Followers

Tuesday, April 22, 2014

2014 தேர்தல்: இந்துத்துவாவுக்கு சாவு மணி!

நடைபெற்று கொண்டிருக்கும் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த பாஜக, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பல்லாயிரம் கோடிகள் முதலீடு செய்து மோடியை ஒரு "வளர்ச்சி நாயகனாக" சித்தரித்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலையால் ஆதங்கத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்திய முஸ்லிம் சமூகமும், "மோடி ஒரு கொலைவெறியர்" என்ற கண்ணோட்டத்தில் சமூக ஆர்வலர்களும், "மோடி ஒரு மதவெறியர்" என்ற பார்வையில் மதச்சார்பற்றோரும், "குஜராத் வளர்ச்சி என்பது அப்பட்டமான பொய்" என்று குவியும் ஆவணங்களின் அடிப்படையில் நடுநிலையாளர்களும், பாஜக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளனர்.

ஒருவேளை மோடி பிரதமர் ஆகிவிட்டால், "குஜராத் போன்றே நாடெங்கும் ஹிந்துத்துவ வெறியர்களால் அதிகார மையத்தின் ஆதரவுடன் இரத்த ஆறு ஓட்டப்படலாம்" என்ற அச்சமே இந்த எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு முக்கிய காரணம். ஆனால் உண்மையில் அவ்வாறானதொரு அச்சம் கொள்வதற்கான நிலைமையில் தற்போதைய இந்திய அரசியல் சூழல் இல்லை என்பது தான் யதார்த்த நிலை. எவ்வளவுதான் பகீரதப் பிரயத்தனம் நடத்தினாலும் பாஜகவால் இந்தியாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது. இனிவரும் காலங்களில் காங்கிரஸாகட்டும்; பாஜகவாகட்டும்; மத்தியில் தனித்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு மிக அரிது. ஒருவேளை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துவிட்டாலும்கூட ஹிந்துத்துவம் தயாராக்கி வைத்திருக்கும் "முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள்" ஆகியோரை முதலில் அழித்தொழிக்கும் ஃபாஸிச சித்தாந்தத்தைச் செயல்படுத்துவது இந்நவீன காலத்தில் சாத்தியம் இல்லை. அப்படி ஒருவேளை நடந்தால் இந்தியா முழுக்க இரத்த ஆறு ஓடும். அது இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகள் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும்.

இந்த உண்மை, மோடியை முன்னிறுத்தும் ஆர்.எஸ்.எஸ் அறியாத ஒன்றல்ல. எனினும், முன்பு தாம் முன்னிறுத்திய கட்சியின் மூத்த தலைவர் அத்வானி போன்றோரின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி, தற்போது மோடியைப் பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ் துடிப்பது ஏன்? இதற்கான பதில் கிடைக்கவேண்டுமெனில், "மோடி என்ற வளர்ச்சி மாயை"யைச் சற்று மறந்து அதையும்தாண்டி சிந்திக்கவேண்டும். அவ்வாறு மக்கள் ஆழமாக சிந்தித்துவிடாமல் இருக்கும் பணியையும் இரத்தக்கறை படிந்த மோடி பிம்பம் கவனித்துக்கொள்கிறது!

குறிப்பாக, மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த தருணத்தில் அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலிடம் "இனிமேல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. சமூக நலப்பணிகளை மட்டுமே ஆர்.எஸ்.எஸ் மேற்கொள்ளும்" என மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து தம்மீதான தடையினை நீக்கிக் கொண்ட ஆர்.எஸ்.எஸ், இந்திய அரசுக்கு எழுத்துப்பூர்வமாக கொடுத்த வாக்குறுதியினை மிக வெளிப்படையாக மீறி - இதற்காகவே மீண்டும் இந்திய அரசால் தடை செய்யப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகள் இருந்தும் அது குறித்து கவலையே கொள்ளாமல், முதன் முதலாக இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நேரடியாக களமிறங்க வேண்டிய அளவுக்கான கட்டாயம் என்ன நேர்ந்தது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தம் கொள்கைகளை மிக நிதானமாக நீண்டகால திட்டத்தோடே செயல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ், தனிப்பெரும்பான்மை பெறுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லாத இத்தருணத்தில் மோடியைப் பிரதமராக்கியே தீருவது என்று நேரடியாக களமிறங்கியுள்ளதன் நோக்கம் "குஜராத் சாம்ப்பிளை வைத்து நாடு முழுவதும் சோதிப்பதற்கல்ல"!

பின்னர்?

அதையும் தாண்டி, ஒரு நூற்றாண்டு காலமாக வளர்த்தெடுத்து கொண்டு வந்துள்ள, ஹிந்துத்துவா சித்தாந்தத்தை நடைமுறைப் படுத்தும் ஒரே நம்பிக்கையான "சங்கத்தைப்" பாதுகாப்பதுதான் இதன் பின்னணி ரகசியம்! இதுவே ஆர்.எஸ்.எஸ்ஸை வரவிருக்கும் ஆபத்திலிருந்து காக்கும்!

ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஆபத்தா? அதெப்படி?

மோடி சுனாமி(!)யால் நாம் மறக்கடிக்கப்பட்டிருக்கும் சில முக்கிய விசயங்களைப் பார்ப்போம்.

கார்கரே - இப்பெயர் நினைவுள்ளதா?

நினைவுள்ளது எனில், கீழ்கண்ட பெயர்களை வரிசையாக படியுங்கள்.

- ப்ரக்யா சிங் தாக்கூர்

- கர்னல் ப்ரோகித்

- அசிமானந்தா

- சுனில் ஜோஷி

- இந்திரேஷ் குமார்

- மோகன் பகவத்

இதேவரிசையில் இப்பெயர்களை நினைவில் வைத்து கொள்ளுங்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு இடையில் நடந்துள்ள சில முக்கிய விசயங்களைப் பார்ப்போம்.

"ஹிந்துத்துவ ராஷ்டிரம்" என்ற ஒற்றைக் கனவுடன் இயங்கும் ஹிந்துத்துவா, அதற்காக தயாராக்கிய திட்ட வரைபடத்தின் முக்கிய மூன்று மூர்த்திகள் - சாது, சங்கம், சர்க்கார்!

சாதுக்களைக் கொண்டு ஹிந்துத்துவ சித்தாந்தங்களை இந்து மக்களிடையே பரப்பி அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையினைச் செய்வதோடு, ஹிந்துத்துவ ராஷ்டிரத்தை அமைப்பதற்கான எல்லாவித உதவிகளையும் செவ்வனே செய்யும் சர்க்கார்களை அந்த மக்களின் துணையுடன் கொண்டுவந்து ஹிந்துத்துவ ராஷ்டிரத்தை அமைப்பதே இவற்றின் நடு நாயகமான சுயம் சேவக் சங்கம்-ஆர்.எஸ்.எஸ்ஸின் வேலை!

இத்திட்டத்தின்படியே, "சர்க்கார்"கள் அமைக்க பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸால் உருவாக்கப்பட்டது. பாஜக தலைமையில் சர்க்கார்கள் அமைய "ராமரும் பிள்ளையாரும்" நன்றாக பயன்படுத்தப்பட்டனர்.

ராமர் எஃபக்டில் பாபர் மசூதியை இடிக்கப்பதற்குச் "சாதுக்களை"(விஷ்வ ஹிந்து பரிசத்) ஆர்.எஸ்.எஸ் நன்றாக பயன்படுத்தியது. அதன் விளைவாக முதன் முதலாக பாஜக வாஜ்பாய் தலைமையில் மத்தியில் "சர்க்கார்" அமைத்தது.

அக்கால கட்டத்திலும்கூட பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் நாடுமுழுவதும் தலைவிரித்தாடும் என்றொரு பயம் எல்லோருக்கும் இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக வாஜ்பாய் மத்தியில் அமைதியாக 5 ஆண்டுகள் ஆட்சி செய்தார் - அப்படியா? - அப்படி நினைத்து கொண்டிருக்கிறோம்.

ஆனால், ஒவ்வொரு துறை அமைச்சர்களின் மூலம் அந்தந்தத் துறைகளில் பாஜக என்னென்ன மாற்றங்களைச் செய்தது என்பது எவருக்கும் தெரியாது. தொல்பொருள் ஆய்வு துறையில் (வரலாறு) விளையாடியது, பாடத் திட்டங்களில் மாற்றம் கொண்டுவந்தது என "மாட்டிய" சில மட்டும் வெளிப்படையாக தெரிந்த விஷயங்கள்!

வருங்கால "ஹிந்து ராஷ்டிரத்துக்கான" அடித்தளங்கள் இவை. மென்மையானவரான வாஜ்பாய் மூலம் இதனை மட்டுமே ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்க்கவும் செய்தது. சொல்லித் தந்தபடி அதை அவர் செவ்வனே நிறைவேற்றவும் செய்தார். ஆனால் அதே காலகட்டத்தில், "சர்க்கார் தைரியமானதாகவும் சிலவற்றைச் செய்யவேண்டும்" என்பதை குஜராத்தில் மோடி செய்து காட்டி "தைரியமான ஊழியர்" என்ற பெயரைத் தட்டிச் சென்றார்!

இதற்கிடையில் பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் "சாதுக்களுக்கு" ஆர்.எஸ்.எஸ் மற்றொரு வேலையைக் கொடுத்தது. அது, "முஸ்லிம்கள் பெயரில் குண்டுவெடிப்புகள் நடத்துவது"!

அதுவும் சரியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ரயில், பஸ், சாலை, கோயில், சர்ச், பள்ளிவாசல் என எங்குக் குண்டு வெடித்தாலும் "அள்ளு அவனை!" என்ற ரீதியில் "உளவுத்துறை மற்றும் ஊடகங்களில்" ஏற்கெனவே ஊடுருவப்பட்டு விட்டிருந்த காவி பயங்கரவாதிகளால் முஸ்லிம் சமூகம், திட்டமிட்டே "தீவிரவாதி"யாக்கப்பட்டுக் கொண்டிருந்தது!

இந்நேரத்தில் வந்து சேர்ந்தார் கார்கரே!

மாலேகானில் சிமி அலுவலகத்தின் எதிரேயும் பள்ளிவாசலிலும் நடந்த குண்டுவெடிப்புகளில் ஏற்கெனவே முஸ்லிம் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரிக்க மும்பை தீவிரவாத தடுப்புப்படையின் தலைவராக கார்கரே நியமிக்கப்பட்டார்.

அவரின் நேர்மையான விசாரணையில் முதன் முதலாக "குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டவர்கள் முஸ்லிம்கள் அல்ல... சங்பரிவாரே!" எனும் திடுக்கிடும் உண்மைகள் வெளியானது. சிறு புள்ளியில் ஆரம்பித்த அவரின் ஆக்டோபஸ் கர விசாரணை, மாலேகானைத் தாண்டி கோவா, பெங்களூர், ஹைதராபாத் மக்கா மசூதி, சம்ஜௌதா எக்ஸ்ப்ரஸ் ரயில் என நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் அடுக்கடுக்காய் நீண்டது.

அபினவ் பாரத், ஹிந்து ஜாக்ரன் மஞ்ச், பஜ்ரங்தள், விஷ்வ ஹிந்து பரிசத், ஆர்.எஸ்.எஸ் என சங்பரிவார் அமைப்புகள் சர்வசாதாரணமாக நாட்டில் குண்டுவெடிப்புகளை நடத்தியதையும் அவரே கண்டறிந்தார்.

குண்டுவெடிப்புகளுக்காக திட்டமிடும் வேலையை சாதுக்கள் "ப்ரக்யா சிங் தாகூர், தயானந்த் பாண்டே, அசிமானந்தா" போன்றோர் செய்ததும் அவர்களுக்கு ஆர்.டி.எக்ஸ் முதலான வெடிகுண்டுகள் சப்ளை செய்வதிலிருந்து பயிற்சியளிப்பது வரை இந்திய இராணுவத்தில் பணியிலிருந்த கர்னல் புரோகித் செய்ததும் பணியினைச் செய்து முடிக்க ஆர்.எஸ்.எஸ் மெம்பர் சுனில் ஜோஷி தலைமையிலான பெரியதொரு பயங்கரவாதப்படை செயல்பட்டதும், இந்தப் பயங்கரவாதச் செயல்களை நடத்த சாதுக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆர்.எஸ்.எஸ் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் மற்றும் அடுத்த தலைவராக வாய்ப்புள்ள இந்திரேஷ் குமாருடன் சாதுக்களைச் சந்திக்க வைக்கும் பெரும்பணியைச் சுனில் ஜோஷி செய்ததும் பின்னர் அசிமானந்தாவின் வாக்குமூலம் வழியாக வெளியான தகவல்கள்!

நேர்மையான அதிகாரியான கார்கரே தைரியத்துடன் சாது ப்ரக்யா சிங் தாகூர் மற்றும் கர்னல் புரோகித் ஆகியோரைக் கைது செய்து சிறையிலடைத்தார். தொடர்ந்து சாது அசிமானந்தா கைது செய்யப்பட்டார். "இந்தியாவின் நடந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இவர்களின் நெட்வொர்க், இஸ்ரேலை மையமாக கொண்டு ஒரு நிழல் ஹிந்துத்துவ சர்க்காரே செயல்பட்டுள்ளது" என்ற அதிர வைக்கும் விஷயங்களை வெளியே கொண்டுவந்தார் கார்கரே.

மாலேகான் குண்டுவெடிப்பு, சாதாரணமாக ஒரு இடத்தில் மட்டும் நடந்த அசம்பாவிதம் அல்ல; அது சர்வதேச தொடர்புகள் வரை நீளக்கூடியது என்பதும் அதன்மூலம் சங்பரிவாரின் "ஹிந்துத்துவ அஜண்டா" முழுவதும் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணை குற்றப்பத்திரிகையைக் கார்கரே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருந்த நாட்களில் திடீரென மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டார்!

அப்பாடா... ஒழிந்தது பெரியதொரு தலைவலி! என்று பெருமூச்சு விட்டது ஹிந்துத்துவம்.

அதன் பின்னர், அந்தக் குண்டுவெடிப்பு விசாரணைக்குத் தலைமையேற்ற (கர்னல் புரோகித் உடனான தொடர்பு குறித்து ஏற்கெனவே கார்கரேவால் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைக்குள்ளான ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான) கே.பி.ரகுவன்ஷி, பொறுப்பேற்ற அன்றே "மாலேகான் குண்டுவெடிப்பில் வெளிநாட்டு சக்திகளேதும் இல்லை. அது சாதாரண உள்நாட்டு குழுவின் குண்டுவெடிப்புதான்" என பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து சங்பரிவாருக்கு வர இருந்த மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து விடுதலை பெற்றுக் கொடுத்தார்.

கர்னல் புரோகித், "இந்திய இராணுவமே வேவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டவர்தான். அவர் குற்றமற்றவர்!" என நற்சான்றிதழ் கொடுத்து இராணுவ நீதிமன்றம் அவரையும் உருவிக்கொண்டது.

மீதி இருந்தது சாது ப்ரக்யா சிங் தாகூர்! அவருக்கென்ன, ஹிந்து ராஷ்டிரா கனவுக்காக உருவாக்கி விடப்பட்ட கோட்சே போன்ற மனித வெடிகுண்டு, தம் சாவைக் குறித்து அது கவலையே கொள்ளாது! உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் ஹிந்துத்துவாவுக்குப் பிரச்சனையே இல்லை!

தடைகள் எல்லாம் நீங்கி அனைத்தும் சுபமாய் முடிந்தது என நினைத்து சங்பரிவாரங்கள் நிம்மதி மூச்சு விட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கார்கரே தொடங்கி வைத்த விசாரணை சாது அசீமானந்தா ரூபத்தில் அடுத்த பிரச்சனையை உருவாக்கியது. இம்முறை அது, "அசீமானந்தாவின் ஹீரோ மன எண்ணம்" சங்பரிவாரத்துக்குச் சாவு மணி அடிக்கும் வகையில் ஆகிவிட்டதுதான் பரிதாபம்!

முன்னர் கூறியது போன்று, தன் மரணத்தைப் பற்றி கவலை கொள்ளாத மனிதவெடிகுண்டு க்ளோனிங்களை, கோட்சேக்களை ஆர்.எஸ்.எஸ் உற்பத்தி செய்கிறது. அந்த லிஸ்டில் சாது அசிமானந்தாவும் அடக்கம்.

"வேலை" முடிந்தவுடன், கோட்சேவைப் போன்றே தன்னையும் ஆர்.எஸ்.எஸ் கைகழுவி விடும் என்பதை நன்கு உணர்ந்திருந்த சுவாமி அசிமானந்தா, தம் வாழ்நாளையே ஹிந்து ராஷ்டிர கனவுக்காக செலவழித்த தம் ஹீரோயிசத்தை ஆவணப்படுத்த நினைத்தார். தாம் எவ்வாறெல்லாம் ஹிந்து ராஷ்டிர கனவுக்காக பயணப்பட்டேன் என்பதை விரிவாக சக 'சங்பரிவார தொண்டர்'களுக்கும் இனிவர இருக்கிற 'சங்பரிவார தொண்டர்'களுக்கும் தெரிவிக்க விரும்பினார். தம்மை ஹிந்து ராஷ்டிரத்துக்காக அர்ப்பணிப்பு செய்த ஹீரோவாக 'சங்'களின் மனதில் நிலைநிறுத்த எண்ணி, தாம் செய்த குண்டுவெடிப்புகளை எல்லாம் நீதிமன்றத்தில் வாக்குமூலமாக சமர்ப்பித்தார்.

இதில் அசீமானந்தா செய்த முக்கியமான அசட்டுத்தனம், வாக்குமூலத்தை நீதிபதி முன்னிலையில் கொடுத்ததுதான். அதுவும் 48 மணிநேர நீதிமன்ற காவலுக்குப் பின்னர், காவல்துறையின் எவ்வித அச்சுறுத்தலோ மனப்பிறழ்வோ இன்றி சுய விருப்பத்துடன் கொடுப்பதை உறுதி செய்து நீதிமன்றம் வாக்குமூலம் வாங்கிக்கொண்டது. இந்த வாக்குமூலம்தான் இப்போது ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு மிகப் பெரிய பிரச்சனை!

"எல்லா குண்டுவெடிப்புகளையும், கலவரங்களையும் நடத்தியது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் ஒப்புதல் மற்றும் அடுத்த தலைவராக வர வாய்ப்புள்ள இந்திரேஷ் குமாரின் உதவியுடனும்தான்!" என அசிமானந்தா கொடுத்த தெளிவான வாக்குமூலங்கள், இன்று ஆர்.எஸ்.எஸ்ஸை எழுந்திருக்க முடியாத அளவிற்கு அடித்துப் போட்டிருக்கிறது.

இதன் அடிப்படையில் மோகன் பகவத் ஒருமுறை விசாரிக்கப்பட்டார். ஆனால், அசிமானந்தாவின் பின்னணியிலுள்ள சதிகாரர்கள் குறித்த முறையான விசாரணை அசிமானந்தாவைக் கடந்து இன்னும் நீளவில்லை. அரசியும் உளவுத்துறையிலும் இருக்கும் காவிகளின் உதவியால் இன்று நீளவில்லையேனும் இனிமேலும் நீளவே செய்யாது என்பதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸிடம் எந்த உத்தரவாதமும் இல்லை.

மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, "ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் பட்டியல்" என 10 பேர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை முன்னர் வெளியிட்டதை மிரட்டல்கள் மூலம் திரும்பப்பெற வைத்தாலும் அசிமானந்தாவின் வாக்குமூல அடிப்படையில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பயம் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு உள்ளது. அதிலும் கார்கரே போன்றதொரு துணிச்சலான, நேர்மையான அதிகாரி விசாரணை பொறுப்புக்கு வந்தால் அவ்வளவுதான்! கார்கரே கொல்லப்பட்ட விசயத்திலேயே அமரேஷ் மிஸ்ரா போன்றோர், ஹிந்துத்துவமும் இஸ்ரேலின் மொஸாதும் இணைந்து நடத்திய நரவேட்டை எனவும் கார்கரேயின் மனைவி மறுபக்கம் நாட்டுக்காக உயிரிழந்த தம் கணவரின் கொலையில் நீடிக்கும் மர்மத்தை நேர்மையான விசாரணை மூலம் வெளிகொண்டுவரவேண்டுமெனவும் கிலியை ஏற்படுத்தி வருகின்றனர். இதில் இன்னொருவர் புதிதாக வந்தால், அவரை "நீக்க" மற்றொரு மும்பை தாக்குதலுக்குத் திட்டமிடணுமே! புலிவால் பிடித்த கதையாக ஆகிவிடக்கூடாதே!

அசிமானந்தாவுக்கும் மோகன் பகவத் மற்றும் இந்திரேஷ் குமாருக்கும் இடையில் பாலமாக இருந்த, குண்டுவெடிப்புகள் நடத்தியதில் முக்கிய பங்கு வகித்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி சுனில் ஜோஷியைக் கொன்றாகிவிட்டது. யார், எதற்காக கொன்றார் என்பது தொடர்பான மர்மம் இதுவரை நீடிக்கிறது. ஆனால், மிக முக்கியமான ஆதாரம் ஒன்று அழுத்தம் திருத்தமாக அழிக்கப் பட்டு விட்டது.

முக்கிய நபர் சுனில் ஜோஷியை இல்லாமலாக்கிவிட்டதால், அசிமானந்தாவுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மோகன் பகவத் மற்றும் இந்திரேஷ் குமார் நடத்திய சந்திப்புகளை நிரூபிக்க முடியாது. ஆனாலும், அசிமானந்தா நீதிபதியிடம் சுயவிருப்பதின்படி கொடுத்த வாக்குமூலம்?!

இனி இதனுடன் வேறு சில முக்கிய சம்பவங்களையும் நினைவுக்குக் கொண்டு வருவோம்:

* பாபர் மசூதி இடிப்பு தொடர்பான ஆவணங்கள் இருந்த அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்கள் காணாமல் போயின.

* பாபர் மசூதி இடிப்பு வழக்கு நடந்த நீதிமன்றத்துக்கு அது தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்கச் சென்ற அதிகாரி ரயிலிலிருந்து "தவறி" விழுந்து பலியானார். அவர் கொண்டு சென்றிருந்த ஆவணங்கள் "காணாமல்" போயின.

* மும்பை தாக்குதல் நடந்தபோது சம்பவ இடத்துக்குச் செல்லும்முன்னர் தீரர் ஹேமந்த் கார்கரே கவச உடை அணிந்தார். இக்காட்சி தொலைக்காட்சிகளில் நேரலையாகவே காண்பிக்கப்பட்டது. ஆனால், அவர் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னர் பிரேத பரிசோதனையின் போது, அவர் அணிந்திருந்த கவச உடை மர்மமான முறையில் "காணாமல்" போனது.

* தம்மை யாரும் மிரட்டவில்லை; தமக்கு வழக்கறிஞர் வேண்டாம் எனக் கூறிய அசிமானந்தா, நீதிபதியிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார். அதன்பின், அவருக்காக வழக்கில் வாதாட ஆர்.எஸ்.எஸ் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்ட நொடியில் "தாம் மிரட்டப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதாக" பல்டி அடித்தார்.

* மாலேகான் விசாரணையில் ஈடுபட்டபோது, அத்வானி உட்பட பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸினரால் தேசவிரோதி என குற்றம் சுமத்தப்பட்ட கார்கரே, கொல்லப்பட்டு இறந்தவுடன், "கார்கரே ஒரு மாவீரர்" எனப்புகழ்ந்து அவர் மனைவிக்கு மோடி ஒரு கோடி ரூபாய் இழப்புத் தொகை கொடுக்கச் சென்ற போது முகத்தில் திருப்பியடித்தார் கார்கரேயின் மனைவி - அவ்வேளையில் மோடிக்குத் தேசிய அளவில் பாஜகவில் எந்தப் பொறுப்பும் இல்லை.

மேற்கண்ட பட்டியலுடன், குண்டுவெடிப்புகளின் முக்கிய புள்ளி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி சுனில் ஜோஷியின் மர்மக்கொலை, கார்கரே படுகொலையில் நீடிக்கும் மர்மம், கர்னல் புரோகிதுக்கு க்ளீன் ஷீட் எல்லாவற்றையும் இணைத்து பார்த்து கொள்ளுங்கள்.

ஆக, ஹிந்து ராஷ்டிரா கனவில் சஞ்சரிக்கும் ஹிந்துத்துவாவின் தாய்ச்சபை ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எப்போதெல்லாம் பிரச்சனைகள் எழுகிறதோ, அது போட்ட திட்டங்களில் எங்கெல்லாம் ஆதாரங்கள் சிக்கலை உண்டாக்குகின்றனவோ அங்கெல்லாம் மர்மக் கொலைகள் நடைபெறுவதும், ஆவணங்கள் காணாமல் போவதும், "எதிர்பாரா" தீவிபத்துகளும் ஏற்படுவதைக் கவனிக்கலாம்.

ஆனால் இப்போது அசீமானந்தா கொடுத்திருக்கும் குடைச்சல், என்ன செய்தாலும் தப்பித்துவிட முடியாதது.

48 மணி நேர நீதிமன்ற காவலுக்குப் பின்னர் காவல்துறையின் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதன் பின்னர் நீதிபதி முன்னிலையில் பெறப்பட்ட அசிமானந்தாவின் வாக்குமூலம் தெளிவாக உள்ளது. இது இன்று இல்லை என்றாலும், நாளை ஆர்.எஸ்.எஸ்ஸின் பல தலைகளை உருட்டப்போவது உறுதி. அது ஹிந்துத்துவத்தின் தலைமையான ஆர்.எஸ்.எஸ்ஸுக்கே உலை வைக்கும்!

அது மட்டுமன்றி, சங்பரிவாரத்துக்காக செயல்பட்ட பலர் இன்று சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். குஜராத் அமைச்சர் மாயா கோட்னானி முதல், பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கி, ஐ.ஏ.எஸ் அதிகாரி வன்சாரா, சாது ப்ரக்யா சிங் தாகூர், அசிமானந்தா என பல பெரும் தலைகள் சிறையில் கம்பி எண்ணுகின்றன. மேலும் குஜராத் இனப்படுகொலை தொடர்பாக குஜராத் அரசு மூடி மறைத்த 2000 க்கு மேற்பட்ட வழக்குகளை மறுவிசாரணை செய்யவேண்டுமென்ற கோரிக்கை வலுத்துவருகிறது. டீஸ்தா செதாவல்த் போன்றோர் கொடுக்கும் குடைச்சல்களால் இன்னும் எத்தனை பேர் சிறை செல்லவேண்டிவருமோ என்ற அச்சம் வேறு. இவர்களையெல்லாம் வெளியே கொண்டு வரவில்லையேல் நாளை ஆர்.எஸ்.எஸ்ஸுக்காக அது சொல்லும் கட்டளைகளை நம்பி சிரமேற்கொண்டு நடத்துவதற்குத் தலைவர்கள் மட்டத்திலிருந்து தொண்டர்கள் வரை எல்லோருக்கும் தயக்கம் ஏற்படலாம். ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மத்த்யில் அப்படி ஒருவேளை ஒரு தயக்கம் ஏற்பட துவங்கினால் அதுவும் ஹிந்து ராஷ்டிரக் கனவைத் தரை மட்டமாக்கும்!

ஆக, நாட்டில் எல்லாம் நம் கையில் பாதுகாப்பாகவே உள்ளது; நம் விருப்பம் போல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். சட்டத்தாலோ சர்க்காராலோ நம்மை எதுவுமே செய்யமுடியாது என்ற எண்ணத்தை ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மத்தியில் ஆழமாக கட்டியெழுப்பவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மீது எழுந்து நிற்கும் அசிமானந்தாவின் வாக்குமூலம் என்ற பெரிய வெடிகுண்டைப் புஸ்வாணமாக்கவும் "ஏதாவது" மாற்றம் செய்தாக வேண்டும்.

அதற்கு?

மத்தியில் "சர்க்கார்" வேண்டும். அதுவும் வாஜ்பாய் போன்ற அல்ல; ஹிந்துத்துவ அஜண்டாவுக்காக "சர்க்கார் இயந்திரங்களை" எதற்கும் அஞ்சாமல் பயன்படுத்த முன்வரும் ஒரு "தைரியமான நபர்" தலைமையிலான சர்க்கார்!

அதற்காக ஆர்.எஸ்.எஸ் தேர்வு செய்து நேரடியாக களமிறக்கியுள்ளவர்தான் மோடி. கள்ள "சாது"வான மோடி, "சங்கத்துக்காக சர்க்காரை" எப்படி தைரியமாக பயன்படுத்துவது என்பதை ஏற்கெனவே குஜராத் மூலம் சாம்பிள் காட்டி திருப்திபடுத்தியுள்ளார். இந்தச் சரியான, தைரியமான நபர் தலைமையில் மத்தியில் சர்க்கார் கிடைத்தால், அது இப்போது ஆர்.எஸ்.எஸ் எதிர்கொள்ளும் தலைவலியிலிருந்து எளிதாக விடுதலைபெற உதவுவதோடு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மனதிலும் புதிய நம்பிக்கை ஊற்றெடுக்க வைக்கும். அதற்காகவே இத்தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் நேரடியாக களமிறங்கியுள்ளது.

இதுவரை இல்லாத வகையில் இத்தேர்தலில்தான் ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதும் தம் காவி அரை டவுசர் தொண்டர்களை நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்கியுள்ளது. இன்றைய தம் நிலை வாழ்வா சாவா என்பதற்கு ஒப்பானது என்பது நன்கு புரிந்ததாலேயே, நேரடியான மோதல்கள் எதிலுமே ஈடுபடாமல் மறைமுகமாகவே காரியங்களை நடத்தும் ஆர்.எஸ்.எஸ் இம்முறை, இந்திய அரசுக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மீறி நேரடியாக அரசியலில் இறங்கியுள்ளது.

காந்தி படுகொலைக்குப் பின்னர் எதனைத் தம் மீதான தடையினை விலக்குவதற்கான உறுதிமொழியாக கொடுத்ததோ அதனையே ஆர்.எஸ்.எஸ் மீறிவிட்ட நிலையில், அதனைக் காரணம் காட்டி இந்திய அரசு உடனடியாகவே ஆர்.எஸ்.எஸ்ஸைத் தடை செய்ய முடியும். ஆனால், வெறும் ஓட்டு அரசியல் நடத்தும் கையாலாகாத காங்கிரஸ் அரசு அதனைச் செய்யாது; அதில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் குள்ளநரிகள் செய்யவும் விடாது. இதனை நன்கு தெரிந்தே இம்முறை ஆர்.எஸ்.எஸ் நேரடி அரசியலில் இறங்கியுள்ளது.

இனி தீர்மானிப்போம்!

மோடி தலைமையில் பாஜக "சர்க்கார்" வேண்டுமா?

மோடியின் வருகை "குஜராத் மாதிரி"யைப் பிற மாநிலங்களில் நீட்டிக்க அல்ல; அதையும் தாண்டிய மிக முக்கிய தேவை ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு உள்ளது என்பதை நாம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். சங்கம் இல்லையேல் மாதிரிகளை நடத்துவது எளிதான காரியமல்ல; தலை இருந்தால் தானே வால் ஆடமுடியும்? தலையைக் காப்பதற்காகவே மோடியை கார்ப்பரேட்டுகளின் உதவியுடன் ஆர்.எஸ்.எஸ் முன்னிலைப் படுத்துகிறது என்பதை உணர்வோம்!

நம் தாய் நாட்டை இந்தத் தேசவிரோதிகளிடமிருந்து காக்க, நாட்டின் இறையாண்மைக்கு எதிரான ஹிந்துத்துவத்தை ஒழிக்க, எவ்வகையிலும் பாஜகவின் கையில் ஆட்சி சென்றுவிடாமல் பார்ப்போம். இத்தேர்தலோடு நாட்டு ஒற்றுமைக்குப் பெரும் சவாலாக நிற்கும் ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி அடிப்போம்!

- அபூ சுமையா

நன்றி: சத்திய மார்க்கம்.காம்


2 comments:

sekar said...

முழுவதும் என்னால் படிக்க முடியவில்லை தலைச் சுற்றுகிறது.
சொல்ல வரும் கருத்துப் புரிகிறது உண்மையும் தெரிகிறது நன்றி.

சீனிவாசன் said...

நல்ல ஆக்கம்.

இதை வெளியிட்டுள்ள தளத்தின் கட்டுரைக்குரிய முகவரி (URL) இணைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.