Followers

Monday, January 29, 2018

உள்ளங்களை வென்ற உன்னத பணி..


உள்ளங்களை வென்ற உன்னத பணி..


ஏக இறைவனின் திருப்பெயரால்...

உள்ளங்களை வென்ற உன்னத பணி..

இறைவனின் அருளால் நம்முடைய ஜமாஅத்தின் சார்பாக மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளை வீரியத்தோடு செய்து வருகிறோம். இந்த பயணத்தில் பல்வேறு விதமான நெகிழ்ச்சியான சம்பவங்களை நாம் சந்தித்தது உண்டு. அந்த வரிசையில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வு.

கடந்த 24-1-2018 அன்று காலை 7:00 மணியளவில் அப்துல் ரஹீம் (மாநில செயலாளர்) தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு குவைத்தில் இருக்கும் நம்முடைய சகோதரரின் உறவினர் சென்னை அரசு பொது மருத்துமனையில்( G.H) சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த நபரின் குடும்பத்தாருக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குமாறு தெரிவித்தார்கள். இந்த தகவலை உடனடியாக தென் சென்னை மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி சேப்பாக்கம் கிளை நிர்வாகிகள் தகவல் வந்த மாத்திரத்தில் இப்படியொரு மனிதநேய பணியை செய்வதற்காக காத்திருந்தது போல நம்முடைய கிளை நிர்வாகிகள் களமிறங்கினார்கள்.

மருத்துவமனையில் சென்று சந்தித்த போது இறந்த நபரின் சகோதரர் மட்டுமே உடன் இருந்தார். அவர்கள் இருவரும் வங்காள தேசத்தை (பங்களா தேஷ்) சார்ந்தவர்கள் என்பதும் செவ்வாய் கிழமை காலை இதய நோயின் காரணமாக இங்கே வந்துள்ளார்கள். வந்த இடத்தில் அவருடைய சகோதரர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அவர் நம்மை கண்டவுடன் அவருடைய கண்கள் குளமானது. காரணம் செவ்வாய் கிழமை இரவு அவருடைய சகோதரர் இறந்துவிட்டார். இந்த சூழலில் தான் என்ன செய்ய வேண்டும் ? எப்படி இந்த உடலை எடுத்து செல்வது ? என்று தெரியாமல் இரவு முழுவதும் அவதிப்பட்டுள்ளார். கிளை நிர்வாகிகள் அவரை சந்தித்து தங்களுக்கு உதவி செய்ய தான் நாங்கள் வந்துள்ளோம் என்று சொன்னவுடன் கண்ணீர் மல்க நம்முடைய சகோதரர்களின் கையை பற்றிக்கொண்டார். இங்கு பலரும் பல வேளைகளில் இருக்கும் சூழலில் என்னை யாரென்று கூட தெரியாமல் எங்களுக்கு உதவி செய்ய தாங்கள் வந்திருக்கிறீர்கள் என்ற அவருடைய வார்த்தை இது போன்ற சமுதாய பணிகளை இன்னும் வீரியதோடு நாம் செய்ய வேண்டும் என்பதற்கு ஓர் உத்வேகமாக அமைந்தது.

இதன் பிறகு நம்முடைய சகோதரர்கள் முழுமையாக அங்கே இருந்து மருத்துவ மனையில் இருந்து உடலை வெளியே கொண்டு வருவதற்கான எல்லா வேளைகளிலும் முழுமையாக ஈடுபட்டு மதியம் 2 மணியளவில் மருத்துவமனையில் இருந்து உடலை பெற்று அவருடைய சகோதரரிடம் ஒப்படைத்தனர். நம்முடைய சகோதரர்கள் செய்த இந்த உதவிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அந்த சகோதரர் கிளை நிர்வாகிகளுடன் நின்று ஒரு புகைப்படம் எடுத்து கொண்டு கண்ணீர் மல்க நம்மை விட்டு கடந்து சென்றார்.

பொறுமையை கடைப்பிடிப்பீராக. நன்மை செய்தோரின் கூலியை அல்லாஹ் வீணடிக்கமாட்டான்.
குர்ஆன் (11:115)    
       .   
 .தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்        சேப்பாக்கம் கிளை





No comments: