Followers

Sunday, August 04, 2013

பாகிஸ்தானை சரியாக புரிந்து கொண்ட மனிதர்!- பாகம் இரண்டு

மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பேட்டி தொடர்கிறது......

கேள்வி:

முஸ்லிம்கள் தங்களின் அடையாளங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, ஒரு முஸ்லிம் மாகாணத்தின் பிரஜையாக நாம் எவ்வாறு நடந்து கொள்வது என்ற கேள்வியும் எழுகிறதே?

பதில்:

இது போன்ற அர்த்தமற்ற கேள்விகள் கற்பனையான பேச்சுக்களின் மூலம் உண்மையான நடைமுறைகளை நாம் மறைத்து விட முடியாது. இந்த விஷயத்தில் பல கருத்துக்களை திரித்து நம் மக்கள் முன் சிலர் வைக்கின்றனர். சமூக அடையாளங்கள் என்று எதனைக் கூறுகிறீர்கள்? பிரிட்டிஷ் ஆட்சியில் நாடே அடிமைப் பட்டுக் கிடந்தபோது சுதந்திர போராட்டத்துக்கு முஸ்லிம்களை தயார் படுத்தியது எந்த சமூக அடையாளங்கள்? இஸ்லாமிய மாகாணங்களில் எதனை நீங்கள் புகட்டப் போகிறீர்கள்? நமது நாட்டின் சுதந்திர தாகத்தையும் நம்பிக்கையையும் முஸ்லிம்களுக்கு உண்டாக்கியது எது? 90 மில்லியன் முஸ்லிம்களின் உணர்வுகளை எதற்கும் உபயோகமற்ற ஒரு இஸ்லாமிய மாகாணம் தந்து விடும் என்று எதிர் பார்க்கிறீர்களா? நமது நாட்டை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியில் எவருடைய மத உணர்வுகளுக்கும் தடை போடப்பட்டதா? ஹிந்துக்கள் தங்களின் மதக் கடமைகளை நிறைவேற்ற இதுவரை சிக்கல் எதனையும் சந்தித்திருக்கிறார்களா? இதுவரை அவ்வாறு எதுவும் நடைபெறவில்லையே!

இது போன்ற அர்த்தமற்ற கேள்விகளை எழுப்பி மக்களை குழப்புவது மேற்கத்திய கலாசாரத்தில் மூழ்கி திளைத்துக் கொண்டிருக்கும் ஒரு சில முஸ்லிம்களே ஆவர். இவை எல்லாம் அரசியல் சார்ந்த பேச்சுக்கள். சமூக நலன் சார்ந்த பேச்சுக்கள் அல்ல.

இஸ்லாமிய வரலாறு என்பது இந்திய வரலாற்றின் மிக முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ளது. இத்தனை காலம் ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் இஸ்லாத்துக்காக இந்த மன்னில் குறிப்பிடுமபடியாக எதையும் செய்யவில்லை. பெயரளவு முஸ்லிம்களாகத்தான் வாழ்ந்து மறைந்தார்கள். இஸலாத்தை பரப்புவது அவர்களின் கொள்கையாகவும் இருக்கவில்லை. இஸ்லாமிய சமூகம் சில மார்க்க அறிஞர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளது. இதே முஸ்லிம் ஆட்சியாளர்களால் பல மார்க்க அறிஞர்கள் கொடுமைப்படுத்தப் பட்டுள்ளார்கள். அதிகமான மன்னர்கள் தங்களுக்கு துதி பாடும் பல கள்ள மௌலவிகளையும் உருவாக்கி வைத்திருந்தனர். இவர்களின் பணியே உண்மையான இஸ்லாத்துக்கு எதிராக செயல்படுவதுதான். இஸ்லாத்தின் பழைய வரலாறுகளைப் பார்க்கும் போது முதல் நூற்றாண்டில் லட்சக்கணக்கான மக்களின் இதயத்தை வென்றெடுத்தது. ஆனால் இந்தியாவுக்குள் இஸ்லாம் பரவியதே வேறொரு அடிப்படையில். இஸ்லாத்தை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் அரபுகள் அல்ல. தென் நாடுகளில் ஒரு சில இடங்களில் வியாபார நிமித்தமாக அரபுகள் வந்து இஸ்லாத்தை பரப்பியும் இருக்கிறார்கள். ஆனால் அதிகமான பேர் அரபுகளிடமிருந்து நேரிடையாக இஸ்லாத்தை பெறவில்லையாதலால் அதன் உண்மை முகத்தை பலரும் அறியாமலேயே இன்றும் உள்ளனர். இன்றும் கூட இந்திய முஸ்லிம்களின் வரலாறு என்று பார்த்தோமானால், மியூசிக், ஆர்ட், கட்டிடங்கள், சமாதிகள், போன்ற பின்னணியிலேயே செல்வதைப் பார்க்கலாம். இஸ்லாம் இந்திய முஸ்லிம்களிடம் என்ன எதிர்பார்க்கிறதோ அந்த எதிர்பார்ப்பை விளங்காதவர்களாகவே அநேக முஸ்லிம்கள் இன்றும் உள்ளனர்.

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் இரண்டாந்தர குடி மக்களாக நடத்தப்படுவர் என்ற எண்ணம் இன்னும் முஸ்லிம்களுக்கு இருக்குமானால் அவர்களுக்காக நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். மனிதன் தனது வாழ்வை உறுதியோடு எதிர் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் தங்களின் மனோ திடததை ஏனோ இழந்து நிற்கின்றனர். இந்திய முஸ்லிம்களில் பலர் தங்களின் எதிர்காலத்தைப் பற்றி அச்சம் கொண்டிருப்பதை உணர்கின்றேன். முதலில் அசைக்க முடியாத இறை நம்பிக்கை இவர்களுக்கு முதலில் வர வேண்டும். மனிதர்களை கண்டு நாம் ஏன் பயப்பட வேண்டும்? இது போன்ற கற்பனையான கோழைத்தனமான சிந்தனைகளிலிருந்து முதலில் நாம் மீண்டு வர வேண்டும்.

பிரிட்டிஷ் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு சகல சௌகரியங்களும் செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் பிரிட்டிஷாரின் பல உதவிகளை ஏனோ முஸ்லிம்கள் ஏற்கவில்லை. வெள்ளையர்களின் ஆட்சியில்தான் முன்பை விட இஸ்லாம் வேகமாக வளர்ந்தது. இஸ்லாத்தின் சிறந்த கலாசாரம் மதிப்பானது அதனை பின் பற்றும் இஸ்லாமியர்களின் கைகளில்தான் உள்ளது. இந்தியாவானது முஸ்லிம் நாடுகளின் எல்லைகளை தனது மூன்று புறமும் கொண்டுள்ளது. எல்லகைள் இவ்வாறு பரந்து கிடக்க முஸ்லிம்களை ஒழித்து விட வேண்டும் என்று ஹிந்துக்கள் எப்படி நினைப்பர். அது நடக்கின்ற காரியமா? இது எவ்வாறு நிகழ சாத்தியம் உள்ளது? 90 மில்லியன் முஸ்லிம்களை அழித்தல் என்பது அவ்வளவு லேசான காரியமா? கண்டிப்பாக சுதந்திர இந்தியாவில் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக ஏற்றுக் கொள்ளும் மக்கள் அதிகமதிகம் உருவாவார்கள் எனபது எனது எண்ணம்.

இந்த உலகம் அமைதிக்காகவும் அழகிய வாழ்வு முறைக்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கிறது. ஹிந்துக்கள் கம்யூனிசத்தைப் படிக்கின்றனர். மேற்குலக நாகரிகத்தையும் படிக்கின்றனர். அதே போல் இஸ்லாத்தின் மேல் உள்ள வெறுப்பை தூரமாக வைத்துவிட்டு அதனை அன்போடு நோக்கினால் பல நன்மைகளையும் பல சட்டதிட்டங்களையும் இங்கிருந்து பெற்றுக் கொள்ள முடியும். இந்த புரிதலானது இஸ்லாத்தின் மேலும் முஸ்லிம்களின் மேலும் உள்ள வெறுப்பு பல மடங்கு குறைய வாய்ப்புள்ளது. இஸ்லாம் ஒரு குறுகிய வட்டத்தைப் போட்டு அதற்குள் முஸ்லிம்களை அடக்கி ஆளவில்லை. அது உலக மக்களுக்கு பல அழைப்புகளை விடுக்கிறது. அதிகமான வசனங்கள் 'ஓ..மனிதர்களே!' என்று தான் ஆரம்பிக்கிறது. சில வசனங்கள்தான் முஸ்லிம்களை நோக்கி பேசுகிறது. மனிதர்களுக்குள் உள்ள ஏற்றத் தாழ்வுகளைப் போக்க பல திட்டங்களைக் கொண்டுள்ளது. இஸ்லாம் இறைவனைத்தான் வணங்க சொல்கிறதேயன்றி முகமது நபியை வணங்கச் சொல்லவில்லை என்பதும் ஹிந்துக்களுக்கு நன்றாக தெரியும். ஏக இறைவனை வணங்கச் சொல்வது என்பது இந்து மக்களுக்கு புதிய கொள்கையும் அல்ல. ஓரிறைக் கோட்பாடு, ஏழைகளுக்கு உதவுதல், நீதி தவறாத ஆட்சி, பகுத்தறியும் சிறந்த அறிவு போன்ற பல அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டு கட்டப்பட்டது இஸ்லாம். ஒரு சில முஸ்லிம்களின் தீவிரவாதப் போக்கினால் இந்து மக்கள் இஸ்லாத்தை வெறுக்கும் சூழலை உண்டாக்கி விடும். நம்முடைய சுய லாபத்துக்காக இஸ்லாத்தின் கொள்கைகளை சிதைக்க அனுமதிக்கக் கூடாது. பாகிஸ்தான் பிரிவினை என்பதானது எந்த விதத்திலும் இஸ்லாத்தோடு தொடர்புபடுத்த முடியாத ஒன்று. ஒரு அரசியல் ஏற்பாட்டின்படி முஸ்லிம் லீக் என்ற கட்சியால் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்வு. இதற்கும் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முஸ்லிம்களின் பிரச்னைகளை தீர்க்க பாகிஸ்தான் ஒரு சிறந்த தீர்வாக ஆக முடியாது என்பது எனது எண்ணம். இந்த பிரிவினையானது இந்து முஸ்லிம் சிக்கல்களை மேலும் அதிகமாக்கவே செய்யும்.

நபிகள் நாயகம் 'இந்த உலகம் முழுவதுமே எனக்கு தொழும் இடமாக ஆக்கப்பட்டுள்ளது' என்று சொன்னார்கள். தற்போது அந்த தொழும் இடங்களை பிரித்துக் கொடுக்கும்படி என்னிடம் யாரும் கேட்க வேண்டாம். ஒன்பது கோடி முஸ்லிம்கள் இந்தியாவெங்கும் பரந்து வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சில மாநிலங்களில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளதால் பிரித்துக் கொடுங்கள் என்று கேட்கப்படுகிறது. மீண்டும் இஸ்லாமிய பார்வையில் இவர்கள் பிரிவினையைக் கோரவில்லை என்பதைக் கவனியுங்கள். 'சில மாகாணங்களில் அதிகமாக இருக்கிறோம். அந்த பகுதிகளை பிரித்து தனி நாடாக ஆக்குங்கள்' என்பதே அவர்களின் கோரிக்கை. பல மாநிலங்களில் மிக சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்களைப் பற்றிய கவலை அவர்களுக்கு கொஞ்சம் கூட இல்லை. எல்லையோரங்களில் பக்கத்து நாடுகளோடு தொடர்புகளோடும் பல முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த மக்களின் பிரச்னையை எவ்வாறு தீர்ப்பது என்பதை எனக்குச் சொல்லுங்கள். முஸ்லிம் லீக்கின் கருத்துப்படி இங்குள்ள 30 மில்லியன் முஸ்லிம் குடும்பங்களை நிர்க்கதியாக தவிக்க விட்டு விட்டு தனி நாடு கேட்டு போகப் போகிறீர்களா? இந்து முஸ்லிம் பிரச்னையானது காங்கிரஸூக்குள்ளும் முஸ்லிம் லீக்குக்குள்ளும் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி இன்று தனி நாடு கேட்கும் நிலைக்கு வந்துள்ளது. இந்த பிரிவினை நிறைவேறினால் உலக வல்லரசுகளின் பார்வை இந்த பிராந்தியத்தில் விழுந்து காலாகாலத்துக்கும் இரு நாடுகளுக்குமிடையே தீராத தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.

முஸ்லிம்கள் தங்களின் எதிர்கால பாதுகாப்புக்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொள்ள அவர்களுக்கு பூரண உரிமை உள்ளது. ஆனால் நாட்டைப் பிரித்துத்தான் அந்த பாதுகாப்பு கிடைக்ககும் என்ற பிரசாரத்தையே நாம் விமரிசிக்கிறோம். இதில் தவறாக முஸ்லிம்கள் வழி நடத்தப் படுகிறார்கள். இந்த தேச பிரிவினையானது காலத்துக்கும் இந்து முஸ்லிம் பிரிவினையை அதிகப் படுத்திக் கொண்டேயிருக்கும். பிரச்னைகள் தீருவதற்கு தேசப் பிரிவினை ஒரு மார்க்கம் அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இந்தியா பிற்காலங்களில் சாதிப் பிரச்னைகளினால் மிகப் பெரும் சவால்களை சந்திக்கும். அரசியல் பகிர்வு என்பது இரண்டாம் பட்சமாகி ஆதிக்க சாதிகளின் தலையீடுகள் அதிகமாகவே இருக்கும். கம்யூனிஸ்டுகளோ, சோஷலிஸ்டுகளோ இந்த தலையீடுகளை தடுக்க இயலாது. கீழ் மட்டங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகப் போராடும் இயக்கங்களாகவே அவை இருந்து வரும். ஆனால் பெரும் மாற்றங்களைக் கொண்டு வர முடியாது.

தற்போது முஸ்லிம் செல்வந்தர்களும், பிரச்னை எழுப்பும் சில குழுக்களும் ஒரு வித அச்சத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தற்போது இவை அனைத்தும் மதம் எனும் ஒற்றை வார்த்தைக்குள் கொண்டு சாமர்த்தியமாக திசை திருப்பப்படுகிறது. பொருளாதார ஏற்ற தாழ்வுகளை மதப் பிரச்னையாக்கி விட்டனர். இதற்கு முஸ்லிம்கள் மட்டுமே காரணமல்ல. இதற்கு பலரும் பொருப்பேற்க வேண்டும். முதலில் வெள்ளையர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த பிரிவினைவாதம் பின்னர் அலிகரால் தொடரப்பட்டது. அதன் பிறகு குறுகிய மனம் கொண்ட ஒரு சில இந்துக்களால் இந்த கருத்து ஆழமாக பலர் மனதிலும் வேரூன்றி விட்டது. இதனால் இந்திய சுதந்திரம் என்பது இரு நாட்டு பிரிவினையில் கொண்டு போய் நம்மை நிறுத்தியுள்ளது.

ஜின்னா ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கான தூதுவராகவே முன்பு இருந்துள்ளார். சரோஜினி நாயுடுவும் இவரின் செயல்களை பலமுறை பாராட்டியுள்ளார். ஜின்னா தாதாபாய் நவ்ரோஜியின் மாணவனும் ஆவார். 1906 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் முஸ்லிம்களுக்கென ஒரு தனி அமைப்பு தொடங்கப்படுவதையும் எதிர்த்தார். 1919 வரையிலும் நாட்டின் பிரிவினைக்கு எதிராகவே இருந்தார்.

1928 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சைமன் கமிஷனை காங்கிரஸோடு சேர்ந்து எதிர்க்கவும் செய்தார். 1937 வரை பாகிஸ்தான் பிரிவினைக்கு எந்த ஆதரவும் தராதவராகவே இருந்து வந்தார். மாணவர்கள் மத்தியில் கூட இந்து முஸ்லிம் ஒற்றுமை நமது நாட்டுக்கு எந்த அளவு அவசியம் என்பதைப் பற்றி பல முறை கலந்துரையாடியுள்ளார். ஆனால் காங்கிரஸ் ஏழு மாநிலங்களில் அரசு அமைத்து அதில் முஸ்லிம் லீக்கை முற்றாக புறக்கணித்தது. இதன் பிறகு தான் 1940 ல் வேறு வழியின்றி பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவளிக்க முன் வந்தார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 3ல் 'காங்கிரஸ் இந்துக்களின் கூடாரமாகி விட்டது' என்ற தகவலை முதன் முதலில் பதித்தார். 1925 ஆம் ஆண்டில் கூட தான் ஒரு நேஷனலிஸ்ட் என்பதை பகிரங்கமாக பிரகடனப்படுத்தினார். சுருக்கமாக சொன்னால் ஜின்னாவின் பாகிஸ்தான் பிரிவினை என்பதானது அவரது அரசியல் நிகழ்வுகளின் பின்னணியில் நடந்தது. என்னைப் பற்றி எதையும் சொல்ல ஜின்னாவுக்கு முழு உரிமை உண்டு. இதுவரை அவரது அறிவுத் திறனில் எந்த குறையும் நான் கண்டதில்லை. ஒரு அரசியல்வாதியாக பாகிஸ்தான் பிரிவினைக்காக மிக அதிக அளவில் உழைத்துள்ளார். தற்போது இந்த பிரிவினை சமாசாரமானது ஜின்னாவின் கௌரவப் பிரச்னையாக மாறி விட்டது. எதை இழந்தாவது பாகிஸ்தானை அடைந்தே தீருவது என்ற முடிவுக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளார்.

கேள்வி: முஸ்லிம்கள் பாகிஸ்தான் பிரிவினை வாதத்தை கைவிட மாட்டார்கள் என்று தெளிவாக தெரிகிறது. பிறகு எதற்கு பிரிவினைக்கு எதிராக தேவையற்ற இத்தனை வாக்கு வாதங்கள்?

பதில்: இது மிகவும் கடினமான கேள்வி. கலகக்கார கூட்டம் ஒன்றின் மிகைப்படுத்தப்பட்ட ஆர்வத்தை அடக்குவதென்பது தற்போது இயலாத காரியம். ஒருவரின் உணர்வுகளை அடக்குவதென்பது அவரை கொன்று விடுவதை விட மோசமானது. இன்று முஸ்லிம்கள் நடந்து செல்லவில்லை. ஓடுகிறார்கள். வலுவான ஸ்திரமான நடையை அவர்கள் பயிலவில்லை. கடல் அலைகளைப் போல அவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரும் கூட்டமானது தனது நம்பிக்கையையும் சுய மரியாதையையும் இழந்து விட்டால் அவர்களை சுற்றி வீணாண கற்பனைகளும் தங்களைப் பற்றிய எதிர்கால பயமும் சூழ்ந்து கொள்ளும். இதனால் சரி எது? தவறு எது? என்று தீர்மானிக்கும் திறனை இழந்து விடுவர். அதுதான் தற்போது நடந்து வருகிறது.

ஒரு கூட்டத்தின் உண்மையான வெற்றி என்பது அதன் எண்ணிக்கையை பொருத்து அமைவது அல்ல. அந்த மக்கள் தங்களின் நம்பிக்கை, நேர்மை, நாணயம் போன்றவற்றைக் கொண்டு சீரிய வாழ்வை அமைத்துக் கொள்வதே அவர்களின் உண்மையான வெற்றிக்கு அடிகோலியதாகும்.

பிரிட்டிஷாரின் அரசியல் சூழ்ச்சிகளானது பல்வேறு விதமான பயத்தையும் அவ நம்பிக்கையையும் முஸ்லிம்கள் மத்தியில் ஆழமாக வேரூன்ற செய்து விட்டது. வெள்ளையர்கள் இந்த நாட்டை விட்டுப் போவதற்குள் எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்ற மோசமான எண்ணத்துக்கு பலர் வந்து விட்டனர். இந்த பிரிவினையானது தங்களின் பயத்தையும், தங்கள் மத்தையும், பொருளாதாரத்தையும் காத்து விடும் என்று நம்புகின்றனர். இது தேவையற்ற பயம் என்பதை பின்னர் உணருவார்கள்.

கேள்வி: ஆனால் இந்துக்களும், முஸலிம்களும் வழிபாடு, கலாசாரம், மொழி என்று முற்றிலும் வேறுபட்டிருக்க இந்த இரு குழுக்களும் ஒற்றுமையாக இருந்து விட முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: இது முன்பே விவாதித்த ஒரு கேள்வி. இது சம்பந்தமாக அல்லாமா இக்பாலும், மவுலானா ஹுசைன் அகமது மதனியும் ஏற்கெனவே நிறைய பேசியிருக்கிறார்கள். குர்ஆனில் 'கௌம்' என்ற வார்த்தை பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தை முஸ்லிம்களை மாத்திரம் குறிப்பதாகாது. உலக மக்கள் அனைவரையும் குறிக்கும் பொதுச் சொல்லாகத்தான் இறைவன் குர்ஆனில் பயன்படுத்துகிறான். மில்லத்(COMMUNITY), கௌம்(NATION), உம்மத்(GROUP) என்ற குர்ஆன் பயன்படுத்தும் வார்த்தைகளை ஆழ்ந்து சிந்தித்தால் நமக்குள் உள்ள பல வேறுபாடுகளை களைய முடியும்.

இந்தியா பல மதங்களை தன்னகத்தே கொண்ட சிறந்த வீடாக உள்ளது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பவுத்தர்கள், பாரஸிகள், சீக்கியர்கள், ஜைனர்கள் என்று அனைத்து மதத்தவரும் இம்மண்ணை நேசிக்கின்றனர். இந்து மதத்துக்கும் இஸ்லாமிய மதத்துக்கும் அடிப்படையில் பல வேறுபாடுகள் உள்ளதை நான் மறுக்கவில்லை. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது என்பது இயலாத காரியம் ஒன்றும் அல்ல. இந்த வேற்றுமையானது நமது நாட்டை பிளந்து விடாமல் இருக்க நம்மால் ஆன முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும். சுதந்திர தேசம் என்பது ஒரு மனிதனுக்கு மிக அத்தியாவசியமான ஒன்று. அந்த அருமையான சுதந்திரத்தை மதத்தின் பெயரால் பிளவு படுத்திவிட வேண்டாம் என்பதே எனது வாதம்.

முஸ்லிம்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இந்த உலகுக்கு மிகச் சிறந்த செய்தியை கொண்டு செல்லும் மகத்தான பணியை இறைவன் தந்திருக்கிறான். குறுகிய மனப்பான்மையில் தங்களுக்குள் இந்த அரிய பொக்கிஷத்தை வைத்துக் கொள்ள அவர்கள் அனுப்பப்படவில்லை. மேலும் இந்திய முஸ்லிம்கள் பல பிரிவுகளாக மொழியாலும், பொருளாதாரத்தாலும், பார்க்கும் வேலைகளாலும் பலவாறாக பிரிந்து கிடக்கின்றார்கள். இவர்களை ஒற்றுமைப் படுத்த இந்துக்களைக் காட்டி பயமுறுத்தல் தற்போது நடத்தப்படுகிறது. இது நிரந்த தீர்வைத் தராது. ஒற்றுமை என்பது குர்ஆனைக் கொண்டு முன் எடுக்கப்பட வேண்டும். அதுதான் முஸ்லிம்களை நிரந்தர ஒற்றுமைக்கு கொண்டு செல்லும்.

வஹ்ஹாபி, சுன்னி, ஷியா, ஷாபி, ஹம்பலி, மாலிக்கி, ஹனபி என்று பலவாறாக முஸ்லிம்கள் சிதறுண்டுக் கிடக்கின்றனர். இங்கு சாதாரண செயல்கள் கூட பெரிதுபடுத்தப்படுகின்றது. தொழுகையில் கைகளை உயர்த்துவது, ஆமீன் சப்தமிட்டு சொல்வதில் கூட ஒரு முடிவுக்கு நம்மால் இன்றும் வர முடியவில்லை. சில உலமாக்கள் தங்களின் சொந்த கருத்துக்களை இஸ்லாமாக்கப் பார்க்கிறார்கள். சில இடங்களில் முஸ்லிம்களை காஃபிர்கள் என்று கூறும் போக்கும் நடந்து வருகிறது. இவை எல்லாம் உண்மையான இஸ்லாத்தை விளங்காததினால் வந்த கேடுகள் ஆகும்.

தற்போது நிலைமை முன்பை விட மோசமாக உள்ளது. இஸ்லாமிய மதத்தையும், இந்திய அரசியலையும் ஒன்றாக்கி பல குழப்பங்களை விதைக்கின்றனர். வரலாற்றை நோக்கும் போது உண்மையான இஸ்லாத்தை பின்பற்றியவர்களை மற்றவர்கள் கேலி செய்தே வந்துள்ளனர். தன்னலமற்ற சேவை செய்து இந்த இஸ்லாத்தை தழைத்தோங்கச் செய்த பல மகான்களின் வரலாறு இன்றும் நம் முன் உள்ளது. பல இறைத் தூதர்களாலேயே அவர்களின் மக்களை முழுவதும் நேர்வழியின்பால் கொண்டு வர முடியாத போது நம்மை போன்ற சாமான்யர்களால் முழுவதுமான மக்களையும் சீர் திருத்தம் செய்து விட முடியுமா? நாம் நமது சீர்திருத்தங்களை மக்கள் முன் வைத்துக் கொண்டிருப்போம். மாற்றம் கொண்டு வர வேண்டியது இறைவன் புறத்திலிருந்து என்ற நம்பிக்கை நம் ஒவ்வொருவர் மனத்திலும் ஆழமாக பதிய வேண்டும்.

கேள்வி: 'அல் ஹிலால்' என்ற உங்களின் பத்திரிக்கையை நிறுத்தி நீண்ட காலமாகிறதே? என்ன காரணம்? இஸ்லாமியர்களின் மீது நீங்கள் நம்பிக்கை இழந்து விட்டீர்களா? அல்லது பலனலிக்காத ஒரு பாலைவனத்தில் அழைப்பு பணி செய்வது வீண் என்று முடிவு கட்டி விட்டீர்களா?

பதில்: உண்மையைச் சொல்வதில் தோற்று விட்டதால் நான் அந்த பத்திரிக்கையை நிறுத்தவில்லை. இந்த பத்திரிக்கையானது துடிப்புள்ள பல ஆர்வமுடைய நபர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பலர் தங்களின் இஸ்லாமிய நம்பிக்கையை புதுப்பித்துக் கொண்டனர். எனது சொந்த வாழ்வில் இந்த ஈடுபாடானது பல மாற்றங்களை என்னுள் தந்தது. இறைத் தூதர் வழிகாட்டுதலின்படி எமது வாழ்வை அமைத்துக் கொள்ள இந்த துறை மிகவும் உறுதுணையாக இருந்தது.

என் சொந்த விருப்பங்கள் என் மனத்துள் எழும் போதெல்லாம் போனிக்ஸ் பறவையைப் போல அந்த எண்ணங்களை எரித்து விடுவேன். அல் ஹிலால் பத்திரிக்கையானது அத்தகைய மாற்றத்தை என்னுள் ஏற்படுத்தியது. இஸ்லாத்தின் அடிப்படையைக் கொண்டும், எனது தேசத்தின் முன்னேற்றத்தினைக் கருத்தில் கொண்டும் செயல்பட்டதாலேயே இது சாத்தியமானது. என் மனம் ஆசியா ஆப்ரிக்க கண்டங்களின் விடுதலைக்காக ஏங்கியது. இந்தியாவில் இந்து முஸ்லிம் ஒற்றுமை தழைக்க வேண்டும் என்றும் விரும்பியது.

முதல் உலகப் போருக்கு முன்னால் இந்தியா சுதந்திரம் அடைந்து விடும் என்றுதான் நினைத்தேன். அதை தடுத்து விடும் சக்தி எந்த நாட்டுக்கும் இல்லை என்றே நம்பியிருந்தேன். அதே நேரம் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்றும் எண்ணியிருந்தேன். இந்துக்களும் முஸ்லிம்களும் சுதந்திர இந்தியாவில் ஒற்றுமையாக கைகோர்த்து நடந்து செல்வார்கள் என்றே எண்ணியிருந்தேன். இந்திய சுதந்திரத்திற்காக அந்த நாட்டு மக்களே ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு ரத்தம் சிந்தினர் என்ற அவப்பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக அத்தகைய சூழல் வராதிருப்பதற்காக என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து விட்டேன்.

-முற்றும்.




4 comments:

Jayakumar Chandrasekaran said...

பாக்கிஸ்தானுக்கு பதிலாக தெலங்காணா என்று வைத்து மீண்டும் ஒருமுறை படியுங்கள். பாக்கிஸ்தானுக்கு ஜின்னா என்றால் தெலுங்கானாவுக்கு ஒரு சந்திர சேகர ராவ். ஆக பிரச்சினைகளுக்கு முடிவு பிரிவு என்பது அன்றும் இன்றும் ஒன்றாகவே இருக்கிறது.

--
Jayakumar

suvanappiriyan said...

திரு ஜெயகுமார்!

//பாக்கிஸ்தானுக்கு பதிலாக தெலங்காணா என்று வைத்து மீண்டும் ஒருமுறை படியுங்கள். பாக்கிஸ்தானுக்கு ஜின்னா என்றால் தெலுங்கானாவுக்கு ஒரு சந்திர சேகர ராவ். ஆக பிரச்சினைகளுக்கு முடிவு பிரிவு என்பது அன்றும் இன்றும் ஒன்றாகவே இருக்கிறது.//

பிரச்னைகளுக்கு பிரிவுதான் ஒரே வழி என்றால் பாகிஸ்தான் பிரிவினையால் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை வந்ததா? இரு நாடுகளுக்கும் இடையே ஒற்றுமை வந்ததா? இரு நாட்டு மக்களுக்குமிடையே ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்தான் குறைந்ததா? எதுவுமே இல்லையே!

தெலுங்கானா பிரச்னை என்பது ஒரு நாட்டுக்குள் நிர்வாக வசதிக்காக மாநிலங்களை பிரிப்பதை தவறாக பார்க்க முடியாது. ஆனால் ஆந்திர அரசு அதிகாரிகள் அனைவரும் தெலுங்கானாவை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று சொல்வதெலலாம் இந்த பிரிவினையை வேறு மார்க்கத்துக்கு இட்டுச் சென்று விடும். மத்திய அரசு சந்திர சேகரை சற்று கடிவாளம் இட்டு வைக்க வேண்டும். இல்லை என்றால் நிலைமை விபரீதமாகி விடும். சொந்த நாட்டு மக்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

Unknown said...

அழகிய மொழிபெயர்ப்பு அவசியமான நேரத்தில் அல்லாஹ் தாங்களுக்கு அருள்புரிவானாக.

Dr.Anburaj said...

முகம்மதுவும் 46 யுத்தங்கள் நடத்திய சமாதான சத்புருசா்ஆவாா்.பாலைவனத்தில் அப்பாவி வியாபாாிகளைக் கொள்ளையிட்ட உத்தம ரத்தினம். அவரை அப்படியே அச்சாக வைத்து வாழ்பவா்கள் முஸ்லீம்கள்.முகம்மது செத்தவுடனே ஜனாசா நடத்த 3 நாள் ஆனது. சண்டை ஆரம்பித்து விட்டது.
பின் முற்றி ஒட்டகப்போாில் முடிந்தது. முகம்மதுவின் இளம் மனவைி 18 வயது அயிசா ஒருபுறம் -முகம்மதுவின் மகளைக் கட்டிய மருமகள் அலியாா் ஒருப்கமாக இருந்து போா் நடத்தி முஸ்லீம் ஜாமாத் உள்நாட்டு கலகத்தில் சிக்கி இரத்தக் களறியானது. வெறும் அரேபிய மதஉணா்வு மட்டும் முன்னேற்றத்திற்கு உதவாது என்பதை
ஆஸாத் அவர்கள் நன்கு உணா்ந்தருந்தாா்.அதனால்தான் பாக்கிஸ்தான்பிாவிளையை ஆதாிக்கவில்லை.பாக்கிஸ்தான் பிாிந்தது.பின் கிழக்கு பாக்கிஸ்தான் பிாிந்தது. மீண்டும் 1974 யில் படுகோரமான உட்நாட்டு யுத்தம். கிழக்குபாக்கிஸதானிய முஸ்லீம்க்கும் மேற்கு பாக்கிஸ்தானிய முஸ்லீம்க்குளம் யுத்தம். இஸ்லாம் என்றால் சமாதானம் அன்பு என்று எந்த மடையனடா சொன்னான் ???