சுய மரியாதையை பேணச் சொன்னது இஸ்லாம்!
இந்த வீடியோவில் புத்த பிக்குகள் நடந்து வர சீடர்கள் கீழே படுத்து அவர்களுக்கு விரிப்பாக ஆகின்றனர். இதனை இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது. நபிகள் நாயகம் வரும் போது அவர்களுக்காக எழுந்திருப்பதையும் இஸ்லாம் தடை செய்தது
நபிகள் நாயகம் (ஸல்) காலத்து மக்கள் தமக்கு துன்பங்கள் நேரும் போது தமது ஆடைகளைக் கிழித்துக் கொள்வார்கள். தமது கன்னத்தில் அறைந்து கொள்வார்கள். இந்தச் செயலைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கை செய்தார்கள்.
கன்னங்களில் அடித்துக் கொள்பவனும், சட்டைகளைக் கிழித்துக் கொள்பவனும், மடத்தனமான வார்த்தைகளைக் கூறுபவனும் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்லர்.
நூல் : புகாரி 1297, 1298, 3519
தன்னைத் தானே ஒருவன் வேதனைப்படுத்திக் கொண்டால் அவனுக்கும், இஸ்லாத்துக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகப் பிரகடனம் செய்தார்கள்.
ஒரு முதியவர் தனது இரு புதல்வர்களால் நடத்திச் செல்லப்பட்டதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். ஏன் இவர் நடந்து செல்கிறார்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்து விட்டார் என விடையளித்தனர். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது என்று கூறி விட்டு வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு அவருக்குக் கட்டளையிட்டார்கள்.
நூல்: புகாரி 1865, 6701
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் (பள்ளிவாசலில்) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் வெளியில் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவரைப் பற்றி விசாரித்த போது அவரது பெயர் அபூ இஸ்ராயீல்; (நாள் முழுவதும்) உட்காராமல் வெயிலில் நிற்பதாகவும், எவரிடமும் பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பதாகவும் இவர் நேர்ச்சை செய்திருக்கிறார் என்று மக்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பேசச் சொல்லுங்கள்! நிழலில் அமரச் சொல்லுங்கள்! நோன்பை மட்டும் அவர் முழுமைப்படுத்தட்டும் என்று கட்டளை பிறப்பித்தார்கள்.
நூல்: புகாரி 6704
கடவுளின் அன்பைப் பெறலாம் என்பதற்காக இது போன்ற சிறிய அளவிலான துன்பத்தைக் கூட தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறி விட்டார்கள்.
பொதுவாக மக்கள் அனைவரும் துறவறம் பூணுவதில்லை என்றாலும் அது உயர்ந்த நிலை என்று மக்கள் நினைக்கிறார்கள். மதகுருமார்கள் போன்ற தகுதியைப் பெற்றவர்கள் துறவறம் பூணுதல் நல்லது என நம்புகிறார்கள். துறவறம் பூணாதவர்களை விட துறவறத்தைப் பூண்டவர் உயர்ந்தவர் என்றும் மக்கள் நம்புகின்றனர்.
ஆனால் இஸ்லாம் இதையும் எதிர்க்கிறது.
கடவுளுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதாக ஒருவர் எண்ணிக் கொண்டு துறவறம் பூணுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உஸ்மான் என்ற தோழர் இருந்தார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் துறவறம் பூணுவதற்கு அனுமதி கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளிக்க மறுத்து விட்டனர். அவருக்கு அனுமதி அளித்திருந்தால் நாங்களும் ஆண்மை நீக்கம் செய்திருப்போம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு தோழர் ஸஅது பின் அபீவக்காஸ் கூறுகிறார்.
நூல்: புகாரி 5074
ஆண்மை நீக்கம் செய்து கொள்ள சிலர் அனுமதி கேட்ட போது ஏக இறைவனை நம்பியவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்ததை நீங்கள் தடை செய்து கொள்ளாதீர்கள் என்ற திருக்குர்ஆன் வசனத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.
நூல்: புகாரி 4615
No comments:
Post a Comment