Followers

Monday, October 26, 2015

தலித் எழுத்தாளர் கைகளை வெட்ட இந்துத்வாவாதிகள் முயற்சி!



கர்நாடக மாநிலம் தாவணகெரே வில் ஹூச்சங்கி பிரசாத் (23) 'ஒடல கிச்சு' (உள்ளுக்குள் நெருப்பு) என்ற நூலை கடந்த ஆண்டு வெளியிட்டார். இதில் இந்து மதத்தில் இருந்து உருவான சாதி படிநிலையும், அதன் கட்டமைப்பையும், சமகாலத்தில் நிலவும் சாதி கொடுமைகளையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும் இந்து மத அடிப்படை வாதத்தையும், தீண்டாமை கொடுமைகளையும், இட ஒதுக்கீட்டின் அவசியத்தையும் வலியுறு த்தி பல்வேறு இதழ்களில் கட்டுரை எழுதி வந்தார்.

இந்நிலையில் கடந்த 22-ம் தேதி அதிகாலை 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஹூச்சங்கி பிரசாத் மீது தாக்குதல் நடத்தியது. அவரது முகத்தில் குங்குமத்தை பூசி, சாதிக்கு எதிராக எழுதும் விரல்களை வெட்டவும் முயற்சித்தனர்.

கடுமையான தாக்குதலுக் குள்ளான ஹூச்சங்கி பிரசாத் அவர்களிடம் இருந்து தப்பி தாவணகெரே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதை விசாரித்த போலீஸார் மர்ம நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி) மற்றும், தலித் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பிரசாத்தின் நூலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ராம் சேனா அமைப்பினரிடம் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதுதவிர சம்பவ இடத்துக்கு அருகில் உள்ள இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பிரசாத் தாக்கப்பட்ட இடத்தில் கிடந்த தடயங்களை கைப்பற்றியும், அருகில் இருந்தவர்களுடமும் விசாரித்து தகவல்களை திரட்டியுள்ளனர். இதையடுத்து தாவணகெரே, தார்வாடு, ஹூப்ளி ஆகிய பகுதிகளில் உள்ள சிவசேனா, நவநிர்மாண் சேனா, பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் கூறும்போது, “எழுத்தாளர் ஹூச்சங்கி பிரசாத் மீது நடைபெற்ற தாக்குதல் கண்டனத்துக்கு உரியது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் தாவணகெரே போலீஸார் ஈடுபட்டுள்ளனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சட்டப்படி தண்டிக் கப்படுவார்கள். எழுத்தாளர்கள் மீது தாக்குத‌ல் நடத்துவோர் மீது கர்நாடக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

மூத்த கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி கொலை செய் யப்பட்டதை தொடர்ந்து, கர்நாட காவில் மற்றொரு எழுத்தாளர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை கண்டித்து கர்நாடகா வில் பல்வேறு இடங்களில் எழுத்தாளர்களும், தலித் அமைப் பினரும் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
26-10-2015

No comments: