Followers

Wednesday, December 06, 2017

சிறு வயதில் என்னவொரு பக்குவம்?

சிறு வயதில் என்னவொரு பக்குவம்?

முஹம்மது அல் ஜூன்தே தனது 12 வது வயதில் தன்னைச் சுற்றியிருக்கும் சூழலை பார்க்கிறான். வீடுகளை இழந்து உடமைகளை இழந்து அனாதரவாக பல நூறு குடும்பங்கள் கூடாரங்களில் தங்கி சிரமப்படுவதை பார்க்கிறான். அவன் வயதையொத்த சிறுவர் சிறுமிகள் கல்வி கற்காமல் சுற்றித் திரிவதை கண்டு மனம் வெதும்புகிறான். நாம் ஏன் ஒரு பள்ளியை ஆரம்பிக்கக் கூடாது என்று யோசிக்கிறான்.

தனது உறவினர்களிடமும் தனது நண்பர்களிடமும் தனது எண்ணத்தை பகிர்கிறான். முதலில் தயங்கிய அனைவரும் பிறகு தோள் கொடுத்தனர். பலரிடமிருந்து கிடைத்த உதவிகளைக் கொண்டு அகதிகள் முகாமுக்கு அருகில் ஒரு பள்ளியை துவக்கினான். ஆங்கிலமும், கணக்கும் முதல் பாடமாக அந்த சிறார்களுக்கு போதிக்க தொடங்கினான். அகதி முகாமில் இருந்த பல படித்தவர்கள் ஆசிரியர்களாக மாறி பாடம் எடுக்க தொடங்கினர். கடந்த மூன்று வருடங்களுக்குள் பள்ளியில் படிப்போரின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளது.

'நான் ஆசிரியனாக அல்ல... அவர்களின் தோழனாக அவர்களின் குடும்ப உறுப்பினர்களாக அவர்களோடு பழகுகிறேன். 11 வருடங்களாக உள் நாட்டுப் போரில் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே வருங்கால சிரியாவை உருவாக்கும் சிற்பிகளாக இவர்கள் திகழ வேண்டும் என்று நினைக்கிறேன்.' என்கிறான் இந்த சிறுவன்.

2017 ஆம் ஆண்டுக்கான 'அகில உலக சிறுவர்களுக்கான அமைதிப் பரிசு' முஹம்மது அல் ஜூன்தேவுக்கு கிடைத்துள்ளது. இந்த சிறுவனைப் போல் பாதிக்கப்படும் ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் இளைஞர்கள் உருவாக வேண்டும்.

தகவல் உதவி
சவுதி கெஜட்

05-12-2017


No comments: