மதுரையில் நேற்று (சனிக்கிழமை) இரவு நடந்த மிக
முக்கியமான நிகழ்வு தமிழர் வாழ்வுரிமை மாநாடு. ‘கீழடியைப் பாதுகாப்போம், இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ ‘சாதியற்ற தமிழர், காவியற்ற தமிழகம்’ என்ற முழக்கத்தோடு நடந்த அந்த மாநாட்டில்
மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவும்
பங்கேற்றார்.
மாநாடு
‘தமிழ்த்தாய் வாழ்த்’தோடு தொடங்கி, ‘தேசிய
கீதத்’துடன் நிறைவுபெற்றது. 97 வயதைக்கடந்த
தோழர் சங்கரய்யா உள்பட அனைவருமே எழுந்து நின்று தமிழ்த்தாய்க்கும், தேசிய கீதத்துக்கும் மரியாதை செலுத்தினார்கள். கூட்டத்தில்
என்.சங்கரய்யா பேச ஆரம்பிக்க, நீண்ட
இடைவெளிக்குப் பிறகு மதுரையில் ஒலித்த, அந்தக் கம்பீரமான குரலைக்கேட்டு கூட்டம் ஆர்ப்பரித்தது. மொத்தம் 37 நிமிடங்கள் அவர் உரையாற்றினார். அவரது உரையின் முக்கியமான
பகுதிகள் இங்கே.
கவிஞர்
வைரமுத்துவின் எழுத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக அறிக்கை வெளியிட்ட
சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் இந்திய
விடுதலைப் போராட்டத்தில் பங்பேற்ற ஒரு ஊழியன் என்ற முறையில் இந்த மேடையின் மூலம்
ஒன்றைக் கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பாக
இருக்கக்கூடிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இவ்வாறு மிரட்டல் விடுத்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து அவர்களைச்
சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியரும், காவல்துறையினரும் வெங்கடேசனின் வீட்டிற்கு பாதுகாப்பு
அளிக்க வேண்டும். இத்தகைய பாசிச மிரட்டல்களை நாமும் குறைத்து மதிப்பிடக்கூடாது.
இந்து மதத்தில்
வைணவம் என்பது காப்புக்கடவுளான விஷ்ணுவை மையமாகக் கொண்டது. அந்த காப்புக்கடவுளைப்
பின்பற்றக் கூடியவர்கள் தான் இந்த கொலை மிரட்டலை விடுத்திருக்கிறார்கள். உங்கள்
மதம் சொல்கிறது, காப்பாற்றுவோம் என்று. நீங்களோ, ‘அழிப்பேன், கொல்வேன், சோடா பாட்டில் வீசுவேன்’ என்று சொல்கிறீர்கள். இது எவ்வளவு
பெரிய முரண்பாடு பார்த்தீர்களா? தயவு செய்து
கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள். எந்தவிதமான விவாதத்துக்கும் நாங்கள் தயார்.
நாங்கள் பொருள்முதல்வாதிகள். எந்த விவாதத்துக்கும் தயார். விவாதம் விவாதமாக
நடக்கட்டும். கொலை மிரட்டல்களைத் தவிருங்கள்.
மத்திய
ஆட்சியாளர்களே, கீழடி அகழ்வாய்வைக் கண்டு ஏன் பயப்படுறீங்க.
உண்மையைக் கண்டு பயப்படாதீங்கப்பா. ‘சத்யமே ஜெயதே’ என்று சொல்றீங்கள்ல. அந்த
அகழ்வாய்வு மூலம் தமிழர்களின் நாகரிகம்தான் பழமையானது என்று தக்கச் சான்றுகளுடன்
முடிவு வருமானால் அனைவரும் ஏற்றுக்கொள்வோம். இந்தக் கீழடி ஆய்வு நீடிக்கப்பட
வேண்டும். தமிழக சர்க்கார் ஒன்றும் ஏழையல்ல. எத்தனை லட்சமானாலும், கோடி ஆனாலும் அந்த அகழ்வாய்வுக்காக செலவளிக்க முடியும்.
செலவழிக்க வேண்டும். தொடருங்கள். முழு உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள். அதேபோல
ஆதிச்சநல்லூர் ஆய்வையும் தொடர வேண்டும். அதன் பெருமை குறித்து தமிழ்நாடு
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நூல் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்து
ஜல்லிக்கட்டு. மோடி அரசாங்கமே மாநில மொழிவழி மக்களுடைய எண்ணங்களை, தேவைகளைப் புறக்கணிக்காதீர்கள், எதிர்க்காதீர்கள். எதிர்த்தால் நீங்கள்தான்
தவிடுபொடியாவீர்களே தவிர, நாங்கள் அல்ல.
இந்தி என்பது
மத்திய அரசின் அலுவல் மொழிதானே ஒழிய, தேசிய மொழியல்ல. 8வது அட்டவணையில் உள்ள மொழிகள் அனைத்துமே தேசிய
மொழிகள்தான், சமத்துவ உரிமை பெற்றவைதான். எனவே, இந்தியைத் திணிக்க முயலாதீர்கள். 1967 தேர்தலில் அன்றைக்கு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இன்று வரையில்
நீடிக்கிறது. எங்களுக்கு நீங்களே குழிவெட்டிக்கொள்ளாதீர்கள் என்று பாஜகவை
எச்சரிக்கிறேன்.
இங்கே
கூடியுள்ள அத்தனை பேரையும் கேட்கிறேன். உங்கள் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க
வைக்கிறீர்களா? மனச்சாட்சியோடு சொல்லுங்கள். (அப்போது, சிலர் மட்டுமே கையை உயர்த்தினார்கள். உடனே, அவர் சொன்னார்) ‘என்னுடைய பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க
வைப்பேன். ஆனால், தமிழைப் பாதுகாப்பேன்’ என்கிறீர்களா? அது முடியாது. கேட்டா என்ன சொல்வீங்க, ‘நான் படிக்க வைக்கத்தான் நினைச்சேன். வீட்டில் உள்ள
பொம்பளைங்க கேட்க மாட்டேங்கிறாங்க’ என்று சொல்வீங்க. அது ஒரு சால்ஜாப்பு. அந்தப்
பெண்களிடத்தில் பேசுங்கள். தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியவனும், கல்லணையைக் கட்டியவனும் எந்த மொழியில் படிச்சான்? தமிழில்தானே? சீனாவில் சீனமொழியில்தான் விஞ்ஞானம் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில்
தொடர்பு மொழிக்காக மட்டும் படிக்கிறார்கள். அதைப்போலவே நாமும் வைத்துக்கொள்வோம்.
தமிழகத்துப் பெண்கள், தங்கள் பிள்ளைகளைத் தமிழைப் பயிற்று மொழியாகக்
கொண்ட பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும். அதுதான் உண்மையாக, இந்தியைத் தடுக்கும்.
அனைத்து
பாடநூல்களையும் தமிழில் கொண்டுவர வேண்டும். என்னய்யா பெரிய கஷ்டம் என்கிறீர்கள்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல் எல்லாத்துக்கும் தமிழில் பாடப்புத்தகங்களைக் கொண்டுவந்துவிடடார்கள்.
நமக்கென்ன கஷ்டம்? தமிழகத்தில் உள்ள தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம்
என்ன செய்கிறது? சந்திரபாபு நாயுடு ஆள்கிற ஆந்திர மாநிலத்தில்
குப்பம் என்ற இடத்தில், திராவிட மொழிகளின் பல்கலைக்கழகம் இருக்கிறது.
தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம், துளு ஆகிய
திராவிட மொழிகள் குறித்து ஏராளமான ஆராய்ச்சிகள் நடக்கிறது. நமது முற்போக்கு
எழுத்தாளர்கள் சங்கம் அந்த பன்முக பல்கலைக்கழகத்துக்குச் சென்று அதைப்
பலப்படுத்தப் பாருங்கள். தமிழ் ஆட்சி மொழியாவது நம்முடைய கையில்தான் இருக்கிறது.
இந்திய
சுதந்திரத்துக்காக நாங்கள் போராடியபோது, அனைத்து மொழி பேசும் மக்களையும் ஒன்று திரட்டினோம். அப்போதே மாநில சுயாட்சி
என்ற கோரிக்கை எழுந்துவிட்டது. அனைத்து மொழிகளையும், மொழி பேசுகிற மக்களையும் சமமாக நடத்துகிற, சம அதிகாரம் கொண்ட. ஒரு கூட்டாட்சி வேண்டும் என்றுதான் என்று சொன்னோம்.
இப்போது ஒற்றை மொழி, ஒற்றைக்கொள்கை என்ற பாதையில் போவது சரியல்ல.
மொழி வழி மாநிலத்தை பலப்படுத்துவதே தேச நலனுக்கு நல்லது.
பாரதியார்
சொன்னார், காதல் திருமணம் பண்ணுங்க என்று. தமிழ்நாட்டில்
கௌரவக்கொலைகள் நடக்கலாமா? அப்புறம் என்னாய்ய நீ தமிழன்? வயது வந்த ஒரு ஆணோ, பெண்ணோ எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்த சாதியைச் சார்ந்தவராக இருந்தாலும் எந்த மொழியைப் பேசுவபவர்களாக
இருந்தாலும் மனம் விரும்பிய ஒருவரைத் திருமணம் செய்ய உரிமையிருக்கிறது. அதைப்
பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. நம்முடைய கடமை.
குறுக்கிடுங்கள்
தோழர்களே. ஒரு பெண்ணை ஒருவன் அடிக்கிறான், கொல்கிறான் என்றால், நீங்கள்பாட்டுக்குப் போவீர்களா? முரட்டுத்தனமாகக் குறுக்கிடக்கூடாது. சாதுர்யமாக
குறுக்கிடுங்கள். 10 பெண்களைத் திரட்டிக்கொண்டு அந்த வீட்டுக்குப்
போங்க. ஏன்யா அடிக்கிற என்று கேளுங்கள். அப்போதுதான் பெண் உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.
கலப்புத் திருமணங்களை
ஆதரியுங்கள். தீண்டாமை ஒழிய வேண்டும் என்றால், ரத்தக்கலப்பு ஏற்பட வேண்டும் என்று அம்பேத்கர் சொன்னார். மேலெழுந்த வாரியாகப்
பேசிவிட்டுப்போனால் பிரயோஜனமில்லை. நம் குடும்பத்தில் அதைச் செயல்படுத்த வேண்டும்.
என்னுடைய குடும்பத்திலே, நான் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த இருவரை
மருமகனாகவும், மருமகளாகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அதற்கு
ஒரு தைரியம் வேண்டும். என் வீட்டில் உள்ள அந்த அரிஜனப் பெண் என்னைப் பார்த்து மாமா
என்று கூப்பிடுறாள். மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மாற்றம் நம்மிடம்தான் இருக்கிறது
தோழர்களே. நம்முடைய அடித்தட்டு மக்களிடம் இதைச் சொல்லுங்கள். யாராவது எதிர்த்தால், ‘உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே’ என்ற
எம்ஜிஆர் பாடலைச் சுட்டிக்காட்டுங்கள். அதைவெச்சுக்கிட்டு ஊர்வலம் போங்க.
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே. அப்புறம் என்னடா வித்தியாசம் என்று
கேளுங்கள். தமிழகத்தில் சாதி ஆணவக்கொலைகள் நிறுத்தப்பட வேண்டும்.
அடுத்தது
தீண்டாமை. ஏன்யா, ரயில்ல எல்லாரும் சேர்ந்து போறோம். பஸ்ல
சேர்ந்து போறோம், பள்ளிக்கூடத்துல சேர்ந்து படிக்கிறோம்.
செத்தப்பிறகு சுடுகாடு மட்டும் ஏன்யா தனித்தனியாக? அரிஜனங்களுக்குத் தனியாக சுடுகாடு ஏன்? வருகிற உள்ளாட்சித் தேர்தலிலாவது அனைத்து சாதியினருக்கும் சேர்த்துப் பொது
மயானம் அமைப்போம் என்று அறிவிக்கிறதோ அந்த கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
“மோட்டார் தொழிலாளர் சங்கத்தில்தான், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றியது. இன்று நான் தோழர்
சு.வெங்கடேசனையும், தமிழ்செல்வனையும் கேட்டுக்கொள்வது, அந்த சங்கத்தைத் தொடங்கிய 32 தோழர்களின் பெயர்களின் பெயர்களையும் வைர எழுத்துக்களால் எழுதி, நீங்கள் ஒவ்வொரு மாநாட்டிலும் அவர்களைப் பெருமைப்படுத்த
வேண்டும். சங்கம் தொடங்கியபோது அதன் பதாகையில் பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டையின்
படங்கள் இருந்தன. அவை வெறும் படங்கள் அல்ல. பாரதி என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாரதிதாசன் என்பது சமூகநீதி, பட்டுக்கோட்டை குறிப்பது பொதுவுடமையை. இந்த மூன்றையும் நாம்
மறந்துவிடக்கூடாது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில், ஏன் முற்போக்கு என்ற சொல்வருகிறது? நாம் ஏன் வெறுமனே எழுத்தாளர் சங்கம் என்று பெயர்
வைக்கவில்லையே. முற்போக்கு என்றால் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கணும், பாசிஸத்தை எதிர்க்கணும், மதவெறியை எதிர்க்கணும், தீண்டாமையை எதிர்க்கணும். அதுதான் முற்போக்கு.
கடைசியாக ஒன்று
சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் இன்று வெறும் 1 சதவிகித ஆட்களிடம் நாட்டின் மொத்த சொத்துக்களில் 73 சதவிகிதம் குவிந்து கிடக்கிறது. இந்த அடிப்படையை மாற்றாமல், எப்படி மக்களை முன்னேற்றுவீர்கள்? இந்த லட்சியத்தை நோக்கி நாம் நடைபோட வேண்டும். எல்லோரும்
சேர்ந்து தமிழ்நாட்டை ஒரு முற்போக்கான, ஜனநாயக ரீதியான, மதச்சார்பற்ற, ஒரு மாபெரும் இயக்கம் உருவாவதற்கு நீங்கள் பாடுபட வேண்டும். நாட்டில் பெரிய
தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால், எண்ணிக்கை அவசியம். எனவே, சக எண்ணம்
கொண்ட மக்களை எல்லாம் ஒன்று திரட்டுங்கள்.
இவ்வாறு அவர்
பேசினார்.
மூத்த தலைவர்
என்.சங்கரய்யா பேசி முடித்ததும், அத்தனை பேரும்
எழுந்து நின்று “செவ்வணக்கம் செவ்வணக்கம், எங்கள் தோழர் சங்கரய்யாவுக்கு செவ்வணக்கம்” என்று முழக்கமிட்டனர். மேடையில்
இருந்து இறங்கியபோதும், அவரைப் பெருங்கூட்டம் சூழ்ந்துகொண்டது.
தமிழ் இந்து நாளிதழ்
29-01-2018