Followers

Wednesday, November 28, 2012

முஸ்லீம்ஸ் ஏமாத்திடுவாங்க

வீட்டின் முன்புறமாக கற்கள் ஒட்ட வேண்டிய வேலை ஒன்றிருந்தது. சில வீடுகளின் முன்பாக கருங்கற்களை வரிசையாக ஒட்டியிருப்பதை கவனித்திருப்பீர்கள். அந்த வேலைதான். கற்களை வெட்டுவதிலிருந்து நேர்த்தியாக ஒட்டுவது வரைக்கும் முஸ்லீம்கள்தான் இந்த வேலையை கச்சிதமாகச் செய்வார்கள் என்று சொன்னார்கள்.

பெங்களூரில் ஷில்கரிபாளையா என்ற இடம் இருக்கிறது. அங்கு இந்த வேலை செய்யும் முஸ்லீம்கள் நிறைய இருப்பதாகச் சொல்லி நியாமத் என்பவரின் எண்ணைக் கொடுத்தார் ஆர்கிடெக்ட் ஒருவர். நெம்பர் தந்ததோடு நிறுத்தாமல் ஒரு எச்சரிக்கையையும் சேர்த்துக் கொடுத்தார். “பண விஷயத்தில் உஷாரா இருங்க சார். முஸ்லீம்ஸ் காசு வாங்கிட்டு காணாம போயிடுவாங்க”.

நியாமத் ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்திருந்தார். வயதானவர். ஜிப்பா, முஸ்லீம் குல்லா, இசுலாமியர்களின் ட்ரேட் மார்க் தாடி என்றிருந்தார். இந்தக் கற்களைப் பற்றி கொஞ்சம் விவரித்தார். சாதரஹள்ளி அல்லது சிரா என்ற வகைக் கற்களைத்தான் பெரும்பாலும் ஒட்டுவார்களாம். சிரா கொஞ்சம் ரேட் அதிகம். கல்லின் விலை மட்டும் சதுர அடிக்கு எழுபத்தைந்து ரூபாய். ஒட்டும் கூலி சதுர அடிக்கு நூற்றியிருப்பத்தைந்து ரூபாய் என்றார். நூறு ரூபாய் என்றால் ஒட்டுங்கள் இல்லையென்றால் வேறொருவருக்கு வேலையைக் கொடுத்துவிடுகிறேன் என்ற போது பரிதாபமாகப் பார்த்தார். ஆனால் வேலை செய்வதாக ஒத்துக் கொண்டார்.

“அட்வான்ஸ் வேண்டும்” என்றார்.

“எவ்வளவு தரணும்?”

“பத்தாயிரம் குடுங்கோ சார்” என்றவுடன் ஆர்கிடெக்ட்டுக்கு போன் செய்தேன். மறுபடியும் அதே டயலாக்கை இம்மிபிசகாமல் சொன்னார் “முஸ்லீம்ஸ் காசு வாங்கிட்டு காணாம போயிடுவாங்க”

“இப்போ காசு இல்லைங்க பாய். வேலையை ஆரம்பிங்க வாங்கிக்கலாம்” யோசித்தவர் அதற்கும் சரியென்று சொன்னார்.

“எப்போ வேலை ஆரம்பிப்பீங்க?”

“நாளைக்கே ஆரம்பிச்சுடுறோம். ஆனால் நாளைக்கு சாயந்திரம் காசு வேணும் சார்”

“என்னங்க காசு காசுங்குறீங்க. வேலையைச் செய்யுங்க. காசு வரும்”

எதுவும் பேசாமல் சென்றுவிட்டார். அடுத்த நாள் வேலையைத் தொடங்கினார். இரண்டு மூன்று ஜூனியர்களோடு வந்திருந்தார். எல்லோரும் குடும்ப உறுப்பினர்களாம். ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. வேலை படு வேகமாக நடந்தது. அவர்கள் எத்தனை வேகமாக வேலையைச் செய்தாலும் ஒரு நாளைக்கு ஐந்தாயிரத்துக்கு மேல் கொடுத்துவிட வேண்டாம் என்று ஆர்கிடெக்ட் எச்சரித்தார்.

அன்று மாலை ஐந்தாயிரம் கொடுத்தேன். அப்பொழுதும் நியாமத் அதட்டாமல் கேட்டார்.

“ப்ளீஸ் சார், பத்தாயிரம் வேணும்”

“பணம் இல்லைங்க. நாளைக்கு வாங்கிக்கலாம்” என்றேன் .

அவருடன் வந்தவர் என்னிடம் கொஞ்சம் அதட்டலாக பேசினார். அப்பொழுது நியாமத் அவரை சமாதானப்படுத்திவிட்டு என்னிடம் “நாளைக்கு கொடுத்துடுங்க சார்” என்ற போது அவரின் கண்களில் கண்ணீர் கசிந்தது.

சங்கடமாகிவிட்டது. “ஏ.டி.எம் வர்றீங்களா? எடுத்து தந்துடுறேன்” என்றபோது தலையாட்டினார். இன்னொரு ஐந்தாயிரம் கொடுத்துவிட்டு ஆர்கிடெக்டிற்கு போன் செய்தேன்.

“ஏன் சார் பத்தாயிரம் கொடுத்தீங்க? நாளைக்கு வர மாட்டாங்க பாருங்க” என்றார். அதோடு நிறுத்தாமல் “எத்தனை கட்டடம் நாங்க கட்டறோம்? எங்களுக்கு தெரியாதா சார்?” என்றார்.

நியாமத் ஏமாற்றிவிடுவாரோ என்று பயந்து கொண்டே தூங்கினேன். ஆனால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு வேலையை ஆரம்பித்திருந்தார்கள். அன்றும் அவர்களுக்குள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அதே வேகம். மதிய உணவு கூட இல்லாமல் எதற்காக இத்தனை வேகமாகச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அடுத்த ஐந்து நாட்களுக்கும் தினமும் பத்தாயிரம் வாங்கிக் கொண்டார்கள். நான் ஆர்கிடெக்டிடம் பணம் சம்பந்தமாக ஆலோசனை கேட்பதைக் குறைத்திருந்தேன். பத்து நாட்களில் முடிப்பதாகச் சொன்ன வேலையை ஐந்து நாட்களில் முடித்துவிட்டார்கள்.

கடைசி தினத்தில் இன்னொரு பத்தாயிரம் கொடுத்த போது கணக்கு முடிந்திருந்தது. நியாமத் நன்றி சொன்னார். பிறகு முகம், கை கால்களைக் கழுவினார். அவருக்குப் பின்னால் ஒவ்வொருவராக கை கால் கழுவினார்கள். கிளம்புவதற்கு தயாரான போது கேட்காமல் இருக்க முடியவில்லை.

“ஏன் ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொள்ளாமல் வேலை செய்யறீங்க?” என்றபோது அவரது ஜூனியர்கள் தங்களுக்குள் முகத்தை பார்த்துக் கொண்டார்கள்.

நியாமத்தான் சொன்னார். அவரது ஜூனியர்கள் ஒவ்வொருவரும் அவரது தம்பிகள். இந்தக் கல் ஒட்டுவதுதான் குடும்பத்திற்கான ஒரே வருமானம். தம்பிகள் யாருக்கும் திருமணம் ஆகவில்லை. நியாமத்துக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது. அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். கடைசியாக பிறந்த குழந்தைக்கு ஒன்றரை வயது. அவரது மனைவிக்கு கிட்னி ஃபெயிலியராம். ரொம்ப நாட்களாக டயாலிசிஸ் கிட்டத்தட்ட வாழ்வின் இறுதிகட்டத்திற்கு வந்துவிட்டாராம்.

“டயாலிசிஸ், ஆஸ்பத்திரி செலவுன்னு பணம் கரையுது சார். எப்படியும் போயிடுவான்னு தெரியுது. ஆனா விட மனசு வரலை. அவளோட நிலைமை, குழந்தைக, பணத்துக்கான தேவையெல்லாம் எங்களை பேச விடறதில்லே சார். அதான் உங்ககிட்ட கூட பணம் வேணும்ன்னு திரும்பத் திரும்ப கேட்டேன்” என்ற போது தனது ஜிப்பா நுனியால் கண்களை துடைத்துக் கொண்டார்.

“இதை முன்னாடியே சொல்லியிருக்கலாமே” என்றேன்.

“இல்ல சார். எங்களை யாரும் இங்கே நம்பறதில்ல. என்ன சொன்னாலும் பொய் சொல்லுறதாத்தான் சொல்லுவாங்க” என்றார். என்னிடம் ஒரு பத்தாயிரம் அதிகமாக இருந்தது. “முடிந்த போது கொடுங்க” என்று கொடுத்தேன். “ரொம்ப நன்றி சார். தேவைப்படும் போது வாங்கிக்கிறேன். இப்போ வேண்டாம்” என்று கிளம்பினார். அந்த நடையில் நேர்மையிருந்தது. அவர் நகர்ந்த பிறகு மனம் பாரமாகியிருந்தது. உடனடியாக வீட்டுக்குள் செல்லாமல் அந்த வீதியில் நடந்து கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்திற்குப் பிறகு ஆர்கிடெக்ட் போன் செய்தார். “வேலை முடிஞ்சுடுச்சு சார். மொத்தமா ஐம்பதாயிரம் கொடுத்துட்டேன்” என்றேன்.

“ஐயாயிரம் புடிச்சுட்டு கொடுத்திருக்கலாம்ல சார்” என்று துவங்கினார். கட் செய்துவிட்டு போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டேன். கார்த்திகைக் குளிர் சில்லிடத் துவங்கியிருந்தது.
***

-- நன்றி வா. மணிகண்டன்
http://www.nisaptham.com/2012/11/blog-post_26.html

7 comments:

அஜீம்பாஷா said...

assalamu alaikum,

superb, thanks for sharing.

suvanappiriyan said...

சலாம் சகோ அஜீம் பாஸா!

//superb, thanks for sharing. //

வெளி வேலை முடிந்து நேற்றுதான் வந்தேன். எனவே ஒரு நெகிழ்ச்சியான காப்பி பேஸ்ட் பதிவு. :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

இந்தியன்!

//Now, please spare us all those Koranic verses that extol personal liberty in Islam.We know there are few verses to that effect in Koran.
Please, also, do not lecture about these countries being misguided and interpreting Koran wrongly. That will be an insult to our intelligence.//

இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை கொல்லச் சொல்லி எந்த இடத்தில் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது? காண்பித்தால் நானும் தெரிந்து கொள்வேன்.

ஆனால் இஸ்லாத்தை விட்டு வெளியேறி சமூகத்தில் பொய்களை பரப்பி குழப்பம் உண்டாக்குபவர்களை நாம் தடுக்க வேண்டும். ஏனெனில் இந்த இஸ்லாத்தால் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வரும் ஒரு சமூகத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுவது கொலையை விட கொடியதாகும்.

குர்ஆனின் வார்த்தைகள் இறைவனால் அருளப்பட்டது என்று நம்புபவர்கள் முஸ்லிம்கள். எனவே அதில் எந்த வார்த்தையையும் நீக்குவதற்கு உலகில் வாழும் எந்த முஸ்லிமும் விரும்ப மாட்டார். குர்ஆனில் விளங்கியதில்தான் பலரிடம் குறை இருக்கிறது. அது சரியானாலே பல பிரச்னைகள் தீர வழியுண்டு.

Anonymous said...

//இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை கொல்லச் சொல்லி எந்த இடத்தில் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது? காண்பித்தால் நானும் தெரிந்து கொள்வேன்.//

ஸஹிஹ் புஹாரி ஹதீஸ் : 6923. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களை நோக்கிச் சென்றேன். என்னுடன் (என்) அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த இருவரும் இருந்தனர். அவர்களில் ஒருவர் என் வலப்பக்கத்திலும் இன்னொருவர் என் இடப்பக்கத்திலும் இருந்தனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருந்தார்கள். (என்னுடன் வந்த) அவ்விருவரும் (நபி(ஸல்) அவர்களிடம் ஏதேனும் அரசாங்கப் பதவி அளிக்குமாறு) கோரினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அபூ மூஸாவே' அல்லது 'அப்துல்லாஹ் இப்னு கைஸே!' என்றார்கள். நான், 'சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! இவர்கள் இருவரும் தம் மனத்தில் இருந்ததை என்னிடம் தெரிவிக்கவுமில்லை; இவர்கள் பதவி கேட்பார்கள் என்று எனக்குத் தெரியவும் செய்யாது' என்று சொன்னேன். அப்போது நபி(ஸல்) அவர்களின் இதழுக்குக் கீழ் துருத்திக் கொண்டிருந்த பல்துலக்கும் குச்சியினை இப்போதும் கூட நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. நபி(ஸல்) அவர்கள், 'பதவியை விரும்புகிறவருக்கு நாம் பதவி 'கொடுப்பதில்லை' அல்லது 'ஒருபோதும் கொடுக்க மாட்டோம்'. எனவே, 'அபூ மூஸாவே' அல்லது அப்துல்லாஹ் இப்னு கைஸே' நீங்கள் யமன் நாட்டிற்கு (ஆளுனராக)ச் செல்லுங்கள்' என்றார்கள்.
(அவ்வாறே அபூ மூஸா(ரலி) அவர்கள் யமன் நாட்டிற்குச் சென்றார்கள்.) பிறகு அபூ மூஸா அவர்களைப் பின்தொடர்ந்து முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை (யமன் நாட்டுக்கு) நபியவர்கள் அனுப்பிவைத்தார்கள். முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் அபூ மூஸா(ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக) அவர்களுக்கு தலையணை ஒன்றை அபூ மூஸா(ரலி) அவர்கள் எடுத்து வைத்து 'வாகனத்திலிருந்து இறங்குங்கள் (இதில் அமருங்கள்)' என்றார்கள். அப்போது அபூ மூஸா(ரலி) அவர்களின் அருகில் ஒருவர் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு, 'இவர் யார்?' என்று முஆத்(ரலி) அவர்கள் கேட்டார்கள். அபூ மூஸா(ரலி) அவர்கள் 'இவர் யூதராயிருந்து இஸ்லாத்தைத் தழுவினார். அதற்குப் பிறகு (இஸ்லாத்தைவிட்டுவெளியேறி) யூதராம்விட்டார்' என்றார்கள். (மீண்டும் அபூ மூஸா(ரலி) அவர்கள் முஆத்(ரலி) அவர்களிடம்) 'அமருங்கள்' என்று கூறினார்கள். அதற்கு முஆத்(ரலி) அவர்கள், 'இல்லை. அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரணதண்டனை அளிக்கப்படாத வரை (நான் அமரமாட்டேன்)' என்று மூன்று முறை சொன்னார்கள். எனே, அவருக்கு மரண தண்டனையளிக்கும் படி (அபூ மூஸா(ரலி) அவர்கள் உத்தரவிட அவ்வாறே அவர் கொல்லப்பட்டார்.

https://www.youtube.com/watch?v=ZMAZR8YIhxI

suvanappiriyan said...

நான் கேட்டது குர்ஆனின் வசனங்களை. ஒவ்வொரு குற்றத்துக்கும் இன்ன தண்டனை என்று வகைப்படுத்தி சொல்லப்பட்ட குர்ஆனில் மதம் மாறியவர்களுக்கு மரண தண்டனை என்று எங்கும் சொல்லப்படவில்லை. அடுத்து நீங்கள் சுட்டிக் காட்டும் ஹதீதில் முகமது நபி சொன்னதாக மற்றொருவர் சொன்னதாகத்தான் இந்த ஹதீது பதியப்பட்டுள்ளது. இது போன்ற ஹதீதுகளினால்தான் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடும் ஏற்பட்டுள்ளது. குர்ஆனை பாதுகாத்தது போல் ஹதுpதுகளை முஸ்லிம்கள் பாதுகாக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டம்தான். ஹதீதுகளில் பல யூத கிறித்தவர்களின் கைவண்ணமும் உள்ளது. முஸ்லிம்களாக மாறுவது போல் நடித்து இஸ்லாத்தில் குழப்பத்தை உண்டு பண்ணியவர்கள். எனவே குர்ஆனில் சொல்லாத ஒரு தண்டனை அதுவும் நபித் தோழர் அறிவிப்பதால் இதனை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.

சேக்கனா M. நிஜாம் said...

நெகிழ வைத்துவிட்டது

பகிர்வுக்கு நன்றி !

Anonymous said...

//எனவே குர்ஆனில் சொல்லாத ஒரு தண்டனை அதுவும் நபித் தோழர் அறிவிப்பதால் இதனை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. //

குர்ஆனில் சொல்ல படாத விபச்சாரத்திற்கு கல்லால் எறிந்து கொல்லும் தண்டணையையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை தானே?