Followers

Friday, September 07, 2012

காசை கரியாக்காதேடா என்று அம்மா சொல்லும்


காசை கரியாக்காதேடா என்று அம்மா சொல்லும்

இன்று நாங்களே சிவகாசியில் கரியாகிப் போனோம்.

இறந்த என் அப்பாவுக்காக கிடைத்தது 2 லட்சம்

இரண்டு வருடம் போனால் இருக்காது எங்களிடம் மிச்சம்.

இறந்த என் அப்பாவுக்கு ஈடாகுமா இந்த 2 லட்சம்

எண்ணிப் பார்த்து தடைகள் போடுங்கள் கொஞ்சம்!

அப்பாவை போன்ற உயிர்களாவது மிஞ்சும் கொஞ்சம்

நரகாசுரன் செத்ததற்காக வந்தது இந்த தீபாவளி

என் அப்பா செத்ததால் ஏன் வந்தது இந்த தீபாவளி

காசை கரியாக்கும் இந்த பணத்தில் உங்கள்

கிராமத்து ஏழைகளின் வயிற்றுப் பசியை போக்கினால்

பலரது வாழ்த்துக்களோடு செல்லுமே இந்த தீபாவளி!

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று

வாயால் சொல்லாதீர்கள்: செயலில் காட்டுங்கள்:






பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் கீழ்க்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம்:

செம்பு: சுவாசப் பாதையில் எரிச்சல்

காட்மியம்: ரத்தசோகை, சிறுநீரகப் பாதிப்பு

காரீயம்: நரம்பு மண்டலப் பிரச்சினைகள்

மக்னீசியம்: இதன் தூசும் புகையும் உலோகப் புகை காய்ச்சலை ஏற்படுத்தலாம்

மாங்கனீசு: உளவியல் தொந்தரவு, பக்கவாதம், வலிப்பு

சோடியம்: ஈரப்பதக் காற்றுடன் வினைபுரிந்து தோலைப் பாதிக்கலாம்

துத்தநாகம்: குமட்டல், வாந்தியை உருவாக்கலாம்

நைட்ரேட்: மூளை வளர்ச்சியைப் பாதிக்கலாம்

நைட்ரைட்: கோமாவுக்கு இட்டுச் செல்லலாம்

உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஒரு பட்டாசில் உள்ள வேதிப்பொருள்களின் பட்டியல், அதன் அட்டையில் அச்சிடப்பட வேண்டும். ஆனால் இது செய்யப்படுவதில்லை.

மேற்கண்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், நம்ம ஊர் காவல்துறை இதை நடைமுறைப்-படுத்துவதில்லை. அத்துடன் 125 டெசிபலுக்கு மேலாக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ளது. ஆனால், சந்தையில் கிடைக்கும் சில பட்டாசுகள் ஏற்படுத்தும் சப்த அளவு கீழே தரப்பட்டுள்ளது. இவை அந்தத் தடையை சாதாரணமாக மீறுகின்றன.

ஆட்டம் பாம் - 145 டெசிபல், சரவெடி - 142 டெசிபல், தண்டர்போல்ட் - 140 டெசிபல், கிங்பிஷர் ஷெல் - 141 டெசிபல், ஹைட்ரஜன் பாம் - 122 டெசிபல்

இந்தச் சப்தத்தை நீங்கள் கேட்டால் உங்கள் காது செவிடாவதற்கு மிக அதிக வாய்ப்பு இருக்கிறது. அதிக சப்தத்தால் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தமும் தூங்குவதில் பிரச்சினைகளும்கூட ஏற்படலாம்.

பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசு-பாட்டால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்-படுகின்றனர். காரணம்: அவர்களது நுரையீரல் வளர்ந்து வரும் நிலையில் இருக்கிறது. குறைவான மாசுபாட்டைக்கூட அவை தாங்குவதில்லை. எதிர்காலத்தில் உங்கள் குழந்தைக்கு சுவாசக் கோளாறு ஏற்பட பட்டாசு-களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

வரலாற்றில் தீபாவளி

மொகலாய பேரரசர் ஷாஜஹான் தீபாவளியன்று பெருவிருந்து ஏற்பாடு செய்து, சமபந்தி போஜனம் கொடுத்து பட்டாசு கொளுத்தி வாணவேடிக்கை செய்துள்ளார்.

தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள “ஆகாச பைரவ ஜல்பம்’ என்ற ஓலைச் சுவடியில் வாணவேடிக்கை பற்றி உள்ளது. சிவகாசி பட்டாசு தொழில் 1923-ல் ஆரம்பிக்கப்பட்டது. தீபாவளி வெடி வெடிக்கும் பழக்கம் பேரரசர் பாபர் (1483- 1530) காலத்தில் ஏற்பட்டது. மஹதாப் என்ற உருது சொல்லுக்கு மத்தாப்பு எனப் பொருள்.

வரலாறுகளில் தீபாவளி பண்டிகையில் பட்டாசு கொளுத்தும் பழக்கம் முற் காலங்களில் இருந்ததில்லை. மொகலாய சக்ரவர்த்தி பாபரின் காலத்தில்தான் இந்த பழக்கம் ஆரம்பமாகிறது. அனைத்து சாதியினரையும் வைத்து சமபந்தி போஜனை நடத்தி அதன் பிறகு பட்டாசுகளையும் கொளுத்தியுள்ளனர். அதை இன்று மிக தீவிரமாக பிடித்துக் கொண்டனர்.


------------------------------------------

ஒழிந்து போன கடலை மிட்டாயும் புதிதாய் பிறந்த நூடுல்ஸும்!

வேர்க் கடலை என்ற அருமையான உணவை தமிழக மக்களின் சொல்வாக்கில் பார்ப்போம்:

மதுரை - வயலுக்குப் போயி நெலக்கடல பரிச்சி சப்பிடலாம்லா...
திருநெல்வேலி - ஏலா வயக்காட்டுக்கு வாலா...கல்லப்பருப்பு திம்போம்.
கொங்கு - என்ற கூட வெள்ளாமக் காட்டுக்கு வா., கடல திங்கோணும்.
தஞ்சை - கொல்லைக்கு வா கடலை சாப்பிடலாம்.
ஈழம் - 'வாருமப்பா கச்சான் தின்னுவம்'.
கன்னியாகுமரி - அண்ணாச்சி வாறியலா கல்ல சாப்பிடுவோம்.

கடந்த வருட வியாபாரம் 1,500 கோடி. அடுத்த ஓரிரு வருடங்களில் இது 3,000 கோடியைத் தொடும் என்கிறது ஒரு சமீபத்திய புள்ளிவிவரம். எந்தப் பொருளுக்கு இப்படி ஒரு சந்தை என்று கேட்கிறீர்களா? டூ மினிட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸுக்குத்தான்.


25 வருடங்களுக்கு முன்பு கடையில் ஓரமாக ஒரு மூலையில் அடுக்கிவைக்கப்பட்ட வஸ்து, இன்றைக்கு, மளிகைச் சாமான் ரசீதில் தவிர்க்கவே முடியாத ஓர் அங்கம். உலகம் முழுக்கவே 'குப்பை உணவு’, 'சத்து இல்லாதது’ என்று உணவியல் நிபுணர்கள் குறிப்பிடும் நூடுல்ஸுக்கு எப்படி இப்படி ஒரு சந்தை சாத்தியமானது? 'ஒரு பொருளைப் பெரியவர்களுக்குப் பிடிக்கச் செய்தால், சந்தையில் அதற்கு என்று ஓர் இடத்தை உருவாக்கிவிடலாம்; குழந்தைகளுக்குப் பிடிக்கச் செய்துவிட்டாலோ அதற்கு என்று ஒரு சந்தையையே உருவாக்கிவிடலாம்’ என்ற சந்தைப் பொருளாதாரச் சூட்சுமம்தான் காரணம்.

இந்தியாவுக்கு நூடுல்ஸ் வந்த புதிதில் 'இது என்ன புழுப் புழுவாய்’ என்றுதான் பார்க்கப்பட்டது. மார்க்கெட் இழந்த நடிகையை அம்மாவாக்கி, 'இருடா கண்ணா... இதோ... ரெண்டே நிமிஷம்’ என்று சொல்லவைத்து விளம்பரப்படுத்தி, அப்புறம் மூக்கைத் துளைக்கும் நம்ம ஊர் மசாலா வாசத்தைச் சேர்த்தவுடன், வியாபாரம் கோடிக் கோடியாகக் கொட்டத் தொடங்கிவிட்டது.


சரி... நூடுல்ஸில் நமக்கு அப்படி என்னதான் பிரச்னை? இரண்டே நிமிடங்களில் தட்டுக்கு வர வேண்டும் என்பதற்கும், வாசம் மூக்கைத் துளைப்பதற்கும் அதில் சேர்க்கப்படும் வேதிப் பொருள்தான் பிரச்னை! நூடுல்ஸில் வாசத்துக்காகச் சேர்க்கப்படும் 'னீஷீஸீஷீ sஷீபீவீuனீ ரீறீutணீனீணீtமீ மோனோ சோடியம் க்ளூடமேட்’ (எம்.எஸ்.ஜி.) என்னும் வேதிப் பொருள் குழந்தை களின் உடலுக்கு எவ்விதத்திலும் நல்லது இல்லை.
வருஷத்துக்குப் பல மில்லியன் டாலருக்கு விற்கும் இந்த 'மோனோ சோடியம் க்ளூடமேட்’டைப் பற்றி டாக்டர் பிளேலாக் எழுதி 1970-களில் வெளியான 'தி டேஸ்ட் தட் கில்’ புத்தகம்தான் பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. மூளையின் ஹைப்போ தலாமஸ் வரை பாதிப்பைத் தரக் கூடிய இந்த ரசாயனம் சாதாரண வாந்தி, வயிற்று வலியில் தொடங்கி அறிவாற்றலைச் சிதைப்பது வரை பல்வேறு கோளாறுகளை உருவாக்கக்கூடியது என்கின்றன ஆய்வுகள்.
இந்த 'மோனோ சோடியம் க்ளூடமேட்’ நூடுல்ஸில் மட்டும் இல்லை. துரித உணவகங்களிலும் பல சைனீஸ் உணவகங்களிலும் ஏராளமான உணவுப் பொருட்களில் இது பயன்படுத்தப் படுகிறது. 'இதே காய்கறிகளைப் போட்டுத்தானே நானும் சமைக்கிறேன். அங்கே மட்டும் கடாய் வெஜிடபிள் வாசம் ஒரு தூக்கு தூக்குதே எப்படி?’ என்று மண்டையை உடைத்துக்கொள்ளும் இல்லத்தரசிகளுக்கு ஒரு செய்தி... கடைகளில் கடைசியாகக் கொஞ்சம் 'மோனோ சோடியம் க்ளூடமேட்’ எனும் ரசாயனத்தைப் போட்டு வாணலியை இறக்குவதால்தான் அப்படி மணக்கிறது.

'அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை; ஆதாரபூர்வமாக இதுவரை ஆய்வுகள் எதுவும் 'மோனோ சோடியம் க்ளூடமேட்’ கெட்டது எனச் சொல்லவில்லை!’ என்று வியாபாரிகள் தரப்பு சொன்னாலும், 'கொஞ்சம் பார்த்துப் பயன்படுத்துங்கப்பா... அட்டையில் இதைச் சேர்த்திருக்கோம்னு போடுங்க... பரவாயில்லைனு நினைக்கிறவன் சாப்பிட்டுப் போகட்டும்’ என எச்சரிக்கிறது அமெரிக்க உணவுக் கட்டுப்பாட்டுத் துறை. உடல் எடையைக் கூட்டி, மற்ற சாப்பாட்டை மறக்க/மறுக்கவைக்கும் இந்தச் சமாசாரம் நமக்குத் தேவையா? அவசர உலகின் அம்மா, அப்பாக்கள் கொஞ்சம் யோசியுங்கள்!

எப்போதோ படித்த எட்டாம் வகுப்பு வரலாற் றுப் புத்தகத்தைப் புரட்டும்போது, உள்ளே பத்திர மாக வைத்திருந்த சாக்லேட் தாளையோ, பள்ளி நண்பனின் புகைப்படத்தையோ பார்க்கும்போது ஏற்படும் பரவசம் இருக்குமே... அதுபோலத்தான் நிலக்கடலையைப் பார்க்கும்போதும் எனக்குள் இருக்கும். 'ராசா! ஒரு நாலணாக்கு அவிச்ச கடலை வாங்கிட்டுப் போடா’னு பள்ளி வாசலில் விற்ற பாட்டியை இப்போது பார்க்க முடியவில்லை. 'டணங் டணங்’ என்று இரும்பு வாணலியை இசை நயத்துடன் தட்டி, வறுத்த கடலை விற்றுச் செல்லும் வீதி வியாபாரி, கடற்கரையோடு காணாமல் போய்விட்டார். கால மாற்றத்தில் கொஞ்சம் வேகமாகக் காணாமல்போகும் கலாசார இழப்புகளில் கடலை மிட்டாயும் இப்போது சேர்ந்துவிட்டது. ஹசல் நட்டும் பாதாமும் முந்திரியும் இருக்கும் இடத்தில் கடலை மிட்டாய்க்கு இடம் இல்லை. கோகோவுக்கும் மில்க் சாக்லேட்டுக்கும் பரிதவிக்கும் பல பள்ளிக் குழந்தைகள் கடலை மிட்டாயை நேசிப்பது இல்லை. ஏன்? பிரச்னை, கடலை மிட்டாயிலோ அல்லது குழந்தைகளிடமோ இல்லை. வழக்கம்போல் நவீன வணிகத்தின் நெரிசலும் கூச்சலும்தான் இந்த ஓரவஞ்சனைக்குக் காரணம். குழந்தைகள் நேசிக்கும்படி அழகாக, மினுமினுப்பாகப் பல வண்ண வெளி ரேப்பரோ, தங்க நிறத்தில், வெள்ளி நிறத்தில் உள்சட்டையோ கடலை மிட்டாய்க்கு அணிவிக்கப்படவில்லை. ஜூனியர் சூப்பர் சிங்கருக்கோ, சூப்பர் டான்ஸருக்கோ தலைக்கு மேல் கடலை மிட்டாய் மழை கொட்டப்படுவது இல்லை. புரட்சி நடிகர்களோ, அழகு ராணிகளோ, பணக்கார விளையாட்டுகளின் வெள்ளை வீரர்களோ, இந்த மிட்டாய் சாப்பிடுவதாக எங்கும் சொல்லவே இல்லை. உண்மையில் கடலை மிட்டாய் இழப்பு என்பது கலாசார இழப்பு மட்டும் அல்ல; குழந்தைகளுக்கு ஓர் ஊட்டச் சத்துமிக்க தின்பண்ட இழப்பும்கூட!


பல் விளக்கிய பரபரப்பு நீங்கும் முன்னர், குழந்தையின் பிஞ்சுக் கால்கள் நைந்துபோகுமாறு ஷூவுக்குள் திணித்து, ஆட்டோவுக்குள் திணித்து, வகுப்பறைக்குள் திணித்து, கடைசியாக மூளைக்குள் திணிப்பைத் துவங்கும் திணிப்புக் கல்வி யுகத்தில், ஸ்நாக்ஸ் பாக்ஸ் சங்கதியும் சங்கடங்களும் ரொம்ப முக்கியமானவை. கடலை மிட்டாயில் புரதம் அதிகம். கிட்டத்தட்ட 25 சதவிகிதம் புரதச் சத்து அதில் இருக்கிறது. புரதத்துடன் கூடுதலாகக் கிடைப்பது துத்தநாகச் சத்து (பார்க்க அட்டவணை). நோய் எதிர்ப்பாற்றல் வேண்டும் எனில், இந்தப் புரதமும் துத்தநாகச் சத்தும்தான் ஒவ்வொரு நாளும் அதிகம் வேண்டும் என்கிறது நவீன அறிவியல்.
அதெல்லாம் சரி... கடலை மிட்டாயில் எண்ணெய் இருக்கிறதே என்பர் கொலஸ்ட்ரால் பயத்தில் உள்ளவர். அவர்களுக்கு ஒரு செய்தி... முதலில் கடலை எண்ணெயிலேயே கெட்ட கொலஸ்ட்ரால் கிடையாது. நிறைய பாலி அன்சேச்சுரேட்டும் மோனோ அன்சேச்சுரேட்டும் உள்ள கொழுப்பு அமிலங்கள்தான் அதிகம் உள்ளன. கடலையே இப்படி என்றால், கடலை மிட்டாய் இன்னும் ஒரு படி மேல்.

கடலை மிட்டாய் அதன் புரதத்தால் உடம்பை வளர்க்கும்; அதன் துத்தநாகச் சத்தால் நோய் எதிர்ப்பாற்றல் தரும்; அதில் சேர்க்கப்படும் வெல்லம் பிற மிட்டாய்களில் சேர்க்கப்படும் வெள்ளை சீனியைக் காட்டிலும் இனிப்பானதும் சிறந்த தும்கூட. இனிப்புடன் இரும்பு முதலான கனிமங்கள் நிறைந்தது. மிட்டாயுடன் மிக நுண்ணிய அளவில் சில நேரங்களில் சேர்க் கப்படும் சுக்குத் தூள் கடலையின் பித்தத்தையும் இனிப்பின் கபத்தையும் கட்டுப்படுத்தக்கூடியது. காலை அவசரத்தில் அரைகுறையாய்ச் சாப்பிட்டுப் போகும் குழந்தைக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸில் நூடுல்ஸோ, ஒரு பாக்கெட் மில்க் பிஸ்கட்டோ, மில்க் சாக்லேட்டுகளோ கொடுக்காத ஊட்டச் சத்தை மூன்று கடலை மிட்டாய்கள் தந்துவிடும்.

கடலை மிட்டாய் என்றதும் நினைவுக்கு வருவது கரிசல்காட்டுப் பூமியான கோவில்பட்டி. மொத்த ஊரும் கோகோ, பால்பவுடர் சாக்லேட் டுகளுக்குப் போன பின்பும் கோவில்பட்டியில் இன்றும் 50 குடும்பங்கள் கடலை மிட்டாய் தயாரித்து கோலாலம்பூர் வரைக்கும் அனுப்பிக் கொண்டு இருக்கின்றன.


அப்படிக் கடலை மிட்டாய் தயாரிக்கும் ஒரு நண்பரிடம் பேசியபோது அவர் சொன்னது... 'ரெண்டு மாசமானாலும் இது கெட்டுப்போகாது சார். அதோட இயல்பு அப்படி. நாளாச்சுன்னா மொறுமொறுப்பு குறையும். இந்த மொறுமொறுப்பும்கூட போகாம இருக்க கெமிக்கல் சேர்க்கச் சொன்னாங்க சார். ஆனா, நாங்க செய்ய மாட்டோம். புள்ளைங்க சாப்பிடுறது. நம்ம புள்ளைங்களா இருந்தா, தப்பானதைக் கொடுப்போமா சார்?'' என்று அடுத்த தலைமுறை மீது அக்கறையோடு கேட்டார் அழுக்கு வேட்டி கட்டியிருந்த அந்த மிட்டாய்க்காரர்!

மருத்துவர் கு.சிவராமன்
vikatan.com



34 comments:

NKS.ஹாஜா மைதீன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ....

இவ்வளவு உயிர்கள் மடிந்த பின்தான் நம் அரசு அதுபற்றி யோசிக்கும்....என்ன செய்வது?!

ஹுஸைனம்மா said...

அதான் ரெண்டு லட்சம் கொடுக்கறாங்கள்ல, அப்புறம் என்ன புலம்பல்??!! :-((((

அந்த மூதாட்டியின் முதுகு வெந்து இருபப்தைப் பார்த்தால்... ஆண்டவா... லேசாக அடுப்பில் ஒரு விரலில் சூடு பட்டாலே துடித்து விடுகீறேன்.....

suvanappiriyan said...

சலாம் சகோ ஹாஜா மைதீன்!

//இவ்வளவு உயிர்கள் மடிந்த பின்தான் நம் அரசு அதுபற்றி யோசிக்கும்....என்ன செய்வது?!//

என்னைக் கேட்டால் ஆபத்தான இந்த பட்டாசு தொழிலையே தடை செய்து அவர்களுக்கு வேறு வேலைகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்கலாம். தீபாவளியில் பட்டாசு வெடித்துதான் நரகாசுரன் இறந்ததை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டுமா? பட்டாசு வாங்கும் பணத்தில் 10 ஏழைகளை வீட்டுக்கு அழைத்து சாப்பாடு போட்டால் இரு தரப்புமே மகிழ்ச்சிக்குள்ளாகுமே! எப்போது தீபாவளி வந்தாலும் இது போன்ற பட்டாசு விபத்துகள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

ஹுஸைனம்மா said...

இன்றும் ஊர் சென்று வருபவர்களிடம் கடலைமிட்டாய் பாக்கெட்டுகள் ஆறாவது வாங்கிவரச் சொல்லுவது வழக்கம். இங்கும் ஒரு இந்தியக் கடையில் எள், ராகி, அரிசிப் பொரி மிட்டாய்கள் கிடைக்கும். அதைத் தவறாமல் வாங்குவது வழக்கம். அதன் சத்துக்களை அறிந்ததால் பிள்ளைகளுக்கு உண்ணப் பழக்கப் படுத்தியிருக்கிறேன்.

நூடுல்ஸ் மாதமொருமுறை பிள்ளைகளின் ஆசைக்காக செய்வதுண்டு.

MSG எனப்படுவது நூடுல்ஸில் மட்டுமில்லை. ஹோட்டல்களில் அநேகமாக எல்லா உணவு வகைகளிலும் டேஸ்ட் மேக்கர் என்ற பெயரில் இதுதான் சேர்க்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.

suvanappiriyan said...

சகோ ஹூசைனம்மா!

//அந்த மூதாட்டியின் முதுகு வெந்து இருபப்தைப் பார்த்தால்... ஆண்டவா... லேசாக அடுப்பில் ஒரு விரலில் சூடு பட்டாலே துடித்து விடுகீறேன்.....//

பட்டாசு ஆலை வெடி விபத்தில் ,உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா ரூ.2 லட்சம் ரூபாயை அமைச்சர் பன்னீர் செல்வம் வழங்கினார். 34 குடும்பத்திற்கு நிதி வழங்கப்பட்டது. சிவகாசி ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் நிவாரண நிதி பெறுவதற்காக, பகல் ஒரு மணியளவில் இறந்தவர்களின் குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டனர். இரண்டாம்நாள் காரியங்களை முடித்த கையுடன் வந்தவர்களை, ஆர்.டி.ஒ., அறையில் அலுவலர்கள் அமர வைத்தனர். மாலை 5 மணிக்கு தான் அமைச்சர்கள் வந்தனர். அறையில் நுழைந்த அமைச்சர்களை கண்டதும், பாதிக்கப்பட்டவர்கள் கதறி அழுதனர். பின், ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு, நிவாரண நிதி வழங்கப்பட்டது.

தாயாருடன் வந்த ஒரு சிறுமி, ""எங்களுக்கு பணம் வேண்டாம். அப்பா தான் வேண்டும்,'' என கதறி அழுதது. அந்தக் குழந்தைக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் அமைச்சர்கள் தவித்தனர். நீண்ட நேர ஆறுதலுக்கு பின் குழந்தை பணத்தைப் பெற்றுக் கொண்டது. கணவரை இழந்த கர்ப்பிணி பெண், நிதி பெறும்போது கதறி அழுதார். கணவரை இழந்த சண்முகவள்ளி, மூன்று மகன்களுடன் நிதி பெற்றது உருக்கமாக இருந்தது. திருத்தங்கல் ஆதிலட்சுமி, இவரது தாய் லட்சுமி இருவரும் வெடி விபத்தில் உயிரிழந்தனர். இவர்களது நிவாரண நிதியினை வாங்குவதற்கு கூட, உறவினர்கள் யாரும் வரவில்லை. இது போல் விபத்தில் இறந்த மேற்கு வங்கம் கோல்கட்டாவை சேர்ந்த சுனில்,20, செல்லையநாயக்கன்பட்டியை சேர்ந்த மணி நிவாரண தொகை வாங்க யாரும் வரவில்லை. நிதியை வழங்கிய அமைச்சர்

பன்னீர்செல்வம், ""நிதியை வங்கியில் டெபாசிட் செய்து, குழந்தைகளின் கல்வி செலவுக்கு வைத்து கொள்ளுங்கள்,'' என்றார். சம்பிரதாயமாக நிதி வழங்கிய நிகழ்ச்சியை முடித்த அமைச்சர்கள், சிகிச்சை பெற்றவர்களுக்கு நிதி வழங்க மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.

http://www.dinamalar.com/News_detail.asp?Id=542444

அந்த குழந்தையின் மன நிலையை நினைத்து ரொம்பவும் குழம்பி விட்டேன். இவ்வளவு ஆபத்தான இந்த தொழிலை ஏன் இவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அரசு இந்த தொழிலை தடை செய்து மாற்று தொழிலை அவர்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும்.

suvanappiriyan said...

//இன்றும் ஊர் சென்று வருபவர்களிடம் கடலைமிட்டாய் பாக்கெட்டுகள் ஆறாவது வாங்கிவரச் சொல்லுவது வழக்கம். இங்கும் ஒரு இந்தியக் கடையில் எள், ராகி, அரிசிப் பொரி மிட்டாய்கள் கிடைக்கும். அதைத் தவறாமல் வாங்குவது வழக்கம். அதன் சத்துக்களை அறிந்ததால் பிள்ளைகளுக்கு உண்ணப் பழக்கப் படுத்தியிருக்கிறேன்.//

ஊரிலிருந்து நான் வந்தாலும், யாரும் பொருள்கள் கொண்டு வந்தாலும் அதில் கடலை மிட்டாய் அவசியம் இருக்கும். ஆனால் அது தற்போது ஏழைகளின் உணவாக மாறிப் போய் விட்டது. இதன் அருமை உணராமல் பலரும் ஒதுக்குகிறோம்.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

naanumthaan நானும்தான் கேட்கிறேன் , இறந்தும் இறக்காததற்கு முன் கொண்டு போய் அந்த இழப்பிடு தொகையை கொடுக்கும் வழக்கத்தை யார் ஆரம்பித்தார்கள்? அந்த குடும்பம் அழக் கூட தோன்றாமல் ,விக்கித்து நிற்கும் வேளையில் ,பணம் கொடுத்து அதை புகைப் படம் எடுத்து .....ச்சே என்றிருக்கிறது.எத்தனை நாட்கள் வரும் அந்த பணம் ? அப்புறம் ??????????.குழந்தைகள் படிப்பு, திருமணம் என்று வரிசையாக கொடி கட்டிக் கொண்டு வரும் பிரச்சினைகள் .
அடுத்ததாக இந்த பணம் வந்தவுடன் சொந்தங்கள் கொடுக்கும் தொந்திரவு அதை விட இந்த பணம் வராமலே இருந்திருக்கலாம் என்று நினைக்க வைத்து விடும் .
எவ்வளவு பணம் வந்தாலும் அந்த தாய் தந்தையின் அன்பை யார் கொடுப்பார்கள்? அந்த சிறுமி கதறியதே, ''எனக்கு பணம் வேண்டாம். என் அப்பாதான் வேண்டும் '' இதற்கு நாம் அனைவரும் என்ன பதில் சொல்லப் போகிறோம்?
கார்த்திக்+ அம்மா

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

நானும்தான் கேட்கிறேன் , இறந்தும் இறக்காததற்கு முன் கொண்டு போய் அந்த இழப்பிடு தொகையை கொடுக்கும் வழக்கத்தை யார் ஆரம்பித்தார்கள்? அந்த குடும்பம் அழக் கூட தோன்றாமல் ,விக்கித்து நிற்கும் வேளையில் ,பணம் கொடுத்து அதை புகைப் படம் எடுத்து .....ச்சே என்றிருக்கிறது.எத்தனை நாட்கள் வரும் அந்த பணம் ? அப்புறம் ??????????.குழந்தைகள் படிப்பு, திருமணம் என்று வரிசையாக கொடி கட்டிக் கொண்டு வரும் பிரச்சினைகள் .
அடுத்ததாக இந்த பணம் வந்தவுடன் சொந்தங்கள் கொடுக்கும் தொந்திரவு அதை விட இந்த பணம் வராமலே இருந்திருக்கலாம் என்று நினைக்க வைத்து விடும் .
எவ்வளவு பணம் வந்தாலும் அந்த தாய் தந்தையின் அன்பை யார் கொடுப்பார்கள்? அந்த சிறுமி கதறியதே, ''எனக்கு பணம் வேண்டாம். என் அப்பாதான் வேண்டும் '' இதற்கு நாம் அனைவரும் என்ன பதில் சொல்லப் போகிறோம்?
கார்த்திக்+ அம்மா

Rabbani said...

அஸ்ஸலாமு அலைக்கும்
தீபாவளிக்கு வெடி வெடிப்பது அந்த மத நம்பிக்கை சம்பந்தப்பட்டது எனில் அதை நாம் சுட்டிக்காட்ட அவசியம் இல்லை அது அவர்களின் நம்பிக்கை என எடுத்துக்கொள்ளலாம்.
வெடி வெடிப்பது பின்னால் வந்த மக்களால் உருவாக்கப்பட்டது எனில் விழிப்புணர்வு அவசியம் செய்ய வேண்டும். இந்த விஷயம் நீங்க சொல்லியாட்சா இப்போம் பாருங்க ஒரு கோஷ்டி இதுக்கும் மத சாயம் பூசி பரிகசிக்கும்.நாம் வழக்கம் போல் அவர்களைப் பரிதாபாமா பார்த்து விட்டு நமது வேலைகளை தொடர வேண்டும்.
கடலை மிட்டாய் பற்றி நல்லதோர் அலசல்

Anonymous said...

Kavya says:
September 7, 2012 at 8:15 am

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வைத்திய நாத ஐயர் ஆலயப் பிரவேசம் நடத்தியது 1939 ஆம் ஆண்டு! அவருக்குத் துணை நின்றவர் முத்து ராமலிங்கத் தேவர்! ஆமாம், தேவர்தான்! அப்போது நடைபெற்றது ராஜகோபாலாச்சாரியார் ஆட்சி!

மனம் போன போக்கில் இஷ்டத்துக்கு ஆளாளுக்கு அளப்பதைக் கண்காணிக்கவே தனியாக ஒரு ஆளைப் போட வேண்டியிருக் கும் போலிருக்கிறது!
-மலர்மன்னன்

போன மாதம் விஜய் டி வியில் ‘நீயா நானா’ நிகழ்ச்சி நாமக்கல் பள்ளித் தாளார்களுக்கும், பத்திரிக்கையாளர் சிலர், மனதத்துவ மருத்துவர் / கவுன்சிலர், மற்றும் அப்பள்ளியின் முன்னாள் மாணாக்கர் சிலருக்குமிடையே மோதல். அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தாளாளர்கள் தள்ளாடினார். எப்படி கவனத்தை திருப்புவது என்று ஏங்கிக்கொண்டிருந்த வேளையில், பத்திரிக்கையாளர் கடற்கரை, ‘மஃபியா கேங்’ என்ற சொல்லைவிட‌, தாளாளர்கள் அதைப்பிடித்துக்கொண்டு வெளியேறத்தொடங்கினார். அச்சொல் திரும்பப்பெற வேண்டும் என்றார். கடற்கரை சொன்னார்: ‘நான் சொன்னவை நூற்றுக்கணக்கான சொற்கள். வாக்கியங்கள். அவற்றுள் கருத்துகள் நிறைய. அவைகளை எதிர் நோக்க அஞ்சி, இவர்கள் என் கடைசிச் சொல்லைப் பிடித்து நான் சொன்ன அனைத்தையும் அமுக்கப்பார்க்கிறார்கள்’ என்றார்.

அதேதான் இங்கும். என் கருத்துக்கள் பல. அதில் ஒன்றுதான் ஆலயப்பிரவேசம். அது சுதந்திரக்குப்பின் நடந்தது என்றேன். அதைப்பிடித்துக்கொண்டு வரலாறு வகுப்பு நடத்தி, பிற கருத்துக்களைப் பின் தள்ளப்பார்க்கிறார். போகட்டும். அப்போது இராஜாஜி என்ற பார்ப்பனர்தானே ஆட்சி நடாத்தினார்? வெள்ளைக்காரனில்லையே? மதுரை பூஜாரிகள் ஏன் போலீசை அழைத்தார்கள்? ஏன் வைத்தியநாதர் சிறையிலடைக்கப்பட்டார்? ஏன் அதற்குமுன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உங்கள் கோயில்களுள் தடுக்கப்பட்டார்? ஏன் பூரி சங்கராச்சாரியார்: “தலித்து ஒருவன் எழுதியதாலேயே நம் இறையாணமைச்சட்டத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள். அதை ஒரு பிராமணன் எழுதியிருக்க வேண்டும்?” என்றார்? ஏன் அம்பேத்கரின் ப்யூன் அவர் மேல் ஃபலைத்தூக்கியெறிந்தான்? ஏன் ஜெகஜீவன் ராம் வந்து சென்றவுடன் பெனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகமாணாக்கர் அவர் வந்து சென்ற இடத்தை சுத்திப்பரிகாரம் வேத முழக்கத்துடன் பண்ணினார்? ஏன் இங்கே சுமிதா பார்ப்ப்னர்களுக்கென்றே நல்ல குணங்கள் இருப்பதால் அவர்களே பூஜாரிகளாக முடியுமென்று சொல்ல சந்திரமவுளி சரியென்றார்? ஏன் மலர்மன்னன் வருணகுணவர்க்கங்கள் அவர்களுக்கு மட்டும்தான்; மாற்றார் நுழையக்கூடாதென்று மிரட்டல் தொனியில் கட்டுரை வரைகிறார்? கேள்விகள் ஏராளம். தவறுகள் பலபல நடந்தேறி விட்டன. அவற்றை ஒப்புக்கொண்டு திருந்தப்பார்க்கணும். 1947 அன்று 1939 என்பதிலே ஒன்றும் தேறாது. இன்றும் மடசேனா நடக்கிறது. அதற்கு இவர் என்ன சொன்னார். ஒன்றுமே சொல்ல மாட்டார். பார்ப்பனருக்கு மட்டுமன்றி. தேவமார்களையும் இவர் தூக்கிப்பிடிக்கிறார். ஏன் இவருக்குத் தலித்துகள் மேல் காண்டு?

எல்லாவற்றையும் அமுக்கி மறைத்துவிட்டால் அவை காணாமல் போய்விடுமா? போகா. ஒரே வழி. அவை இருக்கின்றன; இருந்தன என்று ஏற்றுக்கொண்டு அவர் இனியும் நேரவிடக்கூடாதென்றால் மட்டுமே இந்துமதம் வளரும். ஆனால் மலர்மன்னன் கேட்ட பாடில்லை.

அல்லேலுயாதான். ஆமன்தான். சாம் செல்லத்துரையும் பெர்க்மான்சும் தூக்கிக்கொண்டு போவார். சுவனப்பிரியன் காட்டில் செம மழை பெய்யட்டும்.

அஜீம்பாஷா said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...
நல்ல விழிப்புணர்ச்சி ஊட்டும் பதிவு.சகோ.ரப்பானி சொன்னதை வழி மொழிகிறேன் மத நம்பிக்கை சம்பதபட்டது எனில் அது அவர்கள் இஷ்டம். அதிகாரிகளுக்கு இது நடக்கும் என்று முன்பே தெரியும் அதனால் ஒரு வாரம் முன்பே அனுமதி ரத்து செய்து விட்டார்கள். ஆனால் அதன் ஆளும்கட்சி கவுன்சிலர் ஆனதால்பயந்து நடவடிக்கை எடுக்கவில்லை என நினைக்கிறேன்.

suvanappiriyan said...

திரு மலர் மன்னன்!

//ஒருவர் ஜின்னா முஸ்லிம் லீகை ஆரம்பித்தார் என்கிறார். இன்னொருவர் தத்துப் பித்தென்று இஷ்டத்துக்கு உளறிக் கொட்டுகிறார். மற்றொருவர் குலம் கோத்திரம் சாதி வர்ணம் பற்றிய அடிப்படைகள் எல்லாம் அறிந்தவர்போல் கதைக்கிறார்.//

முஸ்லிம் லீக் யார் ஆரம்பித்தது என்பதல்ல இங்கு நடந்த விவாதம். இந்திய பிரிவினைக்கு மூல காரணம் யார் என்பதே முன்பு நடந்த விவாதம். நான் பிறப்பதற்கு முன்னால் கிடைத்த இந்திய சுதந்திர வரலாறுகளில் சில தவறான புரிதல்கள் இருந்தால் நீங்கள் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொண்டு விடப் போகிறோம்.

//பிழைகளைச் சுட்டிக் காட்டிய பிறகு பிழையாகச் சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்கும் அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல் அடுத்த உளறலுக்கு ஆயத்தமாகிவிடுகிறார்கள்!//

முஸ்லிம் லீக்கை ஜின்னா ஆரம்பித்ததாக நான் தவறாக பதிந்ததை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். போதுமா!

"கோயில்களுள் தடுக்கப்பட்டார்? ஏன் பூரி சங்கராச்சாரியார்: “தலித்து ஒருவன் எழுதியதாலேயே நம் இறையாணமைச்சட்டத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள். அதை ஒரு பிராமணன் எழுதியிருக்க வேண்டும்?” என்றார்? ஏன் அம்பேத்கரின் ப்யூன் அவர் மேல் ஃபலைத் தூக்கியெறிந்தான்? ஏன் ஜெகஜீவன் ராம் வந்து சென்றவுடன் பெனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக மாணாக்கர் அவர் வந்து சென்ற இடத்தை சுத்திப் பரிகாரம் வேத முழக்கத்துடன் பண்ணினார்? ஏன் இங்கே சுமிதா பார்ப்ப்னர்களுக்கென்றே நல்ல குணங்கள் இருப்பதால் அவர்களே பூஜாரிகளாக முடியுமென்று சொல்ல சந்திரமவுளி சரியென்றார்? ஏன் மலர்மன்னன் வருண குண வர்க்கங்கள் அவர்களுக்கு மட்டும்தான்; மாற்றார் நுழையக்கூடாதென்று மிரட்டல் தொனியில் கட்டுரை வரைகிறார்? இன்றும் மடசேனா நடக்கிறது. அதற்கு இவர் என்ன சொன்னார்."

என்ற வரிசையான காவ்யாவின் கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன?

மழுப்பலான பதிலை கொடுத்து விட்டு நகர்ந்தால் கிறித்தவத்தையும் இஸ்லாத்தையும் நோக்கி ஒடுக்கப்பட்டவர்கள் நகர்வதை தடுக்க முடியாமல் போய் விடும். இதன் மூலம் இந்து மதத்துக்கு உங்கள் கைகளாலேயே குழி வெட்டிக் கொள்கிறீர்கள்..

suvanappiriyan said...

தங்கமணி!

//“After they were paid, other Commission members jumped on the two and arrested them… they will be investigated to know the source of the meat before they are referred to court,” Sabq Arabic language daily said.
இந்த பெண்களுக்கு மரணதண்டனை கொடுத்தார்களா என்று தெரியாது.//

சவுதி அரேபியாவுக்குள் நீங்கள் வேலை நிமித்தமாக நுழையும் போதே 'சவுதி அரசின் இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டே வேலை செய்வேன்: அதனை மதித்து நடப்பேன்' என்று ஒப்புதல் கொடுத்து கையெழுத்து இட்டு விட்டே வேலைக்கு வருகிறீர்கள். சவுதி வந்தவுடன் அந்த ஒப்பந்தத்துக்கு மாற்றமாக பன்றி கறியை விநியோகித்தது அந்த பிலிப்பைன் நாட்டவரின் தவறல்லவா?

பன்றிக் கறியில் அதிகம் கொழுப்பு உள்ளது. வேக வைத்தாலும் அந்த கறியில் உள்ள புழுக்கள் இறப்பதில்லை. பன்றிக்கறி சாப்பிடுவதால் பல நோய்கள் தொற்றுகின்றன என்ற மருத்துவ அறிக்கையையும் படித்துப் பாருங்கள்.

suvanappiriyan said...

வரலாற்றில் தீபாவளி

மதுரை மாநகரில் திருமலை நாயக்கர் ஆட்சியில்தான் தீபாவளிப் பண்டிகை அறிமுகமானது.

கி.பி. 1117-ல் சாளுக்ய திரிபுவன மன்னனின் கன்னட கல்வெட்டில், ஆண்டுதோறும் தீபாவளியன்று சாத்யாயர் என்ற அறிஞர்களுக்கு தீபாவளி பரிசு தந்ததாகக் குறிப்பு உள்ளது. தென்னிந்திய தீபாவளி முதல் குறிப்பு இதுதான்.

ஹர்ஷரின் நாகானந்தம் நாடக நூலில் தீபாவளி பற்றிக் குறிப்பிட்டுள்ளார். புதுமணத் தம்பதிகளுக்குப் புத்தாடை வழங்கியதையும் அதில் கூறியுள்ளார்.
குடந்தை சாரங்கபாணி ஆலய கல்வெட்டு, தீபாவளியன்று பெருமாளுக்கு விசேஷ பூஜை, ஆராதனை நடந்ததைக் கூறுகிறது.
காளத்தி ஆலயத்தில் உள்ள கல்வெட்டில், தீபாவளியன்று இறைவனுக்கு விசேஷ பூஜையும் மானியமும் தந்த செய்தி உள்ளது.
மொகலாய பேரரசர் ஷாஜஹான் தீபாவளியன்று பெருவிருந்து ஏற்பாடு செய்து, சமபந்தி போஜனம் கொடுத்து பட்டாசு கொளுத்தி வாணவேடிக்கை செய்துள்ளார்.

சுவாமி ராம்பாத்ஹா என்ற ராம தீர்த்தர் தீபாவளியன்று சந்நியாசம் பெற்றார்.

பவிஷ்யோத்ர புராணத்தில் தீபாவளி என்றும்; காமசூத்ராவில் கூராத்ரி என்றும்; “கால விவேகம்’, “ராஜமார்த்தாண்டம்’ ஆகிய நூல்களில் சுக்ராத்ரி என்றும் தீபாவளி குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள “ஆகாச பைரவ ஜல்பம்’ என்ற ஓலைச் சுவடியில் வாணவேடிக்கை பற்றி உள்ளது. சிவகாசி பட்டாசு தொழில் 1923-ல் ஆரம்பிக்கப்பட்டது. தீபாவளி வெடி வெடிக்கும் பழக்கம் பேரரசர் பாபர் (1483- 1530) காலத்தில் ஏற்பட்டது. மஹதாப் என்ற உருது சொல்லுக்கு மத்தாப்பு எனப் பொருள்.

நேபாளத்தில்…
திஹார் என்ற பெயரில் ஐந்து நாள் கொண்டாடுகின் றனர். தீபாவளி முதல் நாள் காகங்களுக்கு தயிர் சாதம் வைப்பர். இரண்டாம் நாள் பைரவரான நாய்க்கு விருந்து வைப்பர். மூன்றாம் நாள் பசுக்களுக்கு பூஜை செய்வர். நான்காம் நாள் வீட்டுப் பிராணிகளுக்கு உணவு கொடுப்பர். ஐந்தாம் நாள் சகோதர- சகோதரிகள் நலனுக்கு பைலாதாஜ் என்ற பண்டிகை கொண்டாடுகின் றனர்.

http://worldkovil.com/?page_id=239

வரலாறுகளில் தீபாவளி பண்டிகையில் பட்டாசு கொளுத்தும் பழக்கம் முற் காலங்களில் இருந்ததில்லை. மொகலாய சக்ரவர்த்தி பாபரின் காலத்தில்தான் இந்த பழக்கம் ஆரம்பமாகிறது. அனைத்து சாதியினரையும் வைத்து சமபந்தி போஜனை நடத்தி அதன் பிறகு பட்டாசுகளையும் கொளுத்தியுள்ளனர். அதை இன்று மிக தீவிரமாக பிடித்துக் கொண்டனர்.

ராவணன் said...

அண்ணாச்சி நீங்க சொன்னது சரிதான்.

ஒரு பாக்கெட் கடலைமிட்டாய் இருந்தால் ஆப் பாட்டிலை ராவாவே அடித்துவிடுவேன்.

பத்து வயசில் வீட்டிலேயே கடலை மிட்டாய் செய்து சாப்பிட்டுள்ளேன்.

suvanappiriyan said...

திரு பொன்னியின் செல்வன்!

//எவ்வளவு பணம் வந்தாலும் அந்த தாய் தந்தையின் அன்பை யார் கொடுப்பார்கள்? அந்த சிறுமி கதறியதே, ''எனக்கு பணம் வேண்டாம். என் அப்பாதான் வேண்டும் '' இதற்கு நாம் அனைவரும் என்ன பதில் சொல்லப் போகிறோம்?//

உறவினர்களை அகால வேளையில் பிரிவது எத்தகைய சோகம் என்பதை கோடிகளில் புரளும் அரசியல்வாதிகளுக்கு எங்கு தெரியப் போகிறது?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ ரப்பானி!

//தீபாவளிக்கு வெடி வெடிப்பது அந்த மத நம்பிக்கை சம்பந்தப்பட்டது எனில் அதை நாம் சுட்டிக்காட்ட அவசியம் இல்லை அது அவர்களின் நம்பிக்கை என எடுத்துக்கொள்ளலாம்.
வெடி வெடிப்பது பின்னால் வந்த மக்களால் உருவாக்கப்பட்டது எனில் விழிப்புணர்வு அவசியம் செய்ய வேண்டும்.//

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் வழக்கமே மொகலாய சக்கரவர்த்தி பாபரின் காலத்தில்தான் ஆரம்பிக்கிறது. மத்தாப்பு என்ற சொல்லே உருது மொழியிலிருந்து வந்தது. எனவே இடையில் வந்த இந்த பழக்கத்தை விடுவதால் மத சடங்குகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்பதை அறியலாம்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ அஜீம் பாஸா!

//நல்ல விழிப்புணர்ச்சி ஊட்டும் பதிவு.சகோ.ரப்பானி சொன்னதை வழி மொழிகிறேன் மத நம்பிக்கை சம்பதபட்டது எனில் அது அவர்கள் இஷ்டம். அதிகாரிகளுக்கு இது நடக்கும் என்று முன்பே தெரியும் அதனால் ஒரு வாரம் முன்பே அனுமதி ரத்து செய்து விட்டார்கள். ஆனால் அதன் ஆளும்கட்சி கவுன்சிலர் ஆனதால்பயந்து நடவடிக்கை எடுக்கவில்லை என நினைக்கிறேன்.//

அரசியல்வாதிகள் செய்யும் மெத்தன போக்கால் இன்று 30க்கும் மேற்பட்ட உயிர்கள் கருகி விட்டது. வழக்கம் போல் இதுவும் மறக்கப்பட்டு திரும்பவும் தவறுகள் தலை தூக்கும்.

நம்பள்கி said...

கவிதை அருமை; நன்றாக எழுதுகிறீர்கள்!

நீளத்தை குறையுங்கள். Social studies பாடம் படிக்கிராமாதிரி இருக்கு; மூச்சு தினறது; நான் முழுவதும் படிக்கவில்லை. முடியலைஞங்கோவ்!!!!!!!!


//[மொகலாய பேரரசர் x, y, z தீபாவளியன்று பெருவிருந்த....கொளுத்தி வாணவேடிக்கை செய்துள்ளார்.]///

இது நமது சனாதனவாதிகளின் இடைச்செருகல்கள். ஒவ்வெரு நாட்டிலும் [ஆம், இந்தியா வெள்ளைக்காரணுக்கு முன் பல நாடுகளாத்தான் இருந்தது. ஆதாரம் வரலாறு; சரித்திரம்] தீபாவளி ஒவ்வொரு காரணங்களுக்காக கொண்டாடுகிராகள்.

சில இடங்களில் புது வருடக் கணக்கு என்றும் கேள்வி.

நம்பள்கி said...

ஒவ்வொரு நாட்டிலும்...என்று போன பதிவில் எழுதியதின் அர்த்தம்: மத்திய மற்றும் வட இந்தியாவில் உள்ள 'நாடுகள்' என்று இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலும், கிராமங்களில் தீபாவளி கொண்டாடுவதில்லை. எங்க தாத்தா 18 வயதில் சென்னை வந்ததால் எங்க வீட்டில் தீபாவளி உண்டு; ஐயரோட ஈஷிக்கொண்டு எங்களுக்கும் தீபாவளி...இல்லை என்றால் எங்களுக்கும் தீபாவளி கிடையாது.

அவ்வளவு ஏன்...நம்ம ஆற்காடு கறி 'துன்னர' முதலியார்கள் சென்னையில் வசித்தாலும் தீபாவளி கொண்டாடுவதில்லை; துணி எடுப்பதில்லை; பட்டாசு சுடுவதில்லை.

அவர்களுக்கு நோன்பு மட்டும் தான்; தீபாவளி அடுத்த நாள் என்று நினைவு. எனது வாத்திகள் மற்றும் பல நண்பர்கள் சுந்தரத் தமிழில் பேசும் கறி துன்னர முதலியர்கள் தான்.
அவர்கள் தீபாவளி அன்று கறி துன்னமாடாங்கோ! ஆனால், அடுத்த நாள் ஆடு உண்டுங்கோ.

நான் சைவம் என்பதால் நாளும் கிழமையும் கிடையாது. எப்ப கிடைச்சாலும் சாப்பிடவேண்டியது தான்.

வாழ்கையில் தினமும் முட்டை இல்லையென்றால் வாழ்வே மொட்டை (தரிசு, waste)!

suvanappiriyan said...

திரு நம்பள்கி!

//கவிதை அருமை; நன்றாக எழுதுகிறீர்கள்!//

நன்றி!

//நீளத்தை குறையுங்கள். Social studies பாடம் படிக்கிராமாதிரி இருக்கு; மூச்சு தினறது; நான் முழுவதும் படிக்கவில்லை. முடியலைஞங்கோவ்!!!!!!!!//

பதிவு நீளமாகி விட்டது உண்மைதான். இதை இரண்டு பதிவுகளாக்கியிருக்கலாம்.

//வாழ்கையில் தினமும் முட்டை இல்லையென்றால் வாழ்வே மொட்டை (தரிசு, waste)!//

ஹா...ஹா...ரசித்தேன்.





suvanappiriyan said...


தங்கமணி!

//ஆனால், முஸ்லீமிடம் கேட்பதில் பொருளிருக்கிறது. ஏனெனில் உங்களது சட்டம் நீங்களே சொல்வது போல மாறாத சட்டம். அப்படிப்பட்ட இஸ்லாமில் ஏன் அல் அக்தும் சாதியினரை தீண்ட்த்தகாதவர்களாக 1400 வருடம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்பதில் பொருளுண்டு. அதனை நீங்கள் எதிர்கொண்டாக வேண்டும்//.

நான் முன்பே கூறி விட்டேன். குர்ஆனிலோ நபி மொழிகளிலே தீண்டாமை கிடையாது. அதற்கு எதிரான கருத்துக்களே உள்ளதாக கூறியுள்ளேன். நீங்கள் குறிப்பிடும் அல் அக்தும் என்ற பிரிவினரின் மூதாதையர் இஸ்லாத்துக்கு முன் அடிமைகளாக அரபு நாடுகளுக்கு ஆப்ரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டவர். முகமது நபி காலத்தில் இவர்கள் விடுதலையாக்கப்பட்டு சுதந்திரமானவர்களாக ஆகி விட்டனர். இவர்கள் பள்ளியில் தொழ எந்த தடையும் இல்லை. பெருநாட்களில் மற்ற அரபிகள் கட்டித் தழுவி தங்கள் அன்பை வெளிக்காட்டுவர். அரசு பல திட்டங்களை தீட்டி அவர்களின் முன்னேற்றத்துக்கு பல வழிகளையும் செய்தே வருகிறது. புதிதாக கட்டிய வீடுகளை விட்டு சேரி போன்ற பகுதிகளுக்கு சென்று விடுகின்றனர். அப்படி வாழ்வதைத்தான் அவர்களும் விரும்புகின்றனர்.

சிராஜ் said...

சலாம் அண்ணன்...

கவிதை அருமை.... நாட்டு நடப்ப சுட சுட கொண்டு வந்திட்றீங்க...வாழ்த்துக்கள்...

Nasar said...

நல்ல விழிப்புணர்ச்சி ஊட்டும் சமூக அக்கறையுள்ள பதிவு.சகோ.ரப்பானி சொன்னதை வழி மொழிகிறேன் .........
// மதுரை - வயலுக்குப் போயி நெலக்கடல பரிச்சி சப்பிடலாம்லா...
திருநெல்வேலி - ஏலா வயக்காட்டுக்கு வாலா...கல்லப்பருப்பு திம்போம்.
கொங்கு - என்ற கூட வெள்ளாமக் காட்டுக்கு வா., கடல திங்கோணும்.
தஞ்சை - கொல்லைக்கு வா கடலை சாப்பிடலாம்.
ஈழம் - 'வாருமப்பா கச்சான் தின்னுவம்'.
கன்னியாகுமரி - அண்ணாச்சி வாறியலா கல்ல சாப்பிடுவோம்.//
சரி பாய் சென்னையில எப்படி சொல்வாங்க தெரியுமா ??
த்த...வா மாமே பர்பி(வேர்கடல) துண்லாம் ...

பொழுது விடியட்டும் தலைகிழி,நோஞ்சான் சிங்கம் etc வந்து ஆட்டம் பாம் வைப்பாங்க எதுக்கும் கொஞ்சம் உசாரா இருங்க ..ஆஹா ஆஹா .....

அஸ்மா said...

சலாம் சகோ!

//எங்களுக்கு பணம் வேண்டாம். அப்பா தான் வேண்டும்,'' என கதறி அழுதது//

அந்த சிறுமியின் தவிப்பான வார்த்தைக் கேட்டு கண்ணீரைக் கட்டுப்படுத்த‌ முடியல சகோ :( இதுபோன்ற ஆபத்துகள் எத்தனையோ முறை நடந்தும்கூட பட்டாசை தடைசெய்ய அரசாங்கத்துக்கு புத்தியே வரமாட்டேங்குதே? ஒருவேளை ஆட்சியாளர்களின் குடும்பத்தார் அந்த பட்டாசு தொழிலை செய்தால்தான் விழிப்பார்களோ??

//ஒழிந்து போன கடலை மிட்டாயும் ...//

கடலை மிட்டாயின் ரசிகர்கள் (நாமெல்லாம்) இருக்கும்வரை அது ஒழியாது சகோ :‍-) 'ஒரு 10 ரூபாய் பாக்கெட்டை 105/110 ரூபாய் மதிப்புக்கு வாங்கணுமா?'ன்னு இந்திய ரூபாயை கணக்கு பண்ணிவிட்டு வாங்காமல் வருபவர்கள், அதைவிட அதிக விலை கொடுத்து சாக்லேட் வாங்குவ‌தை யோசிப்பதில்லை. ஆனால் நமக்கெல்லாம் தமிழ்க் கடைகளுக்கு செல்லும்போது லிஸ்ட்டில் கடலை மிட்டாய் முக்கிய இடம்பெறும். விரைவில் காலியாவதும் அதுதான் :) எப்போதாவது வீட்டிலும் செய்வதுண்டு.

[ஓட்டுப்போட ஆட்கள் நிறைய வரும்போல... அதனால கடலை மிட்டாய் செய்ய‌ ரெசிபி ஒருநாள் கொடுத்துட வேண்டியதுதான் :‍-)]

suvanappiriyan said...

தங்கமணி!

//Even their plates are considered dirty. “Don’t eat with the Akhdam because worms come out of their plates,” the saying goes.//

இந்த மக்கள் இஸ்லாம் வருவதற்கு 600 வருடங்களுக்கு முன் எத்தியோப்பியாவிலிருந்து ஏமனுக்கு வந்தவர்கள். பல ஆண்டுகள் ஏமனில் வாழ்ந்த ஒருவர் இவர்களைப் பற்றி சொல்வதைப் பாருங்கள்:.

"One common critique of the Akhdam from Yemenis is that they have done nothing to fight for change within society, or to improve their own lives. Some think that many have appropriated a collective 'helpless' status, simply accepting their banal lives and fetid living situations."

தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள எந்த முன்னேற்பாடும் செய்து கொள்வதில்லை. ஏற்கெனவே அரபுலகில் ஏமன் வறிய நாடு. அந்த நாட்டு அரசு சொந்த மக்களையே சிறப்பாக வைத்திருக்கவிலலை. ஏனெனில் பொருளாதாரத்தில் வளம் குன்றிய நாடு. இவர்கள் வந்தேறிகளை முன்னேற்றுவதில் எவ்வாறு அக்கறை செலுத்துவார்கள்.

அந்த எத்தியோப்பிய வழி வந்த முஹம்மது அமூதி சவுதி அரேபியாவில் எவ்வாறு உள்ளார் என்பதை இந்த சுட்டியில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

Son of a Saudi father and Ethiopian mother, Mohammed Al Amoudi started investing in Sweden in the 1970s. He made his initial fortune in construction in Saudi Arabia.

http://www.forbes.com/profile/mohammed-al-amoudi/

இதே எத்தியோப்பிலிருந்து வந்த முஹம்மது அமூதியின் தாய் சவுதி அரேபியரை திருமணம் முடித்தார். அதன் பிறகு முஹம்மது அமூதி சவுதியில் பல தொழில்களிலும் முன்னேறி இன்று தனது தாய் நாடான எத்தியோப்பியாவிலும் பல தொழில்களை தொடங்கியுள்ளார். உலக கோடீஸ்வரர்களில் நம் அம்பானி, முகேஷோடு போட்டி போடுகிறார். சவுதி மன்னரை விட அதிக சொத்துகள் இந்த ஆப்ரிக்க வழி வந்தவரிடம் குவிந்துள்ளது. இவரை யார் தடுத்தது? 12.5 பில்லியன் டாலருக்கு சொந்தக்காரராக உள்ளார்.

http://www.thepatrioticvanguard.com/spip.php?article6654

ஒரு ஆப்ரிக்க கருப்பினத்தவர் இறந்தவுடன் எந்த அளவு மரியாதையோடு மற்ற முஸ்லிம்களால் அவரது உடல் புதைக்கப்பட்டது என்பதை இங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

எனவே எமனில் எத்தியோப்பிய நாட்டவர் வறுமையில் உழல்வது ஏமனின் பொருளாதாரத்தாலும், அந்த மக்களின் சோம்பலாலும் தானே யொழிய இதற்கு இஸ்லாம் காரணமாகாது.

இங்கு நானும் எனது பாஸூம் (சவுதி) சில நேரம் ஒரே தட்டில் அமர்ந்து சாப்பிட்டிருக்கிறோம். ஆப்ரிக்கர்கள் சுத்தமில்லாமல் அழுக்குடன் இருக்கும் போது ஒரே தட்டில் அமர்ந்து சாப்பிட எவருக்கும் மனது வருமா? அவர்கள் தங்களின் வாழ்வு முறையை சுத்தமாக்கிக் கொண்டால் அனைத்து முஸ்லிம்களும் அமர்ந்து சாப்பிடுவர்..

உங்களைப் போல் நீங்கள் சாப்பிட்ட எச்சில் தட்டில் தலித்களை புரள சொல்வது போல் புரள சொல்ல மாட்டோம்.

Would it be permissible to eat from the same plate as a non-Muslim, provided that the food in it self is halal? What if the non-Muslim has eaten something unlawful earlier and I fear that he/she has not washed their hands, causing some haram from their hands to mix with the halal food?
Walaikum assalam wa rahmatullah,
I pray that this finds you well, and in the best of health and spirits. May Allah grant you all good and success in this life and the next.

It is permitted to eat from the same plate as a non-Muslim. The basic assumption of purity isn't lifted by mere possibility. However, it is recommended to exercise precaution when possibilities are based on reasonable fears--rather than mere misgivings.

And Allah alone gives success.
Faraz Rabbani

http://www.youtube.com/watch?v=YA_zUxi4T2g

http://www.youtube.com/watch?v=4rKePkKXqyM

http://www.youtube.com/watch?v=rp_KBONLYZI&feature=related

நாடு இனம் மொழி அனைத்தும் கடந்து ஒரு தாய் மக்கள் என்ற எண்ணத்தில் அமர்ந்து அனைவரும் சாப்பிடும் அழகைப் பாருங்கள். நமது நாட்டில் இது சாத்தியப்படுமா? இன்னும் எச்சில் இலையில் அல்லவா புரண்டு கொண்டிருக்கிறோம்.




suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//கவிதை அருமை.... நாட்டு நடப்ப சுட சுட கொண்டு வந்திட்றீங்க...வாழ்த்துக்கள்...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ அஸ்மா!

//[ஓட்டுப்போட ஆட்கள் நிறைய வரும்போல... அதனால கடலை மிட்டாய் செய்ய‌ ரெசிபி ஒருநாள் கொடுத்துட வேண்டியதுதான் :‍-)]//

ஹா..ஹா...அவசியம் கொடுங்கள்.

நான் எங்கு சென்றாலும் வேர்க் கடலை அல்லது கடலை மிட்டாய் விரும்பி சாப்பிடுவேன். விலையும் கம்மி. உடலுக்கும் நல்லது.

suvanappiriyan said...

சகோ நாசர்!

//சரி பாய் சென்னையில எப்படி சொல்வாங்க தெரியுமா ??
த்த...வா மாமே பர்பி(வேர்கடல) துண்லாம் ...//

ஆஹா.....அருமையான சென்னை தமிழை ஞாபகமூட்டியதற்கு நன்றி!

//பொழுது விடியட்டும் தலைகிழி,நோஞ்சான் சிங்கம் etc வந்து ஆட்டம் பாம் வைப்பாங்க எதுக்கும் கொஞ்சம் உசாரா இருங்க ..ஆஹா ஆஹா .....//

இல்லையில்லை. இப்போ எல்லாம் நம்மள நல்லாவே புரிஞ்சுகிட்டாங்க. எதிர் கருத்துகள் இருந்தாலும் கண்ணியமாகவே வைப்பாங்க.

suvanappiriyan said...

கொச்சி: சிவகாசி, பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த, 40 பேருக்கு, இலவச ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு, நடிகர் மம்முட்டி ஏற்பாடு செய்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, முதலிப்பட்டியில், தனியாருக்கு சொந்தமான, பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 38 பேர் பலியாகினர்; 44 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வெடி விபத்தில் காயமடைந்த, 40 பேருக்கு, இலவச ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு, பிரபல நடிகர் மம்முட்டி ஏற்பாடு செய்துள்ளார். கேரளா, கொச்சியில், நடிகர் மம்முட்டி நிர்வகித்து வரும், "பதஞ்சலி ஹெர்பல்ஸ்' என்ற நிறுவனத்தின் சார்பில், காயமடைந்தவர்களுக்கு, "அக்னி ஜித்து' என்ற, மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த சிகிச்சைக்கு, 25 லட்சம் ரூபாய் செலவாகும். சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள், நேற்று முன்தினம் இரவு, சிவகாசி சென்றடைந்தன. இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க, ஏற்பாடு செய்துள்ள நடிகர் மம்முட்டிக்கு நேற்று பிறந்தநாள். இதுதொடர்பாக, நடிகர் மம்முட்டி கூறுகையில், ""நான், எந்த ஆண்டிலும் பிறந்த நாளை கொண்டாடியதில்லை. இவ்வாண்டும் அப்படியே. சிவகாசி வெடி விபத்து குறித்து அறிந்ததும், மிகுந்த வேதனை அடைந்தேன். காயமடைந்தவர்களுக்கு, நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம் என நினைத்து, மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளேன்,'' என்றார்.

http://www.dinamalar.com/News_detail.asp?Id=543108

பழூர் கார்த்தி said...

உருக்கமான கவிதை, இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகிறோம்? நம் நாட்டில் மனித உயிருக்கு மதிப்பே இல்லை :(

suvanappiriyan said...

சார்வாகன்!

//எண்ணெய் என்பது இப்போதைய பொருளாதர‌த்தின் ஆணிவேர் என்றே சொல்லலாம். உலகின் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் சவுதி அரேபியாவே முண்ணனி வகிக்கிறது.

நேற்று அல்ஜசீரா செய்தியில் சவுதியில் பொ.ஆ 2030 க்கு பிறகு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அளவு இருக்காது என படித்ததும் , இது நடக்கும் என்பது எதிர்பார்த்தது என்றாலும் இவ்வளவு சீக்கிரம் நடப்பது வியப்புக்கு உரியது.//


பெட்ரோல் தீர்ந்தால் ஒன்றும் குடி மூழ்கி போகாது. முகமது நபி தனது ஆரம்ப காலத்தில் இரண்டு மூன்று பேரித்தம் பழங்களை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார் என்பதை ஞாபகப்படுத்தினால் இவர்களும் அவரைப் போலவே வாழப் பழகிக் கொள்வார்கள். வெளிநாட்டு வேலையாட்களை வெளியாக்கினால் பில்லியன் கணக்கில் டாலர்களை மிச்சப்படுத்தலாம். ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு டிரைவர்கள், மூன்று டிரைவர்கள் என்ற நிலை மாறி சவுதிகளே ஓட்டுனர்களாகி விடுவார்கள். தற்போது விவசாயத்திலும் அதிக கவனம் செலுத்துகிறார்கள். எனவே இஸ்லாம் என்ற அருமையான வழியை வைத்து சவுதிகளை சிக்கன வாழ்வு வாழ்பவர்களாக மாற்றி விடலாம்.

ஹஜ், உம்ரா வருபவர்களுக்காக இன்று அரசு கோடிக்கணக்கான டாலர்களை செலவழிக்கிறது. பெட்ரோல் குறைந்தால் ஒவ்வொரு வெளி நாட்டவரும் 3000 ரியால் பராமரிப்பு செலவுக்காக சவுதி அரசுக்கு கட்ட வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் உலக முஸ்லிம்கள் கட்டியே தீர வேண்டும். இதை வைத்தே கூட அரசு செலவினங்களை சமாளித்து விடலாம்.

என் பையன்களுக்கே ஆடம்பரமாக ஏதும் கேட்டால் இரண்டு நபி மொழிகளை எடுத்துப் போடுவேன். மௌனமாகி சென்று விடுவார்கள். எனவே கவலையை விடுங்கள். எந்த சூழ்நிலையிலும் முஸ்லிம்கள் வாழ்ந்து விடுவர். அதற்கு இஸ்லாம் அழகிய வழி காட்டுகிறது.

மனமிருந்தால் மார்க்கமுண்டு. :-).

suvanappiriyan said...

சகோ பழூர் கார்த்தி!

//உருக்கமான கவிதை, இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகிறோம்? நம் நாட்டில் மனித உயிருக்கு மதிப்பே இல்லை :(//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே பொதுக்குழாயில், தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். வந்தவாசி அடுத்த பெரிய இளவன்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி அஸ்வினி, 32. அதே கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் மனைவி பாஞ்சாலை, 50. இருவருக்கும் கடந்த 3ம் தேதி தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம் மேல் ஒலக்கூர் கிராமத்திலிருந்து பாஞ்சாலை வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களிடம் பாஞ்சாலை, குழாய் தகராறு குறித்து கூறியுள்ளார்.
அப்போது சாலையில் நடந்து சென்ற அஸ்வினியை வழி மறித்த பாஞ்சாலை அவரது மகன் பிச்சாண்டி, மேல் ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, இவரது மனைவி கஸ்தூரி, கமல் ஆகியோர் சேர்ந்து தாக்கினர்.
இதை அஸ்வினியின் உறவினர்கள் மோகன், செண்பகவள்ளி, 30 ஆகியோர் தடுக்க முயன்ற போது, அவர்களும் தாக்கப்பட்டனர். பதிலுக்கு இவர்களும் திருப்பி தாக்கினர். இதில், காயமடைந்த அஸ்வினி, பாஞ்சாலை, கஸ்தூரி ஆகியோர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அஸ்வினி சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
வடவணக்கம்பாடி போலீஸார் விசரித்து, இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து, ஒரு தரப்பை சேர்ந்த பிச்சாண்டி, மற்றொரு தரப்பை சேர்ந்த மோகன், செண்பகவள்ளி, ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கமலை தேடி வருகின்றனர்.

இன்றைய பத்திரிக்கை செய்தி.

பொது இடத்தில் குடிக்கும் தண்ணீரிலுமா வர்ண பேதம் பார்க்க வேண்டும்!