மூன்று நாட்களாக மேலப்பாளையம் (திருநெல்வேலி), நெல்பேட்டை (மதுரை) பகுதிகளில் வாழும் அடித்தள முஸ்லிம்களுடன் நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. என்னுடன் சுகுமாரனும் ரஜினியும் இருந்தனர். மேலப்பாளையத்தில் எங்களுடன் தோழர்கள் பீட்டர், ரமேஷ் ஆதித் தமிழர் பேரவை சங்கர் மற்றும் வழக்குரைஞர் அப்துல் ஜாபர் சேர்ந்துகொண்டனர். நெல்பேட்டையில் பழனிச்சாமி, வழக்குரைஞர்கள் சையத் அப்துல் காதர் யூசுஃப் ஆகியோர் எங்களுடன் இருந்தனர்.
சச்சார் அறிக்கையில் இந்திய முஸ்லிம்களின் நிலை இங்குள்ள தலித்களின் நிலையைக் காட்டிலும் பல அம்சங்களில் மோசம் எனக் கூறியுள்ளதைத் தமிழகத்தில் வாழும் நம்மால் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள இயலாது. அதுவும் என்னைப் போன்ற தஞ்சை மாவட்டக் காரர்களுக்கு அது புரிவது கடினம். இங்குள்ள அய்யம்பேட்டை, பாபநாசம், ராஜகிரி, கூத்தாநல்லூர், அத்திக்கடை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் ஓரளவு முஸ்லிம்கள் வசதியாக இருப்பார்கள். முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் முஸ்லிம்கள் நடத்துகிற தரமான பள்ளிகளும் உண்டு.
உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிஹார் முதலான மாநிலங்களுக்குச் சென்று பார்க்கும் போதுதான் சச்சார் கூறியதை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. கைவினைத் தொழில்கள், ரிக்ஷா இழுப்பது, இரும்பு அடிப்பது முதலான கடுமையான பணிகளில் ஈடுபட்டுள்ள வறுமை வயப்பட்ட முஸ்லிம்களை அங்குதான் நிறையக் காண முடிந்தது. அஸ்ஸாமில் வன்முறையாக இடம்பெயர்க்கப்பட்ட மூன்று இலட்சம் முஸ்லிம்களின் அகதி வாழ்வு கண்ணீரை வரவழைத்தது.
மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியனவும் இது போல மிகவும் அடித்தள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தான். சுமார் ஒன்றாரை இலட்சம் முலிம்கள் அங்கிருப்பதாகச் சொன்னார்கள். நெருக்கமான வீடுகள், குண்டும் குழியுமான வீதிகள். கல்விக்குப் பெயர்போன பாளையங்கோட்டையின் ஒரு பகுதியான மேலப்பாளையத்தில் முக்கிய கல்வி நிலையங்கள் எதுவும் கிடையாது. நிறைய பீடிக் கம்பெனிகள் உள்ளன. அவற்றின் முதலாளிகள் பெரும்பாலும் மலையாளிகள். பீடி சுற்றுவது மேலப்பாளையத்தார்கள்.
மதுரையின் மையப் பகுதியில் அமைந்துள்ள நெல்பேட்டையும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு பகுதி. அங்கும் இதே நிலைதான். பாரம்பரியமான சுங்கம் பள்ளிவாசலிலிருந்து கூப்பிடு தூரத்தில் அமைந்த ஒரு மிகக் குறுகலான வீதியில் ஒரு சிறு அறையில்தான் நாங்கள் உட்கார்ந்து பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். சன்னலுக்கு வெளியே ஒரு மாட்டுக் கறிக் கடை. கறிக் கழிவுகள் ஒரு கூடையில் ஈ மொய்த்த வண்ணம் கிடந்தன. நிணம் பொசுங்கும் நாற்றம் காற்றில் கலந்து வந்து கொண்டிருந்தது. கசாப்புக் கடை, அடுப்புக் கரி விற்பது, ஆட்டோ ஓட்டுவது.. இப்படியான வேலைகள்தான் பலருக்கும்.
இரண்டு பகுதிகளிலுமே கல்வி அறிவு வீதம் மிக மிகக் குறைவு என்பது பார்த்தாலே தெரிந்தது. உண்மை வழக்குககளில் சம்பந்தப்பட்டவர்கள், பொய் வழக்கு போடப்பட்டவர்கள், முதலில் ஒரு உண்மை வழக்கில் சிக்கிப் பின் தொடர்ந்து பல பொய் வழக்குகளில் சிக்கவைக்கப் பட்டவர்கள் எனப் பலரையும் சந்தித்தோம். அவ்வளவு பேரும் எதையும் மறைக்காமல் எங்களிடம் உண்மைகளையே சொன்னார்கள். ஓரளவு எங்களால் ஊகிக்க முடியும். யார் உண்மைகளைச் சொல்கின்றனர், யார் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார்கள், யார் மிகைப்படுத்திச் சொல்கிறார்கள் என்பது.. எங்களிடம் பேசிய அத்தனை பேருக்கும் தங்கள் வழக்கு விவரங்கள், அல்லது தம் மீதான போலீஸ் கொடுமைகள் எதையும் சரியாகச் சொல்லக் கூடத் தேரியவில்லை. அத்தனை அப்பாவிகள் என நான் சொல்வது இதை வாசிக்கும் பலருக்கும் புரியும் என எனக்குத் தோன்றவில்லை.
‘மேலப்பாளையம் முஸ்லிம்கள்’ என்றொரு சிறு நூலை பேராசிரியை சாந்தி எழுதியுள்ளார். சாந்தி, நண்பர் லெனா குமாரின் மனைவி. சுமார் பத்து ஆண்டுகள் இருக்கலாம். சாந்தி என்னை முன்னுரை எழுதக் கேட்டுக்கொண்டார். அற்புதமான ஒரு இன வரைவியல் நூலது. யாரோ ஒரு ஆய்வாளரின் உதவியாளராக அடிக்கடி மேலப்பாளையம் சென்று வந்தவருக்கு அம்மக்களோடு நெருக்கமான உறவு ஏற்பட்டுவிட்டது. மே.பா முஸ்லிம்களின் இனவரைவியற் கூறுகளைத் தொகுத்து எழுதத் தொடங்கினார். ஆனால் அது, அவர்களின் உணவு, உடை, நம்பிக்கைகள், பிறப்பு, இறப்புச் சடங்குகள் என்கிற அளவில் தொகுப்பதோடு நின்றுவிடவில்லை, அவர்களைக் காவல்துறை எவ்வாறு சுரண்டுகிறது, கொடுமைப்படுத்துகிறது என்பதை நேரில் கண்டு மனம் கலங்குகிறார். அவற்றையும் பதிவு செய்கிறார். மொத்தத்தில் அரசியல் பிரக்ஞையுடன் கூடிய ஒரு அற்புதாமான இன வரைவியல் நூலாக அது உருப்பெற்றது.
சித்தரஞ்சன் என்றொரு காவல்துறை அதிகாரி பற்றி சாந்தி அந்நூலில் குறிப்பிடுவார். அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வார். உன் மகனை தீவீரவாதக் கேசில் சிக்க வைப்பேன் எனச் சொல்லி அப்பாவி முஸ்லிம்களிடம் காசு பறிப்பதில் சமர்த்தர் அவர். அப்போது சாந்தி ஒரு ஆய்வு உதவியாளர் மட்டுமே. ஒரு பெண்ணாகவும், எந்தப் பெரிய அரசியல் பின்புலமும் இல்லாமல் இப்படிப் போலிஸ் அதிகாரியின் பெயரை எல்லாம் குறிப்பிட்டு எழுதுகிறாரே, ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்வது, பேசாமல் பெயரை நீக்கிவிடச் சொல்லலாமா என ஒரு கணம் நினைத்தேன். பிறகு, சரி, ஒரு பெண், தன் கண்முன் நிகழும் சமூக அநீதியைப் பொறுக்க இயலாமல் எழுதுகிறார், அதை ஏன் நாம் முடக்க வேண்டும், அவரது அந்த அழகான துணிச்சலை நாம் ஏன் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என நினைத்து, ஒன்றும் பேசாமல் முன்னுரையை எழுதிக் கொடுத்தேன்.
மேலப்பாளையம் போகுமுன் சாந்தியின் நூலை ஒருமுறை படித்துவிடலாம் எனத் தேடினேன். யாரிடம் கொடுத்தேனோ கிடைக்கவில்லை. திருநெல்வேலியில் இறங்கியவுடன் லெனா குமாரிடம் தொடர்பு கொண்டு பெற முயற்சித்தேன். அவர் ஏதோ புதுச்சேரி போய்விட்டாராம். சித்தரஞ்சன் பெயர் நினைவில் இருந்தது. எப்படி இருக்கிறார் அந்த அதிகாரி எனக் கேட்டேன். அவர் ரிடையர் ஆகி கடும் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார் என்றார் ஜப்பார்.
முஸ்லிம் அமைப்புகள் ஏதும் அந்நூலை அநுமதி பெற்று மறு வெளியீடு செய்யலாம்.
நெல்பேட்டைக்குள் நாங்கள் நுழைந்தபோது, அடடே ரஜினி அக்கா என இரண்டு மூன்று பேர் வந்து ரஜினியைச் சூழ்ந்து கொண்டனர். இப்போது நல்ல பல இளம் முஸ்லிம் வழக்குரைஞர்கள், முஸ்லிம்கள் மீது போடப்படும் வழக்குகளை எடுத்து நடத்துகின்றனர். ஒரு பதினைந்தாண்டுகளுக்கு முன் இதுபோன்ற பல வழக்குகளை ரஜினிதான் நடத்தியுள்ளார். தடா சீனி, இப்போது பரிசறிவித்துத் தேடப்படும் போலீஸ் பக்ருதீன் உட்படப் பலரது வழக்குகளை நடத்தியவர் ரஜினி. ஒரு சுவாரசியமான சம்பவத்தைச் சொன்னார். அசோக் சிங்கால் உட்படப் பல இந்துத்துவப் பேச்சாளர்கள் பேசும் கூட்டம் ஒன்று மதுரையில் நடந்துள்ளது. மிக மோசமாகவும் ஆபாசமாகவும் முஸ்லிம்களைப் பேச்சாளர்கள் ஏசியுள்ளனர். கோபமடைந்த சிலர் ஓடி வந்து ரஜினியிடம் கூறியுள்ளனர். ரஜினி உடனே கூட்டம் நடக்கும் இடத்திற்கு விரைந்து ஒலிபெருக்கி ஒன்றின் அருகில் நின்றுகொண்டு ஒரு டேப் ரிக்கார்டரில் ஏச்சுக்களைப் பதிவு செய்துள்ளார். அப்போது மழை தூறி இருக்கிறது. சுடிதார் துப்பட்டாவை எடுத்துத் தலைமீது போட்டுக் கொண்டு ஒலிப்பதிவு வேலை நடந்திருக்கிறது. அவ்வளவுதான், முஸ்லிம் பெண் தீவிரவாதி கூட்டத்தில் தாக்குதல் நடத்த வந்துள்ளதாகச் செய்தி பரவி கூட்டம் அப்படியே ரஜினியை ஆத்திரத்துடன் சுற்றிக் கொண்டுவிட்டது. நல்ல வேளை அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன் ரஜினிக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரி காவலர்களுடன் ஓடி வந்து ரஜினியைப் போலீஸ் வேனில் ஏற்றிக் காப்பாற்றியுள்ளார். பிறகு அந்த அதிகாரியே மேடை ஏறி மைக்கைப் பிடித்து அது தீவிரவாதி இல்லை எனப் பலமுறை சொன்னபின்புதான் ஆவேசம் அடங்கி இருக்கிறது.
சென்ற ஆண்டு திருப்பரங்குன்றத்தில் வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட பின்பு தாங்கள் எவ்வாறெல்லாம் காவல்துறையால் இழுத்துச்ச் செல்லப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டோம் என்பதைக் கசாப்புக் கடையில் வேலை செய்யும் ஷேக் அலாவுதீன், மினி ஆட்டோ டிரைவர் முகம்மது யாசின், அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவரிடம் உதவியாளராக இருந்த ஜாபர் சுல்தான் முதலானோர் விவரித்தபோது கண்கள் மட்டுமல்ல எங்கள் மனமும் கசிந்தது.
யாரையாவது ஒருவரை இழுத்துச் சென்று அடித்து உதைப்பது. அவரது புகைப்படம், கைரேகை இதர அங்க அடையாளங்களைப் பதிவு செய்வது. அவரது செல்போனைப் பிடுங்கி அதிலுள்ள தொடர்பு எண்கள் எல்லாவற்றையும் கணினியில் ஏற்றிக் கொள்வது, பின் அந்த ஒவ்வொரு எண்ணுக்கும் உரியவரை வரவழைத்து அவர்களியும் இதேபோல நடத்துவது என்பதாகக் கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட அப்பகுதி ஆண்கள் எல்லோரது ‘ப்ரொஃபைல்களும்’ எடுக்கப்பட்டுவிட்டன என்றார் அப்துல் காதர். சுமார் எவ்வளவு பேர்கள் இருக்கும் என்றேன். 600 பேர்கள் வரை இருக்கலாம் என்றார். எண்ணிக்கை துல்லியமாக இல்லாததால் எங்கள் அறிக்கையில் “நூற்றுக்கணக்கானோர் இப்படிப் ப்ரொஃபைல் செய்யப்பட்டுள்ளனர்” எனப் பதிவு செய்தோம். முஸ்லிம்கள் மத்தியில் இப்படியான racial profiling செய்ய்யப்படுவது எத்தனை பேருக்குத் தெரியும்?
தனியாக வாழும் பெண்களையும் ஏ.டி.எஸ்.பி மயில்வாகனன் மற்றும் இன்ஸ்பெக்டர் மாடசாமியின் கீழிருந்த சிறப்ப்புக் காவற் படை விட்டு வைக்கவில்லை. மறைந்த பிர்தவ்சின் மனைவி ஆமினா பேகம், முகம்மது ஹனீபாவின் மகள் சகர் பானு ஆகியோர் தாங்கள் விசாரிக்கப்பட்டதை வேதனையோடு பகிர்ந்து கொண்டனர். சகர் பானுவையாவது தேடப்படும் பிலால் மாலிக்கைத் தெரியும் என்பதற்காக விசாரித்தனர் என ஆறுதல் கொள்ளலாம். ஆமீனா பேகத்தின் கதை பரிதாபமானது. நாங்கள் பார்த்தவர்களுள் ஆமீனா ஒருவர்தான், தன்க்கு நேந்ததைச் சீராகச் சொல்லக் கூடியவராக இருந்தார்.
கணவனை இழந்த ஆமீனா தன் மூன்று சிறு பிள்ளைகளை அடுப்புக் கரி வியாபாரம் செய்து காப்பாற்றி வருகிறார். ஆண் துணை இன்றித் தனியாக வாழ்கிறார் எனத் தெரிந்தவுடன் காவல்துறையினர் இவரை அணுகி அவர்களுக்குத் தகவலாளியாக (informer) இருக்கக் கட்டாயப் பாடுத்தியுள்ளனர் முதலில் மாரியப்பன் என்றொரு அதிகாரி வந்துள்ளார். ஆமினா உறுதியாக மறுத்துள்ளார். அப்புறம் மீண்டும் உன்னை விசாரிக்க வீட்டுக்கு வரப்போகிறோம் எனக் கூறியுள்ளனர். நீங்கள் வீட்டிற்கு வர வேண்டாம், நானே வருகிறேன் என ஆமினா கூறி எஸ்.பி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கே மயில்வாகனன், மாடசாமி குழுவினர் சுமார் 40 காவலர்கள் சூழ அவரை விசாரித்துள்ளனர், பெண்களை விசாரிக்கும்போது பெண் காவலர்கள் இருக்க வேண்டும் என்கிற விதியும் மீறப்பட்டுள்ளது. பணம் தருகிறோம் உளவு சொல்ல வேண்டும் என ஆமினாவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆமினா குரலை உயர்த்திச் சத்தம் போட்டுள்ளார். நாந்தான் முடியாதுன்னு சொல்றனே, அப்புறம் ஏன் இப்படித் தொந்தரவு செய்றீங்க எனக் கத்தியுள்ளார். சரிம்மா, சரிம்மா சத்தம் போடாதே, வா, முதல்ல கான்டீன்ல போயி சாப்பிடு எனச் சொல்ல ஆமினா மறுத்துள்ளார். சரி ஆட்டோவில போ எனச் சொல்லி ஒரு நூறு ரூபாய் நோட்டையும் எடுத்து நீட்டியுள்ளனர்.
பிறகு தேசிய அளவில் செயல்படும் மனித உரிமை அமைப்பான என்.சி.எச்.ஆர்.ஓ தலையிட்டு தொல்லை செய்த அதிகாரிகள் மீது private complaint கொடுத்த பின்பு இப்போது பிரச்சினை சற்று ஓய்ந்துள்ளது, நெல்பேட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட வழக்குரைஞர்களான முகமது யூசுப், அப்துல் காதர் சகோதரர்கள் என்.சி.எச்.ஆர்.ஓவில் துடிப்பாகச் செயல்படக் கூடியவர்கள். நானும் சுகுமாரனும் அஸ்ஸாம் சென்றிருந்தபோது தமிழ்நாடு என்றவுடன் பாதிக்கப்பட்ட பலரும் யூசுப்பைத் தெரியுமா எனக் கேட்டனர். அஸ்ஸாம் வன்முறைகள் நடைபெற்றபோது ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சென்று தங்கி பாதிக்கப்பட்ட பலரையும் சந்தித்து விசாரித்து வாக்குமூலங்களைப் பெற்று வழக்கு நடத்த உதவி செய்தவர் அவர்.
பேசிக் கொண்டு வெளியே வந்தபோது சுங்கம் பள்ளிவாசலைச் சுற்றி நான்கு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுள்ளதைக் கண்டு அதிர்ச்சியுற்றோம். தொழுகைத் தலத்தில் கண்காணிப்புக் காமிராக்களா? திகைத்தோம். நான் அதைப் படம் எடுக்க முயற்சித்தபோது வேண்டாம் சார் எனத் தடுத்தனர். நான் படம் எடுப்பது தடைப் பட்டாலும், நான் படம் எடுக்க முயற்சித்ததை அந்தக் காமரா படம் எடுத்துக் கொண்டது.
முதலில் பள்ளிவாசலுக்கு உள்ளும் வெளியிலும் 18 கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தப்பட்டனவாம். யூசுப் சகோதரர்களைப் போன்றோர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தபோது பள்ளிவாசலுக்குள் பொருத்தப்பட்டிருந்த 14 காமராக்களை எடுத்துவிட்டார்களாம். காமராக்களைப் பொருத்தியது பள்ளிவாசல் நிர்வாகந்தான் என்ற போதிலும், காவல்துறையின் நிர்ப்பந்தம் காரணமாகவே அவை பொருத்தப்பட்டுள்ளன எனப் பலரும் கூறினர். 18 காமராக்களுக்கும் சுமார் 2.5 லட்சம் செலவாகுமாம். பள்ளிவாசல் வரவு செலவுக் கணக்கில் இந்தச் செலவு பதியப்படவில்லை என்பதால் காவல்துறை வாங்கித் தந்துதான் இவை பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார் ஒருவர்.
எப்படியான போதிலும் இது ஒரு மிக மோசமான முன் உதாரணம். சுங்கம் பள்ளியைக் காட்டி இனி எல்லாப் பள்ளிகளிலும் இப்படிக் கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தபடலாம். இப்படித் தொழ வருபவர்களைக் கண்காணிப்பதைக் காட்டிலும் கொடுமை ஏதுமில்லை. முஸ்லிம் அமைப்புகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியன கிட்டத்தட்ட slum ஏரியாக்கள் என்கிற அளவில்தான் உள்ளன. கல்வி வீதம், நிரந்தர வேலை, சுய தொழில் வாய்ப்பு முதலியன மிகக் குறைவாக உள்ளன. இவற்றின் விளைவான வறுமை, கடன் தொல்லை, வட்டிக் கொடுமைகளும் உள்ளன. இப்படியான பகுதிகளில் சிறு குற்றங்கள், ரவுடியிசம் முதலியன உருவாவதற்கான வாய்ப்புகள் பொதுவில் இருக்கும். எனினும் இது விரல்விட்டு எண்ணக் கூடிய சிறிய அளவில்தான் இருக்கும். பெரும்பாலான மக்கள் அப்பாவிகளாகத்தான் இருப்பார்கள். இங்கும் அப்படியான குற்றச் செயல்கள் இருக்கத்தான் செய்கின்றன. முஸ்லிம்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இங்கு இவை மத நிலைப்பட்டதாகவும் எளிதில் மதச் சாயம் பூசப்படக் கூடியதாகவும் ஆகிவிடுகின்றன. இதை இந்தக் கோணத்தில் அணுகாமல் ‘முஸ்லிம் தீவிரவாதம்’ என்கிற கோணத்திலேயே காவல்துறை அணுகுகிறது. காவல்துறையிடம் பொதிந்துள்ள சிறுபான்மை எதிர்ப்பு மன நிலை இத்துடன் இணந்து கொள்கிறது. சிறிய அளவிலோ பெரிய அளவிலோ முதல் குற்றம் செய்யும் ஒருவரைத் தொடர்ந்து பொய் வழக்குகள், விசாரனைகள், பணப் பறிப்புகள் என்கிற வகைகளில் தொல்லை செய்து வருவதால் அவர்கள் மேலும் குற்றச் செயல்களுக்குத் தள்ளப்படுகின்றனர். இதை ஒட்டி மேலப்பாளையாம் போன்ற பகுதிகளை ஏதோ பாயங்கரவாதிகளின் நகரமாகவும், முஸ்லிம் சமுதாயத்தையே “சந்தேகத்திற்குரியதாகக்” கட்டமைப்பதும் நடக்கிறது. ஆக, ஒரு விஷச் சுழல் இவ்வாறு முழுமை அடைகிறது. இன்று விலை கூறித் தேடப்படும் இப்பகுதி “முஸ்லிம் தீவிரவாதிகள்” எல்லோரும் இப்படியாக உருவாக்கப்பட்டவர்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஆமாம் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான், உருவானவர்கள் அல்ல. இவர்கள் அப்படியானதில் நாம் வாழும் இந்தச் சமூகத்திற்குப் பெரிய பொறுப்பு உள்ளது.
மேலப்பாளையம், நெல்பேட்டை போன்ற பகுதிகளுக்கு நகரின் பிற பகுதிகளுக்குச் சமமாக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இப்பகுதிகளில் உரிய அளவில் நர்சரி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை கட்டித்தரப்பட வேண்டும். சுய தொழில் வாய்ப்புக்கள், அதற்கான பயிற்சி முதலியன அளிக்கப்பட வேண்டும்.இப்பகுதிகளை ஒட்டி தொழில் வளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பிரச்சினையை முழுமையாக அணுகி அதன் சிக்கல்களை ஏற்றுப் புரிய முயற்சித்தல் அவசியம். நமது ஊடகங்கள், அரசு மற்றும் காவல்துறை ஆகியவற்றின் அணுகல்முறைகள் நிச்சயமாக இந்தத் திசையில் இல்லை.
கட்டுரை ஆக்கம்:
சமூக ஆர்வலர் அ.மார்க்ஸ்
---------------------------------------------------------------------
‘மேலப்பாளையம் முஸ்லிம்கள்’ புத்தகம் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை 'யாதுமாகி' பதிப்பகத்தில் கிடைக்கும்.
யாதுமாகி பதிப்பகம், 2, முதல் தெரு, வேலவர் காலனி, மகாராஜா நகர், திருநெல்வேலி -627 011
வெளியீடு : யாதுமாகி பதிப்பகம்,
37/17, ராமசாமி கோயில்
சன்னதி தெரு,
திருநெல்வேலி - 627 002
பேசி : 0462 - 4000285
பேசி : 94434 86285
7 comments:
புத்தகம் கிடைக்கும் இடம் தகவலுக்கு நன்றி.
// “முஸ்லிம் தீவிரவாதிகள்” எல்லோரும் இப்படியாக உருவாக்கப்பட்டவர்கள்தான் //
ஆமாம். இதற்குப் பயந்தே இன்னும் பல முஸ்லிம் இளைஞர்கள், உள்ளூரில் குடும்பத்தோடு இருக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் இருந்தாலும், வெளிநாட்டிற்கு வந்துவிடுகின்றனர். திட்டமிட்டு, கிட்டத்தட்ட நம்மையும் புலம்பெயர்ந்தவர்களைப் போல ஆக்குகின்றனர்.
இதுபற்றி படித்த இன்னொரு கட்டுரையில், 17 கிலோ வெடிகுண்டு எடுக்கப்பட்டது என்பதே பொய்ச் செய்தி என்று படித்த ஞாபகம். (அந்த வெடிகுண்டு பெட்டியை எந்தப் பாதுகாப்பும் இல்லாமல், வெடிகுண்டு நிபுணர்களால கையாளாமல், சாதாரணமான பொருளைப் போல கையாண்டதிலிருந்து இந்த சந்தேகம் வருவதாகச் சொல்லியிருந்தனர். அவ்வளவு அதிக வெடிபொருளை அப்படிக் கையாண்டால் பேரழிவு நிச்சயம் என்பதால் இச்சந்தேகம் வருவதாகக் கூறுகின்றனர்
http://www.inneram.com/news/tamilnadu/1234-nchro-statement.html)
இறைவன் இந்த அநியாயக்காரர்களுக்கு அழிவைத் தரட்டும்.
NCHRO பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மூலம் தொடங்கப்பட்ட ஒரு மனித உரிமை அமைப்பாகும் வழக்குரைஞர் முஹம்மத் யூசுப் அவர்கள் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் என்பதையும் தெரியப்படுத்துகிறேன். ஏன் சி ஹெச் ஆர் ஓ வின் துணைத்தலைவர், பொதுசெயலாளர் போன்றவர்கள் பாப்புலர் பிரண்ட் இன் மூத்த உறுப்பினர்கள் என்பதும் குருப்பிடதக்கது.
Thangal anumathiyudan ithai enathu muganoolil pathividalama? Kaavi kaaval thuraiyal evvaru melappaalayam muslimgal theeviravaathigalaaga sitharikkapadugiraargal endru maatru matha nanbargalum therinthu kollatum. Kuraintha patcham orutharukaavathu puriyatume
By
Mohamed Sathack
சகோ ஹூசைனம்மா!
//ஆமாம். இதற்குப் பயந்தே இன்னும் பல முஸ்லிம் இளைஞர்கள், உள்ளூரில் குடும்பத்தோடு இருக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் இருந்தாலும், வெளிநாட்டிற்கு வந்துவிடுகின்றனர். திட்டமிட்டு, கிட்டத்தட்ட நம்மையும் புலம்பெயர்ந்தவர்களைப் போல ஆக்குகின்றனர்.//
முஸலிம்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளை நாடுவது இது போன்ற இன ஒதுக்கல்களினால்தான். வரும் சந்ததிகளாவது அரசு உத்தியோகங்களில் அமரட்டும். அதற்கு அவரவர்களின் வாரிசுகளை எவ்வளவு சிரமப்ட்டாவது தயார்படுத்துவோம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோ முஹம்மது சதக்!
//Thangal anumathiyudan ithai enathu muganoolil pathividalama? Kaavi kaaval thuraiyal evvaru melappaalayam muslimgal theeviravaathigalaaga sitharikkapadugiraargal endru maatru matha nanbargalum therinthu kollatum. Kuraintha patcham orutharukaavathu puriyatume//
தாராளமாக போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் இந்த ஆக்கம் என்னுடையது அல்ல. சகோ மார்க்ஸூடையது. அதை உங்களது பதிவில் குறிப்பிட்டு விடுங்கள்.
முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் நேபாளில் கைது செய்யப்பட்டுள்ளார்..? செய்தி!(அடடா! முஸ்லிம் தீவிரவாதிக்கு(!?) என்ன மரியாதை பாருங்கள் கைது செய்யப்பட்டா"ராம்"..!?)
ஏழடுக்கு பாதுகாப்பும் கண்காணிக்கும் கேமராக்களும் உள்ள பாராளுமன்றத்தில் குண்டுவைக்க சென்றவர்கள் யார்?
ஆறு அடுக்கு பாதுகாப்பையும், கேமாராக்கள் கண்களிலும் படாமல் உள்ளே சென்ற அம்பாசடர் காருக்குள் ஆறுபேர் இருததாக கூறப்பட்டது, அவர்கள் யார்? அந்தக் கார் யாருடையது?
அப்சலின் பதிவு செய்யப்பட விசாரணைகள் அடங்கிய கம்ப்யூட்டர் கோப்புக்கள் யாரால் மாற்றப்பட்டது?
அப்சல் குடும்பத்தினருக்குக் கூட அறிவிப்பு செய்யாமல் அவரை அவசரம் அவசரமாக தூக்கில் போட்டதின் மர்மம் என்ன?
நாட்டில் காவி பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புக்கள் நிரூபிக்கப்பட்டும் ஒரு பயங்கரவாதியைக் கூட இன்னும் தூக்கில் போடாததன் காரணம் என்ன?
உச்சக்கட்டமாக உளவுத்துறையும் காவி பயங்கரவாத ஊடகங்களும் உருவாக்கிய "இந்திய முஜாகிதீன்"அமைப்பை தூக்கி நிறுத்துவதற்காக அடிக்கடி சங்கராச்சாரி எஸ்கேப்பாகி போகும் நேபாளில் இருந்து பிடிக்கப்பட்டதாக கூறப்படும் யாசின் பட்கல் இவன் உளவுத் துறையில் எந்தப் பிரிவில் வேலை செய்கிறான்..?
-Anbu Chelvan
அது எப்படிங்க...கைது செய்யப்படுகிற தீவிரவாதிகள் எல்லோரும் நேபாள எல்லையிலேயே சிக்குறாங்க.....ஒரு துபாய்,ஒரு லண்டன் இங்கெல்லாம் போக வழி தெரியாதா....இல்ல அடச்சு வச்சுருந்தவங்கள இப்பதான் ஒவ்வொருத்தரா ரிலீஸ் பண்றீங்களா...பால் குடிக்குற பையன் எல்லாம் இந்தியன் முஜாஹிதீன் தலைவராம்,நடக்க முடியாத கிழவன் லஸ்கர் எ தொய்பா போராளி..முடியல..
உளவுத்துறையின் ரகசிய சித்திரவதை முகாம்கள் குறித்த இந்த கட்டுரையை படியுங்கள்.பரப்புங்கள்.
http://syednazakat.wordpress.com/2011/02/04/indias-secret-torture-chambers/
-இனிய வன்
Post a Comment