என் இடப்புறம் அமர்ந்துள்ளது பக்தியார் அலிஷா. இவர் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைந்த திப்பு சுல்தான் அவர்களிம் பத்தாம் தலைமுறைப் பேரர். நேற்று திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெற்ற முப்பெரு விழாவின் இறுதி அமர்வு.
பக்தியார் அலிஷா தற்போது கொல்கத்தாவில் வழக்குரைஞராகப் பணியாற்றுகிறார். நல்ல ஆங்கிலம் பேசுகிறார். திப்பு சுல்தானின் பேரர் எனச் சொன்னவுடன் மேடையில் பலரும் ஏறி அவருடன் புகைபடம் எடுத்துக்கொள்ளத் தலைப் பட்டனர். கூட்டம் நடத்துபவர்கள் வேண்டிக் கொண்டும் யாரும் படம் எடுப்பதை நிறுத்தவில்லை. அவருக்குக் கூச்சம். கிரீடம்போலத் தலையில் அவருக்கு வைக்கபட்ட முண்டாசைக் கழற்றி மடியில் வைத்துக் கொண்டார்.
சற்று கூட்டம் கலைந்தவுடன் மிக்க கூச்சத்தோடு, "எங்கள் ஊரில் இப்படியெல்லாம் என்னை யாரும் கொண்டாடியது, பாராட்டியது கிடையாது. எனக்கு மிகவும் கூச்சமாக உள்ளது. நான் அந்தப் பாரம்பரியத்தில் வந்தேன் என்பது தவிர இந்த நாட்டுக்கு ஏதும் செய்ததில்லை.." என்றார்.
"அப்படிச் சொல்லாதீர்கள். உங்கள் முப்பாட்டன் எடுத்த போராட்டத்திற்கும் தொடுத்த சமரிற்கும் ஏழேழு தலைமுறைக்கும் நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம். தமிழவர்கள் பாரம்பரியத்தைப் போற்றுபவர்கள். ஏனெனில் அவர்களுக்கு ஒரு புகழ்மிக்க பாரம்பரியம் உண்டு. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் "- என்றேன்.
எல்லோரையும் போல அவரும் நான் ஒரு இயற்பியல் பேராசிரியன் என்பதை அறிந்து வியந்தார்.
திப்பு பலவகைகளில் முக்கியமானவர். மிகவும் primitive ஆன ஏவுகணைகளைத் தயாரித்துத் தாக்கினார் என்பார்கள். ஆனால் அதையெல்லாம் விட அவர் அக்காலத்திலேயே பிரிட்டிஷ் காலனியத்திற்கு எதிராக பிரான்ஸ் உடன் இணைந்து ஒரு பன்னாட்டுக் கூட்டணியை உருவாக்க முயன்றது ஒரு வியக்கத்தக்க முயற்சி.
திப்புசுல்தான் வழித்தோன்றல்களில் சிலர் கொல்கத்தாவில் ரிக்ஷா ஓட்டுப் பிழைக்கிறார்கள் என்பது மேற்படி நிகழ்வில் அறிந்து மனதைப் பிசைந்த செய்தி..
பக்தியார் அவர்களுக்கு விழாவில் ஒரு லட்ச ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டது மனதை மகிழ்வித்த செய்தி. — Marx Anthonisamy உடன்.
1 comment:
திப்புசுல்தான் வழித்தோன்றல்களில் சிலர் கொல்கத்தாவில் ரிக்ஷா ஓட்டுப் பிழைக்கிறார்கள் என்பது மேற்படி நிகழ்வில் அறிந்து மனதைப் பிசைந்த செய்தி..
-----------------------------------------------------------------------------
இந்தியாவில் எத்தனை ரிக்ஷா ஓட்டும் தொழிலாளா்கள் இருக்கின்றார்கள் ? அதில் திப்புசுல்தானின் வழித் தோன்றல்கள் இருந்தால் என்ன தவறு ? இயல்பானதுதானே ? இந்தியாவை ஆண்ட அரசர்களின் வாரிசுகளை யாரும் கணக்கில் கொள்வதில்லை.அதற்கு அவசியமும் இல்லை. அவனவன் உழைத்து வாழத்தான் வேண்டும். அப்பன் பாட்டன் முப்பாட்டன் ஓட்டன் என்று பரம்பரை பேசி ஒசிச் சோறு திங்க யாரும் முயலக் கூடாது.சோழ சேர பாண்டிய பல்லவ விஜய நகர சாளுக்கிய ......இப்படி ஆண்டவர்களின் வாரிசு யார் என்று யாருக்கு தெரியும்.முஸ்லீமாக இருப்பதால் சுவனப்பிரியன் உள்ளம் சற்று உருகுகின்றதோ ?
Post a Comment