Followers

Wednesday, April 25, 2018

43 வருடங்களுக்கு முன் ஒருநாள்.....


43 வருடங்களுக்கு முன் ஒருநாள்.....

ஆம்.... அப்போது எனக்கு 10 வயது  இருக்கும். எனக்கு சுன்னத் கல்யாணம் பண்ணப் போகிறோம் என்று வீட்டில் சொன்னார்கள். முதலில் ஒன்றும் புரியவில்லை.  உஸ்தா வந்தார். ஹஜ்ரத் வந்து ஒரு நீண்ட துவா ஒன்றை அரபியில் ஓதினார். விருத்த சேதனம் பண்ணுவதற்கும் துவாவுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.:-) நுனி தோல் நீக்கப்பட்டது. வலி உயிர் போனது. இரண்டு நாட்கள் சரியான வலி. மயக்க மருந்தெல்லாம் அப்போது கொடுப்பதில்லை. மேலே துணி கட்டப்பட்டு படுக்க வைக்கப்பட்டடேன். ஏழு நாட்கள் வித விதமான சாப்பாடு. சத்தான சாப்பாடு. தோல் நீக்கும் போது ரத்தம் வெளியேறியதால் அதனை ஈடு கட்டுகிறார்களாம்.

ஏழாம் நாளும் வந்தது. மாலையிடும் நிகழ்ச்சி. வழக்கமாக ஹஜ்ரத்தும் வந்தார். அரபியில் துவாவும் ஓதினார். மாலையிடுவதற்கும் அரபியில் துவா ஓதுவதற்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் கேட்கவில்லை. வந்திருந்த எல்லோருக்கும் புரிந்ததோ புரியவில்லையோ ஆமீன் சொன்னார்கள். அதன் பிறகு மாலையிடப்பட்டது. தலையில் சேரா என்று ஒன்றை கட்டினார்கள். கையில் பூச்செண்டு கொடுத்தார்கள். மல்லிகைப்பூ மணம் கம கமவென்று வீடு முழுக்க நிறைந்திருந்தது. சொந்தங்கள் அனைவரும் வந்து சீமாட்டி கட்டினார்கள். அதன் பிறகு தப்ஸ் குழு ஒன்று வந்து பாட்டு பாடி ஒருவிதமாக டான்ஸ் ஆடினார்கள். பிறகு ஜோடித்த காரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டேன். பிறகு வீட்டில் தடபுடலாக விருந்து ஏற்பாடுகள். அன்றைய காலத்துக்கு 50 ஆயிரமோ அறுபதாயிரமோ செலவாகியிருக்கும். விருத்த சேதனம் எனும் நிகழ்வு ஒரு வழியாக முடிந்தது.

அதன் பிறகு எனது திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். அவர்களுக்கு ஐந்து வயது ஏழு வயது இருக்கும் போது அதே விருத்த சேதனம் செய்ய வேண்டும். எனது தாயாரும் சொந்தங்களும் 'உனக்கு பண்ணியது போல் தடபுடலாக செய்யலாமே' என்று சொன்னார்கள். அதற்கு நான் 'நபி காட்டித் தராத ஒரு விருந்து நமக்கு தேவையில்லை. அநாவசிய செலவுகளும் நான் செய்ய மாட்டேன்' என்று சொல்லி விட்டு எங்கள் ஊரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு இருவரையும் அழைத்துச் சென்று யாரிடமும் சொல்லாமல் விருத்த சேதனம் செய்து விட்டு வீட்டுக்கு அழைத்து வந்து விட்டோம். மாலையிடல் இல்லை: கூட்டு துவா இல்லை: விருந்து இல்லை: பல லட்சங்கள் செலவு இல்லை. ஏகத்தவ சிந்தனை வந்ததில் சமூகத்தில் ஏற்பட்ட பல மாற்றங்களில் இதுவும் ஒன்று. வசதி இல்லாதவர்கள் வட்டிக்கு கடன் வாங்கி குழந்தைகளின் விருத்த சேதன நிகழ்வை நடத்துவது முன்பெல்லாம் அதிகம் இருக்கும். தற்போது கிராமங்களில் அதை எல்லாம் பார்க்க முடிவதில்லை.

தற்போது 17 ஆம் ஆண்டு இலவச கத்னா நிகழ்வு என்ற அறிவிப்பை பார்த்தேன். பல ஏழை குடும்பங்கள் இதனால் பலன் பெறும். பல நூதன பழக்கங்களும் ஒழிக்கப்படும். இது போன்று ஒவ்வொரு கிராமங்களிலும் நடத்தி ஏழைகளின் சுமையை குறைக்க அமைப்புகள் ஆர்வம் காட்ட வேண்டும்.

எல்லா புகழும் இறைவனுக்கே!



1 comment:

Dr.Anburaj said...

ஸ்ரீநாராயணகுரு இந்துமத்திலும் ஒரு எளிமையை போதித்து வருகின்றாா். கேரளத்துக் இந்துக்கள் பயன் பெற்று வருகின்றாா்கள்.இந்து தமிழ்ன் எமாளியாக தேற்றுவாா் இன்றி ... ?