
திருநெல்வேலி: நெல்லை அருகே அரசு பஸ் மோதியதில் கால் துண்டிக்கப்பட்டவர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். மீட்க முயற்சிக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நேற்று தென்காசிக்கு புறப்பட்ட அரசு பஸ் ஆலங்குளம், பாவூர்சத்திரத்திற்கு இடையே சாலைப்புதுாருக்கு மதியம் மதியம் 1.20 மணிக்கு வந்தது. எதிரே பைக்கில் வந்த பாவூர்சத்திரம் பிஸ்கட் நிறுவனத்தில் பணியாற்றும் கல்லுாரணி முருகன்,45, மீது மோதியது. இதில் அவரது வலது முழங்காலுக்கு கீழ் பகுதி துண்டானது. இதனால் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பஸ்சில் வந்தவர்கள், 108 இலவச ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். 20 நிமிடங்களுக்கும் மேலாக ஆம்புலன்ஸ் வரவில்லை. தினமலர் புகைப்படக்காரர் எஸ்.பி., நரேந்திரன் நாயருக்கு 1.40 மணிக்கு மொபைல் போனில் தகவல் தெரிவித்தார். எஸ்.பி., உத்தரவின் பேரில் பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வாகனத்தில் வந்தனர். போலீசார் வந்த பிறகும் ஆம்புலன்ஸ் வரவில்லை. ஒரு போலீஸ்காரர் 108 ஆம்புலன்சை அழைத்தார். ஆம்புலன்ஸ் தரப்பிலோ இதே சம்பவத்திற்கு ஏற்கனவே 'கால் புக்' செய்துள்ளோம். இப்போதைக்கு வண்டி இல்லை. வந்த பிறகு அனுப்புகிறோம் என பதில் கூறினர். இன்ஸ்பெக்டர் விஜயகுமாரே தனது காரில் அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. காலை இழந்து ரோட்டில் ரத்தவெள்ளத்தில் முருகன் உயிருக்கு போராடுவது குறித்து பிஸ்கட் கம்பெனி உரிமையாளருக்கு தகவல் தெரியவந்த பிறகே அவர், ஒரு வேனை அனுப்பி வைத்தார். அதில் முருகனை நெல்லை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர் அங்கிருந்து மீட்கப்படும்போது மணி பிற்பகல் 2.10 ஆகிவிட்டது. விபத்தில் சிக்கி 50 நிமிடங்களுக்கும் மேலாக முருகன் உயிருக்கு போராடியுள்ளார். துண்டிக்கப்பட்ட காலை இணைக்க முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
தின மலர்
14-07-2014
No comments:
Post a Comment