Followers

Tuesday, July 08, 2014

தீவிரவாதம் பற்றி திரு அரிசோனனுக்கு அளித்த பதில்!

உயர் திரு அரிசோனன் அவர்களே!

//உயர்திரு ஜனாப் சுவனப்பிரியன் அவர்களே,
தகவலுக்கு மிக்க நன்றி.
என் உணர்ச்சிப்பெருக்கின் காரணத்தைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். எனவே, அதைத் தவறாகப் புரிந்து கொள்ளவேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.//

இதில் தவறாக நினைக்க ஒன்றுமேயில்லை சகோதரரே! உங்கள் நிலையில் நான் இருந்தாலும் அவ்வாறுதான் பின்னூட்டமிட்டிருப்பேன். ஏனெனில் ஆரம்பத்திலிருந்து இந்து முன்னணி தலைவர்கள் கொல்லப்பட்டால் உடனே காவல் துறை முதற் கொண்டு நமது பத்திரிக்கைகள் வரை கையை காட்டுவது இஸ்லாமிய இளைஞர்களை நோக்கித்தான். எனவே தான் உங்களுக்கும் முதலில் இஸ்லாமியர்கள் மேல் சந்தேகம் வந்தது. அந்த சந்தேகம் தற்போது நிவர்த்தியானது கண்டு மகிழ்ச்சி. உங்களின் பல கட்டுரைகளும், பின்னூட்டங்களும் நடுநிலையாக இருக்கும். தொடரட்டும் உங்கள் பணி.

இனி திரு தாயுமானவன் எழுதிய பின்னூட்டத்தையும் பார்ப்போம்.

//ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது இந்து முன்னணியிலும், ஆர்.எஸ்.எஸ்ஸில் இருப்பவர்கள் யாரும் தேச பக்தியும் தெய்வ பக்தியும் கொண்டவர்கள் கிடையாது. அனைவரும் கட்ட பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் போன்று மக்களை ஏமாற்றி பணம் பறிப்பவர்கள் தான். உண்மையான சேவகர்கள் அனைவரும் எழுபதுகளிலேயே காலவதி ஆகி விட்டார்கள்.
தொழில் போட்டியில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க, எதிர் தரப்பில் இருந்து தன்னை காத்து கொள்ள இங்கு வந்து சேர்ந்து விடுகிறார்கள். அவர்கள் செய்யும் அட்டுழியங்களை பற்றி மேற்படி அமைப்பின் தலைவர்களும் கண்டுகொள்ளவதில்லை. அவர்களுக்கு புரவலர்களாக இருந்து புரந்து காப்பதற்கு பணம் கொடுத்தால் போதும். நகரில் ஒரு முக்கிய பொறுப்பையும், பதவியையும் கொடுத்து விடுவார்கள். எதார்த்தத்தில், மேற்படி இந்து முன்னணி.ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் அனைத்தும் சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு எவ்வளவோ நாட்கள் ஆகி விட்டன.//

திரு தாயுமானவனின் கருத்துக்களோடு முற்றிலும் ஒத்துப் போகிறேன். ஒரு சில நல்லவர்கள் இந்து முன்னணியிலும், ஆர்எஸ்எஸிலும் இருக்கலாம். ஆனால் இன்று பெரும்பாலனவர்கள் தங்களின் தொழிற் போட்டியை சமாளிக்கவும், தங்களின் எதிரிகளை சமாளிக்கவும், சமூக விரோத செயல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் ஒரு புகலிடமாக இந்து முன்னணியை தேர்ந்தெடுக்கின்றனர். இதுதான் யதார்த்தம். கோபத்தில் எதிர் தரப்பினர் இந்த தலைவர்களின் மேல் கை வைத்தால் ஒட்டு மொத்த பழியும் இஸ்லாமியர்கள் மேல் விழுகிறது. முக்கிய குற்றவாளிகள் இதனால் தைரியமாக வெளியில் உலவுகின்றனர்.

நீங்கள் பெரியவராக மதிக்கும் ராம கோபாலனின் மேடைப் பேச்சுக்களை நீங்கள் கேட்டதுண்டா? அனைத்தும் வன்முறையை தூண்டக் கூடிய பேச்சுக்கள். ஆபாசமான அர்ச்சனைகள். முழு பேச்சும் இஸ்லாத்தையும், கிறித்தவத்தையும் தாக்கும் பேச்சுக்களாக இருக்கும். அவர் பேச்சில் இந்து மதத்தின் பெருமைகள் எதுவும் இருக்காது. வெறும் வசை மொழிகளே! விவேகானந்தரும், கிருபானந்த வாரியாரும், குன்றக்குடி அடிகளாரும், மறைந்த காஞ்சிப் பெரியவரும் இந்து மத மேன்மைக்காக பல தொண்டுகளை ஆற்றியுள்ளனர். அவர்களை இன்றும் நான் மதிக்கிறேன். அவர்களோடு ராம கோபாலனை சேர்க்க வேண்டாம். ராம கோபாலன் போன்றவர்களால் இந்து மதத்துக்கு இழுக்கே!

ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தன்னிடம் எதிராளி கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லாதவன்தான் ஆயுதத்தை கையிலெடுப்பான். குர்ஆனைப் பற்றியோ நபி மொழிகளைப் பற்றியோ எந்த கேள்விகள் கேட்டாலும் அதற்கான பதில் இஸ்லாமியர்களிடத்தில் உண்டு. எனவே இந்து முன்னணியோ ராம கோபாலனோ அல்லது அவரது தொண்டர்களோ முஸ்லிம்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. இந்துக்களிலும் 80 சதமான பேர் ராமகோபாலனை புறக்கணித்தே வருகின்றனர். அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான்களாக உறவு முறை சொல்லிக் கொண்டு சகோதர வாஞ்சையோடுதான் இந்துக்களும், முஸ்லிம்களும் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர். எனவே இந்து முன்னணி தலைவர்களை கொல்ல வேண்டும் என்பது எந்த முஸ்லிமின் நோக்கமும் அன்று. எங்காவது ஒரு முஸ்லிம் சம்பந்தப்பட்டிருந்தால் அது தொழில் போட்டியால் வந்ததாகத்தான் இருக்கும். மதத்தின் நோக்கத்தில் இது போன்ற கொலைகளை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இஸ்லாமியர்களுக்கு இல்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

எங்காவது தீவிரவாத செயல்களில் எந்த முஸ்லிமாவது ஈடுபட்டால் அவனை முதலில் காவல் துறையிடம் ஒப்படைப்பதும் முஸ்லிம்களாகத்தான் இருக்கும். கோயம்புத்தூர் காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட போது அந்த முஸ்லிம் இளைஞர்களை பிடித்து காவல் துறை வசம் ஒப்படைத்ததும் முஸ்லிம்கள்தான் என்பதையும் மறந்து விட வேண்டாம்.

எனவே அமைதிப் பூங்காவான தமிழகத்தை மேலும் சிறப்புற செய்து இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக மாற்ற இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித்தவர்களும் ஒன்றிணைந்து போராடுவோம்.




No comments: