Followers

Monday, July 28, 2014

கோபப்பட வைத்த நிகழ்வு - ஒரு பாகிஸ்தானியோடு....

கோபப்பட வைத்த நிகழ்வு - ஒரு பாகிஸ்தானியோடு....

எனது பாஸூக்கு பாகிஸ்தானிகளிடம் நல்ல அபிப்ராயம் இல்லை. இந்தியர்களை உயர்வாக நடத்துவார். பாகிஸ்தானிகளை எந்த வகையிலாவது மட்டம் தட்டுவார். சவுதி முழுக்க பொதுவாக இதுவே நிலை. எனக்கு கீழும் முன்பு மூன்று பாகிஸ்தானிகள் வேலை செய்துள்ளனர். அவர்களின் வலியையும் அப்போது உணர்ந்திருக்கிறேன். இந்தியாவையும் இந்தியர்களையும் உயர்வாகவே மதிப்பர். நாம் நினைப்பது போல் இந்தியாவை அழிக்க எந்த நேரமும் அதே சிந்தனையிலேயே உள்ளவர்கள் பாகிஸ்தானிகள் என்ற எண்ணம் தவறு. அந்த நாட்டில் உள்ள நிச்சயமற்ற அரசியல் நிலவரங்களை சமாளிக்கவே அவர்களுக்கு 24 மணி நேரம் பத்தாது. ஆனால் ஒரு சில பாகிஸ்தானிகளுக்கு இந்தியா என்றாலே எரிச்சல் வரும். இவ்வாறு அவர்கள் நாடு பிரச்னையில் சிக்கித் தவிப்பதற்கு இந்தியாவே காரணம் என்று இன்றும் தவறாக எண்ணிக் கொண்டிருக்கும் பல பாகிஸ்தானியரை பார்த்துள்ளேன். அது மாதிரி எண்ணம் கொண்ட ஒரு பாகிஸ்தானி என்னிடம் அகப்பட்டான். அதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ஒரு முறை பிரதமராக மன்மோகன் சிங் ரியாத் வந்த போது நான் ஒரு வாடகை வண்டியில் ஒரு வேலையாக சென்றேன். அந்த வண்டியின் டிரைவர் நீண்ட தாடியுடன் தாலிபான்கள் தோற்றத்தில் இருந்தார். அப்போது மேம்பாலங்களில் இந்திய கொடியும், சவுதி கொடியும் ஒன்றாக பல இடங்களில் பறந்து கொண்டிருந்தது. அவர் என்னிடம் 'ஒரு காஃபிர் தலைவருக்கு எந்த அளவு மரியாதை கொடுக்கிறார்கள் பார்தாயா! பாகிஸ்தானிய தலைவர்கள் வந்தால் இந்த அளவு மரியாதை செய்வதில்லை இவர்கள்' என்று கோபப்பட்டார்.

'உங்கள் தலைவருக்கு மரியாதை செய்யவில்லை என்றால் அதற்கான காரணத்தை ஆராயாமல் எனது நாட்டு தலைவருக்கு மரியாதை செய்வதை நீங்கள் எப்படி எதிர்க்கலாம்?

'நீங்கள் முஸ்லிமா?'

'ஆம். நான் முஸ்லிம்தான்'

'பிறகு ஒரு காஃபிருக்கு சப்போர்ட் பண்ணுகிறாயா? இந்தியாவில் முஸ்லிம்களை இந்துக்கள் தினமும் கொல்வது உங்களுக்கு தெரியாதா?'

'எனது தாய் நாட்டில் அவ்வப்போது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரச்னை வருவது எனக்கும் தெரியும். இணையத்தை தினமும் பார்வையிடுகிறேன். இதை விட அதிகமாக பாகிஸ்தானில் நடக்கிறதே. தொழும் பள்ளியில் கூட குண்டு வைக்கிறீர்களே! அதற்காக நீங்கள் உங்களின் நாடான பாகிஸ்தானை வெறுக்கவில்லையே'

'இந்துக்களை பற்றி உனக்கு தெரியாது. பட்டால்தான் உங்களுக்கெல்லாம் புத்தி வரும்'

'தீவிரவாத இந்துக்களை எப்படி சமாளிப்பது என்பது இந்திய முஸ்லிம்களுக்கும் தெரியும். அது பற்றிய கவலை உனக்கு வேண்டாம்'

அதற்குள் எனது இடம் வரவே இறங்கிக் கொண்டேன். என்னை மனதுக்குள் திட்டிக் கொண்டே அந்த பாகிஸ்தானி வண்டியை வேகமாக எடுக்க ஆரம்பித்தான். நானும் சிரித்துக் கொண்டே எனது இடத்தை நோக்கி நகர ஆரம்பித்தேன். நமது நாட்டில் பல குழப்பங்கள் இருக்கலாம். அதனை ஒரு எதிரி நாட்டைச்சேர்ந்த வெறுப்பை உமிழும் ஒருவனிடம் பகிர்ந்து கொள்ள முடியாது இல்லயா....

ஒவ்வொரு நாட்டிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர் என்பதை உணர்ந்து கொண்டு எனது வேலையை பார்க்க ஆரம்பித்தேன்.

---------------------------------------------------------

பெருநாள் தொழுகையும் முடிந்து விட்டது. எனது ஃபித்ரா பணத்தை ரியாத் டிஎன்டிஜே அமைப்பிடம் சேர்ப்பித்து விட்டேன். அருமையான தூக்கம் ஒன்றை போட்டு விட்டு மதிய தொழுகையை தொழுது விட்டு நண்பரோடு பிரியாணியும் சாப்பிட்டாகி விட்டது. இன்று நாமெல்லாம் மகிழ்ச்சியோடு பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது காஸா மக்களுக்கு தினமும் ஏவுகணையை பரிசாக அனுப்பிக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். அனைத்து மக்களும் இன்பமாக வாழும் சூழலை அமைத்துக் கொடுக்க அந்த ஏக இறைவனிடம் நமது பிரார்த்தனையை இந்த நல்ல நாளில் வைப்போம்.

அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

1 comment:

Anonymous said...

இந்தியாவை விட்டுக்கொடுக்காத உங்கள் நாட்டுப்பற்றை மிகவும் பாராட்டுகிறேன் ஐயா!