சில நாட்களாக மண்டையைக் குடையும் ஒரு சம்பவம்... (கொஞ்சம்
பெரிய பதிவு. ஆனால் சொல்லாமல் கடந்துபோக முடியவில்லை.)
புதிய வேலை, புதிய
சூழல், புதிய நண்பர்கள் என்று பெங்களூரில் ஒரு மாதமாக வாழ்க்கை
செல்கிறது. கோவையை விட்டுப் பிரியவேண்டிய கட்டாயம் என்றாலும் ஒரு மாற்றத்துக்காக
ஏற்றுக்கொண்டு பார்ப்போமென்று இங்கு வந்துவிட்டேன். ஆனால் அதைச் சொல்லவல்ல இந்தப்
பதிவு. தொடரவும்.
புதிய வேலை, புதிய
நண்பர்கள் என்று சொன்னேனல்லவா. அதில்தான் சம்பவமே. எங்கள் batchல்
நான் மட்டும்தான் தமிழ்நாடு. சொல்லப்போனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாநிலம். ஆனால்
எங்களுக்குள் இந்திதான் பிரதான மொழி. நான் மட்டும் ஆங்கிலம். இதையும் சொல்லவல்ல
இந்தப் பதிவு. தொடரவும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாநிலமென்று சொன்னேனல்லவா. அதில்
மூவர் கேரளா. ஓரளவு என்னிடம் தமிழில் பேசுபவர்கள் இவர்கள்தான். அதைத்தாண்டி தோழி
ஒருவர். பெங்களூர்வாசி. ஆனால் நன்றாகவே தமிழ் பேசுபவர் என்பதால் சிறிது
நாட்களிலேயே என்னுடன் நல்ல நட்பாகிவிட்டார். அரட்டை, கிண்டல், கேலி, பாடல், கலாய்ப்பு
என்று கலகலப்பாகவே இருவரும் வேலைசெய்வோம். தேடிவந்து பேசுவார், வம்பிழுப்பார், சந்தோஷம், சோகம்
என எல்லாவற்றையும் பகிருவார். வேலையில் சந்தேகம், சிக்கல்
என எல்லாவற்றுக்கும் என்னை நாடுமளவுக்கு நெருக்கம்.
இப்படியிருக்க டிசம்பர் 23, அதாவது
கிறிஸ்துமஸுக்கு இரண்டு நாட்கள் முன்பு நடந்தது அந்த சம்பவம். கேரள நண்பர்களுடன்
பேசிக்கொண்டிருந்தேன். அருகில் தோழியும் இருந்தார். கேரள நண்பர்களில் ஒருவர்
கிறிஸ்த்தவர். இன்னொரு கேரள நண்பர், கிறிஸ்த்தவ
நண்பர் கிறிஸ்த்துமஸ் முடிந்து கேரளாவிலிருந்து வருகையில் தனக்கு பீஃப் ஃப்ரை
வீட்டிலிருந்து எடுத்துவருவதாகச் சொன்னதை என்னிடம் சொல்ல, நான்
அதை கிறிஸ்த்தவ நண்பரிடம் உடனே போட்டு உடைத்தேன்.
“என்ன மச்சி.. அவனுக்கு மட்டும் பீஃப் ஃப்ரைய்யா? எனக்கில்லையா?” எனக்கேட்க, அதற்கு
கிறிஸ்த்தவ நண்பர், “இல்ல மச்சி. அது காலைலயே செஞ்சிடுவாங்க.
நானும் இவனும் சாய்ங்காலம் கிளம்புறோம். உனக்கு அடுத்தநாள்தான் தரமுடியும்.
அதுக்குள்ள கெட்டுப்போயிடும்” என்று விளக்கிக்கொண்டிருக்க, அருகில்
இருந்த நம் தோழி அதை அறைகுறையாக் கேட்டு, நாங்கள்
பேசுவது சிக்கன் பற்றி என்று நினைத்து, “சிக்கனெல்லாம்
அன்னிக்கே சாப்பிட்டுடனும். அடுத்த நாள் வெச்சு சாப்பிடக்கூடாது” என்று
விளக்கமளித்தார். அப்போது கிறிஸ்த்தவ நண்பரும், நானும், “நாங்க
பேசுறது சிக்கன் பத்தியில்ல. பீஃப்” என்றொம்.
ஒருநொடி திகைத்த தோழி என்னைப் பார்த்து, “நீ
பீஃப் சாப்பிடுவியா?” என்றார். சற்றும் யோசிக்காமல் ஆர்வமாக
“ம்ம்ம்..” என்று தலையசைத்தேன். உடனே தனது chairஐ
(office chair with wheels) இரண்டடி
பின்னால் இழுத்துக்கொண்டு தனது கணினியைப் பார்த்து திரும்பினார். யோசித்தார்.
பிறகு என்னைப் பார்த்து, “என்கிட்ட பேசாத. சரியா?” என்றார்.
நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. “ஓய்.. என்னாச்சு?” என்றேன்
சிரித்துக்கொண்டே. “நிஜமாதான் சொல்றேன். பேசாத. சரியா?” என்றார்.
அதன்பிறகுதான் கவனித்தேன். அவர் முகத்திலோ, “பேசாத”
என்ற வார்த்தையிலோ கோபம் தெரியவில்லை. மாறாக, பதற்றம்
தெரிந்தது.
“இப்ப என்னாச்சு?”
“ஒன்னுமில்ல. விடு.”
“ஏன் இதுவரை யாரும் பீஃப் சாப்பிட்டதா நீ கேள்விப்பட்டதே
இல்லையா?”
“அதப் பத்தி பேசாத.
ப்ளீஸ் (தலையில் கைவைத்துக் கொண்டு). மாட நான் சாமி மாதிரி நினைப்பேன். நாம
கும்பிடுற தெய்வம். அதப்போயி நீ... வேணாம் விட்டுடு.”
கொஞ்ச நேரம் அமைதியானவர் பிறகு எழுந்து சென்று சக
தோழிகளுடன் ஐக்கியமானார். அதன்பிறகு வேலைமுடிந்து கிளம்பும்வரை அவர் என்னிடம்
பேசவில்லை. நானும் பேசவில்லை.
இந்த சம்பவத்தில் அந்தத் தோழி மீது கோபமோ, என்
மனதை புண்படுத்திவிட்டார் என்ற வருத்தமோ சற்றும் இல்லை. மாறாக மனம் எதையெதையோ
யோசித்தது. எங்கெங்கோ சென்றது.
சிக்கன் சாப்பிடுவது பற்றி சாதாரணமாக டிப்ஸ் கொடுக்கும்
அவருக்கு மாட்டுக்கறி என்றதும் அவ்வளவு சென்ஸிடிவ்வான உணர்வு எங்கிருந்து வந்தது? மிகக்குறைந்த
நாட்களிலேயே அவ்வளவு சோஷியலாக பழகிய ஒருவர், மாட்டுக்கறி
என்கிற வார்த்தையை கேட்டதுமே தலைகீழாக மாறுவதற்கு எந்த இடம் ஆரம்பப் புள்ளியானது?
அல்லது இப்படி உணருபவர்கள்தான் இத்தனை நாட்களாக நாம்
செய்திகளாகக் கடந்துவந்த மாட்டுக்காக மனிதர்களைக் கொல்லும் ஒரு காட்டுமிராண்டிக்
கூட்டத்தின் மதஅரசியலுக்கு மூலதனமா என்று மனம் அசைபோட்டது.
சமீபமாக தேயத்தேய திரும்பத்திரும்ப பார்த்த அம்பேத்கர்
படத்தின் ஒவ்வொரு வசனங்களும் எதிரொலித்தது. ஒருவன் தாழ்த்தப்பட்டவனாகவோ, தீண்டத்தகாதவனாகவோ
வெறுக்கப்பட, அந்தத் தோழி போன்ற வெள்ளந்தி மனம்படைத்த, இந்தியாவின்
ஆபத்தான அரசியலைத் துளியளவும் அறியாத, பெரும்பான்மை
மக்கள்தான் தொடக்கப்புள்ளியா? அந்த
வெள்ளந்தி மனதுக்குள், மாட்டுகறி என்பது ஒரு சமூகத்தின் வாழ்வுவழி அடையாளம்
என்பதைவிட, அது தீண்டாமை, அருவறுப்பு
போன்றவற்றின் அடையாளம்தான் என்று இயற்கையாகப் பதிந்தது எப்படி?
இந்துமதம் என்றொன்று இந்துக்களிடம் புனிதப்படுவது அந்தத்
தோழி பதட்டமடைந்த அந்த ஒரு நொடியிலா? அத்தனை
நாள் அந்நியோன்யத்தையும் தாண்டி, அந்த ஒரு
நொடிப்பொழுதில் அந்தத் தோழியின் கண்களுக்கு நான் தீண்டத்தகாதவனாக மாறவிட்டேனா? அவ்வளவு
நாட்கள் எங்களுக்குள் இருந்த ஒரு சகஜமான உணர்வுப்பறிமாற்றம் அந்த ஒரு நொடியில்
சுக்குனூறாகச் சிதறிப்போனதா? அது எங்கோ
காவிக்கொடியுடன் கோஷமெழுப்பும் ஒரு கூட்டத்திற்குக் கிடைத்த வெகுமதியா? மனித
உணர்வுகளை நொடிப்பொழுதில் மாற்றும் வல்லமை படைத்ததா மதஅரசியல்? இன்னும்
என்னென்னவோ மனதுக்குள் ஓடியது.
அன்றிரவு நிம்மதியான உறக்கமில்லை. அப்படி ரியாக்ட் செய்த
தோழியிடம் மாட்டை வைத்து நடத்தப்படும் மதஅரசியல் என்கிற இழிவைப்பற்றி மனதுக்குள்
இருப்பதையெல்லாம் அந்த நொடியே கொட்டித்தீர்த்திருக்க வேண்டுமென்று ஒருபக்கம்
தோன்றியது. ஆனால் மறுகனமே, அத்தனை நாளில் வளர்ந்த நட்பை மாட்டுக்கறி என்கிற ஒரு
வார்த்தையால் அப்படியே உதறத்துணிந்த ஒருவரிடம் மேற்கொண்டு என்ன விளக்கி என்ன
பயனென்றும் இன்னொரு பக்கம் சிரிக்கத் தோன்றியது.
இனி அந்தத் தோழியை எப்படி சகஜமாக அணுகுவேன் என்று
தோன்றியது. அதே உணர்வு அவருக்கும் இருக்குமா என்பதல்ல என் கவலை. அப்படியே அவருக்கு
இருந்தாலும் “அவன் மாட்டுக்கறி திங்கிறவன். அருவறுப்பானவன்” என்றுதான் தோன்றும்
என்பதில் ஐயமில்லை.
ஆனால் என்னால் அவரை சகஜமாக அணுக முடியாது என்பதற்கான காரணம்
என்ன தெரியுமா? யாரோ, எங்கோ, எப்போதோ, ஏதோ
ஒரு மூலதனத்துக்காக துவக்கிய ஒரு நம்பிக்கையுணர்வால் இன்று அந்தத் தோழி போன்ற பல
வெள்ளந்திகளால் (அவர்களே அறியாமல்) சகமனிதனை சமமாக பாவிக்க முடியாமல் போனதே என்ற
பரிதாபமும், மனித உணர்வுகளையே தனக்கேற்றார்போல் ஆட்டுவிக்கும் சக்தி
படைத்த மதஅரசியலின் மேலுள்ள தீராத வெறுப்பும்தான் காரணம்.
செத்தாலும் சாதி, மத
வெறுப்பாளனாகவே சாக விரும்புகிறேன்.
| By Vaishnav Sangeeth