சோகங்களிலெல்லாம் பெரிய சோகம் சொந்த மண்ணை விட்டு பிரியும் சோகம் என்பார்கள்.
சமீபத்தில் இலங்கை அரசாங்கத்தால் மீள் குடியமர்த்தப்பட்ட மாவிட்டாபுர மக்கள் தங்கள் கிராமங்களை பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டனர். 30 வருடங்களுக்கு முன்பு அங்கு மனிதர்கள் வசித்தார்கள் என்ற அரவமே இல்லாமல் எங்கும் புதர் மண்டிக் கிடந்திருக்கிறது. தாங்கள் வாழ்ந்த வீடுகளை உரியவர்களால் அடையாளமே கண்டு கொள்ள முடியவில்லை. அந்த இடங்களை பார்க்கும் நமக்கே மனதில் வலி எடுக்கும் போது அந்த வீடுகளின் உரிமையாளர்கள் படும் பாட்டை விவரிக்க வார்த்தை இல்லை.
வன்முறையின் மூலம் எதை சாதித்தார்கள்? நமது தமிழ் சமூகத்தை 50 வருடம் பின்னோக்கி தள்ளியதைத் தவிர வேறு ஒன்றையும் சாதிக்கவில்லை. சிங்கள அரக்கர்களும், விடுதலைப் புலிகளும் மாறி மாறி இந்த மக்களை பகடைக் காய்களாக உருட்டி விளையாடியதுதான் மிச்சம். இன்றும் கூட இந்திய இலங்கை அரசுகளின் ஒத்துழைப்போடு சமரச தீர்வை எட்டாமல் தனி ஈழம் என்ற ஒன்றை நோக்கி பலர் வெளி நாடுகளில் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். தனி அரசாங்கமே நடத்திய விடுதலைப் புலிகளாலேயே முடியாத ஒன்றை புலம் பெயர்ந்த தமிழர்கள் கொண்டு வந்து விட முடியுமா? திரும்பவும் ஆயுதம, கண்ணி வெடி, கொலைகள் என்றால் அந்த மக்களால் இனியும் தாங்க முடியாது.
யாழ்ப்பாணத்தில் இளம் பெண்கள் தற்கொலைகள் அதிகரித்திருப்பதாக செய்திகள் வருகின்றன. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து இன்று ஆர்ப்பாட்டமும் நடந்துள்ளது. மேற்கத்திய கலாசாரம் அதிகமாக தலைதூக்குவதாகவும் பதிவுகளில் பார்க்கிறோம். சிறந்த தலைவர்களை எல்லாம் முன்பே கொன்று விட்டதால் இன்று ஒன்று பட்ட தலைமை இல்லாமல் தமிழினம் சிக்கலான சூழலில் உள்ளது. இந்த மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்ய வேண்டும்.
பொருளாதாரம் மேம்பட இலங்கையோடு உள்ள தொடர்பை இன்னும் இந்தியா அதிகப்படுத்த வேண்டும். தற்போது இலங்கைக்கு கப்பல் சேவை ஆரம்பித்திருப்பது சிறந்த முயற்சி. இந்தியா அளித்த பல மில்லியன் உதவிகளில் வன்னிப் பகுதியில் தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரிய விடயம்.(அட... நிரூபனின் பதிவுகளை அடிக்கடி படிப்பதால் எனது பேச்சில் கூட சில நேரம் இலங்கை தமிழ் வந்து விடுகிறது.) :-)
'கப்பல் போக்குவரத்தை உடன் நிறுத்த வேண்டும்: இல்லை என்றால் தூக்கில் தொங்குவேன்' என்று காமெடி பண்ணிக் கொண்டிருக்கும் கூத்தாடி சீமானின் கலாட்டா வேறு இடையிடையே சிக்கலை மேலும் இடியப்ப சிக்கலாக்குகிறது. அங்கு அமைதி திரும்புவதை இவர்களைப் போன்றவர்கள் விரும்புவதில்லையோ என்னவோ! கப்பல் போக்குவரத்து தொடர்ந்தால் வணிகமும் பெருகும். சுற்றுலாத் துறையும் மேம்படும். கப்பல் போக்குவரத்தால் அதிகம் பலனடைவது தமிழர்களே! இதைக் கூட எதற்கு தடுக்க வேண்டும் என்பது புரியாத புதிர்.
ஒரு இலங்கை நண்பர் என்னிடம் சொன்னார் யுத்தத்தின் கடைசி காலங்களில் விடுதலைப்புலிகள் மிகப் பெரும் செல்வங்களை ஒரு சில தமிழக அரசியல்வாதிகளிடம் கொடுத்தனர். அந்த பணம் அப்படியே அமுக்கப்பட்டு விட்டது. முறைப்படி விசாரித்தால் அந்த பணங்களைக் கொண்டே பல தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்று சொன்னார். இந்த செய்தி உண்மையானால் சீமான் போன்றவர்கள் அந்த அரசியல் தலைவர்களைத் தொடர்பு கொண்டு அந்த செல்வத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க முயற்சி எடுக்கலாம். போர்க் குற்றங்கள் ராஜபக்ஷே செய்தாரென்றால் சட்டத்தின் முன் அவரை கொண்டு வர என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள். மேலும் தப்பியோடிய பல தமிழர்களை நம்மவர்களே சுட்டுக் கொன்றதை எந்த கோர்ட்டில் வைத்து விசாரிக்கப் போகிறீர்கள்? இப்போது நமக்கு முன்னால் உள்ள மிகப் பெரிய பிரச்னை அநாதரவாக நிற்கும் அந்த அப்பாவி பொதுமக்கள்தான்.
அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்: ஆர்வ மிகுதியால் அவர்களுக்கு உபத்திரவம் கொடுக்காதீர்கள்.
இந்த காணொளியைப் பார்க்கும் போது நானும் 25, 28 வருடங்கள் பின்னோக்கி சென்றேன். படிக்கும் காலங்களில் வீட்டில் எனது முக்கியமான பொழுது போக்கு இலங்கை வானொலிதான். கே.எஸ்.ராஜா, பி.எச்.அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம், புவனலோஜினி துரை ராஜ சிங்கம், போன்றவர்களின் அழகு தமிழ் இன்றும் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் கே.எஸ்.ராஜாவுடைய தமிழ் அலாதியானது. ஆனால் இப்போது உயிருடன் இல்லை. கொன்று விட்டார்கள். எனது பாட்டி எட்டு மணியாகி விட்டால் என்னிடம் உள்ள ரேடியோவை பிடுங்கிக் கொள்வார். ஏனெனில் 8 லிருந்து 9 வரை முஸ்லிம் நிகழ்ச்சி நடைபெறும். அதைக் கேட்பதற்காக. எனது பாட்டியையும் கவர்ந்தது இலங்கை வானொலி என்றால் அது மிகையாகாது.
எனது தாத்தா இலங்கையில் முன்பு பண்ணிய வியாபாரத்தை நினைவு கூர்ந்து எப்போதாவது அசை போட்டு பழங் கதைகளை சொல்லிக் கொண்டிருப்பார். சிங்கள் அரசும் விடுதலைப புலிகளும் அழகிய நாட்டை துவம்சம் செய்து விட்டார்கள் என்று சில நேரங்களில் கோபப்படுவார்.
சில நேரங்களில் இலங்கை வழியாக எனது பயணம் இருக்கும் போது மேலிருந்து வனப்பான காடுகளை பரவசத்துடன் பார்ப்பேன். சலனமற்று உறங்கிக் கொண்டிருக்கும் அந்த வன்னி காடுகளுக்குள் தான் எத்தனை எத்தனை சோகங்கள்!
வருங்காலங்கலாவது அமைதியான வாழ்வு அவர்களுக்கு கிடைக்க எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறையை இறைஞ்சுகிறேன்.
6 comments:
அன்புள்ள சுகவனப்பிரியன்,
உங்களின் எழுத்து மிக மேலோட்டமானது. மிகவும் சிக்கலான பிரச்சினையை மேலிருந்து பார்துவிட்டு எழுதுவதை நிறுத்துங்கள். ஆம் வானத்தில் இருந்து வன்னிக்காட்டை பார்ப்பது போல் ஈழத்தமிழர் பிரச்சினையை எழுதுகிறீர்கள். இதில் ஸ்ரீலங்கா அரசும் புலிகளும் நாட்டை நாசம் பண்னி விட்டார்கள் என கோபம் வேறு. ஏன் இந்தியாவின் ஆட்டங்களை விட்டுவிட்டீர்கள்?
எவ்வளவோ விடயங்கள் சொல்கிறீர்கள் உங்கள் அபிமான கே.எஸ் ராஜாவை கொன்றுவிட்டார்கள் என பொதுவாக சொல்ல்லித் தப்பிக்கிறீர்கள்.
நல்லது உங்கள் இலங்கை நண்பன் சொன்னாரல்லவா விடுதலைப்புலிகளின் பணம் பற்றி அவரே சொல்லலாமே யார் யார் என. இதில் தீர விசாரித்தால் தெரியுமாம், சொல்கிறார் நீங்கள் கேட்டு எழுதுகிறீர்கள். இந்த வகைக்கதையெல்லாம் வழமையான புலிக்காய்ச்சல் கோஷ்டியிடம் இருந்து வரும். போகிறபோக்கில் அள்ளித்தெளித்து விட்டு போவார்கள். ஆதாரம் கெரெட்டால் அறியக்கிடகிறது, மக்கள் பரவலாகப் பேசிக்கொள்கிறார்கள் எனப்பதில் வரும்.
நீங்கள் நியாயமானவராக இருந்தால் எந்த அரசியல் வாதிகளிடம் கொடுத்தார்கள் என அறிந்து எழுதுங்கள் அவர்களின் முகமூடி கிழியட்டும். செய்வீர்களா?
அன்புள்ள அனானி!
//நீங்கள் நியாயமானவராக இருந்தால் எந்த அரசியல் வாதிகளிடம் கொடுத்தார்கள் என அறிந்து எழுதுங்கள் அவர்களின் முகமூடி கிழியட்டும். செய்வீர்களா?//
நான் முன்பே இது ஒரு செவி வழிச் செய்தி என்று சொல்லியுள்ளேன். அதனால்தான் பெயர்களைக் குறிப்பிடவில்லை. இது உண்மையாகவும் இருக்கலாம். அல்லது பொய்யான தகவலாகவும் இருக்கலாம். இதைப் பற்றி மேலதிக விபரம் தெரிந்தவர்கள்தான் விளக்க வேண்டும்.
// ஏன் இந்தியாவின் ஆட்டங்களை விட்டுவிட்டீர்கள்? //
ராஜீவ் காந்தியால் சமரச திட்டத்துக்கு அனுப்பப் பட்ட இந்திய ராணுவத்தை நமக்கு ஆதரவாக செயல்பட வேண்டியவர்களை சிங்கள் அரசுக்கு சாதகமாக மாற்றியது யார்? அன்றே பிரச்னை முடிந்து சுமூக நிலை வர வேண்டியதை ராஜீவ் காந்தியின் படுகொலை மூலம் பாழ்படுத்தியது யார்? விபரம் உங்களுக்கு தெரியுமே!
”...நான் முன்பே இது ஒரு செவி வழிச் செய்தி என்று சொல்லியுள்ளேன். அதனால்தான் பெயர்களைக் குறிப்பிடவில்லை. ...”
ஆஹா...ஆஹா நல்ல பதில். செவிவழிச்செய்திகள் பலவற்ரை என்னாலும் சொல்ல முடியும். போகிறபோக்கில் கொழுத்திப்போடுவது என நம் ஊரில் சொல்வார்கள்! முக்கியமான பிரச்சினை இது இதில் செவிவழிச்செய்தியைபோட்டு இன்னும் குழப்புகிறீர்கள்!
“.... ராஜீவ் காந்தியின் படுகொலை மூலம் பாழ்படுத்தியது யார்? விபரம் உங்களுக்கு தெரியுமே!...”
இதைப்பற்றிப் பல செவிவழிச்செய்திகள் உள்ளன. அதில் ஒன்று இந்திய ராணுவதால் கற்பழிக்கப்பட்ட பெண் பற்றியது. நம்புகிறீர்களா? இந்திய ராணுவம் வந்து சமாதானமாக சாதகமான தீர்வு தருமா? என்ன ஜோக் அடிக்கிறீர்களா? திம்புப் பேச்சுவார்த்தைகளின் போது ரொமேஷ் பண்டாரி சொன்ன வார்த்தைகள் நினைவுண்டா? இது செவிவழிச்செய்தி அல்ல உறுதிப்படுத்தப்பட்டது! கேளுங்கள் புளொட் சித்தார்த்தனிடம்.
இதெல்லாம் வன்னிக்குமேலால் பிளேனில் போய் பார்த்த கதை அல்ல!
சிறந்த ஒரு பதிவை தந்துள்ளீர்கள் நண்பரே.
வன்முறையின் மூலம் எதை சாதித்தார்கள்? நியாயமான கேள்வி கேட்டு யதார்த்தத்தை பதிலாக தந்துள்ளீர்கள்.
நமது தமிழ் சமூகத்தை 50 வருடம் பின்னோக்கி தள்ளியதைத் தவிர வேறு ஒன்றையும் சாதிக்கவில்லை.
உங்கள் நண்பர் சொன்னது போல் புலிகளின் செல்வங்களில் (மக்களிடம் வறுகிய பணம்) ஒரு பகுதி சில தமிழக அரசியல்வாதிகளிடம் இருக்கலாம்.புலிகளின் பல மில்லியன் டொலர்கள் புலிக்காக வெளி நாடுகளில் இயங்கியவர்களால் பதுக்கபட்டுவிட்டன. வெளிநாடுகளில் இருந்து கொண்டு போர் முழக்கம் செய்பவர்கள் இந்த பணத்தை பற்றி கதைப்பதே இல்லை.இந்த பணம் உரிவர்களிடம் திருப்பி கொடுக்கபட வேண்டும்,அல்லது யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தபட வேண்டும்.
மிக நன்றாய் சொன்னீர்கள்.
-உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்
உபத்திரவம் கொடுக்காதீர்கள்-
இலங்கை அப்பாவி தமிழர்கள் மீதுள்ள அன்புக்கு நன்றி.
சகோ. பலீனோ!
//சிறந்த ஒரு பதிவை தந்துள்ளீர்கள் நண்பரே. //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே!
அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல அருமையான நடுநிலை அரசியல் பார்வை
Post a Comment