை கெடுப்பதே இப்படி எழுதித் தொலைக்கும் தங்களைப் போன்ற சமூக பயங்கரவாதிகள்தாம். //

இந்த செய்தியை சொன்னது நானல்ல...இந்தியா டுடே

Gkm said...

நீ சரியான காமெடி பீசு சுவனம்

Gkm said...

நீ சரியான காமெடி பீசு சுவனம்