Followers

Monday, June 06, 2011

அரபு மொழிக்கு புதிய இலக்கணம் தந்த இந்தியர்!


அரபு மொழி பேசாத அன்னிய நாட்டவர் சரளமாக அரபியை இலக்கணத்துடன் கற்க புதிய முறையை கண்டுபிடித்துள்ளார் கே.எம் முகம்மது என்ற கேரள நாட்டவர். கிங் சவுத் பல்கலைக் கழகத்தில் 40 வருடமாக அரபு மொழியை அரபியை தாய் மொழியாக கொள்ளாதவர்களுக்கு பயிற்றுவித்து வருகிறார். தாய் மொழியில் ஒரு மொழியை கற்பதற்கும் அன்னிய பாஷையில் வேறொரு மொழியை கற்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

இந்த அரபு மொழியை கற்பதில் முஸ்லிம்கள் சிறு வயது முதலே ஆர்வமுடன் இருப்பார்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதலில் 6லிருந்து 7 மணி வரை மத்ரஸாவுக்கு சென்று குர்ஆனை ஓத பயிற்சி எடுப்பார்கள். ஆனால் அதன் அர்த்தம் விளங்காது. நானும் சிறு வயதில் மத்ரஸாவில் இது போல் கற்ற அரபிதான் பின்னாலில் இங்கு சவுதியில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

ஆனால் இந்த மத்ரஸா கல்வி ஒன்றே குர்ஆனை விளங்கிட போதுமானதாக இருக்காது. தற்போது தமிழிலும் உலகின் அனைத்து மொழிகளிலும் குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டு விட்டது. மற்ற வேதங்களை போல் அதன் விரிவுரைக்கு பண்டிதர்கள் தேவையில்லை. ஒரு மொழியை சாதாரணமாக விளங்க தெரிந்த அனைவரும் குர்ஆனை மிக எளிதாக விளங்கிக் கொள்ளலாம். அந்த அளவு இலகுவாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணமே இறைவன் குர்ஆனை அருளியிருக்கிறான்.

அதே சமயம் குர்ஆனின் மொழி நடை. இலக்கிய செறிவு. அதன் உயர்ந்த நடை. உயர்ந்த நடையில் இருந்தாலும் பாமரனும் விளங்கிக் கொள்ளும் வகையில் எளிமையாக சொல்லப்பட்ட விதம் என்ற பல சிறப்புகளையும் நாம் அரபி மொழி இலக்கணத்தடன் கற்பதன் மூலமே பெற முடியும். அரபுகளுக்கு அவர்களின் தாய் மொழி என்பதால் குர்ஆனின் மொழியை வெகு இலகுவாக கற்று விடுவார்கள். அரபு அல்லாதவர்களுக்கு இந்த மொழியை வெகு இலகுவாக கொண்டு செல்லும் பணியை இந்தியரான திரு முஹம்மது செய்துள்ளார்.

'1997 ல் இது போன்ற ஒரு பாடத் திட்டத்தை அஸ்ஸாம் பல்கலைக் கழகத்தில் தொடங்கினோம். பிறகு கோழிக்கோடு மஹாத்மா காந்தி பல்கலைக் கழகம், கேரளா பல்கலைக் கழகம் போன்றவற்றிலும் இப்பாடங்களை அறிமுகப்படுத்தினோம். முஸ்லிம் அல்லாத லினா என்ற பெயர் கொண்டவர் ஒரு வாரத்தில் சில சிறிய வார்த்தைகளைப் போட்டு அரபு மொழியை சுமாராக பேசவும் ஆரம்பித்து விட்டார்.' என்று அரப் நியுஸூக்கு அளித்த பேட்டியில் திரு கே. எம். முஹம்மது கூறினார்.

திரு முஹம்மது 2005 ஆம் ஆண்டு இந்திய ஜனாதிபதியிடமிருந்து சிறப்பாக அரபி மொழி கற்பித்ததற்கான சான்றிதழையும் பெற்றுள்ளார். கோழிக்கோடு, அஸ்ஸாம், மற்றும் கல்கத்தா பல்கலைக் கழகங்களில் மொழித் துறைக்கு தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1976 ஆம் ஆண்டு அலிகர் பல்கலைக் கழகத்திலிருந்து பிஹெச்டி பட்டமும் பெற்றுள்ளார். இவரது கண்டுபிடிப்பு அரபு இலக்கியத்தினை மேலும் மெருகூட்டும் என்று வாழ்த்துவோம். அரபு மொழியை செம்மைப் படுத்தியதில் ஒரு இந்தியருக்கும் பங்குண்டு என்பதில் இந்தியர்களான நமக்கும் பெருமைதானே!


41:3
.
அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது.

மொழி வெறி நமக்கு தேவைதானா?

கேள்வி: நான் 3 வருடம் முன்பு திருமணம் முடித்தேன். நான் தமிழ் முஸ்லிம். என் மனைவி உருது முஸ்லிம். நான் தற்போது சவூதியில் உள்ளேன். எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. என் குழந்தையிடம் நான் தமிழில் பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் என் மனைவி என் குழந்தைக்கு உருது மொழியை கற்றுக் கொடுத்து வருவதால், என் குழந்தை தமிழில் பேசுவதை தவிர்த்து வருகிறாள். என் குடும்பத்தார் என் குழந்தையிடம் தமிழில் பேசலாம் என்று ஆசைப்பட்டு பேசினால், என் மனைவி அதைத் தடுக்கிறாள். நீங்கள் உருது மொழியில்தான் குழந்தையிடம் பேச வேண்டும் என்று கூறுகிறாள். எனக்கு என் குழந்தை இரண்டு மொழிகளிலும் பேச வேண்டும் என்று ஆசை. ஆனால் என் மனைவி தமிழ் மொழி கூடாது, உருது மொழியில்தான் குழந்தை பேச வேண்டும் என்று தமிழ் மொழியை மறுக்கிறாள். இதனால் எங்களுக்கிடையே சண்டை முற்றி வருகிறது. இந்த மொழி பிரச்னை தீர ஒரு நல்ல ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-
வாசகர்

வழக்கறிஞரின் பதில்: உலகத்தில் உள்ள எந்த மொழியும் மற்ற மொழியை விட உயர்வானதோ அல்லது தாழ்வானதோ இல்லை. எல்லாம் சமம்தான். ஆனால் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றிருந்தால் அது அந்த நபருக்கு பல வகைகளில் உதவியாக இருக்கும்.

நீங்கள் தமிழ்நாட்டில் வாழ்வதால் உங்கள் வீட்டில் நீங்கள் எந்த மொழியில் பேசினாலும் உங்கள் குழந்தை தமிழ் மொழியை நிச்சயம் கற்றுக் கொள்ளும். உங்கள் குழந்தை உருது மொழியையும் கூடுதலாக கற்றுக் கொள்வது அதற்கு எதிர்காலத்தில் உதவியாக இருக்கும்.

ஆனால் இதனை வைத்து நீங்கள் உங்கள் குடும்பத்தில் பிரச்னையை உருவாக்க நினைக்க வேண்டாம். நீங்களும் உங்கள் மனைவியும் குழந்தையின் நலன் கருதித்தான் மொழி விஷயத்தில் சண்டையிடுகிறீர்கள் என்பது உங்கள் கேள்வியிலிருந்து நன்கு புரிகிறது.

உங்கள் சண்டையானது குழந்தையின் மன வளர்ச்சியை பாதித்து விடக் கூடாது. நிதானமாக நடந்து கொள்ளுங்கள். இதில் நீதி மன்றம் தலையிடுவதற்கு ஏதுமில்லை.

-
நன்றி உணர்வு வார இதழ்.

இது ஒரு புறம் இருக்க நான் மொழி சம்பந்தமாக முன்பு இட்ட பதிவை மேலதிக விபரமாக மீள் பதிவு செய்கிறேன்.

மொழி வெறி நமக்கு தேவைதானா?

'
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.' - குர்ஆன் 30 :22

மேற்கண்ட வசனத்தின் மூலம் மொழிகள் வேறுபட்டிருப்பதையும், மனிதனின் நிறங்கள் வேறுபட்டிருப்பதையும் தன்னுடைய அத்தாட்சிகளில் ஒன்றாக இறைவன் கூறுகிறான். இதன் மூலம் நிறங்களை வைத்து மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை கற்பிப்பதும், மொழிகளை வைத்து ஏற்றத் தாழ்வு கற்ப்பிப்பதும் கூடாது என்பது விளங்குகிறது.

குர்ஆன் அரபி மொழியில் இருக்கிறது. எனவே அது தேவ பாஷை என்ற அந்தஸ்த்தைப் பெறுமா? கண்டிப்பாக இல்லை. முகமது நபி அரபுகள் மத்தியில் தோன்றுகிறார். அவருக்கு தெரிந்த ஒரே மொழி அரபு மட்டுமே! எனவே குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. முகமது நபி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் குர்ஆன் தமிழ் மொழியிலேயே அருளப் பட்டிருக்கும்.உலக மக்களுக்கு இறை செய்தியை சொல்லுவதற்கு உலக வழக்கில் உள்ள ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தாக வேண்டும்.

உதாரணத்துக்கு நமது தேசிய கீதத்தை எடுத்துக் கொள்வோம். ஜன கன மன என்றவுடன் ஒரு வித மரியாதையில் எழுந்து நின்று நாட்டுப் பற்றை எடுத்துக் காட்ட மரியாதை செய்கிறோம். இதனால் வங்காள மொழி சிறந்தது என்றாகி விடுமா? பல மொழிகள் பேசும் நம் நாட்டில், ஏதோ ஒரு மொழியில் தேசிய கீதம் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறோம். அதே போல் இறைவனின் கட்டளைகளை சொல்வதற்கு கடைசியாக பயன் படுத்தப் பட்டது அரபி மொழி. எனவே தான் குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. இதனால் அரபு மோழி மற்ற மொழிகளையெல்லாம் விட சிறந்த மொழி என்று நினைப்தே இஸ்லாத்துக்கு மாற்றமானது.

பள்ளிவாசல்களில் தொழுகைக்கான அழைப்பு ஏன் தமிழில் கொடுப்பதில்லை?

ஒவ்வொரு நாளும் அரபு மொழியில் 'அல்லாஹீ அக்பர்'(இறைவனே பெரியவன்) என்று அரபியில் 'அதான்' அழைப்பு விடப் படுவதை நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். இதை ஏன் தமிழில் மொழி பெயர்த்து சொல்லக் கூடாது? என்று கேட்பதும் நியாயமாகத்தான் படுகிறது. முதலில் இஸ்லாம் என்பது உலகம் தழுவிய மார்க்கம் எனபதை நாம் அறிவோம்.ஆப்ரிக்காவிலிருந்து ஒரு முஸ்லிம் தமிழகத்தை சுற்றிப் பார்க்க வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். தொழுகை நேரம் வந்தவுடன் பள்ளிவாசலில் இருந்து வரும் அழைப்போசையைக் கேட்டவுடன் 'இங்கு ஒரு பள்ளிவாசல் இருக்கிறது' என்று தொழுக சென்று விடுவார்.உலக நாடுகளில் அது கம்யூனிஷ நாடாகட்டும், அல்லது சோஷலிஷ நாடாகட்டும் எங்கு சென்றாலும் நீங்கள் கேட்கும் ஒரே ஒலி இந்த பாங்கோசைதான். இதுவும் நமது தேசிய கீதம் போல் உலக ஒருமைப் பாட்டிற்க்குத் தானே யொழிய அரபி மொழி சிறந்த மொழி என்பதற்காக அல்ல.

முஸ்லிம்கள் அரபியில் மட்டுமே தங்கள் பெயர்களை வைக்கிறார்களே ஏன்?

இஸ்லாத்தில் அரபியில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. சாந்தி, அன்பு, அறிவழகன், முத்து போன்ற அழகிய பெயர்களை முஸ்லிம்கள் தங்களுக்கு வைத்துக் கொள்ள தடையேதும் இல்லை. ஆனால் முருகன், ராமன், கணபதி என்று உருவம் வைத்து வணங்கும் தெய்வங்களின் பெயர்களை வைக்க இஸ்லாம் தடை செய்கிறது.

உதாரணத்திற்கு குமார் என்ற நண்பர் பழைய பெயரிலேயே முஸ்லிம் ஆகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரை முதலில் சந்திப்பவர்கள் 'குமார் சௌகரியமா?' என்று விசாரித்தவுடன் மனதுக்குள் இவர் செட்டியாரா, கவுண்டரா, தேவரா, நாடாரா, தலித்தா, பிராமணரா? என்ற எண்ணம் ஓடும். சாதி நம் சமூகத்தில் அந்த அளவு புரையோடிப் போய் இருக்கிறது. அதே குமார் தனது பெயரை ரஹீம் என்று மாற்றி விட்டால் ஒரு நொடியில் சாதி எங்கோ சென்று விடுகிறது. எனவே தான் நமது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அரபியிலேயே பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள்.

இப்றாகிம், மூஸா போன்ற பெயர்கள் அரபு பெயர்கள் அல்ல. இதை இன்றும் முஸ்லிம்கள் வைப்பதன் மூலம் அரபி அல்லாத பெயர்களை வைப்பதற்கு தடை இல்லை என்று அறியலாம். அரபியில் வைக்கும் பெயர்களில் கூட முஸ்லிம்களில் சிலர் பொருள் புரியாமல் வைத்து விடுகிறார்கள். அப்துல் முனாப், அப்துல் முத்தலிப், அப்துல் முகமது போன்ற பெயர்கள் வைப்பதற்கு இஸ்லாத்தில் தடை உள்ளது.
முனாப், முத்தலீப் போன்றவை அன்றைய அரபிகள் வணங்கி வந்த தெய்வங்களின் பெயர்கள். அப்துல் முனாப் என்றால் முனாபின் அடிமை என்று தமிழில் பொருள் வரும். 'அப்துல் முகமது' என்றால் முகமதின் அடிமை என்று பொருள் வரும் முகமது நபி இறைவனின் தூதர் தானே ஒழிய நாம் அவருக்கு அடிமைகள் அல்ல. அதே போல் அல்லாபிச்சை, மைதீன்பிச்சை என்று தன்னை இழிவு படுத்திக் கொள்வது போல் தோற்றமளிக்கும் பெயர்களையும் வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தன்னை இழிவுபடுத்தும்படி வைக்கும் பெயர்களை மாற்றிக் கொள்ளும் படி முகமது நபி கட்டளை இட்டுள்ளார்.

என்னோடு ஒன்றாக வேலை பார்க்கும் ஹைதராபாத்தியுடன் ஒரு முறை மொழி சம்பந்தமாக சர்ச்சை வந்தது. 'இந்துக்களின் மொழி தமிழ் மொழி. நாங்கள் பேசும் உருது மொழி இஸ்லாமியருக்கு சொந்தமான மொழி' என்று ஏதோ மிகப் பெரிய தத்துவத்தை உதிர்ப்பது போல் பேசினான்.

'
மூல மொழிகள் அனைத்துக்கும் தூதரையும் வேதங்களையும் அனுப்பியிருக்கிறேன் என்று குர்ஆனில் இறைவன் கூறுவது உனக்குத் தெரியுமா?' - சுவனப்பிரியன்

'
ஆமாம். நானும் படித்திருக்கிறேன்' - ஹைதராபாதி

'
உருது மொழி எப்போது உருவானது?' - சுவனப்பிரியன்.

'
மொகலாயர்கள் காலத்தில்' - ஹைதராபாதி

'
அப்படியானால் உருது மொழிக்கு வேதமோ தூதரோ வந்திருக்கிறார்களா?' -சுவனப்பிரியன்

'
அதெப்படி! முகமது நபிதான் கடைசி நபியாயிற்றே! அவருக்கு பிறகுநபி வர முடியாதே!' - ஹைதராபாதி

'
ஆதி மொழியான தமிழுக்கு வேதமும், தூதரும் இறைவனிடமிருந்து வந்திருக்கிறார்கள். உன் மொழியான உருதுக்கு அத்தகைய சிறப்பு ஏதும் இல்லை. அப்படியானால் நாம் இருவர் பேசும் தாய் மொழிகளில் யாருடைய மொழி சிறந்த மொழி?' - சுவனப்பிரியன்

இந்த கேள்விக்கு இன்று வரை அவனிடமிருந்து பதில் வரவில்லை. மொழிகளையும் நிறங்களையும் வைத்து உயர்வு தாழ்வு கற்ப்பிக்கும் மனப் பாங்கு என்று மாறுமோ தெரியவில்லை.

'
எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.' - குர்ஆன் 14 :4

மேலும் முகமது நபியின் காலத்துக்கு முன்பு அரபுகள் மொழி வெறியின் உச்சத்தில் இருந்தார்கள். அரபி மொழி அல்லாத வேறு மொழி பேசுவோர் அனைவரும் ஊமைகளைப் போன்றவர்கள் என்றனர்.அதாவது அவர்கள் நினைப்பில் மற்ற மொழிகளுக்கு எந்த பொருளும் கிடையாது என்று விளங்கி வைத்திருந்தனர். அந்த நேரத்தில் தான் முகமது நபி பின் வருமாறு பிரசிங்கித்தார்.

'
மக்களே! இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! அரபு மொழி பேசுபவன், அரபு மொழி பேசாதவனைவிட உயர்ந்தவன் இல்லை. அரபு மொழி பேசாதவன் அரபு மொழி பேசுபவனை விட சிறந்தவனும் இல்லை.வெள்ளை நிறத்தவன் கருப்பு நிறத்தவனை விட உயர்ந்தவன் இல்லை அவர்கள் செய்யும் நல்லறங்கள் தான் அவர்களை உயர்த்துகின்றன. இன்று முதல் குலப் பெருமையை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன்' என்று சொன்னார்.

மேற்கண்ட நபிமொழியின் மூலம் ஒரு மொழியை உயர்த்தியும் மற்றொரு மொழியை தாழ்த்தியும் வாதங்கள் புரிவது இஸ்லாம் தடுத்துள்ளது என்று அறிகிறோம். எனவே உலகில் உள்ள மொழிகள் அனைத்தையும் நேசிப்போம். அதன்மூலம் மனித நேயத்தையும் வளர்ப்போம்.

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்

சுவனப்பிரியன்

9 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் சகோ சுவனப்பிரியன்.
//அரபு மொழிக்கு புதிய இலக்கணம் தந்த இந்தியர்!//--அரிதான விஷயம். அறியப்பகிர்ந்தமைக்கு நன்றி.

அப்புறம் உருது பற்றி நீங்கள் சொன்ன விஷயம் நிறைய உள்குத்துக்கள் கொண்டவை.

suvanappiriyan said...

உங்கள் மீதும் சலாம் உண்டாகட்டும் சகோ.ஆஷிக்!

//அப்புறம் உருது பற்றி நீங்கள் சொன்ன விஷயம் நிறைய உள்குத்துக்கள் கொண்டவை.//

உலக மொழிகளில் மூல மொழிகள் அனைத்தும் இறைவன் மனிதர்களுக்கு அருளியவையே என்ற பரந்த எண்ணத்துக்கு வந்து விட்டால் என் மொழி உயர்ந்தது என்ற எண்ணம் விலகும். மொழிப் பற்று இருக்கலாம். மொழி வெறி இருக்கக் கூடாது என்பதையே சொல்ல வந்தேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

தேவ மொழி என்று சொல்லப்படும் சமஸ்கிரதத்தைப் பற்றி முன்பு நான் படித்த இடுகை ஒன்றையும் பதிக்கிறேன்.

சமஸ்கிருதம் வேதகால ஆரிய சடங்குகளை செய்யக் கூடியவர்களின் மொழியாகியது. ஆரிய வழிவந்த பூசாரிப் பிரிவுகள் சமூகத்தில் சிதைந்த போதும், சமுதாயத்தில் சுரண்டும் சமூக அமைப்பின் தேவையுடன் உருவான மதங்கள் ஆரிய பூசாரிகளுக்கு புத்துயிர் அளித்தது. தம் பூசாரித் தன்மையூடாக, தனிச்சலுகை பெற்றவராக மாறினர். இந்தியச் சமூக அமைப்பில் அவர்கள் ஒரு சலுகைக்குரிய சுரண்டும் வர்க்கமாக, தனிச் சலுகையுடன் நீடிக்கத் தொடங்கினர். தனிச்சொத்துரிமை அமைப்பில் தனது வர்க்க தனித்துவத்தை பேணவும், இதற்கு மூலமாக இருந்த மந்திரத்தை இரகசியமாக பேணவும் முனைந்தனர். தமது பழைய மொழியின் சிதைவில் இருந்தும், அவர்கள் சிதைந்து வாழ்ந்த புதிய மொழியில் இருந்தும் உருவாக்கிய ஒரு மந்திர மொழியான சமஸ்கிருதத்தை, பார்ப்பனர் சுரண்டி வாழ உதவியதால் அதை இரகசியமாக்கினர். அதை தமக்குள், தம் சாதிக்குள் தக்கவைத்தனர். இந்த மொழி தான் சமஸ்கிருதம்.
இதை அவர்கள் தமக்கும், கடவுளுக்கும் மட்டும் தெரிந்த ஒரு மொழியாகக் கூறிக்கொண்டனர். கடவுளுடன் நேரடியாக தொடர்புகொள்ளக் கூடியவர்களின் மொழியாக்கினர். இதை இரகசியமான மந்திர மொழியாகப் புனைந்தனர். இந்த மொழியைத் தெரிந்தவர்கள் மட்டும்தான், கடவுளுடன் பேச முடியும் என்ற நம்பிக்கையைக் கட்டமைத்தனர். மறுபக்கத்தில் தாம் அல்லாத மற்றவர்கள், இதைக் கற்பதைத் தடைசெய்தனர்.
இதன் மூலம் தனிச் சலுகையுடன், தாம் மட்டும், சுரண்டி வாழ இம்மொழி அவர்களுக்கு உதவியது. இன்றும் உதவுகின்றது.

இதனால் இது கடவுளின் மொழியாக, இது ஒரு குறித்த சாதியின் இரகசியமான பிழைப்பு மொழியாகியது. இந்த மொழி மேலான பரம்பரை உரிமையும், தொழில் சார்ந்த இரகசியமும் தான், வருண அமைப்பின் ஊடாக சாதி வடிவில் இறுகியது.

இதனால் இது பரந்துபட்ட மக்களின் பொது மொழியாக என்றும் மாற முடியவில்லை. இது கீழ் இருந்து உருவாகவில்லை. மேல் இருந்தவர்களின் தேவைக்கு ஏற்ப உருவானது. இதனால் இதைக் கொண்டு சுரண்டி வாழ்ந்த பார்ப்பன பூசாரிகள், இதை மற்றவர்கள் கற்பதை அனுமதிக்கவில்லை. சமஸ்கிருத மொழியிலான பார்ப்பனிய இலக்கியங்கள் உருவான காலத்தின் பின் கூட, எத்தனையோ மொழிகள் சமுதாயத்தில் உருவாகின. அவை வளர்ச்சியுற்றன. ஆனால் உயர் சுரண்டும் வர்க்கத்தில் ஆதிக்கம் பெற்றிருந்த, செல்வாக்கு பெற்றிருந்த இந்த சமஸ்கிருத மொழி மட்டும், சமுதாய மொழியாக மாற பார்ப்பனர்கள் என்றும் அனுமதிக்கவில்லை. மற்றவர்கள் கற்பதையே, கடவுள் குற்றமாகத் தடை செய்தனர். ஏன் என்றால், இந்த மொழி மக்களை ஏமாற்றவும், சுரண்டி வாழவும் உதவியதுடன், மற்றவர்களை அடக்கியாள இந்த மொழி தான் அவர்களுக்கு உதவியது.
எல்லாம் கடவுள் என்ற சமுதாயத்தில், இவர்கள் அல்லாத மற்றவர்கள் நேரடியாக கடவுளை அணுக முடியாதபடி, இந்த மந்திர மொழி மூலமும் தடை செய்தனர். இப்படி பார்ப்பனன் தன்னை கடவுளின் ஒரு இடைத்தரகனாக்கிக் கொண்டு, அதற்கு ஏற்ற ஒரு மொழியாக சமஸ்கிருதத்தை உருவாக்கினான். இதை மற்றவர்கள் கற்பதற்கு தடைவிதித்தனர். இதன் மூலம் சுரண்டத் தெரிந்த தன்னை, பல்வேறு தடைகள் மூலம் ஒரு பார்ப்பனச் சாதியாக நிறுவிக்கொண்டான்;. இதற்கு உதவிய தமது மந்திரமொழியையும், தமக்குள் இரகசியமாக பாதுகாத்துக் கொண்டான்.
பார்ப்பனரால் சமஸ்கிருதத்தைக் கற்றுக்கொடுத்தல் என்பது, அதிகார வர்க்கத்துக்கு (ஆளும் உயர் சாதிக்கு) மட்டுமாக இருந்தது. இது தமது பார்ப்பனிய சாதிய அறநெறிகளை கற்றுக் கொடுக்கவும், பார்ப்பனிய இலக்கியத்தை ஆளும் வர்க்கம் கற்று அதன்படி தமக்காக ஒழுகவும், இந்த மொழி பார்ப்பனரல்லாத ஆளும் அதிகார வர்க்கங்களுக்கு பார்ப்பனரால் கற்பிக்கப்பட்டது. இதற்கு வெளியில், இதைக் கேட்கும் சூத்திரன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றக் கோரியது. அதாவது உழைத்து வாழ்பவனும், மற்றவனுக்காக உழைப்பவனும் கற்கக் கூடாது என்றனர்......


பி.இரயாகரன்

suvanappiriyan said...

......இந்த மொழி கற்பது, வருண அமைப்பில் தடைக்குள்ளாகவில்லை. வருண அமைப்பில் இந்த மொழி அறிவுத்துறையின் மொழியாக, இலக்கிய மொழியாக, மத மொழியாக காணப்பட்டது. மக்கள் மொழி வேறாக இருந்தது. அதேநேரம் அன்று அறிவும் இலக்கியமும், மதம் சார்ந்தே இருந்தது. பல மதங்களின் தோற்றத்துக்கு முன்னும் பின்னும், சமஸ்கிருத்தில் இருந்த மத இலக்கியத்தை கற்றல், அதை மறுத்தல், புதிய தர்க்கங்களை முன்வைத்தல், இந்த சமஸ்கிருத்தில் நடந்தது. மதப் பிளவுகள், பிரிவுகள் பார்ப்பனருக்கு இடையிலும் நடத்தது. பல ஆரிய வழிப் பார்ப்பனர்கள், புதிய மதத்துக்கு சென்று மீள் கலப்புக்கு உள்ளாகினர். அவர்கள் சமூதாயத்தில் இனம் தெரியாது கலந்து போனார்கள். பார்ப்பன சிதைவும், மதங்களின் தோற்றமும், சமஸ்கிருதத்தின் எல்லையை பல மதங்களின் எல்லைவரை விரிவாக்கியது. இதனால் இந்த மொழி மதம் சார்ந்தும், மத மறுப்பு சார்ந்தும், அறிவுத்துறையினரிடையே வளர்ச்சியுற்றது.
ஆனால் சாதியத்தின் தோற்றத்துடன், அந்த மொழியின் வளர்ச்சி முற்றுப்பெற்றது. ஒரு பிழைக்கும் சுரண்டல் மொழியாக, சாதிமொழியாக அது குறுகிப்போனது. சாதியத்தை எது தோற்றுவித்ததோ, அதே காரணமே இந்த மொழியை குறித்த சாதியின் மொழியாக்கியது.
சமஸ்கிருதத்தின் தோற்றம், ஆரிய சிதைவின் விளைவாகும்

சமஸ்கிருத மொழியின் வரலாறு என்பது, பார்ப்பனரால் மட்டும் பேசப்பட்ட ஒரு மொழியாகவே இன்றுவரை உள்ளது. இப்படித் தான் இந்த மொழியின் வரலாறு, அடையாளம் காட்டி நிற்கின்றது. இதை அவர்கள் கடவுளின் மொழி என்று கூறிக்கொண்டனர். இம் மொழி பேசும் தம்மைத்தாம், கடவுளாக்கிக் கொண்டனர். சமஸ்கிருதம் மனிதர்கள் பேசும் மொழி அல்ல என்றனர். அத்துடன் தாமல்லாதவர் பேசுவதை தடுத்து நிறுத்தினர். இப்படி இந்த மொழி, குறுகிய பிரிவின் சாதி மொழியாகியது.
மறுபக்கத்தில் சமஸ்கிருத மொழித் தோற்றம் எதைக் காட்டுகின்றது. இவர்களின் வேத-ஆரிய மூல மொழியை மீட்க முடியாத அளவுக்கு, அதை இழந்து போகும் அளவுக்கு ஆரியர் சிதைந்து போனதைக் காட்டுகின்றது. இப்படி இந்திய சமுதாயத்திற்குள், ஆரிய சிதைவு நிகழ்ந்துள்ளதையே காட்டுகின்றது.
இந்த ஆரிய வேத மொழியின் சிதைவும், பார்ப்பனர் மட்டும் பேசும் இரகசிய சமஸ்கிருத மொழியின் தோற்றமும், ஆரியரின் மொத்த சிதைவை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இடைப்பட்ட இக் காலத்தில் வேத-ஆரியர், தமது சொந்த அடையாளமே இன்றி சிதைந்து போனார்கள். அவர்கள் ஓரு தனித்துவமான மக்கள் கூட்டம் என்ற சுய அடையாளமே இன்றி, சமுதாயத்தினுள் அழிந்துபோனார்கள்.

தொடரும்
பி.இரயாகரன்

suvanappiriyan said...

நவீன இலக்கியம் என்றால் என்னவென்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகச் சொல்கிறார்கள். இம்சையரசன் புலிகேசிக்கு பின்நவீனத்துவச் சினிமா என்று உரையெழுதிய எத்துவாளி எழுத்தாளர்களுக்கு மத்தியில்தானே நாமும் பொறுத்துக்கொண்டு வாழவேண்டியிருக்கிறது. நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்பதற்கெல்லாம் அரசியல் சார்ந்த செயற்பாடுகளும் நெகிழ்ச்சியான ஆனால் எல்லையிட்ட வரையறைகளுமுள்ளன. கோட்பாட்டாளர்கள் குறிப்பாக 15-ம் நூற்றாண்டையொட்டி நவீன காலம் ஆரம்பிக்கிறது என்பார்கள். எப்போது ஆட்சிலிருந்து, கலையிலிருந்து, இலக்கியத்திலிருந்து மதம் நீக்கம் செய்யப்படுகிறதோ தத்துவத்திலிருந்து மதம் நீக்கம் செய்யப்படுகிறதோ அதற்கு பின்னான காலத்தை அவர்கள் நவீன காலமென்று குறிக்கிறார்கள். இந்த நீக்கம் பொருளுற்பத்தி முறையின் பெருக்கம் எப்படி முதலாளிய சனநாயத்தின் வளர்ச்சிக்குத் துணைநின்றதோ அதேபோல பண்பாட்டுத்தளத்தில் முதலாளிய சனநாயத்தின் வளர்ச்சிக்குத் துணை நின்றது.ஆக, நவீன இலக்கியம் என்பது மதநீக்கம் செய்யப்பட்டதாகவும், அது ஆகக் குறைந்தது முதலாளிய சனநாயக விழுமியங்களைப் பேசுவதாயுமிருக்க வேண்டுமல்லவா! நம்முடைய தமிழ் இலக்கியம் அப்படித்தான் இருக்கிறதா? அது மதத்தையும் அதனிலிருந்து வேர்விட்டு விழுதெறிந்து நிற்கும் சாதியையும் சுற்றிப் படர்ந்திருக்கிறதா இல்லையா?

இன்று தமிழ் இலக்கியத்தின் மையமான போக்குகளும் அவற்றின் பிரதிநிதிகளும் பிதாமகர்களும் இந்த மதவாதப் போக்கின் பிரநிதிகளல்லவா! சுயசாதிப் பெருமிதங்களை அவர்கள் இலக்கியத்திற்குக் கடத்திக்கொண்டல்வா இருக்கிறார்கள். தமிழில் நவீனத்தின் தொடக்கமாகக் கருதப்படும் பாரதியிலிருந்து ஞானக்கூத்தன் வரைக்கும் புதுமைப்பித்தனிலிருந்து லதா ராமகிருஷ்ணன் வரைக்கும் தங்கள் ஆதிக்க சாதிப் பெருமைகளுக்குப் பங்கம் நேரிட்டபோது துடித்தெழுந்தார்களா இல்லையா?
ஒருவர் நொன் லீனியர் பிரதியை எழுதலாம். இன்னொருவர் எழுத்துகளைக் கலைத்துப்போட்டு விளையாடலாம் அல்லது சுந்தர ராமசாமியைப் போல ஒவ்வொரு வரியையும் தட்டித் தட்டிச் செதுக்கலாம். அசோகமித்திரனைப் போல இதழோரம் கசியும் துயரப் புன்னகையோடு கதைசொல்லி மத்தியதர வர்க்க வாசகர்களைக் கண்ணீர்விட வைக்கலாம். ஆனால் இந்த எழுத்து நுட்பத்தை வைத்தோ உத்திகளை வைத்தோ நமது எழுத்தாளர்களில் அநேகருக்கு கைவந்த கலையான மணிப்பிரவாளத்தை வைத்தோ ஒரு பிரதியை நவீன இலக்கியப் பிரதியென மதிப்பிட முடியாதென்றே நான் கருதுகிறேன். பிரதியில் பொதிந்திருக்கும் அரசியலை வைத்தே அந்தப் பிரதி நவீனத்துவப் பிரதியா அல்லது இன்னுமே நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளைக் கூட மீறமுடியாத குப்பையா என நாம் மதிப்பீடு செய்ய முடியும். ஜே. ஜே. சிலகுறிப்புகளும், புலிநகக் கொன்றையும் பிற்போக்கு மதிப்பீடுகளை உருவாக்கும் குப்பைகள். அவற்றுக்கும் -சரியான பொருளில்- நவீன இலக்கியத்திற்கும் எதுவிதத் தொடர்புமில்லை என்று நான் துணிந்து சொல்வேன்.
தமிழ் இலக்கியம் என்று நாம் ஒரு பொதுவரையறையை உருவாக்குவது நமக்குக் கேடாகத்தான் முடியும். ஏனெனில் இதுவரை ஆதிக்க சாதியினரதும் ஆண்சாதியினரதும் இலக்கியமும் பண்பாடும்தான் தமிழ் இலக்கியமாகவும் தமிழ்ப் பண்பாடாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராக வரலாறு நெடுகவும் ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கியம் நிமிரும்போது அது இழிசனர் இலக்கியம் எனப் பழித்துரைக்கப்பட்டது பழைய வரலாறு. ஆபாசம் என ஒழித்துக்கட்ட முயல்வது சமீபத்திய வரலாறு.
தமிழ் இலக்கியம் என்பது ஒன்று இல்லை. இங்கு பல்வேறு இலக்கியங்கள் இருக்கின்றன. பார்ப்பன இலக்கியம், வெள்ளாள இலக்கியம், தலித் இலக்கியம், பெண்கள் இலக்கியம், திருநங்கைகள் இலக்கியம் என ஒன்றுக்கொன்று பகையும் முரணும்கொண்ட பல்வேறு போக்குகள் இங்கு நிலவும்போது ஒடுக்குபவரின் இலக்கியத்தையும் ஒடுக்கப்படுபவர்களின் இலக்கியத்தையும் தமிழ் இலக்கியம் என்ற ஒரே வரையறைக்குள் மதிப்பிடுவது சரியற்றது. குறிப்பான அரசியல், சூழல் அமைவுகளைப் பொறுத்துத்தான் நாம் இலக்கியப் பிரதிகளை அணுகவேண்டியிருக்கிறது. இந்தப் பிரதிகளுக்குப் பொதுவான விமர்சன அளவுகோல்களையும் நாம் உபயோகிப்பதில் நியாயமில்லை. சுஜாதா போன்ற ஒரு கேவலங் கெட்ட நோய்க் கிருமியை உன்னதமாய் மதிப்பீடு செய்யும் விமர்சனக் குஞ்சுகளுக்கு ஒடுக்கப்பட்டவர்களின் தலித்துகளின் பெண்களின் திருநங்கைகளின் பிரதிகள் குறித்துக் கருத்துச் சொல்ல எந்த உரிமையும் கிடையாது. ஆனால் அவர்கள்தான் சூழலின் அதிகாரத்தைத் தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள். அவர்களின் கண் அசைப்புகளின் வழியேதான் விருதுகளும் அங்கீகாரங்களும் தீர்மானிக்கப்படுகின்றன. கனடாவில் அய்யர்மார்களுக்கு கொடுக்கவென்றே ஒரு விருது நிறுவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த விருதுக்கு ‘இயல்’ விருது என்று பெயர். வாழ்நாள் சாதனைக்காக அந்த விருது வழங்கப்படுகிறதாம். அய்யராய் இருப்பதெல்லாம் ஒரு வாழ்நாள் சாதனையா? அதற்காக ஒரு விருதா?
-Shoba Sakthi

suvanappiriyan said...

நவீன இலக்கியத்தின் கொடுமுடி என்று குறிப்பிடப்படும் புதுமைப்பித்தனிலிருந்து ஆரம்பிக்கலாம், அல்லது பிச்சமூர்த்தியிலிருந்து ஆரம்பிக்கலாம், சி.சு. செல்லப்பாவிலிருந்து ஆரம்பிக்கலாம், கு.பா.ரா.விலிருந்தும் ஆரம்பிக்கலாம். எப்படி ஆரம்பித்தாலும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை பார்ப்பன-வெள்ளாளர் சாதி இலக்கியமே தமிழ் இலக்கியத்தைத் தமது காலடியில் வைத்திருந்தது எனபதை நீங்கள் மறுக்க முடியாது. மணிக்கொடி, எழுத்து, கசடதபற, காலச்சுவடு என்று ஒரு பட்டியலே உண்டு.
நான் கிறிஸ்தவ சமூகத்தில் பிறந்ந்தவன். கிறிஸ்தவத்திலே சாதியில்லை என்று சொல்வார்கள். என் பாட்டன் காலத்திலே சர்ச்சிலே நடுவாகக் கயிறு கட்டி இருக்குமாம். ஒரு பக்கத்திலே வெள்ளாளர்கள். மறு பக்கத்திலே தலித்துகள். என் காலத்தில் கயிறு இல்லை. ஆனால் அங்கே மனக்கயிறு இருக்கும். அப்படி அப்படியே இடம் வலமாக அந்தந்த சாதி இருந்து கொள்ளும்.

வேதத்தை சூத்திரன் படித்தால் காதிலே ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டுமென்று மனுதர்மம் சொல்லுகிறது. வேதம் படிப்பதற்கு சூத்திரனுக்கு தடை என்று இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது. இவையாவும் நம்பமுடியவில்லை என்று நீங்கள் சொல்வீர்களென்றால் தோழர் எஸ்.வி.ராஜதுரை, ‘பெரியார்- மரபும் திரிபும்’ என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதைப் படித்துப் பாருங்கள். அதன் அட்டையிலேயே இந்துச் சட்டத்தை வெளியிட்டிருக்கிறார் அவர். இந்தக் கொடிய சாதியச் சூழலுக்குளிளிருந்தும் ஆண் முதன்மைச் சமூக அமைப்புக்குள்ளிருந்தும்தான் தடைகளை உடைத்துக்கொண்டு ஒடுக்கப்பட்டவர்கள் கல்வியைப் போராடிப் பெற வேண்டியள்ளது. மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணிகளைக் கடந்துதான் எழுதவேண்டியிருக்கிறது.
1990களில் அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி தமிழகத்திலே தலித் இலக்கிய எழுச்சி ஏற்பட்டது. இலக்கியத்திற்கெல்லாம் என்ன சாதி? இலக்கியத்திற்கெல்லாம் சாதி பார்க்கலாமா? இலக்கியம் என்றால் இலக்கியம்தானே. தமிழ் என்றால் தமிழ்தானே என்ற குரல்கள் இன்னொரு புறத்தில் எழுந்தன. காலப்போக்கில் தலித் இலக்கியம் தன்னுடைய வீரியத்திலும் தன்னுடைய உண்மைத் தன்மையிலும் இதுவரையில் தமிழ் இலக்கியத்தில் பேசப்படாத பகுதிகளை பேசியதற்காகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.
பொங்கலை தமிழர் திருநாள் என்று சொல்கிறார்களே. எப்போதிலிருந்து இது தமிழர் திருநாள்? 50 வருஷத்திற்கு முன்பு வரை ஈழத்தில் தலித்துகள் மேலாடை போட இயலாது. பாட்டன் வேட்டி கட்ட இயலாது. கோயிலுக்குள் போக இயலாது. வெளியில் நின்று தேங்காய் உடைக்க இயலாது. தங்க நகை அணிய இயலாது. பாயாசம் வைக்க இயலாது. இது சட்டம். பொங்கல் நாள் தினத்தன்று காலையில் வைத்த ஆறிப்போன பொங்கலை நயினார்கள் சிறைக்குட்டிகளுக்குப் போடுவார்கள். இது தமிழர் விழாவா இல்லை சாதி இந்துக்களின் விழாவா? இதே கேள்வியைத்தான் இலக்கியத்திற்கும் பொருத்தி பார்க்கிறேன். தலித்துகள் எழுத வரும்வரை தலித்துகளின் வாழ்க்கை தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? ஒரு கே.டானியலும் பூமணியும் வரும்வரை தமிழ் இலக்கியத்தில் தலித் மக்களின் இடம் என்ன? எதுவுமே இல்லையெனில் இந்தப் பாழாய்ப்போன தமிழ் இலக்கிய மரபுக்கும் எங்களுக்கும் என்ன சம்மந்தம்?
அப்படித் தப்பித் தவறி ஆதிக்க சாதியனர் தலித் மக்களைக் குறித்து எழுதிய தருணங்களிலெல்லாம் தலித்துகளைக் கேவலப்படுத்தியும் நையாண்டி செய்துமே தங்கள் பிரதிகளைக் கட்டமைத்திருக்கிறார்கள். புதுமைப்பித்தனுக்குள்ளும் மௌனிக்குள்ளும் இயங்கிய சாதிய வக்கிரத்தை அ. மார்க்ஸும், சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதையை ராஜன் குறையும், சுஜாதாவின் மஞ்சள் ரத்தத்தை ரவிக்குமாரும் நிறப்பிரிகை இதழ்களில் தோலுரித்துக் காட்டினார்கள். ‘சந்தேகங்கள் வாழ்க’ எனப் புத்தகமே போட்டு பலபத்துச் சந்தேகங்களைத் தீர்த்து வைத்த சுந்தர ராமசாமி அவரின் ‘பிள்ளை கெடுத்தாள்விளை’ சிறுகதைக்கு எதிராகத் தலித்முரசு கூட்டம் போட்டுக் கேள்வி கேட்டபோது மௌனங்கள் வாழ்க எனப் பம்மிக்கொண்டார். மஹாகவிக்குள் இயங்கிய சாதிய மனதை சுகன் கட்டவிழ்த்துக் காட்டியிருக்கிறார். ஆனானப்பட்ட அயோத்திதாசப் பண்டிதரையே அருந்ததியர் நிலையிருந்து மதிவண்ணன் கேள்வி கேட்கும் காலமிது. நவீன இலக்கியம், கவித்துவம், மொழி, புனைவு, கியூபிஸம் என்று அய்.டி. அம்பிகளையும் மத்தியதரவர்க்கத்துப் புளியேப்பக்காரர்களையும் வேண்டுமானால் இந்த இலக்கியக் வால்நட்சத்திரங்கள் ஏமாற்றலாம், கவரலாம். ஆனால் அரசியல் ஓர்மையுள்ள சமூக மாற்றத்தை வேண்டி நிற்கும் ஒரு வாசகனிடமோ வாசகியிடமோ இனி இது செல்லாது.
தலித் இலக்கியம் அதன் தொடக்கத்தில் எதிர்கொண்ட சவால்கள் கொஞ்சநஞ்சமல்ல.
-Shoba Sakthi

suvanappiriyan said...

தலித் இலக்கியத்தின் தந்தை கே. டானியல் கிராமம் கிராமாகச் சென்று தலித் மக்களின் குடியிருப்புகளில் தனது நாவல்களை வாசித்துக்காட்டி சாதி ஒழிப்புப் போராட்டத்தைத் தூண்டிய போராளி. ஆனால் இடதுசாரிகளைத் தவிர வேறெந்த யாழ்ப்பாணத்து வெள்ளாள விமர்சகனும் அவரது எழுத்துகளை அங்கீகரித்ததில்லை. ஈழத்திற்குச் சற்றுப் பிந்தி தமிழகத்தில் தலித் இலக்கியம் முகிழ்த்தபோது அது சந்தித்த சவால்கள்தான் எத்தனை! இலக்கியத்தில் பிரிவினை வேண்டுமா, இலக்கியத்தில் இடஒதுக்கீடு வேண்டுமா என எத்தனை குறுக்கீடுகள். பார்ப்பன எழுத்தாளர்களும் பார்ப்பன விமர்சகர்களும் முதன்முதலில் இமையத்தின் கோவேறு கழுதையைத்தான் தலித் இலக்கியமாக மடியில் தூக்கிக் கொஞ்சினார்கள். அந்த நாவல் பறையர் சாதியினரால் ஒடுக்கப்படும் புதிரை வண்ணார்களின் வாழ்க்கையைப் பேசும் நாவல். நாங்கள் மட்டுமா ஒடுக்குகிறோம் நீங்களும்தானே உங்களிற்குக் கீழேயுள்ளவர்களை ஒடுக்குகிறீர்கள் என்ற அவர்களின் வக்கிரமான நகைப்பில் தெறித்த எச்சில்தான் இமையத்தின்மீது பாராட்டு மழையாக இறங்கியது. இளிப்பெல்லாம் சரிதான். ஆனால் பெண்ணை ஆண்மட்டுமா ஒடுக்குகிறான் மாமியாரும்தானே ஒடுக்குகிறாள் என்று சொல்லக்கூடிய ஒரு மெகாசீரியல் பார்வையாளரின் கண்ணீருக்கு உள்ள பெறுமதிதான் அவர்களின் இளிப்புக்கான பெறுமதி. வாய்ப்புள்ள தோழர்கள் ராஜ்கவுதமன் அந்த நாவலைத் தும்பாய்க் கிழித்தெறிந்து எழுதிய விமர்சனக் கட்டுரையைத் தேடிப் படித்துப் பார்க்க வேண்டும்.
தலித் இலக்கியம் சந்தித்துவரும் அதே சவால்களையும் குழிபறிப்புகளையும் வஞ்சகப் புகழ்ச்சிகளையும் இன்றைய பெண்ணிய எழுத்துகளும் சந்தித்து வருகின்றன. காதலை எழுதுகிறோம், காமத்தை எழுதுகிறோம், வேட்கையை எழுதுகிறோம் என முகம் சிவந்து நாணமும் மறைவும் இருண்மையுமாய் எழுதிவந்த ஆண் கவிஞர் பரம்பரைக்கே ஆப்பு வைத்தவர்கள் பெண்ணியக் கவிஞர்கள்தான். ஏன் சாருநிவேதிதா போன்றவர்கள் வேட்கையையும் காமத்தையும் எழுதவில்லையா என நீங்கள் கேட்கலாம். தி. ஜானகிராமன் ஜெயகாந்தனெல்லாம் ஆட்டத்திலேயே இல்லை. சாருநிவேதிதாவின் முதல் இரண்டு நாவல்களும் அவற்றின் வடிவநடையாலும் அவைபேசும் சமூகப்புறநிலை மனிதர்களாலுமே முக்கியத்துவம் பெறுகின்றன. ஸீரோ டிகிரியில் அவர் முயன்ற சிலபகுதிகளும் பின்னால் வந்த ராசலீலாவும் அவரின் இன்றைய எழுத்துகளும் பாலியல் உறவுகள், உணர்வுகள் குறித்த அவரின் அறியாமையைத்தான் நமக்கு அறிவிக்கின்றன. அந்த அறியாமையிலிருந்து பிறப்பது வக்கிரமேயொழிய பாலியல் சுதந்திரம் அல்லது அத்துமீறல் குறித்த எழுத்தல்ல.
புள்ளிராஜாவுக்கு எய்டஸ் வருமா என்ற சொல்லாடல் எவ்வளவு பிரபலமோ அதேயளவிற்கு ஆசிரியர் இறந்துவிட்டார் என்ற பார்த்தின் கூற்றும் தமிழ் இலக்கிய முகாம்களிலே பிரபலமானது. ஒரு குறிப்பிட்ட பிரதியை ஒவ்வொரு குறிப்பிட்ட தன்னிலைகளும் வித்தியாசம் வித்தியாசமாகவே அணுகுகிறார்கள். ஒரு பிரதியை ஒரு ஆண்தன்னிலை வாசிப்பதிலும் பெண்தன்னிலை வாசிப்பதிலும் மட்டுமல்ல அந்தப் பிரதியை ஒரு தலித் பெண் வாசிப்பதற்கும் சூத்திரப் பெண் வாசிப்பதற்கும் பார்ப்பனப்பெண் வாசிப்பதற்கும் குறிப்பான வித்தியாசங்களுண்டு.
ஜி.நாகராஜனின் எழுத்துகளையும் ஜெயகாந்தனின் எழுத்துகளையும் ஒப்பிட்டு புத்திசாலி விமர்சகர்களால் அடிக்கடி சொல்லப்படும் ஒரு கருத்தை நான் கேட்டதுண்டு. அவர்கள் நாகராஜனின் பிரதியில் சித்திரிக்கப்படும் பாலியல் தொழிலாளி இயல்பானவராக அவரது குற்றம் குறைகளோடு சித்திரிக்கப்டுவார். ஆனால் ஜெயகாந்தன் பாலியல் தொழிலாளியை இயல்பிற்கு மாறாகக் கதையின் இறுதியில் வலுகட்டாயமாக ‘புரட்சிக்காரி’ ஆக்கிவிடுவதுண்டு என்பார்கள். இந்த விமர்சகர்களின் சுண்டியெடுத்த வாசிப்பின் மூலம், அவர்களின் சிறப்பு அளவுகோல்களின் மூலம் அவர்கள் நாகராஜனின் எழுத்தே கலையிற் சிறந்தது என்றும் ஜெயகாந்தனின் எழுத்து பிரச்சாரம் என்றும் தீர்ப்பிடுவார்கள். ஆனால் ஒரு பாலியல் தொழிலாளியின் மகனாக, சகோதரியாக இவ்விரு பிரதிகளையும் வாசிப்பவர்களின் வாசிப்பு அந்தப் புத்திசாலி விமர்சகர்களின் கருத்தைத்தான் ஒத்திருக்க வேண்டுமென எந்த அவசியமுமில்லை.
-Shoba Sakthi

suvanappiriyan said...

இங்கேதான் இதுவரையான நமது கலை விமர்சகர்களின் விமர்சனக் கருவிகள் மழுங்கிப்போகின்றன. வலதுசாரிக்கு கலை என்ற அளவுகோல் எனில் இடசாரிக்கு வர்க்கம் என்ற அளவுகோல். இந்த சாராம்சப்படுத்தும் தன்மைகளை பின்நவீனத்துவ அறிதல்முறை தனது கேள்விகளால் நிலைகுலையச் செய்கிறது. பின்நவீனத்துவ அறிதல் முறையின் பெருங்கொடையான கட்டவிழ்ப்பு அறிதல் முறைக்குப் பதில் சொல்ல வக்கற்றதுதான், ஒரு கேள்விக்கே முகங்குப்புற விழுந்துவிடக்கூடியதுதான் தமிழில் இதுகாறும் நவீன இலக்கியம் எனச் சொல்லப்பட்டு வந்த வஸ்து என்றே நான் கருதுகிறேன்.
என்னுடைய எளிய கேள்வியெல்லாம் தமிழ் இலக்கியத்தின் நவீனத்துவ முன்னோடிகள் எனப்படுபவர்களும் அவர்கள் கட்டமைத்த பிரதிகளும் சுயசாதிப் பெருமிதங்களையும் ஆண்முதன்மை மதிப்பீடுகளையும் விளிம்புகளுக்கு எதிரான குரல்களையும் தூக்கி நிறுத்தி தலித்துகளையும் பெண்களையும் விளம்புகளையும் விலக்கிவைத்த பிரதிகளாக இருக்கும்போது தமிழில் நவீன இலக்கியம், அதன் முன்னோடி பாரதி, நடுக்கொள்ள புதுமைப்பித்தன், இப்போது சேரன் என நாம் அடையாளக் கற்களை நட்டுவைப்பதில் ஏதாவது அர்தமுள்ளதா என்பதுதான்.
தலித் விடுதலையைக் குறித்து எழுத தலித்துகள் வரும்வரை காந்திருந்ததுபோல பாலியல் விடுதலையையும் பால் சமத்துவத்தையும் இலக்கியப் பிரதிகளில் பேசுவதற்காகப் பெண்கள் வரும்வரை தமிழ் இலக்கியம் காத்திருக்க வேண்டியிருந்ததென்றால் திருநங்கைகளின் பாடுகளை எழுதுவதற்கு ரேவதியும் வித்யாவும் வரும்வரை தமிழ் இலக்கியம் காத்திருந்ததென்றால் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குள்தான் தமிழில் நவீன இலக்கியம் அதன் சரியான அர்த்தத்தில் முகிழ்க்கத் தொடங்கியுள்ளது எனச் சொல்வதில் தவறுள்ளதா!

-Shoba Sakthi

Anonymous said...

can u send the contact address of this "அரபு மொழிக்கு புதிய இலக்கணம் தந்த இந்தியர்!"

Wassalam

Mohammed