மூன்று விதவைப் பெண்கள்..!
மூவருமே நம்ம நாட்டில் பிறந்தவர்கள்தாம். மூவரின் முன்னோர்களும் நம்மைப் போன்றே இதே மண்ணின் மைந்தர்கள்தாம். மூவருமே நம்மைப் போன்றே இரத்தமும் சதையும் கொண்டவர்கள்தாம். மூவருமே குடியரசு நாளிலும் சுதந்திர தினத்திலும் கொடியைச் சட்டையில் குத்தி சாக்லேட் சாப்பிட்டு மகிழ்ச்சியோடு திரிந்த பள்ளிப் பருவத்தைக் கடந்து வந்தவர்கள்தாம்.
முதலாமவர் தப்ரேசின் மனைவி. இரண்டாமவர் நயீமின் மனைவி. மூன்றாமவர் ஹலீமின் மனைவி.
மூவருமே ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தாம். மூவரின் கணவன்மார்களும் வெறிபிடித்த கும்பலால் அடித்தே கொல்லப்பட்டார்கள்.
நயிமீன் மனைவிக்கும் ஹலீமின் மனைவிக்கும் நீதி கிடைத்திருக்குமேயானால் இன்று தப்ரேசின் மனைவி தப்ரேசுடன் இருந்திருப்பார்.
இது இந்து-முஸ்லிம் பிரச்னை அல்ல. இது நாட்டையே, பண்பாட்டையே அரித்தழித்துவிடுகின்ற புற்றுநோய்.
Civilisations die from suicide, not by murder - பண்பாடுகள் கொல்லப்படுவதால் மரணிப்பதில்லை; தற்கொலை செய்துகொள்வதால்தான் மாண்டு போகின்றன என்றார் பண்பாட்டு ஆய்வாளர் ஆர்னால்ட் டாய்ன்பீ.
பண்பாடுகளின் தற்கொலைகளுக்குத் தொடக்கப் புள்ளிகளாய் இருப்பது சட்டத்தின் ஆட்சி ஆட்டங்காண்பதும், வன்முறையும்தாம்.
தடியெடுத்தவன் தண்டல்காரன் என்கிற நிலைமை வலுப்பெறுவது நம் நாட்டை பலவீனப்படுத்துமே தவிர வல்லரசாய் ஆக்காது என்பதை மறந்துவிடக் கூடாது.
நீதி மறுக்கப்படுகின்ற, நீதி தாமதப்படுத்தப்படுகின்ற அவலம் முடிவு பெறுவது எப்போது?
வாய் திறவாமல் சடலங்களின் எண்ணிக்கையை சரி பார்த்துக் கொண்டிருக்கின்ற கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைப்பது எப்போது?
குறிப்பாக இந்து சகோதர, சகோதரிகள் பொங்கி எழுவது எப்போது?
Courtesy : Nadeem Khan
No comments:
Post a Comment