Followers

Sunday, October 18, 2015

நயன்தாரா செய்தது தவறாகவே இருக்கட்டும்..நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?ராமேசுவரம் சென்றிருந்தேன். உலகின் மிக நீண்ட பிராகாரத்தைக் கொண்டது ராமநாதசுவாமி கோயில். கோபுர வாசலை ஒட்டியுள்ள அனுமன் முகத்தில் செந்தூரப்பூச்சு. அடுத்து தனுஷ்கோடி நோக்கிப் பயணம். வழியில் நம்புநாயகி அம்மன் கோயில். நம்புநாயகி அம்மன் முகத்தில் செந்தூரப்பூச்சு. தனுஷ்கோடியின் காவல் தெய்வம் முத்துமாரியம்மன்.

தனுஷ்கோடி கடலோடிகள் வாழ்வின் ஒரு பகுதி என்றும்கூட இதைச் சொல்லலாம். ஊரில் பெரும்பாலானோர் பெயர்கள் மாரி, முத்து, முத்துமாரி, மாரியம்மாள் இப்படி இருக்கும். கடற்கரையில் புதிய வடிவில் ஒரு கோயில் முளைத்திருக்கிறது. சிலைகள் எதிலும் நம்மூர் பாணி இல்லை. வடக்கிலிருந்து உபயமாக வந்தடைந்த சிலைகள் என்கிறார்கள். உள்ளூர் மாரியம்மனுக்கு இப்போது சவாலாக ஆரம்பித்திருக்கிறது பெருந்தெய்வ வழிபாடு.

தமிழகத்தின் கோயில் நகரங்களான கும்பகோணம், காஞ்சிபுரம் செல்லும்போது ஒவ்வொரு முறையும் வழியில் புதுப்புது கோயில்கள் முளைப்பதைப் பார்க்க முடிகிறது. கோபுரங்கள் / விமானங்களில் தொடங்கி உள்ளே இருக்கும் சாமி சிலைகள், வழிபாட்டு முறைகள் வரை எல்லாம் புதுப் பாணி. இந்தியர்களின் எல்லை கடந்த ஆன்மிகப் பயணங்களும் உறவுகளும் பங்களிப்புகளும் வரலாறு முழுக்க விரவிக் கிடக்கின்றன. ஆனால், இந்தப் புதிய கலாச்சாரத்தையும் அதன் தொடர்ச்சியாகப் பார்க்க முடியுமா? முடியாது.

இதன் பின்னுள்ளவர்களைத் தேடினால், ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு பெயர் ஒலிக்கிறது நன்கொடையாளர் ரூபத்தில். உள்ளூர் மக்களுக்கோ, வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களுக்கோ இதில் நேரடித் தொடர்பு இல்லை. ஊருக்கு ஊர் வெவ்வேறு கடவுள்கள். அந்தந்த ஊரின் இயல்போடும் எளிதில் நெருங்கிப் பொருந்தக் கூடிய வகையிலுமான கடவுள்கள். ஆனால், இக்கோயில்கள் உருவாக்கும் கலாச்சாரம் ஒருமித்தது.

“ஷீர்டி சாய்பாபாவின் ஆரம்ப கால ஓவியங்கள், சிலைகளில் அவர் கன்னம் ஒட்டிப்போயிருக்கும். இப்போது கவனிக்கிறீர்களா? கன்னம் பூச ஆரம்பித்திருக்கிறது. புதிய ஓவியங்கள், சிலைகளில் மோடி மாதிரி இருக்கிறார் சாய்பாபா” என்றார் நண்பர் சங்கர். அப்படிப் பார்த்தால், அப்படியும் தெரிகிறார். எது ஒன்றையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

தமிழகத்தில் எங்கெல்லாம் கோயில்களில் செந்தூரம் புதிதாக நுழைகிறதோ அங்கெல்லாம் நிலத்துக்கு அடியில் சங்கப் பரிவார வேர்கள் பரவுவதை உணர முடிகிறது. ராமேசுவரத்தில் தமிழக அரசின் சுற்றுலாத் துறையின் கீழ் செயல்படும் ‘தமிழ்நாடு விடுதி’யில் தங்கல். விடுதி உணவகத்தில் அசைவத்துக்கு இடம் இல்லை. கூடவே, உணவகம் முழுக்க சைவப் பிரச்சாரம். வாசல் சுவர் மீது ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சுவரொட்டி கேட்கிறது: “நாங்கள் ஏன் சைவமாக இருக்கிறோம் என்று கேட்காதே! மாறாக, நீ ஏன் சைவமாக இருக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்!”

உலகின் மிகச் செழிப்பான கடல் பகுதியைக் கொண்ட ராமேசுவரத்துக்கு நிறைய விசேஷங்கள் உண்டு. முக்கியமானது, இந்தியக் கடற்பரப்பில் காணப்படும் 2,200 மீன் இனங்களில் 450 இனங்கள் கண்டறியப்பட்ட ராமேசுவரம் கடல். இங்கு கிடைக்கும் மீன்கள் பல வேறு எங்கும் சாப்பிடக் கிடைக்காதவை. தவிர, அசைவ சமையலில் ராமேசுவரத்துக்குத் தனிப் பாரம்பரியம் உண்டு. இந்திய - இலங்கை - அரேபிய - பாரசீக சமையல் கலாச்சாரத்தின் கூட்டுக் கலவை அது.

ஒரு அலை கொஞ்சம் ஓங்கி அடித்தால், விடுதிக்குள் வந்து தண்ணீர் விழும்; கடலுக்கு அவ்வளவு நெருக்கமாகக் கரையில் கட்டப்பட்டிருக்கிறது ‘தமிழ்நாடு விடுதி’. கடலோடிகளின் நகரத்தில், கடற்கரையில் அமைந்திருக்கும் ஒரு அரசுசார் விடுதியில் மீன் உணவு இல்லை என்றால், நாம்தான் நியாயமாகக் கேள்வி எழுப்ப வேண்டும். மாறாக, ஏன் விடுதி நிர்வாகம் நம்மைப் பார்த்துக்கேள்வி எழுப்புகிறது? கோயிலைக் காரணமாகச் சொன்னார் ஒரு ஊழியர்.

இந்தியாவில் கோயில் இல்லாத ஊர் ஒன்று உண்டா? தவிர, கடவுளையே சைவம் அல்லது அசைவம் ஆக்க நாம் யார்? பதில் இல்லை. விடுதியை விட்டு வெளியேறும்போது, அது கண்ணில் பட்டது. கடற்கரையில், விடுதிக்கு வெளியே கொஞ்ச தூரத்தில் மண்ணில் நிறுவப்பட்ட நடுகல். சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்த ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, ‘பலிதான இடம்’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். சூழலையும் சூழலுக்கான பின்னணியையும் சொல்லாமல் சொல்லும் குறியீடுபோல இருந்தது அது!

மாட்டிறைச்சி தொடர்பாக நிறைய விவாதங்கள் நடக்கின்றன. படித்ததில் கவனிக்க வைத்தவர்கள் இருவர். முதலாமவர், நாட்டின் குறிப்பிடத் தகுந்த பத்திரிகை யாளர்களில் ஒருவரும் மோடி ஆதரவாளருமான சுவாமிநாத ஐயர். நான் மாட்டிறைச்சி சாப்பிடுபவன் என்ற பிரகடனத்துடன் தன் கட்டுரையைத் தொடங்கும் சுவாமிநாத ஐயர், பண்டைய காலத்தில் மேல் சாதியினராகக் கருதப்பட்டவர்களும் ரிஷிகளும்கூட மாட்டிறைச்சி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்று விரிவாக விளக்குகிறார். ‘மகாபாரத’த்தில் வரும், ஒவ்வொரு நாளும் 20,100 கால்நடைகளைத் தனது விருந்தினர்களுக்குப் பரிமாறிய அரசனைக் குறிப்பிடுகிறார்.

கி.பி. எட்டாவது நூற்றாண்டில் எழுதியதாகக் கருதப்படும் பவபூதியின் ‘உத்தர-ராம-சரித்திர’ நாடகத்தைக் குறிப்பிடுகிறார். அதில், சமைத்து வைத்திருந்த பசுவின் இறைச்சியை வசிஷ்டர் கடகடவென்று சாப்பிடுவதைப் பற்றி விவரிக்கும் சவுதாஹடகி - தண்டாயனா உரையாடலைக் குறிப்பிடுகிறார். “பவபூதி எடுத்துக் காட்டியதைப் போல மாட்டுக்கறியைச் சாப்பிடுவது பண்டைய இந்துக் கலாச்சாரம்தான்” என்று சொல்லும் அவர், “வசிஷ்டர் காட்டிய வழியில் மகிழ்ச்சியோடு செல்லும் பிராமணன் நான்” என்று கட்டுரையை முடிக்கிறார்.

இன்றைக்கு இந்துத்வத்தைக் கையில் ஏந்தி நிற்பவர்கள் எந்த மதத்தையும் வரலாற்றையும் அதன் அடியாதாரமாகக் கருதுகிறார்களோ அதில் உள்ள பன்மைத்துவம், முரண்கள் மீது உள்ளிருந்தே வெளிச்சம் பாய்ச்சுகிறார் சுவாமிநாத ஐயர்.

இரண்டாமவர், தலித்திய சிந்தனையாளர் ஸ்டாலின் ராஜாங்கம். மாட்டிறைச்சியை வெறுமனே தலித்துகள் / முஸ்லிம்களோடு மட்டுமே பொருத்திப் பேசப்படும் அரசியலை ஸ்டாலின் ராஜாங்கம் கேள்விக்குள்ளாக்குகிறார். “மலம் அள்ளுவது, பிணக்குழி வெட்டுவது, செத்த மாட்டை அகற்றுவது என்று கடந்த காலங்களில் எதையெல்லாம் சாதியின் பெயரால் தலித்துகளின் மீது சுமத்தினார்களோ அதையெல்லாம் தூக்கியெறிந்து வந்திருப்பதே கடந்த ஒரு நூற்றாண்டு பயணப்பாடு. முன்பு சாதியின் பெயரால் ஒதுக்கப்பட்ட அடையாளத்தை இன்றைக்குச் சாதி ஒழிப்பின் பெயரால் நியாயப்படுத்துவதும் சாதி அடையாளத்தை மறுவுறுதி செய்வதுதான்.

தலித்துகளின் அடையாளம் என்று ஏனைய சாதியினரால் சுமத்தப்படும் மாட்டிறைச்சி அடையாளத்துக்கும் இது பொருந்தும். ஒரு தலித் மாட்டிறைச்சியை விரும்பி உண்பது அவருடைய உணவு உரிமை, சுதந்திரம். ஆனால், அதையே தலித் அடையாளமாக்கி அவர் மீது பிறர் சுமத்துவது சாதிய வன்முறை” என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். இந்தக் கூற்று முஸ்லிம்களுக்கும் பொருந்தும்.

இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு அப்பாற்பட்டு மாட்டிறைச்சியை விரும்பிச் சாப்பிடுபவர்களில் எல்லா இனங்களைச் சேர்ந்தவர்களுமே இருக்கிறார்கள். அதேசமயம், தலித்துகள், முஸ்லிம்களில் அதிகமானோர் மாட்டிறைச்சியைச் சாப்பிட முக்கியமான காரணம், அவர்களுடைய பொருளாதார நிலை. இந்தியச் சூழலில் பொதுப் புத்தியிலுள்ள மாட்டிறைச்சி தொடர்பான மாடு இந்துக்களின் புனித பிம்பம் அல்லது தலித்துகள், முஸ்லிம்களின் உணவுக் கலாச்சாரத்தின் பிம்பம் எனும் - இரு மாறுபட்ட கருத்தாக்கங்களின் அசலான பின்பகுதியை சுவாமிநாத ஐயரும் ஸ்டாலின் ராஜாங்கமும் தொட்டுக்காட்டுகிறார்கள் என்று தோன்றுகிறது.

வரலாறு, நீண்ட கலாச்சாரம் இவற்றையெல்லாம் தாண்டியும் தனி மனித நம்பிக்கைகளுக்கு மதிப்பு இருக்கிறது. ஆனால், அதற்கான எல்லையின் விளிம்பு அவரவருடன் முடிந்துவிடுகிறது. அடிப்படையில் உணவு என்பது உணவு. அதைத் தாண்டி கவனிக்க வேண்டியது, கோடிக்கணக்கானவர்கள் பிழைப்பு. பெரும்பான்மை இந்தியர்களுக்கு இதில் எந்தக் குழப்பமும் இல்லை.

இந்திய விவசாயிகளுக்கு, பயிர்களைத் தாண்டியுள்ள ஒரே ஆதாரம் கால்நடை வளர்ப்பு. 1947-ல் 19.87 கோடியாக இருந்த கால்நடைகளின் எண்ணிக்கை இன்றைக்கு 52.9 கோடி. இதில் மாடுகளின் எண்ணிக்கை 2.98 கோடி. ஒவ்வொரு ஆண்டும் கொல்லப்படும் மாடுகளில் 30% மட்டுமே இறைச்சிக்காகச் செல்கின்றன; மீதி 70% பல்வேறு வணிகப் பயன்பாட்டுக்காகச் செல்கின்றன. உற்பத்தியாகும் மாட்டிறைச்சியில் கணிசமான அளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உலகிலேயே மாட்டிறைச்சியில் இன்றைக்கு முதலிடத்தில் இருப்பது இந்தியா. கிட்டத்தட்ட ரூ. 30 ஆயிரம் கோடி ஏற்றுமதியில் மட்டும் புரளுகிறது. உள்நாட்டில் மாட்டிறைச்சிக்குத் தடை கோரும் சங்கப் பரிவாரங்கள் ஏற்றுமதிக்குத் தடை கோருமா? ஏனைய 70% மாடுகள் செல்லும் வணிகப் பயன்பாடுகளுக்குத் தடை கோருமா? எல்லாவற்றுக்கும் மேல் சந்தை மதிப்பற்ற மாடுகளுக்கு ஒவ்வொரு நாளும் பல கோடி ரூபாய் பராமரிப்புச் செலவை யார் ஏற்பது?

முசாஃபர்நகர் 2013 கலவரங்களின் விளைவு என்ன? மனிதாபிமானிகள் 62 உயிர்கள் பறிபோனதையும் 50 ஆயிரம் பேர் இடம்பெயர நேர்ந்ததையும் சொல்வார்கள். தேர்தல் கணக்கர்கள் 2014 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 73/80 தொகுதிகளை பாஜக கூட்டணி வென்றதைச் சொல்வார்கள். விஷ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்காலைக் கேட்டால், அவர் சரியாகச் சொல்வார், “முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மை பெற முடியும் என்பதை நிரூபித்த தேர்தல் இது.”

இந்திய வரலாற்றில் நாட்டின் மிகப் பெரிய மாநிலத்தில் ஒரு முஸ்லிம் வேட்பாளர்கூட வெற்றி பெற முடியாமல் போன முதல் தேர்தல் இது. முசாஃபர்நகர் கலவரங்களின் நேரடி எதிரொலி. சங்கப் பரிவாரக் கூட்டங்களில் அடிக்கடி ஒலிக்கும் குரல் இது: “சாதியின் பெயரால் நீ நின்றால், உனக்குப் பின்னே இருப்பவர்கள் அதிகபட்சம் நூற்றுக்குப் பத்து அல்லது இருபது பேர்; எதிரிலோ எண்பது பேர். ஆனால், இந்து என்று உணர்ந்து நின்றாலோ, உன்பின்னால், நூற்றுக்கு எண்பது பேர்.”

சாதி உணர்வை மத உணர்வாக உருமாற்றி, தனதாக்கிக் கொள்வது சங்கப் பரிவாரங்களின் அடிப்படை உத்திகளில் ஒன்று. பிஹார் தேர்தல் வெற்றிக்காக என்ன விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறது பாஜக. சாதிவாரி ஓட்டுக் கணக்குக்குப் பேர் போன பிஹார் தேர்தல் களத்தைத் தனக்குச் சாதகமாகத் திருப்புவது எப்படி? தன்னுடைய அடிப்படை உத்தியையே சங்கப் பரிவாரங்கள் இப்போது கையில் எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது.

ஏன் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி மும்பையில் இசை நிகழ்ச்சியை நடத்தமுடியாமல் தடுக்கப்பட்டார்? ஏன் இந்திய - பாகிஸ்தான் உறவுகளைப் பேசும்குர்ஷித் கசூரியின் புத்தக வெளியீட்டுக்கு ஏற்பாடு செய்த சுதீந்திர குல்கர்னிமை வீச்சுக்கு உள்ளாக்கப்பட்டார்? சிவசேனையின் ஆன்மா ‘சாம்னா’வில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத் எழுதியிருக்கிறார்:

“கோத்ரா சம்பவத்தை வைத்துத்தான் நரேந்திர மோடியை உலகம் அறிந்துவைத்திருக்கிறது. அதே காரணத்துக்காகத்தான் நாங்களும் அவரை மதிக்கிறோம். குலாம் அலி, குர்ஷித் கசூரி தொடர்பான சர்ச்சைகள் துரதிர்ஷ்டவசமானவை என்று இன்றைக்கு அதே மோடி சொல்கிறார் என்றால், அது எங்களுக்குத்தான் துரதிர்ஷ்டம்!”

கொஞ்ச காலமாகவே சங்கடமாகத்தான் இருந்தார் நயன்தாரா சேகல். தாத்ரி சம்பவத்துக்குச் சில வாரங்களுக்கு முன்பு அவர் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில்கூட அது வெளிப்பட்டது.

டெல்லி நேரு அருங்காட்சியகம் உருமாற்ற முயற்சியை யொட்டி எடுக்கப்பட்ட பேட்டி அது. இந்தோனேஷியாவில் நடைபெற்ற ‘அணிசேரா இயக்க’த்தின் அறுபதாமாண்டு கொண்டாட்டத்தைப் பற்றி அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் நயன்தாரா. அந்த நிகழ்வில் இந்தியா சார்பில் பங்கேற்ற வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தன் உரையில் ஒரு வார்த்தைகூட நேருவைப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஆனால், பங்கேற்ற ஏனைய நாடுகளின் பிரதிநிதிகள் அத்தனை பேரும் நேருவைக் குறிப்பிட்டார்கள். “அந்த இயக்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் நேரு. ராமனைக் குறிப்பிடாமல் ராமாயணத்தைப் பற்றிப் பேசுவதற்கு ஒப்பானது இது. நேருவை வரலாற்றிலிருந்து அகற்றுவதில் குறிவைத்துச் செயல்படுகிறது இந்த அரசு.

ஏனென்றால், நவீன இந்திய வரலாற்றில் நேரு அடைந்திருக்கும் இடம் அவர்களுக்கு அத்தனை அச்சம் தருகிறது. நேரு அருங்காட்சியகத்தை உருமாற்றுவது என்பது அவருடைய வரலாற்றை மட்டும் மாற்றி எழுதப்போகும் முயற்சி அல்ல; அங்கு சுதந்திரப் போராட்ட வரலாற்றின் முக்கியமான ஆவணங்கள் பல இருக்கின்றன. பிரிட்டிஷ் அரசுடன் உடன்பட்டுச் செல்ல எந்த நிலைக்கும் தயாராக இருப்பதாக அந்தமான் சிறையிலிருந்து கடிதம் எழுதி சமரசம் பேசிய ஆர்எஸ்எஸ் முன்னோடி வீர் சாவர்க்கர் ஆவணங்கள் உட்பட. இன்றைய நவீன இந்தியா நேருவால் உருவானதாக அவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், அது காந்தியிடமிருந்து உருவாகி நேருவிடம் வந்தது. நேருவைக் குறிவைப்பதன் மூலம் நவீன இந்தியா எனும் கட்டமைப்பையே அவர்கள் குறிவைக்கிறார்கள்” என்று அந்தப் பேட்டியில் கூறியிருந்தார் நயன்தாரா.

விமர்சனங்களுக்காக ஒரு மூத்த எழுத்தாளர் சுட்டுக் கொல்லப்படுகிறார், மாட்டிறைச்சி வைத்திருந்தார் எனும் வதந்தி காரணமாக ஒரு முஸ்லிம் பெரியவர் அடித்துக் கொல்லப்படுகிறார், கோயிலுக்குள் நுழைய முற்பட்டார் என்பதற்காக ஒரு தலித் பெரியவர் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தப்படுகிறார் என்பன போன்ற செய்திகள் மட்டும் அல்ல; ஏதோ ஓரிரு சம்பவங்களோ, கலவரங்களோ அல்ல; நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்றதில் தொடங்கி ஒவ்வொரு துறையிலும் நடந்துகொண்டிருக்கும் தொடர் மாற்றங்கள், பொதுவெளியில் சங்கப் பரிவாரங்கள் ஏக துணிச்சலோடும் உற்சாகத்தோடும் மூட்டும் வெறுப்புத்தீ, சிறுபான்மைச் சமூகங்களிடையே ஏற்பட்டிருக்கும் பதற்றம் இவையெல்லாமும்கூடித்தான் நயன்தாராவை இந்த முடிவை நோக்கித் தள்ளியிருக்கின்றன.

இந்துத்வம் என்பது இந்திய ஆன்மாவில் விழுந்த ஓட்டை. காந்திய, நேருவிய அணுகுமுறைகள் அதற்கு ஒட்டுப்போட்டன. இந்த அரசு அதை நூல் நூலாகப் பிரிக்க ஆரம்பித்திருக்கிறது. நேற்று முன்தினம் பாஜகவைச் சேர்ந்த ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் பேசியிருக்கிறார், “இஸ்லாமியர்கள் இந்தியாவில் தொடர்ந்து வாழலாம்; ஆனால் மாட்டிறைச்சி உண்பதைக் கைவிட வேண்டும்.” இதற்கு அர்த்தம் என்ன? ஒரு மாநிலத்தின் முதல்வர் இப்படிப் பேசும்போது, அந்த மாநிலத்தில் வாழும் ஒரு முஸ்லிம் குடிமகனின் மனநிலை என்னவாக இருக்கும்?

இதுதான் உயிர் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கும் விழுமியங்கள் நம் கண் முன்னே அணுஅணுவாகச் சின்னாபின்னாமாக்கப்படுகின்றன; இந்த நாட்டின் ஆன்மாவை எது உயிர்ப்போடு வைத்திருப்பதோ, அந்தப் பன்மைத்துவ நரம்பு இறுக்கப்பட்டு மூச்சுத்திணறலுக்கு உள்ளாக்கப்படுகிறது. பொதுவெளியில் யாருக்கும் இது உறுத்தவில்லை.

யாரையும் இது உலுக்கவில்லை. ஆனால், உண்மைக்கு நெருக்கமான எந்தக் கலைஞ ரையும் உலுக்கத்தான் செய்யும்; நெருக்கடியில் அவரைத் தள்ளத்தான் செய்யும். நயன்தாரா 88 வயது மூதாட்டி. அவரால் என்ன செய்ய இயலும்? இந்நாட்டு அரசு தன் எழுத்தளார்களுக்கு அளிக்கும் உச்சபட்ச இலக்கிய அங்கீகாரம் சாகித்ய அகாடமி விருது. அதை அவர் திருப்பி அளித்தார்.

இந்தச் சூழலை எதிர்க்கத் தன்னளவில் அவர் தேடிக்கொண்ட வழி இது. அவரைத் தொடர்ந்து, இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்குக் கிட்டத்தட்ட 50 படைப்பாளிகள் தங்கள் விருதைத் திருப்பி அளிக்கும் முடிவை அறிவித்திருக்கிறார்கள் என்றால், வெளிப்படுத்தப்படும் செய்தி ஒன்றுதான்: வேதனையும் இயலாமையும். ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து, பிரிட்டிஷ் அரசு தனக்குக் கொடுத்த ‘நைட்’ பட்டத்தை 1919-ல் திருப்பி அளித்தார் தாகூர். அன்று தொடங்கி இன்று வரை இந்நாட்டில் படைப்பாளிகளால் இயன்றது அவ்வளவுதான். நம் சமூகத்தில் அந்த அளவுக்குத்தான் எழுத்தாளர்களுக்குச் செல்வாக்கு கொடுத்திருக்கிறோம்.

நயன்தாரா சேகல் நல்லவரா, கெட்டவரா? எழுத்தாளர்கள் விருதைத் திரும்பித்தருவது சரியா, தவறா? இதற்குப் பின்னே இருப்பவர்கள் யார், முன்னே இருப்பவர்கள் யார்? நிறுத்துங்கள்… இதுவா பிரச்சினை? நியாயமாரே… இந்நாட்டின் ஆன்மாவில் ஓட்டை விழுந்துகொண்டிருக்கிறது. நயன்தாரா செய்தது தவறாகவே இருக்கட்டும்… நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

தகவல் உதவி

தமிழ் இந்து நாளிதழ்
18-10-2015

3 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

தாத்ரி படுகொலை சரியானதே.. சொல்கிறது ஆர்.எஸ்.எஸ்

டெல்லி: பசுக்களை வதம் செய்வோர் பாவிகள், அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன. எனவே தாத்ரியில் நடந்ததும் நியாயமான செயல்தான் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான பான்ச்ஜன்யா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி. மாநிலம் தாத்ரி கிராமத்தில் முஸ்லீம் முதியவர் ஒருவரை மாட்டுக் கறி சாப்பிட்டதாக கூறி ஊரே கூடி கொடூரமாக அடித்துக் கொன்றது. இந்த செயல் பெரும் பரபரப்பையும், மக்கள் மனதில் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை நியாயப்படுத்தி ஆர்எஸ்எஸ் பத்திரிகை எழுதியிருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பான்ச்ஜன்யாவில் வந்துள்ள கட்டுரையில், பசுக்களைக் கொல்லும் பாவிகளைக் கொல்ல வேண்டும் என்று வேதங்களே சொல்கின்றன. இது நமக்கு வாழ்வா, சாவா போராட்டம் போல. தாத்ரியில் அக்லக் என்ன செய்தார்… பசுவைக் கொன்றார். அவர் செய்தது பாவச் செயல். பசுக்களை வதம் செய்வது இந்துக்களின் கெளரவத்தை சீர்குலைக்கும் செயல். இன்று பசுக்களைக் கொல்லும் முஸ்லீ்ம்கள் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்து மதம் மாறியவர்களே. சமூக நல்லிணக்கம் முக்கியம்தான். ஆனால் ஒரு மதத்தினரின் நம்பிக்கையை மற்ற மதத்தினர் மதிக்க வேண்டும் என்று அதில் எழுதப்பட்டுள்ளது. வினய் கிருஷ்ணா சதுர்வேதி என்ற இந்தி எழுத்தாளர் துபைல் சதுர்வேதி என்ற பெயரில் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.
– one india.
————————————–

40 கோடி முஸ்லிம்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது. 1947 போல் பாரத்மாதா தேவடியாமுண்டை மீது ஜிஹாத் செய்து இனியொரு பாக்கிஸ்தான் உருவாக்கும் வாய்ப்பு நெருங்குகிறது,

Dr.Anburaj said...


திருமுலா் என்ற ஞானி இந்து ஞானி இந்திய ஞானி ” நடமாடும் கோவில் ” என்று மனித சமூகத்தை அழைக்கின்றாா். இதுதான் இந்துத்துவா. தீண்டாமை வேதம் அல்ல.மக்களின் ஏமாற்று வித்தை.

Dr.Anburaj said...

தாங்கள் பெற்ற பட்டங்களை துறப்பது வெறும் அரசியல் விளம்பரத்திற்காகத்தான். கோவையில் ஊா் முழுவதும் குண்டுகள் வெடித்து சிதறியபோது, கா்சாப் போன்ற பாக்கிஸ்தான் காடையா்களை மு்ம்பையில் படுகொலைகள் நடத்தினாா்களே , காஷ்மீா் எல்லையில் துன்பத்திலஃ வாழும் இந்துக்கள் நிலையில், பிாிவினை காலத்தில் காஷ்மீாில் குடியேறிய காரணத்திற்காக காஷ்மீாில் வாழும் சில இந்துக்களுக்கு பாராளுமன்ற தோ்தலில் ஓட்டு போட உாிமை உண்டு.ஆனால் சட்டமன்ற தோ்தலில் ஓட்டு போட உாிமை இல்லை. இதைக்கண்டித்து ஒரு கழுதையும் கத்தவில்லைஇஒரு பன்றியும் உருமவில்லை.