Followers

Tuesday, April 15, 2014

மோடி எவ்வளவு நேர்மையாளர்?

“சிலர் பிறக்கும்போதே மகத்துவத்துடன் பிறக்கிறார்கள்; சிலர் தங்கள் செயல்களால் மகத்துவத்தை அடைகிறார்கள்; சிலர்மீது மகத்துவம் திணிக்கப்படுகிறது.’’ என்பது ஷேக்ஸ்பியரின் வாசகம். இதில் பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர தாமோதர்தாஸ் மோடி மூன்றாவது வகை. ‘எல்லாப் புகழும் மோடிக்கே’ என்பது பா.ஜ.க-வின் தாரக மந்திரமாக இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகள் பின்பற்றும் தனிநபர் வழிபாடு என்பது சில மாதங்களுக்கு முன்னர் வரை சங் பரிவாரத்தினருக்கு அந்நியமான விஷயமாக இருந்தது.

இயக்கமும் கொள்கைகளுமே முதன்மையானவை என்பதில் சமீப காலம் வரை உறுதியாக இருந்த ஆர்.எஸ்.எஸ். இன்று கட்சியையோ கொள்கைகளையோ சொல்லி மக்களிடம் வாக்குகள் கேட்காமல் எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்கும் மோடியை முன்னிறுத்துகிறது என்றால் மோடியின் சாதனை மகத்துவமானதுதான்.

அசாதாரணமான திறன்கள்

இந்த நிலைக்கு அவரை உயர்த்த உதவிய அவரது ‘திறன்கள்’ அசாதாரணமானவை. 2002 கலவரத்தின்போது மோடி அரச நீதியிலிருந்து வழுவிவிட்டார், ஆகவே அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அன்றைய பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாய் அடுத்த ஓரிரு நாட்களில் கோவா மாநாட்டில் மோடியின் மொழியில் பேச வேண்டிய நிலைக்கு ஆளானது மோடியின் திறமைக்கு ஒரு உதாரணம் என்றால் தொழிற்துறை வளர்ச்சிக்குக் கலவரங்கள் பாதகமான சூழலை உருவாக்கும் என்று கூறி மோடியைக் கண்டித்த ‘இந்தியத் தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பு’ அடுத்த சில நாட்களில் மோடியிடம் மன்னிப்பு கோரியது மற்றொரு உதாரணம்.

தன்னை விட பெரிய தலைவர்களாக இருந்த சங்கர்சிங் வகேலா மற்றும் கேசுபாய் படேல், தனக்கு நிகரான தலைவர்களாக இருந்த ஹரேன் பாண்டியா மற்றும் சஞ்சய் ஜோஷி ஆகியோரைக் கையாண்ட விதங்களும் மோடியின் திறன்களுக்குச் சாட்சியங்கள்.

ஆர்வெல் பிரச்சினை

மோடி இன்று பெருநிறுவனங்களால், ஊடகங்களால், படித்த நடுத்தர மற்றும் பணக்கார வர்க்கத்தினரால் பெரிதும் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் இரண்டு: 1. மோடியின் தலைமையிலான குஜராத்தின் வளர்ச்சி; 2. கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்! இன்று இந்தியாவை ஊழல், தொழில்துறை தேக்கம், வேலையின்மை, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு என சகல நோய்களிலிருந்தும் விடுவிக்கும் ஆற்றல் கொண்ட அதிமனிதராக மோடி சித்தரிக்கப் படுகிறார்.

ஆகவே, மீண்டும் மீண்டும் 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடுத்திக்கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை, நாம் அதைத் தாண்டிச் சென்றாக வேண்டும் என்று அறிவுஜீவிகளில் ஒரு சாரார் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், மோடி உயர்த்திப் பிடிக்கப்படுவதற்கான இரண்டு காரணங்களும் உண்மையிலிருந்து வெகுதூரம் விலகியிருப்பவை என்பது கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தாலே தெரியும். நோம் சோம்ஸ்கி கூறும் ‘ஆர்வெல் பிரச்சினை’க்கு நல்ல உதாரணம் இது. தாங்கள் நம்பும் விஷயத்துக்கு எதிராக ஏராளமான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்திலும் மக்கள் ஏன் அவற்றைக் கவனிக்கத் தவறுகிறார்கள் என்பதையே ‘ஆர்வெல் பிரச்சினை’ குறிக்கிறது.

‘குஜராத் மாதிரி’

மோடியின் தலைமையிலான ‘குஜராத் மாதிரி’ இந்தியாவுக்கே வழிகாட்டி என்று பல தரப்பினரால் புகழப்படுகிறது. இந்த குஜராத் மாதிரியைக் கட்டியமைத்தது மோடியே என்ற கருத்தும் மக்களிடையே வலுவாகவே பரப்பப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழில்துறை செழித்து வளர்ந்த ஒரு சில பகுதிகளில் குஜராத்தும் ஒன்று என்பது இவர்களால் குறிப்பிடப்படுவதில்லை. கொல்கத்தா, மும்பை, சென்னை, சூரத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்கள் பல பத்தாண்டுகளுக்கு முன்னரே தொழிற்துறையில் சிறந்து விளங்கியவை என்பது குறிப்பிடப்படுவதில்லை.

மேலும் சமீப காலத்தை எடுத்துக்கொண்டாலும், 1980-கள் மற்றும் 90-களில் இந்தியாவில் அதிக வளர்ச்சியைக் கண்டிருந்த முதல் மூன்று அல்லது நான்கு மாநிலங்களுள் ஒன்றாக எப்போதும் குஜராத் இருந்துவந்துள்ளது என்பதும் இவர்களால் குறிப்பிடப்படுவதில்லை. 2001 - 2012 காலகட்டத்தில் மோடியின் தலைமையில் குஜராத் அடைந்திருக்கும் வளர்ச்சி எந்த வகையிலும் அதன் முந்தைய காலகட்ட வளர்ச்சி வீதங்களிலிருந்து அசாதாரணமான விதத்தில் வேறுபட்டதல்ல என்பதும் நடுநிலையான பொருளாதார நிபுணர்களால் பல முறை சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. உலக அளவில், அமர்த்திய சென் உட்பட பல பொருளாதார அறிஞர்களால் கொண்டாடப்படும் ‘கேரளா மாதிரி’ போன்று ‘குஜராத் மாதிரி’ ஒருபோதும் ஏற்கப்பட்டதுமில்லை, கொண்டாடப்பட்டதுமில்லை. குஜராத் அடைந்துள்ள தொழில்துறை வளர்ச்சிக்கும் அதன் சமூக வளர்ச்சிக்குமான இடைவெளியின் அளவு ‘குஜராத் மாதிரி’ பின்பற்றத் தகுந்ததல்ல என்பதையே காட்டுகிறது.

கல்வியின்மை, குழந்தைகள் இறப்பு விகிதம், ஊட்டச்சத்துக் குறைவு என பல விஷயங்களில் குஜராத் பின்தங்கியிருப்பதை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் அறிக்கை பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது. பொருளாதார வளர்ச்சி விஷயத்திலும் கடந்த பத்தாண்டுகளில் நிதீஷ் குமார் தலைமையிலான பிஹார் சாதித்திருப்பதைவிட குஜராத் சாதித்திருப்பது குறைவே. இத்தனைக்கும் பிஹார் மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், தொழில்துறை வளர்ச்சிக்காகப் பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து பெருநிறுவனங்களுக்கு மோடி வாரியிறைத்திருப்பது சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை விதிகளுக்கே எதிரானது.

இதனால்தான் டாட்டா, அம்பானி, மிட்டல், அதானி என அனைத்து பெரு முதலாளிகளும் மோடியின் பின் அணிவகுத்து நிற்கிறார்கள்.

மோடியின் நேர்மை

மோடியின் நேர்மை அவரது ஆதரவாளர்களால் வானளாவப் புகழப்படுகிறது. ஆனால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழல்களை விசாரிப்பதற்கான லோக் ஆயுக்தா அமைப்பை குஜராத்தில் அமைய விடாமல் பத்தாண்டுகளாகத் தடுத்துவந்த மோடியின் செயல் அவரது ஆட்சியின் ‘நேர்மை’க்குக் கட்டியம் கூறுகிறது.



பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதிலும் இதுவரையிலும் இந்திய ஊடகங்கள் எதற்கும் மோடி பேட்டியளிக்காததற்குக் காரணம் அவரது பிம்பம் முற்றிலுமாகக் குலைந்துபோகும் என்பதே. சில ஆண்டுகளுக்கு முன்னர் கரண் தாப்பருக்கு அவர் அளித்த புகழ்பெற்ற அந்த மூன்று நிமிடப் பேட்டி மோடி எவ்வளவு நேர்மையாகப் பதிலளிப்பார் என்பதற்கு ஒரு உதாரணம்.

சமீபத்தில் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த மோடி அந்தப் பேட்டிக்கு வைத்த முக்கிய நிபந்தனை குஜராத் கலவரம் குறித்து ஒரு கேள்விக்கு மேல் கேட்கக் கூடாது என்பது. எவ்வளவு புத்திசாலித்தனமான நிபந்தனை! கர்நாடகத்தில் அதிக இடங்களைப் பெற வேண்டும் என்பதற்காக ஊழலில் மூழ்கித் திளைத்திருக்கும் எடியூரப்பாவை மீண்டும் பா.ஜ.க-வுக்குக் கொண்டுவருவதில் மோடி ஆற்றியுள்ள முக்கியப் பங்கு, நேர்மையான நிர்வாகத்தின் மீதான மோடியின் காதலுக்கு மற்றுமொரு உதாரணம்.

பாசிசத்தின் கூறுகள்

பல ஆண்டுகளுக்கு முன்னர் மோடியைப் பேட்டி கண்ட ஆசிஷ் நந்தி, பாசிசத்தின் முக்கியக் கூறுகள் பலவற்றை மோடியிடம் தான் கண்டதாகக் குறிப்பிடுகிறார். இந்திரா காந்தி, மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக உயர்ந்த பிறகு மக்களாட்சியின் முக்கியமான நிறுவனங்களான நாடாளுமன்றம், சுதந்திரமான நீதித் துறை மற்றும் நிர்வாகத் துறையைப் பெரிதும் சீர்குலைத்தார்.

‘‘இந்திராவே இந்தியா! இந்தியாவே இந்திரா” என்று சொல்ல வைத்தார். காங்கிரஸ் கட்சியில் கொஞ்சம்நஞ்சம் இருந்த உட்கட்சி ஜனநாயகத்தை முற்றிலுமாக ஒழித்தார். இதுவே மோடியின் தலைமையிலும் நடக்கும் என்பதைப் புரிந்துகொள்ள ஒருவர் அரசியலறிஞராக இருக்க வேண்டிய அவசியமில்லை. முதலாம் உலகப் போருக்குப் பின்னர் வெற்றி பெற்ற நாடுகளால் ஜெர்மனிமீது திணிக்கப்பட்ட வெர்ஸாய் உடன்படிக்கை ஹிட்லர் ஆட்சிக்கு வர உதவியது என்றால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அளவற்ற ஊழல்கள் மோடி ஆட்சிக்கு வர உதவக் கூடும்.

மோடி திறமையானவராக, உறுதியானவராக, அல்லது வேறு என்னவாக வேண்டுமானாலும் இருக்கக் கூடும். ஆனால், நேர்மையானவரோ ஜனநாயகவாதியோ அல்ல.

- க. திருநாவுக்கரசு, சமூக-அரசியல் விமர்சகர்,
தொடர்புக்கு: kthiru1968@gmail.com

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/article5912677.ece

No comments: