Followers

Friday, August 02, 2013

பாகிஸ்தானை சரியாக புரிந்து கொண்ட மனிதர்!- பாகம் ஒன்று

நண்பர்களே நலமா? தமிழகம் சென்றிருந்ததால் இணையத்தின் பக்கம் அவ்வளவாக வர இயலவில்லை. குழந்தைகளோடும், மனைவி தாயாரோடும் டெல்லி, ஆக்ரா, அஜ்மீர், ஜெய்பூர், என்று வட நாட்டு சுற்றுப் பயணமும் சென்றிருந்தேன். அது பற்றிய பதிவுகளும் இறைவன் நாடினால் பிறகு தருகிறேன். தமிழகம் செல்வதற்கு முன்னால் நான் மொழி பெயர்த்த அபுல் கலாமின் பேட்டியின் முதல் பாகத்தை தற்போது முதல் பதிவாக தருகிறேன். உங்கள் கருத்துக்களையும் தவறாது பதியுங்கள். இனி பதிவுக்குள் செல்வோம்.

அபுல் கலாம் ஆசாத்

முன்னால் காங்கிரஸ் தலைவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஒரு மிகச் சிறந்த பேட்டி ஒன்றினை பத்திரிக்கையாளர் சொரைஸ் காஷ்மீரிக்கு 1946 ஆம் அண்டு அளித்தார். இந்த பேட்டியானது லாகூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய உருது பத்திரிக்கையான 'சாட்டன்' ல் ஏப்ரல் மாதம் 1946 ஆம் ஆண்டில் வெளியானது. டெல்லியிலும் சிம்லாவிலும் அரசு அமைப்பதற்காக ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருந்த சமயம் அது. அந்த பேட்டியில் மத ரீதியாக இந்த நாட்டை துண்டாடுவது என்பது எந்த காலத்திலும் பிரச்னைகளை தீர்த்து விடாது என்று ஆசாத் அவர்கள் தெளிவுபட சொல்லியிருந்தார். பாகிஸ்தானிய தலைவர்கள் முடிவில் அங்கு ராணுவ ஆட்சியையே கொண்டு வருவர் என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.இந்த பேட்டியானது அதிகமாக மக்களை சென்றடையவில்லை. சொரைஸ் காஷ்மீரி தனது 'அபுல் கலாம் ஆசாத்' என்ற புத்தகத்தில் இந்த பேட்டியினை பிரசுரித்துள்ளார். முன்னால் கேபினட் அமைச்சர் ஆரிஃப் முஹம்மது கான் இந்த புத்தகத்தை கண்டெடுத்து பல வருடங்களுக்குப் பிறகு மொழி பெயர்த்தார். அதனை தற்போது பல வேலைகளுக்கிடையில் நான் தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். இதில் குறைகள் ஏதும் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன். இனி பேட்டியைப் பார்ப்போம்.

கேள்வி:

ஹிந்து முஸ்லிம் பிரச்னையானது அதிகரித்து வருகிறது. சமாதானத்துக்கு எந்த வழியும் தென்படவில்லை. அப்படி இருக்கையில் பாகிஸ்தான் என்ற நாடு பிறந்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் வந்து விட்டதாக நீங்கள் நினைக்கவில்லையா?

.
பதில்:

ஹிந்து முஸ்லிம் பிரச்னையை தீர்ப்பதற்கு பாகிஸ்தான் ஒன்றுதான் தீர்வு என்பது உண்மையானால் அதனை முதலில் நான் ஆதரிப்பேன். ஆனால் உண்மையோ வேறு விதமாக இருக்கிறது. இவர்களின் முடிவின்படி சிந்த், பலுசிஸ்தானம், பஞ்சாபில் பாதி ஒரு பக்கமும் வங்காளத்தின் ஒரு பகுதி வேறொரு பக்கமும் உள்ள சூழ்நிலையில் அது தனி நாடாக போகும் பட்சத்தில் இந்தியாவுக்கு நிம்மதி கிடைத்து விடும் என்றா நினைக்கிறீர்கள்? உபயோகமான எந்த வொரு நன்மையும் இதனால் விளையப் போவதில்லை.

தனியாக பிரிந்து சென்றால் இஸ்லாத்துக்கு சிறப்பு என்ற ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இதற்கு முன்னால் 90 சதவீதம் உள்ள இந்துக்கள் தங்களின் பழைய வரலாறுகளை தங்களின் கலாசாரங்களை இத்தனை காலம் எங்காவது இழந்திருக்கிறார்களா? மொகலாயர்கள் ஆட்சி, வெள்ளையர்களின் ஆட்சி என்று பலர் இந்நாட்டை ஆண்டிருந்தாலும் தங்களின் தனித் தன்மையை காத்தே வந்திருக்கின்றனர். எனவே சேர்ந்திருந்தால் இஸ்லாமிய நடவடிக்கைகளுக்கு பாதகம் வரும் என்ற பேசசு அடிப்படை ஆதாரமில்லாதது.

இந்தியாவில் இஸ்லாததின் தாக்கமானது தற்போது சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது. தற்போது மதத்தின் அடிப்படையில் இந்த நாட்டை பிரித்தால் எழுச்சியுறும் தாக்கமானது மிகுந்த பின்னடைவையே சந்திக்கும். பிரிவினை என்ற வெறுப்பானது இந்த நாட்டை நேசிக்கும் பெரும்பான்மை மக்களின் மனதைக் காயப்படுத்தும். இதனால் இஸ்லாத்தின் மீது ஒரு வித வெறுப்பை பெரும்பான்மை இன மக்கள் கொள்ள ஏதுவாகும்.

இனவாத அரசியலானது மதத்துக்கு அப்பாலும் பல காயங்களை உண்டு பண்ணும். இனவாத அரசியல் பங்களிப்பில் நாம் ஆர்வம் கொண்டால் குர்ஆனை விட்டு வெகு தூரம் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு அளாகுவோம். குர்ஆனிலிருந்தும் முகமது நபி அவர்களின் வரலாறுகளிலிருந்தும் இன வாத அரசியலுக்காக நாட்டை துண்டாடுவதற்கு எந்த ஆதாரங்களையும் நாம் காண முடியவில்லை. அவர்களோடு சேர்ந்து ஆட்சி அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதற்குத்தான் ஆதாரத்தை என்னால் பார்க்க முடிகிறது.

மொகலாயர்களின் ஆட்சி இந்தியாவில் வீழ்ந்த போது முஸ்லிம்கள் நமது நாட்டில் 22.5 சதவீதமாக இருந்தனர். இது தற்காலத்தில் மேலும் வளர்ந்துள்ளது. முஸ்லிம் அரசர்கள் தங்களின அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருந்தால் இந்த வளர்ச்சியை இஸ்லாம் கண்டிருக்காது. மாற்றம் என்பது மனதால் வர வேண்டும். ஆட்சி அதிகாரத்தினால் எக்காலத்திலும் ஒரு கொள்கையை உங்களால் திணித்து விட முடியாது. இன வாதத்தின் அடிப்படையில் ஒரு நாட்டைப் பிரித்து நீங்கள் எதை சாதிக்கப் போகிறீர்கள்? இத்தனை காலமாக இந்து, கிறித்தவ, பார்ஸி, சீக்கிய மக்களோடு அந்நியோன்யமாக பழகி ஒரு சிறந்த பன்முக கலாசாரத்தை நாம் கொண்டு வந்துள்ளோம்.

இந்திய முஸ்லிம்களை எடுத்துக் கொண்டால் தங்களுக்குள் பல பிரிவுகளை உண்டாக்கி வைத்துள்ளனர். சில பிரிவுகள் மொகலாயர்களின் ஆட்சியில் அந்த அரசர்களை திருப்திபடுத்துவதற்காக உண்டானது. மேலும் சில பிரிவுகள் பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் புதிதாக உண்டாயின. இது போன்ற பிரிவுகள் உண்மையான இஸ்லாத்தை இந்திய முஸ்லிம்களின் உள்ளங்களிலிருந்து பெரும்பாலும் எடுத்து விட்டது.

இவர்கள் முஸ்லிம்கள் தான. குர்ஆனை பின்பற்றுவதாகத்தான் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் தங்களின் மூதாதையர்கள் என்ன சொன்னார்களோ அதனையோ அல்லது சில மார்க்க அறிஞர்கள் கொடுத்த ஃபத்வாக்களையோ இஸ்லாமாக நம்பினார்கள். இப்படிப்பட்ட இஸ்லாமிய ஞானம் உள்ளவர்களின் கைகளில்தான் மிகப் பெரிய நாட்டின் ஆட்சிப் பொறுப்பு இஸ்லாத்தின் பெயரால் கொடுக்கப்படப் போகிறது. இவர்கள் தாங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இஸ்லாத்தை பயன் படுத்திக் கொள்கிறார்கள். அதல்லாது இஸ்லாமிய அடிப்படையில் ஒரு ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற தாகத்தில் அவர்கள் நாட்டை பிரித்துக் கேட்கவில்லை. பாகிஸ்தான் என்பது இவர்களின் அரசியல் வாழ்வுக்காக உண்டாக்கப்பட்ட ஒன்று. இந்திய முஸ்லிம் சிறுபான்மையினரை பற்றியும் எந்த கவலையும் படாமல் எடுத்து வைக்கப்படும் வாதம்தான் இந்த பிரிவினைக் கொள்கை.

எந்த நாட்டில் அல்லது எந்த சட்டத்தில் இஸ்லாமியர், இஸ்லாமியர் அல்லாதார் என்று பாகுபடுத்தி அரசு அமைக்குமபடி சொல்லப்பட்டிருக்கிறது என்று ஆதாரம் கேட்டேன். இதுவரை எந்த பதிலும் இல்லை. குர்ஆனிலிருந்தோ அல்லது நபிகளின் வாழ்விலிருந்தோ இதற்கு ஆதாரத்தை அவர்களால் சமர்ப்பிக்க முடியுமா? அல்லது எந்த நபித் தோழராவது இத்தகைய பிரிவினைக்கு ஆதரவாக பேசியுள்ளனரா? இவ்வாறு நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு நாட்டை பிளவுபடுத்துவது சரி என்றால் எவ்வாறு இஸ்லாம் ஒரு அகில உலகத்துக்கும் சொந்தமான ஒரு மார்க்கம் என்று நாம் சொல்ல முடியும்? எவ்வாறு நமக்கு இடப்பட்ட கட்டளையான ஏகத்துவத்தை அந்த மக்களுக்கு எத்தி வைக்க முடியும்? இது பொன்ற ஒரு நிலையை இஸ்லாம் அங்கீகரித்திருந்தால் எவ்வாறு நபித் தோழர்கள் மாற்று மதத்தவர்களின் நாடுகளுக்கு சென்று சத்தியத்தின் பால் அழைப்பு விடுததிருக்க முடியும்?

முஸ்லிம் லீகின் கோரிக்கை இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரானது. இவர்கள் ஆடசி அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இஸ்லாமிய நடைமுறைகளை ஓரங்கட்டச் சொல்கிறார்கள்.பாகிஸ்தான் பிரிவினையால் எந்த நன்மையும் விளைந்து விடப் போவதில்லை என்பது எனக்கு கண்கூடாகத் தெரிகிறது. இஸ்லாம் காட்டாத ஒரு வழியில் இந்த நாட்டை பிரித்து இஸ்லாத்துக்கு இவர்களால் என்ன செய்து விட முடியும்?

மேல் நாட்டு கலாசாரமும் அதையொட்டிய ஆட்சியமைப்பும் அது பற்றிய தத்துவங்களும் நமக்கு மேலும் சிக்கலை உண்டு பண்ணும். முஸ்லிம் லீக் தலைவர்களில் பலர் மத சார்பற்ற ஒரு அரசை நிர்மாணிப்பதிலேயே அக்கறை கொண்டுள்ளனர். அதனை சேர்ந்து இருந்து ஒரே நாடாக ஆட்சியை பகிர்ந்து கொள்வதில் என்ன சிக்கல் அவர்களுக்கு வருங்காலத்தில் எப்படி எல்லாம் சூழ்நிலைகள் மாறப் போகின்றன என்பதை அறிந்தவன் இறைவன் ஒருவனே!

தற்போதய சூழலில் இந்த தலைவர்களின் பின்னால் பாகிஸ்தான் அமைந்தால் அங்கு இஸ்லாத்துக்கு எந்த மதிப்பும் இருக்காது என்பதே எனது கணிப்பு. பாகிஸ்தான் பகுதியில் உள்ள பெரும்பான்மையான இளைஞர்கள் மத சார்பற்ற ஒரு நிலையை விரும்புவதாகவே நான் அறிகிறேன். இன்று சிறுபான்மையாக உள்ள பல மாநிலங்களில் முஸ்லிம்கள் மிகுந்த ஈடுபாட்டோடு தங்களின் சமய கடமைகளை செய்து வருவதையும் பார்க்கிறேன். அதே போல் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களில் அதே இளைஞர்களின் மார்க்க செயல்பாடுகளில் அலட்சியமாக இருப்பதையும் பார்க்கிறேன். பிரிவினை கோருவோரில் அறிஞர்கள் குறைவாக உள்ளதை கவனித்தேன். இதனாலும் அங்கு இஸ்லாம் தனது வீரியத்தை இழக்கும் அபாயம் உள்ளது.

கேள்வி:

ஆனால் உலமாக்கள் அதிகம் பேர் முகமது அலி ஜின்னாவை ஆதரிக்கிறார்களே?

பதில்:

அதிகமான உலமாக்கள் அக்பரையும் தான் ஆதரித்தர்கள். இதே ஒரு சில உலமாக்கள்தான் 'தீன் இலாஹி' என்ற புது மார்க்கத்தையும் அக்பருக்காக உருவாக்கினார்கள். இவர்களெல்லாம் மத அறிஞர்கள் என்ற கணக்கில் வருவார்களா? தனது வாழ்நாள் முழுக்க குர்ஆனையும் ஹதீஸையும் கடைபிடிப்பதே தங்களின் லட்சியம் என்று வாழ்ந்தார்களே அப்படிப்பட்ட உலமாக்களைப் பற்றி பேசுகிறேன். 1300 வருடங்களாக இது போன்று வாழ்ந்த பல அறிஞர்களை நாம் நமது வாழ்நாளில் கண்டே வருகிறோம். இந்த மார்க்கத்துக்காகவே உழைத்த இது போன்ற சிறந்த அறிஞரகளை ஏனோ நாம் ஒதுக்கி விடுகிறோம்.

கேள்வி:

மௌலானா! பாகிஸ்தான் உருவாகி அது ஒரு சிறந்த ஆட்சியையும் கொடுத்தால் அது இஸ்லாத்துக்கும் மற்றும் முஸ்லிம்களுக்கும் ஒரு பாதுகாப்பைத் தராதா?

பதில்:

இஸ்லாத்தின் பெயரால் ஒரு செயல் நடைபெற்றால் அதற்கு குர்ஆனிலிருந்து அதாரத்தை தர கடமைபட்டுள்ளீர்கள். இஸ்லாமிய வரலாறு நமக்கு பல அத்தாட்சிகளை விட்டுச் சென்றுள்ளது. ஒட்டகப் போரைப் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். இங்கு குர்ஆனின் சட்டத்தைத்தான் பின் பற்றுகிறோம் என்று சொல்லப்பட்டது. இது சரியான வழிமுறைதானா? அதேபோல் கர்பலாவில் நபிகள் நாயகத்தின் குடும்பத்தினரை அவரின் தோழர்களே கொலை செய்யும் நிலை ஏற்பட்டதே! இதுவும் சரியா? ஹஜ்ஜாஜ் என்ற அறிஞர் மெக்காவின் மீது தாக்குதல் நடத்தியதும் சரியான வழியாகுமா? நாம் செய்யும் தவறான செயல்களுக்கு இஸ்லாத்தை காரணம் காட்டி தப்பிக்க முயற்சிக்கக் கூடாது.

பாகிஸ்தான் பிரிவினை ஒன்றுதான் இந்திய முஸ்லிம்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு என்பது உண்மையானால் அதை ஆதரிக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். பாகிஸ்தான் ஆதரவாளர்கள் வைக்கும் பொறுப்பற்ற வாதங்களினால் பிற்பாடு எவ்வளவு பெரிய பயங்கர நிகழ்வுகள் உண்டாகப் பொகிறது என்பது எனக்கு ந்ன்றாகத் தெரிகிறது. எனது கருத்துகளையோ என்னையோ மக்கள் பின்பற்ற வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அனால் அதே சமயம் ஒரு தவறான முடிவை பெரும்பான்மையோர் விரும்புகின்றார்கள் என்பதற்காக அந்த முடிவை நானும் ஆதரிக்க வேண்டும் என்று பலர் விரும்புவது சரியான வாதமாகப் படவில்லை. பிரிவினை வாதங்களை வைத்துக் கொண்டிருக்கும் பெரும்பான்மையோருக்கு அரசியல் அனுபவம் இல்லை. உண்மை நிலவரம் என்ன என்று தெரியாமலேயே பலர் பிரிவினைக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்துள்ளனர். இந்த பிரிவினை வாதத்தை ஒன்று அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். அல்லது ஜின்னா தானாக முன் வந்து தனிநாடு கோரிக்கையை கைவிட வேண்டும். சில புதிய ஷரத்துகளை வேண்டுமானால் பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இந்தியாவுக்காக அவர் சேர்த்துக் கொள்ளலாம்.

என்னோடு வேலை செய்து வரும் மற்ற தோழர்களின் கருத்துப்படி ஒன்றுபட்ட இந்தியா இரண்டாக பிரியும் கட்டத்தை நெருங்கி விட்டதாகவே கூறுகின்றனர். இந்த பிரிவினையால் இந்தியா மட்டுமே பாதிப்புக்குள்ளாகும் என்று நினைக்க வேண்டாம்.. அதோடு சேர்ந்து பாகிஸ்தானும் மிகப் பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும். தேசப்பிரிவினையானது மதத்தின் அடிப்படையில் நடைபெறப் போகிறது. புவியியல் சார்ந்து இந்த பிரிவினை நடக்கப் போவதில்லை. ஆறுகள், மலைகள், காடுகள் இவைகளை அடிப்படையாக வைத்து ஒரு நாட்டை பிரிப்பதுதான் நியாயமானதானதாகவும் இருக்கும். பிரிவினை என்ற ஒரு கோடு போட்டாகி விட்டது. அதை எப்படி செயல்படுத்துவது என்பதில்தான் சிக்கலே இருக்கிறது.

நாம் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். தனது தாய் நாட்டை ஒரு சிலர் பிரிக்கிறார்கள் என்ற வெறுப்பானது அந்த மனிதனின் மனத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்தி விடும். இந்த வெறுப்பானது காலா காலத்துக்கும் இந்தியா பாகிஸ்தானுக்கிடையே பிரச்னைகளை தோற்றுவித்தவண்ணமாகவே இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் நல்லுறவு என்பது எட்டாக் கனியாகவே காலத்துக்கும் இருக்கும். நாட்டை பிரித்ததினால் இரு நாட்டு மக்களுக்கும் ஒரு மிகப் பெரிய தடுப்பு போடப்பட்டாகி விடும். இந்திய முஸ்லிம்கள் அனைவரையும் பாகிஸ்தானுக்குள் கொண்டு வருவது என்பதும் இயலாத காரியம். அதற்கேற்ற நில வசதிகளோ கட்டுமானப் பணிகளோ போதுமானதாக இல்லை. அடுத்து பாகிஸ்தானில் தங்கும் இந்துக்கள் நிம்மதியான வாழ்வை சுகிக்க முடியாத நிலை ஏற்படலாம். அங்குள்ள ஒரு சில தீவிரவாத முஸ்லிம்கள் இந்துக்களை விரட்டலாம். அல்லது அந்த ஹிந்துக்களுக்கு எந்த உதவிகளும் கொடுக்கப்படாமல் நிர்கதியாக விடப்படலாம். அதே போன்று இந்த பக்கம் முஸ்லிம்களும் மூன்று வழிகளில் பாதிப்படைவர்.

1. இந்திய முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டும், தாக்கப்பட்டும் பாகிஸ்தானுக்கு விரட்டப்படுவர். அனால் இவ்வாறு செல்லும் அத்தனை முஸ்லிம்களுக்கும் அங்கு இருப்பிட வசதி செய்து கொடுக்க முடியுமா? என்பதும் கேள்விக் குறியே.

2. பலர் கொலையும் செய்யப்படலாம். தங்களின் வாழ்வு பறிக்கப்பட்டு அநாதரவாக விடப்பட்ட அந்த காயம் ஆறுவதற்கு அவர்களுக்கு பல ஆண்டுகள் பிடிக்கும். ஒரு தலைமுறையே வெறுப்பில் தனது வாழ்நாளை கழிக்கும்.

3.அதிகமான முஸ்லிம்கள் வறுமையான வாழ்வுக்குத் தள்ளப்படுவர். அரசியலில் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும். வறுமை, வேலை வாய்ப்பு இல்லாமை போன்ற சூழலால் முஸ்லிம்கள் தங்கள் மார்க்க சட்ட திட்டங்களை சிறுக சிறுக இழக்க வேண்டி வரலாம்.

வசதியுள்ள பல முஸ்லிம்கள் தற்போது முஸ்லிம் லீகை ஆதரிக்கின்றனர். அவர்கள் பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தானுக்கும் சென்று விடுவர். பணம் படைத்த அந்த முஸ்லிம்கள் பாகிஸ்தானின் பெரும்பாலான தொழிற்சாலைகளையும் நிலங்களையும் தொழில்களையும் ஆக்கிரமித்துக் கொள்வர். ஏழை மேலும் ஏழையாவான். பணக்காரன் மேலும் பணம் படைத்தவனாவான். செல்வம் ஒரு சிலரிடத்தில் அபரிமிதமாக குவியும். இந்தியாவில் பல மில்லியன் முஸ்லிம்களை நிர்கதியாக விட்டு விட்டு இவர்கள் பாகிஸ்தானில் அமர்ந்து கொள்வர். இவர்களுக்கு என்ன தீர்வை தரப் பொகிறீர்கள் என்பதை பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் விளக்க வேண்டும்.

பாகிஸ்தானில் உள்ள இந்துக்களாலும் சீக்கியர்களாலும் பல பிரச்னைகளை பாகிஸ்தான் எதிர் கொள்ள வேண்டி வரும். இதை விட பெரும் பிரச்னை ஒன்று உள்ளது. உலக சக்திகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் பாகிஸ்தானை ஆக்கிரமித்துக் கொள்ளும் அபாயமும் உள்ளது. அதே சமயம் இது போன்ற அந்நிய ஆக்கிரமிப்பு பிரச்னை இந்தியாவுக்கு வராது. ஆனால் பல பிரச்னைகள் தொல்லைகள் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்த வண்ணம் இருக்கும்.

அடுதது ஒரு முக்கியமான பிரச்னையிலிருந்து தப்பித்துக் கொள்ள ஜின்னா முயற்சிக்கிறார். வங்காள பிரச்னை புறக்கணிக்கப்படுவது சீக்கிரமே நடந்தாலும் ஆச்சரியம் இல்லை. இதை ஜின்னா உணராதவராகவே உள்ளார். இரண்டாம் உலகப் பொரின் போது பஜ்லுல் ஹக் ஜின்னாவின் தலைமையை எதிர்த்ததால் முஸ்லிம் லீக்கிலிருந்து விலக்கப்பட்டார். திரு சஹ்ரவர்த்தி ஜின்னாவின் தலைமைக்கு எந்த முக்கியத்துவத்தையும் கொடுக்கவில்லை என்பதையும் நோக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் லீக்கை மட்டும் ஏன் பார்க்க வேண்டும். காங்கிரஸையே எடுத்துக் கொள்ளுங்களேன். சுபாஷ் சந்திர போஸினால் காஙகிரஸூக்குள் ஏற்பட்ட பிரச்னைகளை நாம் அறிவோம். காந்தி சுபாஷ் சந்திர போஸின் தலைமையை விரும்பவில்லை. எனவே தான் ராஜ்காட்டில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார் காந்திஜி. சுபாஷ் சந்திர போஸ் காந்திஜிக்கு எதிராக பல செயல்பாடுகளை காங்கிரஸூக்குள்ளேயே இருந்து கொண்டு எடுத்தார். இது பலமுறை நடந்தது. வங்காளத்தின் தலைமைக்கு அனுசரித்து செல்லும் பக்குவம் இல்லாமல் போனதால் அதன் முன்னேற்றத்தில் பல பின்னடைவுகளை இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் பல பின்னடைவுகளை சம்பாதித்துக் கொண்டது.

கிழக்குப் பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஜின்னாவும் லியாக்கத் அலி கானும் உயிரோடு உள்ளவரை எந்த பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் இவர்கள் இருவரின் காலத்துக்குப் பிறகுஒரு சிறிய சம்பவம் கூட மிகப் பெரிய கலவரங்களை உண்டு பண்ணி விடும் சாத்தியக் கூறுகள் உண்டு. வங்காளம் பாகிஸ்தானோடு நீண்ட காலம் நிலைத்திருக்குமா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த இரு பிராந்திய மக்களுக்கும் எந்த விதத்திலும் ஒற்றுமையை என்னால் காண முடியவில்லை. இவர்கள் இருவரையும் இணைப்பது இஸ்லாம் ஒன்று மட்டுமே. கலாசாரம் அனைத்திலும் இருவருக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. அரசியல் காரணங்களுக்காக இவ்விரு துருவங்களும் இணைவது சாத்தியப் படுமா என்பது கேள்விக் குறியே!

உதாரணத்துக்கு அரபு நாடுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அனைவருக்கும் பொதுவான மதமாக இஸ்லாம் உள்ளது. பண்பாடு பழக்க வழக்கங்கள் அனைத்திலும் ஒத்தே இருக்கின்றனர். மொழி கூட அனைவருக்கும் பொதுவான அரபி மொழிதான். இத்தனை ஒற்றுமைகள் இருந்தும் அவர்கள் அனைவரும் ஒரே ராஜ்ஜியமாக இருக்க முடியவில்லை. ஒவ்வொரு நாடும் தனித்தனி அரசுகளாகவே செயல்படுகின்றன. ஒவ்வொரு நாட்டுக்கும் சட்ட திட்டங்களும் வித்தியாசப்படுகின்றன.

தற்போது வங்காளத்தையும் பாகிஸ்தான் பகுதிகளையும இவ்வாறு ஒப்பீடு செய்து பார்ப்போம். இருவருக்குமே பேசும் மொழியில் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. பாகிஸ்தான் என்ற இந்த மாயை மக்களுக்கு சில காலம் சென்று விலகிய பிறகு பல வித்தியாசங்கள் சிறிது சிறிதாக தலை தூக்க ஆரம்பிக்கும். இதனால் சண்டை சச்ரவுகள் உண்டாகி வெளி நாட்டு சக்தியின் தலையீட்டால் இந்த இரண்டு பிரதேசங்களும் இரு நாடுகளாக பிரியும் சாத்தியதை உள்ளது. இந்த பிரிவினை நடந்த பிறகு பாகிஸ்தானானது இந்த பிராந்தியததில் பல சிக்கல்களை உண்டு பண்ணக் கூடிய ஒரு நாடாக பரிணமிக்கும் அபாயம் அபாயம் உள்ளது.

பஞ்சாப், சிந்த், பலுசிஸ்தானம் போன்ற பல மாநிலங்கள் வெளி நாட்டு சக்திகளின் ஆக்கிரமிப்புக்கு தாராளமாக தங்களின் கதவுகளை திறந்து விடும் அபாயமும் உண்டு. இவ்வாறெல்லாம் நடப்பதற்கு மிகப் பெரிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

மேலும் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது பாகிஸ்தானின் பொருளாதார முன்னேற்றம். ஒரு நாட்டின் முன்னேற்றமானது ஒரு குறிப்பிட்ட மதத்தின் பெயரால் பிரிந்ததனால் மட்டுமே வந்து விடாது. முஸ்லிம் தொழிலதிபர்களுக்கு பாகிஸ்தான் போன்ற ஒரு புதிதாக உருவாகிய நாட்டில் பணத்தை போட்டு லாபம் ஈட்ட முடியுமா என்ற சந்தேகமும் வந்துள்ளது. அரசு உதவிகளை அவர்கள் அதிகம் எதிர்பார்ப்பர். புதிய நாடும், புதிய சட்டங்களும் அவர்களை அரசின் உதவியையே எதிர் பார்க்க சொல்லும். இது எந்த அளவு வெற்றியைக் கொடுக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்.

நான் நினைப்பது சரியானால் பாகிஸ்தானில் பின்வரும் பிரச்னைகள் பெரிதாக கிளம்பி பெரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க வேண்டி வரும்.

முதலாவது : அரசியல் தலைமை ராணுவத்தினரால் கட்டுப்படுத்தக் கூடிய நிலையை பின்னாளில் சந்திக்க நேரிடும். பல நாடுகளில் இது போன்று நடந்துள்ளது.

இரண்டாவது : அதிகமான வெளி நாட்டு கடன்களை சுமக்க வேண்டி வரும்.

மூன்றாவது : அண்டை நாடுகளோடு சுமூகமான சூழல் மறைந்து ஆயுதங்களை அதிகம் கொள்முதல் செய்யும் நாடாக மாற வாய்ப்புள்ளது.

நான்காவது : உள் நாட்டு கொந்தளிப்பு மற்றும் மக்களின் மாறுபட்ட அபிப்ராயங்களினால் பல சச்சரவுகளை சந்திக்க நேரிடும்.

ஐந்தாவது: பாகிஸ்தானின் விலை மதிக்க முடியாத இயற்கை வளங்கள் பணம் படைத்தவர்களாலும் பெரும் தொழிலதிபர்களாலும் அவர்களுக்கு பங்கு போட்டு கொள்ளப்படும்.

ஆறாவது : பணம் படைத்தவர்களின் சுரண்டலினால் சாமான்யர்களின் போராட்டங்களை சந்திக்க நேரிடும்.

ஏழாவது : மன நிம்மதியின்மையாலும், குழப்பங்களினாலும் பாகிஸ்தானின் இளைஞர்கள் இஸ்லாமிய வரிவு முறையை துறக்கும் அபாயமும் உள்ளது.

எட்டாவது: உலக சக்திகளான அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரங்களையே கட்டுப்படுத்தும் சக்தியை பெற்று விடும் அபாயமும் உண்டு. இதனால் நாமும் பாதிக்கப்படுவோம்.

இது போன்ற சூழ்நிலையில் பாகிஸ்தானின் இன, மொழி தகராறுகள் தலை தூக்கி மிகப் பெரிய சிக்கலை உண்டு பண்ணக் கூடும். இந்த பிரச்னைகளை தீர்க்க உருப்படியான எந்த ஒரு யோகனைகளையும் இஸ்லாமிய நாடுகளால் கூட தர முடியாது. அப்படியே அவர்கள் வந்தாலும் தங்களின் வழிக்கு இழுக்கவே பலரும் முயற்சி செய்வர். இது மேலும் சிக்கலை உண்டாக்கும்.

.......தொடரும்

11 comments:

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் சகோ ...
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு, நான் அறிந்திராத பல தகவல்களை அறிய செய்திருக்கிறிர்கள் நன்றி ....
மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பாகிஸ்தான் பற்றிய தீர்க்க தரிசனம் படியே இப்போதும் பாக்கில் நடைப்பெற்றுக்கொண்டு இருக்கிறது ........
தரமான பதிவு , இதுபோல வாரத்துக்கு ஒன்றாவது பதிவு போடுங்க
" ரமதான் முபாரக் "

சிராஜ் said...

அண்ணே...

சிறு இடைவெளிக்கு பின் ஆரம்பமே அமர்க்களமா இருக்கு...

கட்டுரைய சின்னதா சுருக்கமா எப்படி எழுதிறீங்க???? கிளாஸ் எடுக்க முடியுமா??

Rafik said...

மாஸா அல்லாஹ். என்ன ஒரு தீர்க்கதரிசனம்...! ஞானம்...! எல்லாமே அப்படியே நடந்திருக்கிறது.

பாகிஸ்தானை மட்டும் அல்ல பிளவு கண்ட இந்தியாவையும், வங்க தேசத்தையும் சேர்த்தே புரிந்த கொண்ட மனிதர். மிக அற்புதமான, சரியான பார்வை.

இதுவரை கேள்விப்படாத இத்தகைய ஒரு அற்புதமான பேட்டியை தமிழில் தந்ததர்க்கு இறைவன் உங்களுக்கு நற்கூலி அளிப்பானாக.!! வெல் டன்..!

வெயிட்டிங் பார் பார்ட் டூ. :)

சுவனப் பிரியன் said...

வஅலைக்கும் சலாம் சகோ நாஸர்!

//தரமான பதிவு , இதுபோல வாரத்துக்கு ஒன்றாவது பதிவு போடுங்க
" ரமதான் முபாரக் "//

இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது இணையத்தில் எழுதுகிறேன்.

'ரமழான் முபாரக்'

சுவனப் பிரியன் said...

சகோ சிராஜ்!

//சிறு இடைவெளிக்கு பின் ஆரம்பமே அமர்க்களமா இருக்கு...

கட்டுரைய சின்னதா சுருக்கமா எப்படி எழுதிறீங்க???? கிளாஸ் எடுக்க முடியுமா??//

எல்லாம் உங்க கிட்டே கத்துக்கிட்டதுதான். :-)

சுவனப் பிரியன் said...

சகோ ரபீக்!

//இதுவரை கேள்விப்படாத இத்தகைய ஒரு அற்புதமான பேட்டியை தமிழில் தந்ததர்க்கு இறைவன் உங்களுக்கு நற்கூலி அளிப்பானாக.!! வெல் டன்..!

வெயிட்டிங் பார் பார்ட் டூ. :)//

பிரார்த்தனைக்கு நன்றி! இன்ஷா அல்லாஹ் இரண்டொரு நாளில் அடுத்த பகுதி.

Ameer said...

Assalamu alaikkum suvanam bai.
Long time no see.I am the biggest fan of yours articles.never miss any of your article till now.so please do write something interesting topics as usual.
Ramalan Mubarak to you & your family.
-Ameer

notifierman said...

அஸ்ஸலாம் அலைக்கும் சகோ !

அற்புதமான பதிவு !!!

சாகுல் ஹமீது - புதுக்கோட்டை .

சுவனப் பிரியன் said...

வஅலைக்கும் சலாம் சகோ அமீர்!

//Assalamu alaikkum suvanam bai.
Long time no see.I am the biggest fan of yours articles.never miss any of your article till now.so please do write something interesting topics as usual.
Ramalan Mubarak to you & your family.//

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

தாயகம் சென்றிருந்ததால் பதிவுகளின் பக்கம் வர இயலவில்லை. இனி ஓய்வு கிடைக்கும் போது அவ்வப்போது முடிந்தவரை எழுதுகிறேன். தொடர்ந்து பின்னுட்டம் அளித்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றி!

சுவனப் பிரியன் said...

வஅலைக்கும் சலாம் சகோ ஷாகுல்!

//அஸ்ஸலாம் அலைக்கும் சகோ !

அற்புதமான பதிவு !!!

சாகுல் ஹமீது - புதுக்கோட்டை .//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Ruknudeen said...

அழகிய மொழிபெயர்ப்பு அவசியமான நேரத்தில் அல்லாஹ் தாங்களுக்கு அருள்புரிவானாக.