
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் அவர்கள் நிறைந்திருந்தனர். அவர்களை அடிக்கடி பார்க்க முடியாது. தலையில் காவி ரிப்பன். நெற்றியில் நீட்டித்து வைக்கப்பட்ட செந்தூர அல்லது குங்குமப் பொட்டு கழுத்தில் காவி துண்டு.. கண்கள் சிவக்க உடலெல்லாம் வேர்த்து கொட்டியபடி டெம்போவிலும் மினிலாரிகளிலும் பயணிக்கிற இவர்களை கடந்த சில ஆண்டுகளாக யானை முகத்து விநாயகரோடு தரிசிக்க முடிகிறது.
பிள்ளையாரோடு அமர்ந்திருக்கிற இவர்களுக்கு கடவுள் பக்தியெல்லாம் இருப்பதாக தெரியவில்லை. சிலர் அந்த ஆட்டோக்களிலேயே புகை பிடிப்பதும், ஒரு கட்டிங் போடுவதுமாக இருப்பதை கவனித்திருக்கிறேன். ஒரு MOB MENTALITY யோடு வெறித்தனமாக இயங்குகிற இளைஞர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் கணபதியை கடலில் கரைக்கிற இந்த சடங்கினை தங்களுடைய ஜபர்தஸ்த்தை ஏரியாவில் பலத்தினை காட்டுகிற ஒரு நிகழ்வாக ஆண்டு தோறும் நடத்துகிறார்கள். இவற்றை நடத்துவதில் ஆர்எஸ்எஸ் இந்து முண்ணனி மாதிரியான இந்துமத முன்னேற்ற அமைப்புகளின் ஆதரவும் பண உதவிகளும் கணிசமாக இருக்கின்றன. அது போதாதென்று எந்த பகுதியில் பிள்ளையார் உட்காரப் போகிறாரோ அப்பகுதி சில்லரை வியாபாரிகளிடம் உருட்டி மிரட்டியும் வசூல் வேட்டை நடத்துவதில் தவறுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஏரியாவில் தங்கள் பலமென்ன என்பதை காட்டுவதற்கு விநாயகர் ஒருகருவியாக இருக்கிறார். விரும்பியோ விரும்பாமலோ அவரும் இந்த காவி நாயகர்களோடு ஒற்றை தந்தத்துடன் பயணிக்கிறார். கடல் வரை பயணித்து கரைந்தும் போகிறார்.
இந்தப்பயணம் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. அவர்களுக்கல்ல நமக்கு! ஞாயிறன்று காசி திரையரங்க சிக்னல் அருகே குட்டியானை என்று அழைக்கப்படும் டெம்போ ஆட்டோவில் ஒரு பெரிய பிள்ளையாரும் சில பொறுக்கி பக்தர்களும் கடற்கரைக்கு பயணித்துக் கொண்டிருந்தார்கள். ஏய் ஏய்.. ஆய் ஊய் என்கிற சப்தங்கள் ஒலிக்க அவர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். பிள்ளையார் ஆட்டோவின் மூலையில் அமரவைக்கப்பட்டிருந்தார்.
டிஷர்ட்டும் ஷார்ட்ஸும் அணிந்த ஒரு குட்டிப்பெண் பதினைந்து வயது இருக்கலாம். அவள் அந்த டெம்போவை ஒட்டி தன் ஸ்கூட்டியில் முந்தி செல்ல எத்தனிக்கிறாள்… ஆட்டோவில் இருந்த வாலிபர்கள் முதலில் விசிலடித்தனர்… பிறகு விநாயகர் மீதிருந்து பூக்களை கிள்ளி எரிந்தனர். அதற்கு பிறகு அதில் ஒரு பொறுக்கி பக்தன் தண்ணீர் பாக்கெட்டை எடுத்து அந்தப் பெண்ணின் மேல் பீய்ச்சி அடிக்கத் தொடங்கினான். அதோடு மோசமான வார்த்தைகளால் அந்த பெண்ணை பார்த்து கூறவும் ஆரம்பித்தான்.
அந்தப் பெண் கோபத்தில் ஏதோ பதிலுக்கு ஏதோ திட்ட ஆரம்பிக்க.. ஆட்டோவை அந்த பெண் மேல் ஏற்றுவதைப் போல ஓடித்து ஓட்டுகிறார் ஆட்டோ டிரைவர். உதயம் தியேட்டர் அருகே நூறடி ரோடு திரும்புகிற இடத்தில் அந்த பெண்ணை இடிப்பது போல ஒடிக்க.. ஸ்கூட்டி பெண் நிலைதடுமாறி அருகேயிருந்த தீயணைப்பு நிலையம் அருகிலிருக்கிற பஸ் ஸ்டான்ட் அருகே தடுமாறி விழுந்தாள். பெரிய காயமில்லை.. விழுந்ததும் அருகில் பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் உதவ ஆரம்பித்து விட்டனர்.
ஆட்டோ கொஞ்சதூரம் போய்.. ஸ்லோவானது.. அங்கிருந்து பெண் விழுந்ததை பார்த்து சிரித்தனர் பொறுக்கி பக்தர்கள். அதில் ஒருவன் சப்தமாக கத்த ஆரம்பித்தான் கணபதி பப்பா.. . மற்றவர்களும் அதையே சப்தமாக கத்த.. வண்டி அந்த திருப்பத்தில் காத்திருந்த பிள்ளையார் வண்டிகளின் நீண்ட வரிசையில் இணைந்தது.
இவர்களை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த நான் அந்த நீண்ட வரிசையை பார்த்து அதிர்ந்துபோனேன். அங்கே இவர்களைப் போன்ற ஆயிரக்கணக்கான பக்தர்களும் கூடவே பிள்ளையாரும் சிரித்த முகத்தோடு அமர்ந்திருந்தார். காவி எங்கும் வியாபித்திருந்தது. எல்லோர் கண்களும் சிவந்திருந்தது. அவர்களைப் பார்க்க ஒரு நீண்ட சண்டைக்காக காத்திருக்கிறவர்களைப் போல இருந்தது. மிகச் சிறிய தூண்டுதலிலும் கொலையோ கற்பழிப்பையோ கூட அரங்கேற்றுகிற ஆக்ரோஷத்துடன் இருந்தனர். காவல்துறை நண்பர்களும் கூட இக்கூட்டத்தினரிடம் அடக்கியே வாசிக்கின்றனர்.
இந்த காவி ரிப்பன் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமிருக்கின்றன. அதோடு இதில் இணைவோரில் கணிசமானவர்கள் இருபது வயதுக்கும் குறைவான இளைஞர்கள் என்பதும் இவர்கள் எல்லோருமே மூக்கு முட்ட குடிப்பவர்களாக சின்ன தூண்டுதலிலும் ஆகப்பெரிய வன்முறையை நிகழ்த்தி விடுகிறவர்களாக இருப்பதும் மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. வலுப்படுத்துகிறது.
நேற்று சந்தித்த அந்த டெம்போஆட்டோ இளைஞர்களின் முகத்தில் கண்களில் தெரிந்த வன்முறையை, அந்த பெண்ணின் மீது வன்மத்தோடு தண்ணீரை பீய்ச்சி அடித்து பகிர முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்த அந்த இளைஞனின் முகம் தூக்கத்திலும் பயமுறுத்தக்கூடியது… சாகும்வரை மறக்கவே முடியாதது.
நன்றி : அதிஷா
http://www.athishaonline.com/2013/09/blog-post_17.html
1 comment:
ஒரு தரப்புக்கு மோடி பிரதமராவது இறைவனின் சித்தம்; மறுதரப்புக்கோ மோடி ஒரு சாத்தான்.
மோடி பிரதமராகவே கூடாது என நினைப்பவர்களின் குற்றச்சாட்டுகள் பரவலாக அறியப்பட்டவைதான். கோத்ரா ரயில் எரிப்பு மரணங்களை அவர் கையாண்ட விதம், குஜராத் படுகொலை, என்கவுன்டர் கொலைகள், அவரது பாஸிச அணுகுமுறை எனப் பல. இக்குற்றச்சாட்டுகள் உண்மையெனில் மோடி நிச்சயம் பிரதமராகத் தகுதியானவர் அல்ல. ஆனால், இக்குற்றச்சாட்டுகள் உண்மையாகவே இருந்தாலும் அவை முக்கியமல்ல, ‘வளர்ச்சிப் பாதையில்’ இந்தியாவை வேகமாக முன்னெடுத்துச் செல்லும் அவருடைய திறனே முக்கியமானது என்று ஒரு கூட்டம் நினைக்கிறது.
கட்டுப்பாடற்ற வளர்ச்சியைவிட சமூக ஒருங்கிணைப்பே முக்கியமானது. வளர்ச்சி என்பது மனிதனின் மேம்பாட்டுக்குத்தான். மனித உயிர்களுக்கு உத்திரவாதம் இல்லாத சமூகத்தில் வளர்ச்சி எலும்புக்கூடுகளுக்குத்தான் பயன்படும்.
சுதேசி கொள்கையுடைய ஆர்எஸ்எஸின் சேவகர் ஒருவர் வளர்ச்சிப் பாதையில் தீவிரவாதியாகச் செயல்பட்டு கார்ப்பரேட்டுகளின் கனவுத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இவரைப் பல எதிர்ப்புகளையும் மீறிப் பிரதமர் வேட்பாளராக ஆர்எஸ்எஸ் முன்னிறுத்தியிருக்கிறது. இது வலதுசாரிகளின் கவனத்திற்குரிய முரண்பாடு.
மதச் சிறுபான்மையினர் அடக்கி ஒடுக்கப்பட வேண்டும்; அதேபோல, வளர்ச்சிப் பாதைக்குக் குறுக்கே வரும் பழங்குடியினர், மாவோயிஸ்டுகள், சுற்றுச்சூழலியலாளர்கள் போன்றவர்களும் அடித்து நொறுக்கப்பட்டு இந்தியா ‘வல்லரசு’ ஆக வேண்டும்; அதற்கு மோடி பிரதமராக வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இக்கருத்துகளை இவர்கள் பொது இடத்தில் பச்சையாக முன்வைப்பது அரிது.
சந்தையில் அடித்ததற்கும் நீதிமன்றத்தில் சாட்சி வேண்டும். எனவே சமூக உண்மை பல சமயங்களில் நீதிமன்ற உண்மையாக இருப்பதில்லை. ஒரு பேச்சுக்காக மோடி அப்பாவி என்று கொள்வோம்.
அப்படியெனில் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க அவருக்குத் திறன் இல்லை, கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை அவருக்குக் கையாளத் தெரியவில்லை, இந்தியச் சட்ட அமைப்பு முன்வைக்கும் ஒரு முதல்வரின் முக்கியக் கடமைகளான பொது மக்களின் உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாத்தல், சிறுபான்மையினரைப் பாதுகாத்தல் ஆகியவற்றை அவரால் நிறைவேற்ற முடியவில்லை, தனது காவல் அதிகாரிகளை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை, அவர்கள் அப்பாவி இளைஞர்களைச் சுட்டுக் கொன்றது அவருக்குத் தெரியவில்லை, எல்லாவற்றுக்கும் மேல் பல ஆண்டுகளான பின்னரும் உண்மையை விசாரித்தறிந்து நீதியை நிலை நாட்டவும் முடியவில்லை என்றே பொருள்படும். எனவே மோடி அப்பாவி என்று நினைத்தால்கூட பிரதமராகும் தகுதி அவருக்கு இல்லை.
மோடியின் போர் வாளாக அறியப்படும் அமித் ஷாவுக்கு உத்தரப்பிரதேசத்தின் பாஜக கட்சிப் பொறுப்பு கொடுக்கப்பட்ட பின்னர் அங்கு இந்துத்துவவாதிகளின் போக்கு தீவிரமடைந்துள்ளது. மதக் கலவரங்களும் படுகொலைகளும் பரவிவருகின்றன. மதவாதத் தீயை பாஜக அரசியல்வாதிகள் பரப்பினார்கள் என்பதும் சமாஜ வாதிக் கட்சியும் அரசும் நிர்வாகமும் அதற்கு உடந்தையாக இருந்தன என்பதும் ஊடகங்களால் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சிலர் சொல்வதுபோல மோடியின் பாதையில் குஜராத் கலவரம் ஒரு விதிவிலக்கல்ல, அதுவே தில்லிக்குச் செல்லும் அவர் செயல்முறை என்பதையே இவை காட்டுகின்றன.
எப்படிப் பார்த்தாலும் மோடி இந்தியாவுக்கு ஒரு பெரும் பிறழ்வாகவே இருப்பார்!
-கண்ணன்
Post a Comment