Followers

Monday, April 02, 2018

ரொட்டியைக் குப்பைத் தொட்டியில் போடலாமா?


ரொட்டியைக் குப்பைத் தொட்டியில் போடலாமா?

சவூதியில் மக்கள் ரொட்டித் துண்டை குப்பைத் தொட்டியில் போடாமல் அதன் பக்கத்தில் போடுகின்றனர். இதற்கு குர்ஆன் ஹதீஸ் வழியில் ஆதாரம் இருக்கின்றதா?
செய்யது மஸ்ஊத்.

பதில் :
வீண் விரயம் செய்வது இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.

பொருள்களை வீணாக்குவதை இறைவன் வெறுக்கின்றான் என்பது நபிமொழி.
நூல் : புகாரி 1477
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.
திருக்குா்ஆன் 7:31
உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரயம் செய்து விடாதீர்! விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
திருக்குா்ஆன் 17:26,27
வீண் விரயம் செய்வது ஷைத்தானுடைய செயல் என்றும் ஆதலால் வீண் விரையம் செய்யக்கூடாது என்றும் இறைவன் மேற்கண்ட வசனங்களில் தெரிவிக்கின்றான்.
உணவுப் பொருட்களில் நமக்கு தேவையான அளவை அறிந்து மீதம் ஏற்படாதவாறு நமது சாப்பாட்டு முறையை அமைத்துக் கொள்வது முஸ்லிம்களின் மீது அவசியமாகும். மீதம் வந்தால் கூட அதை வீண் விரயம் செய்யாது பிறருக்கு வழங்கி விட வேண்டும்.
நம்மால் இயன்ற அளவுக்கு திட்டமிட்டு உணவைத் தயாரித்தாலும் சில நேரம் உணவுகள் மீதமாகிவிடும். அதைப் பெற்றுக் கொள்வோரும் கிடைக்க மாட்டார்கள். வீட்டுக்குள் வைத்திருந்தால் அந்த உணவுப் பொருள் கெட்டுப்போய் விடும். வீட்டில் இருப்பதால் ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தி விடும். இது போன்ற சூழ்நிலையில் குப்பைத் தொட்டியில் போடுவது வீண்விரயத்தில் சேராது.
பணத் திமிரைக் காட்டுவதற்காக எப்போது பார்த்தாலும் மீதமாகும் என்பதைத் தெரிந்து கொண்டே கூடுதலாக சமைத்து குப்பைத் தொட்டியில் போட்டால் அது வீண் விரயம் செய்த குற்றத்தில் சேரும்.
அவ்வாறு குப்பைத் தொட்டியில் போடும் போது ஒவ்வொரு நாட்டிலும் பலவிதமான குப்பைத் தொட்டிகளை அமைத்து இருப்பார்கள்.
சீக்கிரம் மக்கிப் போகும் குப்பைகளுக்கு தனி குப்பைத் தொட்டிகளும், மக்கிப்போவதற்கு அதிக காலம் பிடிக்கக் கூடிய பொருட்களுக்கு வேறு குப்பைத் தொட்டிகளும் வைப்பார்கள். சீக்கிரம் மக்கிப் போகக் கூடிய குப்பைகள் உரமாக ஆகலாம். அல்லது மண்ணோடு மண்ணாக ஆகிவிடலாம் என்பதற்காக அதற்கேற்ப பயன்படுத்துவார்கள்.
பிளாஸ்டிக் போன்ற மக்கிப் போகாத பொருட்களை மண்ணில் போட்டால் நிலத்தடி நீரைத் தடுக்கும் என்பதால் அதை எரித்து விடுவார்கள்.
இது போன்று பல வகை குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தால் அதை நாம் பேண வேண்டும்.
ரொட்டியைத் தனியாக ஒரு குப்பைத் தொட்டியில் சேர்த்து கால்நடைகளுக்கு உணவாக அளிக்கப்படலாம். இன்னும் ஏதோ பயன்பாட்டுக்காக அவ்வாறு அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கலாம். அப்படி இருந்தால் அதைப் பேணிக்கொள்வது வரவேற்கத் தக்கது தான்.
அவ்வாறு இல்லாமல் வீணாகிவிட்ட உணவை, உணவு அல்லாத மற்ற பொருட்களுடன் போடக்கூடாது; அது உணவுக்குச் செய்யும் அவமரியாதை என்பதற்காக இப்படிச் செய்தால் அது மூட நம்பிக்கையாகும்.
உண்பதற்குத் தகுதியற்ற உணவுப் பொருட்கள் உணவுப் பட்டியலில் வராது. மற்ற கழிவுப் பொருட்களும், வீணாகிப் போன உணவுப் பொருட்களும் சமமானவை தான். அவை கழிவுப் பொருட்கள் தான். அவற்றை மற்ற குப்பைகளுடன் போடுவது தவறில்லை. அது உணவுப்பொருளை அவமரியாதை செய்த குற்றத்தில் வராது.

-Onlinepj1 comment:

Dr.Anburaj said...

திருவள்ளுவா் வரலாற்றில் ஒரு சம்பவம். சாப்பிடும் இலைக்கு பக்கத்தில் ஒரு ஊசியை வைக்க திருவள்ளுவா் தன் மனைவி வாசுகியிடம் சொல்லியிருக்கின்றாா்.ஆனால் ஒரு நாள் கூட அந்த ஊசியை பயன்படுத்தவில்லை. ஆவலை அடக்க முடியாமல் ஒரு நாள் ஊசி வைக்கச் சொன்னதற்கு என்ன காரணம் என்று வாசுகி அம்மையாா் கேட்டாா். அதற்கு வள்ளுவா் சோற்று பருக்கை இலையை விட்டு தரையில் விழுந்தால் அதை ஊசியை வைத்து எடுத்து இலையில் போடுவதற்குதான். ஆனால் ஒரு நாள் கூட ஒரு சோற்றுபருக்கை கூட தரையில் விழவில்லை.ஆகவே ஊசி பயன்படுத்தும் அவசியமே வந்ததில்லை. உணவு வீணாகக் கூடாது என்ற கருத்து இந்து பண்பாட்டில் மிக முக்கியம் வாய்ந்தது.
அண்மை காலங்களில் திருமண வீடுகளில் உணவு பொருட்கள் நிறைய வீணாகின்றது.இது குறித்த விவாதங்கள் தற்சமயம் மெதுவாக கிளம்பி வருகின்றது. மிகப் பெரிய அளவில் விவாதித்து பொது மக்கள் மனதில் விழிப்புணா்ச்சியை ஏற்படுத்த வேண்டிய பொருள் இது.

தாங்கள் இது குறித்து பதிவு செய்தது நல்லது.பாராட்டுக்கள்.