Followers

Sunday, January 21, 2018

நெஞ்சங்களை நெகிழச் செய்த சந்திப்பு!!

நெஞ்சங்களை நெகிழச் செய்த சந்திப்பு!!

இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இதற்கு முன்னால் எவரும் அப்படிப்பட்ட விண்ணப்பத்தை வைத்தது கிடையாது.

தென் மும்பையில் கிராண்ட் ரோடு ஏரியாவில் ஒற்றை அறை, சமையலறை குடிலில் வாழ்ந்து வருகின்ற நாராயண் லவாதே(வயது 88) இராவதி லவாதே(வயது 78) என்கிற தம்பதியினர்தான் ராம் நாத் கோவிந்துக்கு அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்கள். ‘வாழ விருப்பமில்லை. தற்கொலை செய்து கொள்ள உதவுங்கள்’ என்பதுதான் அந்த வயதான இந்தியத் தம்பதியின் விண்ணப்பம். கடந்த மாதம் 21 டிசம்பர் 2017 அன்று அவர்கள் இந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்கள்.

இந்த நிலையில் நேற்று (20 ஜனவரி 2018) காலை மகாராஷ்டிர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் மௌலானா தௌஃபிக் அஹ்மத் கான் அவரை அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசினார். ஏன் தற்கொலை செய்து கொள்ள விரும்புகின்றீர்கள்? என கனிவும் பரிவும் நிறைந்த தொனியில் மௌலானா கேட்டதும் மனம் விட்டுப் பேசத் தொடங்கிவிட்டார், நாராயண் லவாதே. வயது எண்பதைத் தாண்டிவிட்டிருக்க, குழந்தைகள் எதுவும் இல்லாதிருக்க, உடன் பிறந்தவர்களும் மரணித்துவிட்டிருக்க, சுற்றத்தாலும் சுற்றிலும் இல்லாத நிலையில் சமூகத்திற்கு எந்த நன்மையையும் செய்ய இயலாத நிலையில் நோயுற்று சமூகத்துக்கு சுமையாக இருக்க விருப்பமில்லாமல் இந்த முடிவை எடுத்ததாக நாராயண் லவாதே மனம் விட்டுச் சொன்னார்.

மௌலானா அவருக்கு இறைவனைப் பற்றியும் இம்மை மறுமை குறித்தும் வாழ்வு எத்துணை பெரும் அருள்வளம் என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் எடுத்துரைத்தார். மரணத்தைத் தள்ளிப்போடவும் முடியாது, முன் கூட்டியே மரணித்துவிடவும் முடியாது. இறைவன் விதித்த நேரத்தில்தான் எல்லாமே நடக்கும். இந்த உலக வாழ்வில் நாம் மேற்கொண்ட செயல்கள் அனைத்துக்கும் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் நமக்கு உண்டு என்றும் சொன்னார்.

இறுதியில், ‘உங்களுக்கு உற்றார் உறவினர் என எவருமே இல்லையென்றால் என்ன, நாங்கள் இருக்கின்றோம் உங்களுக்குப் பணிவிடை செய்வதற்கு! உங்களை என்னுடைய அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கின்றேன். நீங்கள் விரும்பினால் எங்களின் வீட்டிலேயே வந்து தங்கிக் கொள்ளலாம்’ என்று கனிவோடும் பாசத்தோடும் சொன்னார்.

தயவுசெய்து தற்கொலை செய்து கொள்கின்ற எண்ணத்தைக் கைவிட்டு விடுங்கள். உயிருள்ள வரை நல்ல முறையில் வாழுங்கள். உங்களை நாங்கள் வந்து சந்தித்துக்கொண்டே இருப்போம். நீங்கள் நோயுற்றுவிட்டாலும் உங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வோம். உடன் இருப்போம். வீட்டு வேலைகளிலும் உங்களுக்கு உதவுவதற்கு நாங்கள் இருக்கின்றோம்’ என்றும் அந்தப் பெரியரிடம் விண்ணப்பித்தார் மௌலானா தௌஃபிக் அஸ்லம் கான்.

நீங்கள் ஏன் எனக்கு பணிவிடை செய்ய விரும்புகின்றீர்கள்? உங்களுக்கு இதனால் என்ன பயன் கிடைக்கும்?’ என வியப்போடு வினவினர் நாராயண்.

நாம் அனைவரும் ஒரே தாய் தந்தையரின் வழித்தோன்றல்கள்தாம். அந்த வகையில் நாம் அனைவருமே இரத்தபந்தம் கொண்ட சகோதரர்கள்தாம். இந்த நிலையில் எவரேனும் ஒருவர் துயரத்தில் இருக்கின்ற போது அவருக்கு உதவ வேண்டும் என்றுதான் எங்களின் மார்க்கம் எங்களுக்குப் போதிக்கின்றது. எங்களின் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களும் இதனைத்தான் அறிவுறுத்தி இருக்கின்றார்கள். மனிதர்களுக்கு நன்மையளிப்பவர்தாம் உங்களில் சிறந்தவர் என்று அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். எனவே இது எங்களின் கடமை. உங்களுக்குப் பணிவிடை செய்வதால் எங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். எங்களின் அதிபதி (இறைவன்) எங்களின் நல்லறத்தைப் பார்த்து மகிழ்வான். மறுமையில் நிலையான, முடிவே இல்லாத வாழ்வில் எங்களுக்கு இதற்கான நற்கூலி கிடைக்கும்’ என்று கனிவோடு விளக்கினார் மௌலானா.

நாராயண் லவாதே கண் கலங்கிவிட்டார். இராவதி அம்மையாரின் கன்னங்களிலோ கண்ணீர் வழிந்தோடியது.

நாராயண் சொன்னார். 'குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதிய பிறகு நிறைய பேர் சந்திக்க வந்தார்கள். எவருமே உங்களைப் போல வாழ்வின் முக்கியத்துவத்தை விளக்கிச் சொல்லவோ புரிய வைக்கவோ முயலவில்லை. ஏன் தற்கொலை செய்துகொள்ள விரும்புகின்றீர்கள் என விசாரிப்பார்கள். போய் விடுவார்கள். உங்களுடைய விளக்கம் என்னுடைய மனத்தில் தெளிவையும் வாழ வேண்டும் என்கிற உறுதியையும் தந்திருக்கின்றது. இனி நான் உயிருள்ளவரையில் முழுமையாக வாழ்வேன். தற்கொலை செய்துகொள்ள மாட்டேன்’ எனத் தீர்க்கமாகச் சொன்னார்.

இந்த முறை அவரைச் சந்திக்க வந்தவர்களின் கண்கள் பனித்தன.

நாராயண் லவாதே அவர்களுக்கு குர்ஆனின் மராட்டிய மொழிபெயர்ப்பும் பரலோகக் ஜீவன் (மறுமை வாழ்வு) என்கிற நூலும் இன்னும் பல புத்தகங்களும் பழங்களும் அன்பளிப்பாகத் தரப்பட்டன.

நெஞ்சங்களை நெகிழச் செய்த இந்தச் சந்திப்பின் போது மகாராஷ்டிர ஜமாஅத்தின் மக்கள் தொடர்புச் செயலாளர் அப்துல் ஹஃபீஸ் ஃபாரூக்கி, மஹ்ஹர் ஃபாரூக்கி ஆகியோரும் உடன் இருந்தார்கள்.


எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

1 comment:

Dr.Anburaj said...


Really a yeoman service.congratulations.

But what is the use of presenting Books which teaches Arabian Imperialism in India ?

This is another version of Love- help- jihad.Is it ?