Followers

Thursday, August 29, 2013

மோடி ஆட்சி வளர்ச்சியா - தளர்ச்சியா? - கவிஞர் கலி. பூங்குன்றன்

இந்த கட்டுரையை படிப்பதற்கு முன்னால் தான் ஆட்சியில் அமர எந்த விதமான மோசடியையும் செய்ய துளியும் தயங்காத மோடியின் என் கவுண்டர் விபரத்தையும் பார்த்து விடுங்கள். இத்தனை அப்பாவி உயிர்களை குடித்த நரேந்திர மோடியை இந்த நாடு கேட்கா விட்டால் கூட எல்லோரையும் படைத்த அந்த இறைவன் ஒரு நாள் கண்டிப்பாக கேட்பான்....அது வரை பொறுப்போம்.



குஜராத் ஒளிர்கிறது ஒளிர்கிறது என்கிறார்களே, அதன் பொருள் என்ன? ஒழிகிறதா ஒளிர்கிறதா?

வளர்ச்சித் திட்டம் என்று சொல்லப்படுவதைக்கூட இந்துக்கள் வாழும் பகுதிகளில்தானே? முசுலிம்கள் வாழும் பகுதிகள் நகராட்சிக் குப்பைத் தொட்டிகள்தான்!

தொடக்கப் பள்ளியில் சேரும் இந்துக்கள் 79 விழுக்காடு என்றால் முசுலிம்கள் 75 விழுக்காடுதான். முசுலிம் மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்குச் செல்லும்போது வெறும் 26 சதவிகிதம் என்கிற பெரும் சரிவே!

டீக்கடை, தையல்கடை, பீடிசுற்றுதல், ரிக்ஷா இழுத்தல், ஆட்டோ ஓட்டுதல் _ இவையெல்லாம் முசுலிம்களுக்கு ஒதுக்கப்பட்ட தீண்டாமைத் தொழில்கள் ஆகிவிட்டன.

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இஸ்லாமியர் வெறும் 12 சதவிகிதமே; மற்றவர்கள் இதில் 89 சதவிகிதம்!

ஃபிரண்ட் லைன் ஏடு (20.05.2011) குஜராத்தில் வளர்ச்சி நிலை, பொருளாதாரச் சூழல், ஊழல்கள் பற்றி விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

என்.வி.ஏ.பி.ஆர். என்ற பொருளாதார தொடர்பான ஆய்வு மய்யம் குஜராத் மாநிலத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வு வெளியிட்ட அறிக்கையைத்தான் ஃபிரண்ட் லைன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. அவற்றுள் சில இதோ:

2002ஆம் ஆண்டில் முசுலிம்கள் படுகொலை - பாதிப்புகள் நடந்திருந்தாலும் இன்னும் முசுலிம்களில் அகதிகளாக முடங்கிக் கிடப்பவர்கள் 23 ஆயிரம் பேர்.

சாலைகள், மின் இணைப்புகள், குடிநீர் வசதிகள் ஒரு பக்கம் செய்யப்பட்டுள்ளன எனினும் பொதுவான சமூக மேம்பாடு வளர்ச்சி மிகவும் குறைவே - இதற்கும் காரணம் ஊழல்கள் அதிகரித்ததுதான்.

மோடி ஆட்சியில் முப்பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. ரூ. 17 ஆயிரம் கோடி செலவில் சுறாலம் சஃபாலம் என்னும் திட்டம் தீட்டப்பட்டது. குளங்களை வெட்டும் - சீரமைக்கும் திட்டம் இது. தொழிலாளர் களுக்கு உள்நாட்டில் கோதுமை விலையைக் கணக்கில் கொண்டு கூலி வழங்கப்பட வேண்டும்.

ஒப்பந்தக்காரர்களுக்கு முன்கூட்டியே தொகை வழங்கப்பட்டுவிட்டது.

ஆனால், தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்கப்படவில்லை.

குளங்கள் வெட்டப்பட்டதாக ஏட்டில் காட்டப்பட் டதே தவிர நடைமுறையில் வெட்டப்பட வில்லை. (குளத்தைக் காணோம் - யாரோ திருடிவிட்டார்கள் என்ற வடிவேலுவின் காமெடி நினைவுக்கு வருமே!).

தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதற்கான அரிசி மகராஷ்டிர மாநிலத்திற்குக் கடத்தப்பட்டது.

மத்திய அரசின் திட்டமான தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 260 கோடியும் சுளையாக விழுங்கப்பட்டது. வேலைகளும் நடைபெறவில்லை _ மக்களும் வேலைவாய்ப்புகளைப் பெற்றிடவில்லை.

மீன் வளர்ப்புத் திட்டத்தில்கூட 600 கோடி ரூபாய் நட்டமாகும் அளவிற்குப் பெரும் ஊழல்.

பன்னாட்டு நிறுவனங்கள் குவிந்தது உண்மைதான். விவசாய நிலங்கள் பழங்குடியினருக்கான நிலப்பகுதிகள் தாராளமாக பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டன.

கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக நீதிமன்ற உத்தரவின்பேரில் பல தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன.

பெரும் தொழிற்சாலைகள் வந்தன; ஆனால், மக்களின் அடிப்படை வளர்ச்சித் திட்டங்கள் குன்றின.

வேலைவாய்ப்பு பெருகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது பொய்த்துவிட்டது.

குஜராத் மகுவா பகுதி நிலக்காரர்களின் போராட்டம் மிக முக்கியமானது.

அணை ஒன்றைக் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை பூமிக்கு அடியில் உள்ள சுண்ணாம்புக் கற்களைத் தோண்டி வெளியில் எடுத்து சோப்புத் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க உத்திரவிட்டார் நரேந்திர மோடி.

மோடியின் இந்த அடாத செயலை எதிர்த்து உள்ளூர் பி.ஜே.பி.காரர்களும்கூட விவசாயிகளுடன் சேர்ந்துகொண்டு போராட்டத்தில் குதித்தனர். 30 ஆயிரம் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த பகுதிகளை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

சவுராட்டிரா வாங்கனர் மாவட்டத்தில் 40 ஹெக்டேர் நிலம் ஒரு சதுர மீட்டர் 40 ரூபாய் என்று அடிமாட்டு விலைக்குத் தனியார் தொழிற்சாலைக்கு விற்கப்பட்டது. உள்ளூர் மக்கள் நீதிமன்றம் வரை சென்று தடை ஆணை பெற்றனர்.

மோடி ஆட்சியில் தாழ்த்தப்பட்டோர் நிலை படுபாதாளத்தில்! தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் பிற ஜாதிகளைச் சேர்ந்தவர்களையும் சரிசமமாக அமர வைத்ததற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியை வேறு ஊருக்குத் தூக்கி அடிக்கப்பட்டார்.

இதுபோன்ற ஏராள தகவல்களை ஃப்ரண்ட் லைன் பட்டியல் போட்டுள்ளதே. இதற்கு என்ன பதில்?

ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்கிறபோது கல்வியைக் கணக்கில் கொள்ள வேண்டும். மாநிலங்களுக்கான கல்வி வளர்ச்சியில் இந்தியாவில் 15ஆவது இடத்தில் இருக்கும் மாநிலம்தான் குஜராத்.

கட்டட வசதி, குடிதண்ணீர், கழிப்பறை, ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை சதவிகிதம், மாணவர் சேர்க்கை, இடைநிறுத்தம் (DROP OUTS) தேர்ச்சி விகிதம் ஆகியவற்றில் அடிமட்டத்தில் கிடக்கும் குஜராத் மாநிலம் இந்தியாவில் முதல் மாநிலம் என்றும், அமெரிக்கா பாராட்டுகிறது என்றும் பிரச்சாரம் திட்டமிட்ட வகையில் நடத்தப்படுகிறது.

மத்திய அரசின் நிதி உதவிகளைக் கொண்டு தொழிற்கல்வி அளிக்கும் பயிற்சி மய்யங்கள் குஜராத் மாநிலத்தில் மேற்கொள்ளத் திட்டம்.

ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் மூன்று லட்ச ரூபாய் மத்திய அரசிடமிருந்து இந்தப் பயிற்சி மய்யங்களுக்கு வழங்கப்பட்டன. பத்தாண்டுகளுக்கு முன் 500 பயிற்சி மய்யங்கள் தொடங்கப்பட்டன.

இவை குறித்து கல்வித்துறைச் செயலாளர் வரேஷ்சின்கா ஆய்வு செய்தார். அதிர்ச்சிதான் காத்திருந்தது. மய்யங்களில் விளம்பரப் பலகை இருந்தனவே தவிர மாணவர்களும் கிடையாது.

ஒப்புக்குச் சில ஆசிரியர்கள் இருந்தனராம். இந்த ஆசிரியர்களிடத்தில் மாதச் சம்பளம் 7 ஆயிரம் என்று கையொப்பம் வாங்கிக்கொண்டு மூவாயிரத்திற்குக் குறைவாகக் கொடுக்கப்பட்டது.

இந்த ஆசிரியர்கள் முறையான பயிற்சி பெற்றவர்களும் அல்லர். இந்தத் திட்டத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் ஏப்பம்.

சொல்லியிருப்பவர் யார்? கல்வித்துறைச் செயலாளர் - அதுதான் முக்கியம்.

இதுபற்றியெல்லாம் மூச்சுவிடுமா சோ கூட்டம்? மோடி ஆட்சியில் சுயநிதி ஆசிரியர் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 40 கல்லூரிகளில் எவ்வித வசதியும் கிடையாது. பொதுமக்களின் வளர்ப்பு முட்டி எழுந்தது. இந்த நிலையில் ஏ.பி.படேல் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அடிப்படை வசதியின்றி கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதை குழு அறிக்கை அம்பலப்படுத்தியது.

40 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறக் கூடாது என்று தேசியக் கவுன்சில் ஆணை பிறப்பித்துவிட்டது. தேசியக் கவுன்சில் சார்பாக அய்ந்து குழுக்கள் குஜராத்திற்குச் சென்றன. அவசரமாக வெவ்வேறு கல்லூரிகளிலிருந்து மாற்றி மாற்றி ஆசிரியர்களை வரவழைத்து கண்ணில் மண்தூவும் ஏமாற்று வேலைகள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன. ஆகா மோடியின் நிர்வாகமே நிர்வாகம்!

குடிநீருக்காக பல மைல்கள் நடந்து செல்லும் அவலம்தான் இன்னும் குஜராத்தில்.

வளர்ச்சியோ வளர்ச்சி என்று குஜராத் கொண்டைக்குப் பூ சூட்டுகிறார்கள்; அம்மாநில அரசின் கடன் கொஞ்சம்தான். 1.3. லட்சம் கோடி (கொஞ்சம் தானே!)

ஊழலற்ற ஆட்சி என்று சங்கெடுத்து ஊதி முழங்குகின்றனவே உயர்ஜாதி ஊடகங்கள் -அதாவது உண்மைதானா?

ஊழல் என்றால் உடனே வெளிப்படுத்தும் அமைப்புதானே லோக் அயுக்தா?

குஜராத்தில் இதன் நிலை என்ன? லோக் அயுக்தா உண்டு; ஆனால் எட்டாண்டு காலமாக அதற்கு நீதிபதியை நியமிக்காதது ஏன்? மடியில் கனமில்லை என்றால் நீதிபதியை நியமிக்க வேண்டியதுதானே?

மோடிதான் நியமிக்கவில்லை; நீதிபதியை ஆளுநர் நியமனம் செய்தார். மாநில முதல்வர் உரிமையைப் பறிக்க இவர் யார் என்ற உரிமைக் குரல் கொடுப்பது போல ஊத்தை வாயைத் திறக்கின்றனர்.

லோக் அயுக்தா விஷயத்தில் மோடி ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று எந்தப் பார்ப்பனன் கேட்டான்? எந்த ஏடு எழுதியது?

இன்னும் பஜாஜ் ஸ்கூட்டர்கள்தான் தலைநகரமான அகமதாபாத்தில்; ஒரு வகையில் இன்னும் கற்காலத்தில்தான் குஜராத் இருக்கிறதே தவிர தற்காலத்தின் பக்கம் அடியை எடுத்து வைக்க முன்வரவில்லை.

ஒரு கட்டத்தில் குஜராத்தை வானளாவப் புகழ்ந்த அன்னா ஹசாரே குஜராத்தை நேரில் சென்று பார்த்த பிறகு அப்படியே தலைகீழாக மாற்றிப் பேசினாரே_

இவ்வுளவு மோசமான மோடி ஆட்சியையா நான் புகழ்ந்து உரைத்தேன் என்று வெட்கப்பட்டார் மனுஷன்.

குஜராத்தின் உண்மை நிலை என்ன? - இதோ அன்னா ஹசாரே பேசுகிறார்.

ஊழலுக்கு எதிரான சொற்பொழிவாற்ற அன்னா ஹசாரேவின் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடாகி இருந்தது. அதில் பல அதிரடி அறிக்கைகளை, குஜராத்தில் உண்மை நிலைகளை நேரில் கண்டு மனம் வெதும்பி மக்களுக்குச் சமர்ப்பிப்பதாக அறிவித்தார்.

மகாத்மா காந்தி எதை ஒழிக்கப் பாடுபட்டோரா அந்த மது விற்பனை காட்டாற்று வெள்ளம்போல் குஜராத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுவா காந்தி பிறந்த மண்?

ஓரு நாளைக்கு குஜராத்தில் நாலரைக் கோடி ரூபாய்க்குப் பால் விற்பனை. ஆனால் 6 கோடி ரூபாய்க்கு மது விற்பனை! குஜராத்தில் பால் விற்பனையைவிட மது விற்பனைதான் அதிகமாக உள்ளது.

அகமதாபாத் நகரில் மட்டுமே ஒவ்வொரு நாளும் 3 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு மதுவகை கொண்டுவரப்படுகிறது.

குஜராத் மாநிலம் என்றாலே பாலுக்கும் பால் பொருளுக்கும் பிரபலம். ஆனால், பூரண மதுவிலக்கு (!) அமலில் (?) உள்ள மோடி ஆட்சியிலோ அது அயல்நாட்டு மதுவுக்கும் கள்ளச் சாராயத்திற்கும் பிரபலம் ஆகிவிட்டது!

லோக்பால் மசோதா தயாராக்குவதற்காக குஜராத்திற்கு வந்து பொதுமக்களிடம் கையெழுத்துகள் சேகரித்தபோதுதான் நரேந்திர மோடியைக் குறித்தும் குஜராத் மாநிலத்தைக் குறித்தும் அறிய முடிந்தது.

இவரைப் பற்றியா நான் சென்ற மாதம் பாராட்டினேன்?

முதலில் இந்த முதல்வர் மோடி தன் மாநிலத்தில் லோகாயுக்தாவை அமல்படுத்த வேண்டும்.

பின்னர் இவர் நேர்மையானவராய் கிராம சபைக்கு அதிகாரம் தரவேண்டும்.

நாட்டில் குஜராத்தில்தான் ஊழல் அதிகம் என்று நான் இங்கே வந்தபிறகுதான் - நேரில் பார்த்தபிறகுதான் தெரிகிறது.

மகாத்மா மண்ணில் ஊழல்...!

என்னுடைய ஊழலுக்கு எதிரான இந்தப் போராட்டம் வெற்றி கண்டவுடன் எனது போராட்டம் குஜராத்தை நோக்கியேதான் அமைந்து இருக்கும் என்று பொரிந்து தள்ளிவிட்டாரே, ஹசாரே!

இனியாவது இந்துத்துவா பிடியில் உள்ள பத்திரிகைகளின் பொய்ச் செய்திகளை நம்பி குஜராத்தில் முன்னேற்றம்... மோடியின் அருமையான ஆட்சி... என்றெல்லாம் பரப்பப்படும் பொய்ப் பிரச்சாரத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்னா ஹசாரே குஜராத்தைப் பற்றிப் பாராட்டி நான்கு சொல் சொன்னதும் வரவேற்று எழுதிய திருவாளர் சோ ராமசாமி, உண்மை நிலையை உணர்ந்து மோடியைப் புரட்டி எடுத்தபின், ஹசாரேயைக் கீழே போட்டு மிதிக்க ஆரம்பித்துவிட்டார். பார்ப்பனத்தனம் என்பது இதுதான்!

ராமராஜ்ஜியத்தைப் பற்றிப் பேசிய காந்தியாரை மகாத்மாவாக்கிப் பார்த்தார்கள். மதச்சார்பின்மை பற்றி காந்தியார் பேச ஆரம்பித்ததும் அவரை துர் ஆத்மாவாகக் கருதி மார்பில் குண்டைப் பாய்ச்சவில்லையா? பார்ப்பனர்களைத் தெரிந்துகொள்ள இன்னும் எவ்வளவு காலம் தேவை?

நரேந்திர மோடி நேர்மையின் சின்னம் - உத்தம புத்திரன் - சுத்தமான நெய்யில் பொரித்த சுத்தமான அக்மார்க் சரக்கு என்று ஒரு கூட்டம் தம் கையில் இருக்கும் ஊடகங்கள் மூலம் நூல்கட்டி வானத்தில பட்டமாகப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறது. உண்மை நிலை என்பதை நாம் சொல்லவில்லை; மோடியின் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரே பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்திருக்கிறார். அவர் பெயர் ரமிலாபென் தேசாய்.

ஹிட்லர் தன் சொந்த நாட்டு மக்களை ஒருபோதும் படுகொலை செய்யவில்லை. ஆனால் மோடியோ தன் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள சொந்த நாட்டு மக்களைக் கொன்று குவித்தவர்.

பொய்களைப் பிரகடனங்களாக வெளியிட்டவர்; முதல்வர் மோடியோ அவர்தம் அமைச்சரவையினரோ சொத்துக் கணக்குகளைக் காட்டவில்லை. அரசு நிலங்களை மிகக் குறைந்த விலையில் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற தொழில் நிறுவனங்களுக்கு மோடி தாரை வார்த்துவிட்டார்.

கட்ஜ் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை பி.ஜே.பி.யின் தலைவராக இருந்த வெங்கையா நாயுடு பங்குதாரராக இருந்த நிறுவனத்துக்குக் குறைந்த விலையில் விற்றார் என்று பி.ஜே.பி. சட்டமன்றப் பெண் உறுப்பினர் ஆன்லுக்கர் இதழுக்கு விரிவான பேட்டியாகவே அளித்துள்ளார்.

உண்மை நிலைகள் இவ்வாறு இருக்க பார்ப்பன - பனியா சக்திகள் மோடியை இந்தியாவின் பிரதமராக்கி தங்கள் சுயநலத் திட்டங்களுக்கு அரண் அமைக்க ஆயாசப்படுகின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சோ குருமூர்த்தி அண்ட் கம்பெனி ஒற்றைக் காலில் நிற்கின்றனர்.

கேள்வி: நரேந்திர மோடி பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவராகவோ பிரதமராகவோ வாய்ப்புண்டா?

பதில்: எதிர்காலத்தில் அந்தப் பொறுப்பை ஏற்பதற்கான தகுதி படைத்தவராகத்தான் நான் அவரைக் கருதுகிறேன். (துக்ளக் 2.01.2008 - பக்கம் 12) அதோடு விட்டாரா? இன்னும் இருக்கிறது.... எதனால் குஜராத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி சாத்தியமாயிற்று? பா.ஜ.க.வினர் காட்டிய முனைப்பு, அத்வானி போன்ற அகில இந்தியத் தலைவர்களின் பிரச்சாரம்; அருண்ஜெட்லி போன்றவர்களின் உழைப்பு; இவை எல்லாவற்றிற்கு மேலாக நரேந்திர மோடி மக்களிடையே பெற்றிருக்கிற நம்பகத்தன்மை, அவருடைய நிர்வாகத்தில் குஜராத் கண்டிருக்கும் முன்னேற்றம் இவைதான் பா.ஜ.க.வின் இந்த வெற்றிக்குக் காரணம்.

வேறு எந்த மாநில முதல்வருக்கும் இப்படிப்பட்ட பெருமை கிட்டியதில்லை. மோடி ஆறு வருடங்கள் ஆட்சி புரிந்து, அவரை வெறுத்து, தூஷித்து, கரித்துக் கொட்டி பிரச்சாரம் செய்கிற அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும், டெலிவிஷன்களும் மிகக் கடுமையாக முனைந்தும் ஒரு ஊழல் குற்றச்சாட்டைக்கூட அவர் மீது சுமத்த அவர்களால் முடியவில்லை. இன்றைய சீர்கெட்ட அரசியலில் ஒரு மாநில முதல்வர் இப்படிபட்ட நேர்மையாளராக திகழ முடியும் என்று நரேந்திரமோடி நிரூபித்திருக்கிறாரே, அதுதான் அவரது மிகப்பெரிய வெற்றி. (துக்ளக் 2.1.2008 தலையங்கம்)

ஆறு ஆண்டுகாலம் ஓகோ என்று ஆட்சி புரிந்துவிட்டாராம் மோடி. ஹிட்லர்கூட ஜெர்மனியில் வெற்றி பெற்றவன்தான் -_ ஆட்சி புரிந்தவன்தான். நாஜிகளைத் தவிர வேறு யாரையும் கொல்லுவதில்லை என்றான். மோடியும் அப்படித்தான் முஸ்லிம்தளைதவிர வேறு யாரையும் கொன்று குவிக்கவில்லை.

இடி அமீன்கூட கால் நூற்றாண்டு ஆட்சிக் கட்டிலில் அட்டகாசமாக அமர்ந்திருந்தான். எட்டு லட்சம் கம்யூனிஸ்டுகளை நரவேட்டையாடிய சுகார்தா கூட 30 ஆண்டுகாலம் ஆட்சி சிம்மாசனத்தை அலங்கரித்தான். பார்ப்பனர்களே மெச்சும் பாரத கதைப்படி துரியோதனன்கூட தாயாதிகளைக் காட்டுக்கு அனுப்பி 14 ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறான்.

கோத்ரா சமபவத்திற்குப் பிறகு குஜராத்தில் நடந்தவை கண்டனத்துக்குரியவைதான் என்றாலும், அந்தச் சம்பவங்களுக்கு பா.ஜ.க. -வைக் குற்றம் கூற முடியாது.

(துக்ளக் - 6.5.2009) என்கிறார் சோ. ராமசாமி, அப்படியென்றால் யாரைக் குற்றம் கூறவேண்டும்?

2000 பேர் படுகொலை செய்யப்பட்டபோது அங்கு ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த முதல் அமைச்சர் மோடி இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர் அல்லவா?

முதல் அமைச்சர் மோடி இதற்கெல்லாம் பொறுப்பு இல்லை என்றால், உச்சநீதிமன்றம் முதல் அமைச்சர் மோடியை நீரோ மன்னன் என்று ஏன் கேவலப்படுத்தியது? பதில் உண்டா?

பா.ஜ.க. அரசு அதற்குப் பொறுப்பில்லை என்றால் வேறு யார் பொறுப்பு என்றாவது திருவாளர் சோ கூறவேண்டாமா? பார்ப்பனர்களின் நியாய தர்மம் எந்த யோக்கியதையில் இருக்கிறது என்பதற்கு இது ஒன்று போதாதா? இந்துமத வெறி கொண்டு இஸ்லாமிய மக்களை மிருகம் போல் வேட்டையாடி, கர்ப்பிணிப் பெண்களின் குடலைக் கிழித்து மாலையாக போட்டுக் கொண்டு, விறகு கட்டைகளை எரிப்பதுபோல முஸ்லிம்களை கட்டாகக் கட்டி பேக்கிரி அடுப்பில் திணித்து துடிக்கத்துடிக்கக் கொலை செய்து வெறியாட்டம் போட்ட ஒரு கொடூரனுக்குப் பெயர்தான் நரேந்திர மோடி.

இந்தப் படுமோசமான பக்கத்தை கருப்புத் திரைபோட்டு அறவே மறைத்து, நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஒளிர்கிறது - வளர்கிறது என்ற ஒரு படத்தைக் காட்டி - அவரை இந்தியாவின் பிரதமர் நாற்காலியில் உட்கார வைக்க சதித்திட்டத்தைத் தீட்டும் வேலையில் இறங்கியுள்ளது ஒரு கூட்டம்.

அதாவது உண்மையா? குஜராத் மாநில வளர்ச்சி பெற்றிருக்கிறதா? மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளவையா என்றால் அதுதான் இல்லை.

பல்லாயிரக்கணக்கான சிறுபான்மை மக்களை படுகொலை செய்ததை மறைக்கும் பித்தலாட்டக்காரர்கள் பொய்க்கு ஒப்பனை செய்து பொய்க்கால் குதிரையில் ஏற்றி நடனம் செய்விக்க மாட்டார்களா?

குஜராத் வளர்ச்சி என்பதும் கோயபல்சு பிரச்சாரம்தான் - எச்சரிக்கை!

http://www.unmaionline.com/new/archives/30-unmaionline/unmai2011/october-16-31/513-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D.html

கோவையில் இந்து முண்ணனியும், பிஜேயி யும் தற்போது அரசியல் செல்வாக்கு பெற என்னவெல்லாம் சூழ்ச்சிகளை செய்து வருகிறார்கள் என்பதை வினவின் இந்த பதிவு அம்பலப்படுத்துகிறது.

2 comments:

Anonymous said...

கட்சியில் பிரபலமடைய வேண்டி (!)
சொந்த வீட்டின்மீதே பெட்ரோல் குண்டுவீசியதாக (!!)
திண்டுக்கல்லில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி உட்பட
2 "பாஜக பயங்கரவாதிகள்" கைது செய்யப்பட்டனர்.

http://puthiyathalaimurai.tv/bjp-cadre-arrested/

Anonymous said...

இந்திய உளவுத்துறையால் கைது செய்ததாக கூறப்படும் யாஸீன் பட்கல் என்ற நபர் உண்மையில் யாஸீன் பட்கல் அல்ல என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதுக்குறித்து வழக்கறிஞர் எம்.எஸ்.கான் கூறியதாவது; ‘யாஸீன் பட்கல் என்று கைது செய்யப்பட்ட நபர் முஹம்மது அஹ்மத் சித்திபாபா ஆவார். இந்தியாவால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள 12 நபர்களில் ஒருவராக இண்டலிஜன்ஸ் அதிகாரிகள் இவரை குறிப்பிடுவது தவறாகும். இவர் தாம் யாஸீன் என்பதை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு புலனாய்வு ஏஜன்சிகளுக்கு உண்டு. கைது செய்யப்பட்டவர் யாஸீன் என்பதை நிரூபிக்க அவர்களின் வசம் ஆதாரம் எதுவுமில்லை.’ என குறிப்பிட்டார்.

அஹ்மத் சித்தி பாபாவை யாஸீன் பட்கல் என்று பெயர் மாற்றியது இண்டலிஜன்ஸ் ஏஜன்சிகள் என்று அவரது உறவினரும், பெங்களூரைச் சார்ந்த வழக்கறிஞருமான அக்மல் ரஸ்வி நேற்று முன் தினம் குற்றம் சாட்டியிருந்தார்.

10-வது வகுப்பு கூட வெற்றிப் பெறாத முஹம்மது அஹ்மத் சித்திபாபாவை, பொறியியல் பட்டதாரியாக மாற்றியது மற்றும் 1983-ஆம் ஆண்டு பிறந்த அஹ்மதை 1973-ஆம் ஆண்டு பிறந்தார் என்று உளவுத்துறையும், ஊடகங்களும் கூறுவது குறித்து அக்மல் ரஸ்வி விமர்சித்திருந்தார்.

-http://newindia.tv/tn/india/141-crime/1800-2013-08-31-03-09-02