Followers

Wednesday, April 09, 2014

பிஜேபியின் தேர்தல் அறிக்கை குறித்து நாம் பேசியாக வேண்டும்

இந்த 16-வது மக்களவைப் பொதுத்தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கும்வரை, பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. இந்தியத் தேர்தல் ஆணையம் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியபோதிலும் எந்த விளக்கமும் அளிக்காத கட்சி முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய பின் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

தேர்தல் அறிக்கை என்பது பெரிய விஷயமல்ல என்று பா.ஜ.க. நினைப்பதுபோலத் தெரிகிறது. ‘வளர்ச்சி நாயகன்' என்று அழைக்கப்படும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பிரச்சார இயந்திரம், 2002-ல் நடந்ததைப் பற்றி விவாதிக்க விடாமல் - அல்லது அதிலிருந்து கவனத்தை வேறு திசைகளில் இழுத்துச்செல்லும் வேலையை - தனது வரம்புக்கு உட்பட்ட வகையில் ஏற்கெனவே கச்சிதமாகச் செய்துமுடித்துவிட்டது. ‘மோடி மந்திரம்' கையில் இருக்கும்போது தேர்தல் அறிக்கைக்கு என்ன தேவை என்று கட்சி நினைத்திருக்கலாம்.

தாமதத்தின் உண்மையான பின்னணி

ஏனைய தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகும், முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை தொடங்கும் வரை பா.ஜ.க-வால் தேர்தல் அறிக்கையைக் கொண்டுவர முடியவில்லை என்பது சாதாரண விஷயமல்ல. யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிக்க வேண்டிய வாக்காளர்களுக்கு அவசியமான தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் இவ்வளவு தாமதம் ஏற்பட உண்மையான காரணம் என்ன?

இது தொடர்பாக பா.ஜ.க. தலைமையிடமிருந்து விளக்கம் ஏதும் வருவதற்கு முன்பாகவே, ஊடகங்களில் ‘பா.ஜ.க. சார்புள்ளவர்கள்' முந்திக்கொண்டு பதில் அளிக்கிறார்கள். அவர்களில் ஒருவரான ‘நெட்வொர்க் 18' குழு வெளியீடுகளின் தலைமை ஆசிரியர் ஆர். ஜெகந்நாதன், “மோடியே தேர்தல் அறிக்கைதான்; கனமான இன்னொரு அறிக்கை பா.ஜ.க-வுக்குத் தேவையா என்ன?” என்று கட்டுரையில் வினவுகிறார். கட்டுரையின் கடைசிப் பகுதியை அவர் இப்படி முடிக்கிறார்: “தேர்தல் அறிக்கைகள் என்பவை கால்கட்டு மாதிரி, தேர்தலில் நிச்சயம் வெற்றிபெற்று ஆட்சியமைக்கப்போகும் கட்சிக்கு இம்மாதிரியான தளைகள் தேவையில்லை.”

இதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ‘நிச்சயம் வெற்றிபெறக்கூடிய கட்சிக்கு இந்தத் தேர்தல் அறிக்கை என்பதெல்லாம் எதிர்காலத்தில் பெரிய பிரச்சினையாக மாறிவிடக்கூடும்' என்று தெரிகிறது. தேர்தல் அறிக்கை என்பது ‘தெரிவிப்பது குறைவாகவும் மறைப்பது அதிகமாகவும்' இருப்பது. அப்படி மறைக்கப்பட வேண்டியவற்றில் கட்சியின் சித்தாந்தம், குணவிசேஷம் ஆகியவை முக்கியமானவை.

பா.ஜ.க-வைப் பொறுத்தவரை கவனத்துக்குரியவை அதன் சங்கப் பரிவாரங்களின் முக்கியமான செயல்திட்டங்கள், நோக்கங்கள், சித்தாந்தங்கள், ‘இந்துத்துவா' என்று அது கருதும் விஷயங்கள் - அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமருக்குக் கோயில் கட்டுவது, காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்துசெய்வது, அனைவருக்கும் பொதுவான குடியுரிமைச் சட்டம் இயற்றுவது, மதமாற்றங்களைத் தடை செய்வது, பசுவதைத் தடை – உள்பட பல.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த அம்சங்களெல்லாம் பெரும்பாலான மக்களுடைய கவனத்திலிருந்து தப்பிவிடுவதுதான். பா.ஜ.க. என்பது தன்னுடைய கொள்கைகளில் பிடிப்பு உள்ள கட்சி. எந்தக் காரணத்துக்காகவும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய உணர்ச்சிப் பிழம்பான அமைப்புகளைக் கொண்டதுதான் சங்கப் பரிவாரம். இவற்றையெல்லாம் ஊட்டி வளர்ப்பது ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்' என்ற தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இந்த அமைப்புகளுக்குள்ள உறவு எப்படிப்பட்டது, அவை எப்படிச் செயல்படுகின்றன என்று அறிய வேறெங்கும் போக வேண்டாம் அவற்றின் இணையதளங்களைக் கவனித்தாலே போதும்.

ஒரு இணையதளம் சொல்கிறது: “சங்கப் பரிவாரத்தின் மிகவும் பிரபலமான அங்கம் பாரதிய ஜனதா கட்சி… இந்திய வரலாறு எது என்பதில் சங்கப் பரிவாரங்கள் தெளிவாக இருக்கின்றன. இந்திய நாட்டுக்கும் சமூகத்துக் கும் இந்து மதம்தான் அடையாளம், இந்துத்துவம்தான் கலாச்சாரம்.”

அடிநாதம் இந்துத்துவமே

பா.ஜ.க. 1980-86 காலகட்டத்தில் அதன் ‘சாதாரணமான' வலதுசாரிக் கருத்துகளுக்குக் கிடைத்த தேர்தல் வெற்றிகளால் துணிச்சல் பெற்று, 1989-ல் ‘தீவிரமான' இந்துத்துவக் கருத்து களை முன்வைத்துச் செயல்படத் தொடங்கியது. 1996 தொடங்கி பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கைகளை ஊன்றிக் கவனித்தால், 1999 தவிர பிற தேர்தல்களிலெல்லாம் இந்துத்துவக் கருத்துகளை மையமாக வைத்தே அது தேர்தல் அறிக்கையைத் தயாரித்துவந்துள்ளது தெரியவரும். கொள்கைகளைச் சொல்லப் பயன்படுத்தும் மொழி, தொனி, பாணி வேறுபட்டாலும் பிரதான அம்சங்கள் அப்படியே தொடர்கின்றன.

பா.ஜ.க-வின் 1998 தேர்தல் அறிக்கை அதனுடைய முக்கியக் கொள்கைகளை வெளிப்படையாகப் பேசுகிறது. “சனாதன தர்மம்தான் இந்திய தேசியத்துவம்” என்கிறது. “ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே தேசம்” என்ற லட்சியத்தை முழங்குகிறது. “அரசியலில் இந்துத்துவம் உருவாவது, சமுதாயத்தின் சிலருக்கு சலுகைகள் காட்டி திருப்திப்படுத்துவதற்கும், சிலரை வாக்கு வங்கிகளாக நடத்துவதற்கும் நல்ல முறிவு மருந்தாக இருக்கும்” என்கிறது. “இந்தியாவின் மனசாட்சியாக பகவான் ராமர் இருக்கிறார்” என்கிறது.

“அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அழகிய, பெரிய ஆலயத்தை எழுப்ப வேண்டும்” என்கிறது. “இதைச் செய்ய சட்டபூர்வமாகவும் கருத்தொற்றுமை அடிப்படையிலும், அரசியல் சட்டம் மூலமாகவும் முயற்சிகளை மேற்கொள்வோம்” என்கிறது. மேலும், காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்துசெய்யப்படும் என்று எச்சரிக்கும் அந்த அறிக்கை அனைத்து மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் வகுக்கப்படும் வகையில் அனைத்து மரபுகளிலும் உள்ள முற்போக்கான அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்ற பொறுப்பு சட்ட ஆணையத்துக்கு அளிக்கப்படும் என்கிறது.

அடுத்த பொதுத்தேர்தலில் – அதாவது 1999 தேர்தலில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக, ‘நிர்வாகத்துக்கான தேசிய செயல்திட்டம்' வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதில் இந்துத்துவத்தின் அடிப்படை அம்சங்கள் விலக்கி வைக்கப்பட்டிருந்தன.

அடுத்த பொதுத்தேர்தலில் பல கட்சிகளையும் உள்ளடக்கி விரிவான கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டபோதிலும் இந்துத்துவக் கொள்கைகள், ‘2004-க்கான தீர்க்கதரிசனத் திட்டங்கள்' என்ற பெயரில் அப்படியே இடம்பிடித்தன. இந்த அறிக்கையின் முக்கிய அம்சம், அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்ற தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை பா.ஜ.க. மீண்டும் கையில் எடுத்ததுதான். அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பதிலாக, “ஜம்மு, லடாக் ஆகிய பகுதிகளுக்கும் போதிய நிதி, நிர்வாக அதிகாரங்களுடன் கூடிய சுயாட்சி பிரதேச ஆணையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்” என்ற கோரிக்கை இதில் இடம்பெற்றிருந்தது.

மீண்டும் இறுகிய இந்துத்துவா

மீண்டும் இந்துத்துவக் கொள்கைகள் தீவிரமாக வலியுறுத்தப்பட்டன 2009 தேர்தல் அறிக்கையில். “அத்வானி தலைமையிலான அயோத்தி இயக்கம்தான் சுதந்திர இந்தியாவில் மக்களிடையே எழுச்சியைப் பெற்ற பெரிய நிகழ்வு” என்று வாழ்த்துப் பாடிய அந்த அறிக்கையில், “காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்துசெய்ய வேண்டும்” என்ற பழைய பல்லவி மீண்டும் ஒலித்தது. அனைத்து மதத்தவருக்கும் பொதுவான குடியுரிமைச் சட்டத்தை உருவாக்க உறுதிபூண்டிருப்பதாகவும் எல்லா மதங்களிலும் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த அம்சங்களை ஒன்றுசேர்த்து நவீன சமூகத்துக்கு ஏற்ற வகையில் குடி யுரிமைச் சட்டம் தயாரிக்கப்படும் என்றும் அது கூறியது.

முன்தயாரிப்புகள்

இந்த 2014 தேர்தல் அறிக்கைக்கான பூர்வாங்க வேலைகளை 2013 அக்டோபரிலேயே பா.ஜ.க. தொடங்கி விட்டது. வாக்காளர்களிடமிருந்தே யோசனைகளை வரவேற்கிறோம் என்றெல்லாம், தனி இணையதளம் தொடங்கப்பட்டாலும் கட்சியின் அடிப்படை என்னவோ இந்துத்துவக் கொள்கைகள்தான். உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க-வினர் நடத்தும் மதவாதம் தெறிக்கும் பிரச்சாரங்களும், அமித் ஷாவின் அனல் கக்கும் பேச்சுகளும் எதைக் காட்டுகின்றன? பா.ஜ.க-வின் குணம் மாறவே மாறாது என்பதைத்தான் வெளிப்படுத்துகின்றன.

- என். ராம், மூத்த பத்திரிகையாளர்,
தொடர்புக்கு: nram@thehindu.co.in
© ‘தி ஹிந்து' (ஆங்கிலம்), தமிழில்: சாரி

5 comments:

UNMAIKAL said...

ஒரு வரிச் செய்திகளில் பாஜக தேர்தல் அறிக்கை - வினவு

PART 4.


பார்ப்பன பாசிஸ்ட் மோடி - வினவு


செய்தி: கிராம சபைகள் வலுப்படுத்தப்படும். அதற்கான கொள்கை பொது மக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்படும்.

நீதி: நாடெங்கும் கப் பஞ்சாயத்து கட்டாயமாக்கப்பட்டு, உயர்சாதி மக்களின் கருணையுடன், அரிஜன மக்கள் பணிவுடன் கிராம சபைகள் வலுப்படுத்தப்படும். ஓம் சூத்திர பஞ்சமன் பஞ்சர் ஷாந்தி!
________

செய்தி: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டின் வளர்ச்சியில் சிறுபான்மையினர் உள்பட அனைத்து சமுகத்தினருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்படும். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கு எந்த வேறுபாடுமின்றி வாய்ப்புகள் வழங்கப்படும். முஸ்லிம்களின் பாடசாலைகளாக திகழும் மதரஸாக்கள், கணக்கு மற்றும் அறிவியல் ஆசிரியர்களை கொண்டதாக நவீனப்படுத்தப்படும்.

நீதி: நாட்டின் வளர்ச்சிக்காக சிறைகளில் அதிகம் இருந்து சிறுபான்மை மக்கள் பங்களிப்பு செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். சமவாய்ப்பு என்று சொல்வதால் இட ஒதுக்கீட்டு கேட்டு வரும் இசுலாமிய வாய்கள் பூட்டப்படும். மதரஸாக்கள் தீவிரவாதத்தின் ஊற்றாக இருப்பதால் கல்வியிலும் கண்காணிப்பிலும் தீவிர நடவடிக்கை எடுப்போம். ஓம் முசல்மான் முடக்கிப் போடு ஸ்வாஹா!
_________

செய்தி: நாட்டிற்கு தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை கருத்தில் கொண்டு, அணுக் கொள்கை திருத்தி அமைக்கப்படும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாட்டின் பாதுகாப்புக்கு எழும் அச்சுறுத்தல்கள் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது.

நீதி: போர் வந்தால் பாரதமே முதலில் அணுகுண்டு போடும் நாடாக இருக்கும் என்பதை கொள்கையாக அறிவிப்போம். இரண்டாவதாக பாகிஸ்தான் போடுவதற்கு முன் மோடி அமைச்சரவை கடலடி புல்லட்டின் சுரங்க பாதை மூலம் அமெரிக்கா சென்று விடும். ஓம் எல்லாம் ஷாவுங்கடா ஷாந்தி!
________

செய்தி: மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, பாஜகவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் அக்கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அந்த அறிக்கையை, மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற திங்கள்கிழமையன்று, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் தில்லியில் வெளியிட்டனர்.

நீதி: முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பேயே அறிக்கை விட்டிருந்தால் கூட்டணிக்கு வரும் கூமுட்டைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டு சிக்கல் வந்திருக்கும். தற்போது கூட்டணிக்கும் பிரச்சினை இல்லை. இந்துமதவெறி பாசிசத்தின் திட்டத்திற்கும் மட்டறுத்தல் இல்லை. ஓம் சாணக்கிய சாதுர்யம் நமஹா!
______________________________

சுருங்கக் கூறின் பாஜக தேர்தல் அறிக்கை பச்சையான பார்ப்பனிய பாசிசத் திட்டத்தை பகிரங்கமாக அறிவிக்கிறது. பன்னாட்டு இந்நாட்டு முதலாளிகளுக்கு நாட்டின் வளங்களையும், தொழிலையும் விரைந்து கொடுப்பது, அதிகார வர்க்கத்தின் காட்டுதர்பாரை சட்டபூர்வமாகவே நிறுவுவது, பிரச்சினைக்குரிய இடங்களில் இராணுவம்- போலீசின் ஆட்சியை ஊக்குவிப்பது, தீவிரவாதத்தின் பெயரில் சிறுபான்மை மக்களை மட்டுமல்ல புரட்சிகர – ஜனநாயக சக்திகளையம், தேசிய இன போராட்டங்களையும் ஒடுக்குவது, ராமர் கோவிலை கட்டும் வாக்குறுதி, 370ரத்து, ராமர் பாலம் அங்கீகரிப்பு மூலம் இந்து வாக்கு வங்கியை குறிவைப்பது, கூடவே மதக்கலவரம் நடக்காமலேயே பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவது, கொடிய அடக்குமுறை சட்டங்களை கொண்டு வருவது என்று பாசிசத்தை முன்வைக்கிறது காவி பயங்கரவாதக் கும்பலின் தேர்தல் அறிக்கை. பார்ப்பன பாசிசத்தை வேரறுக்க, அதன் பாதந்தாங்கிகளை அம்பலப்படுத்த நாமும் தயாராவோம். -வினவு

SOURCE:http://www.vinavu.com/2014/04/09/bjp-election-manifesto-one-liners/

UNMAIKAL said...

ஒரு வரிச் செய்திகளில் பாஜக தேர்தல் அறிக்கை - வினவு
PART 3. B


பார்ப்பன பாசிஸ்ட் மோடி - வினவு

செய்தி: சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். பொதுமக்களின் பங்களிப்புடன் நாட்டில் உள்ள நதிகளை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், விவசாயப் பகுதிகளுக்கும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர முன்னுரிமை அளிக்கப்படும். - -

நீதி: ஆகாய கங்கை, அண்டர் கிரவுண்ட் சரஸ்வதி போன்ற இகலோக கண்களுக்கு தெரியாத நதிகள் ஓடும் நாட்டில், இருக்கும் நதிகளை மானசீகமாக இணைத்து “ஏகாத்மதா ஸ்தோத்திரம்” பாடுவது மூலம் திட்டம் நிறைவேற்றப்படும். கங்கையில் வீசப்படும் நீத்தார் உடல்களை தின்று சீரணிக்க முதலைகள் தருமாறு முதலாளிகளிடமும், கும்பமேளாவில் அழுக்குடன் வரும் நாகா ஸ்வாமிகளை வாசனை சோப்பு போட்டு குளிக்க வைக்க சோப்பு கம்பெனிகளிடமும், உதவி கோரப்படும். கிராமங்களில் மழை பெய்ய, குளம் நிரம்ப வாயு பகவான் கோவில் அமைத்து வாரந்தோறும் மழை வேண்டி சிவரஞ்சனி ராகம் இசைத்து வேண்டப்படும். ஓம் கங்கா ஸ்னாநம் நாத்தம் போக ஷாந்தி!

செய்தி: அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும். தேசிய சுகாதார காப்பீட்டு திட்டம் உள்பட புதிய தேசிய சுகாதாரக் கொள்கை உருவாக்கப்படும். மருத்துவமனைகள் நவீனபடுத்தப்படும்.

நீதி: புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடக்கும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பு போராட்டம் நாடெங்கும் ஏபிவிபியால் கொண்டு செல்லப்பட்டு இந்துக்களிடையே இருக்கும் ஷாதிய பிரிவினை வாதம் குறைக்கப்படும். காப்பீட்டு திட்டம் மூலம் கார்ப்பரேட் பகவான்களை கவனிக்கும் கொள்கை உருவாக்கப்படும். ஓம் சமூகநீதி லேது ஷாந்தி!

செய்தி: தேசிய கல்வி திட்டம் செயல்படுத்தப்படும். யுஜிஸி அமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்டு, உயர்கல்வி ஆணையமாக மாற்றப்படும்.

நீதி: ஜோசியம், ஜாதகம், நாடி-சோடி-பறவை-எண்-ஜோசியம் முதலான அறிவியல் துறைகள், புராணங்கள் அனைத்தையும் கொண்ட வரலாறு, இந்து மன்னர்களின் பொற்காலம், முசுலீம் மன்னர்களின் இருண்ட காலம், தேவபாஷையின் கீர்த்தி, அனைத்தும் கொண்ட புதிய கல்வித் திட்டம் உருவாக்கப்படும். பாரிவேந்தர் பச்சமுத்துஜி, நீதிவேந்தர் ஏசி சண்முகம் மேற்பார்வையில் உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படும். குருகுலங்கள் மீண்டும் கொண்டுவரப்படும். ஓம் கல்வியைக் கொல் ஷாந்தி! - - வினவு

SOURCE:http://www.vinavu.com/2014/04/09/bjp-election-manifesto-one-liners/

Continued ....

UNMAIKAL said...

ஒரு வரிச் செய்திகளில் பாஜக தேர்தல் அறிக்கை - வினவு
PART 3. A




பார்ப்பன பாசிஸ்ட் மோடி - வினவு

செய்தி: அண்டை நாடுகளுடனான நட்புறவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதுடன், அதேசமயம் அச்சுறுத்தும் வகையில் அந்நாடுகளின் நடவடிக்கைகள் இருந்தால், அதற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதி: முதலாளிகளின் நலனை முன்னிட்டு அண்டை நாடுகளோடு நடக்கும் ஏற்றுமதி இறக்குமதியில் நட்புறவு இருக்கும். கட்சி நலனை முன்னிட்டு அண்டை நாடுகளோடு சிண்டு முடியும் நோக்கத்தில் அறிக்கைகளில் மட்டும் ஆவேசம் காட்டப்படும். போர் வந்தால் பாகிஸ்தான் அணுகுண்டு வீசும் என்பதால், மோடியின் அமைச்சரவை மட்டும் அமெரிக்காவிற்கு தப்பி செல்ல கடலுக்கடியில் புல்லட்டின் சுரங்க ரயில் பாதை அமைக்கப்படும். ஓம் தேசபக்தாய சவடால் ஷாந்தி!

செய்தி: தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் கூட்டணி அரசால் ரத்து செய்யப்பட்ட தீவிரவாதத்துக்கு எதிரான சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். தீவிரவாதம் தொடர்பான வழக்குகள் மீது நேர்மையான மற்றும் துரிதமான விசாரணை நடத்தப்படும். அரசியல் தலையீடு இன்றி புலனாய்வு அமைப்புகள் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நீதி: அசீமானந்தா மூலம் தியாகத்துடன் ஆர்.எஸ்.எஸ் செய்து வந்த பணிகள் இனி தேவையில்லை என்பதை அரசு மேற்கொள்ளும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் நிரூபிக்கும். பொடா, தடாவை விஞ்சும் கடுமையான சட்டங்கள் சடுதியில் வரும். அதன்படி குல்லா, தாடி, கைலிகள் கூட தீவிரவாதிகளை கொல்வதற்கு போதுமான ஆதரங்களாக இருக்கும். அமீத் ஷா தலைமையில் தீவிரவாதம் தொடர்பான வழக்குகள் நடக்கும் என்பதால் ஹமாம் நேர்மையை விஞ்சும் அமீத் நேர்மையோடு அரிசி, கோதுமை தலையீடு எதுவும் இருக்காது. ஓம் சிறுபான்மை இனி இல்லை ஸ்வாஹா!


செய்தி: நாட்டின் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி அமைப்பான டி.ஆர்.டி.ஒ. வலுப்படுத்தப்படுவதுடன், பாதுகாப்புத் துறைகளில் குறிப்பிட்ட சில தயாரிப்புகளில் தனியார் மற்றும் நேரடி அன்னிய முதலீடுகள் ஊக்குவிக்கப்படும்.

நீதி: பயில்வான்தான் பஞ்சாயத்து பண்ண முடியும் எனும் ஆர்எஸ்எஸ் நிறுவனம் ஹெட்கேவாரின் பொன்மொழிப்படி பாதுகாப்புத்துறை ஆராய்ச்சிக்கு வரம்பில்லாத நிதி ஒதுக்கப்படும். அந்த நிதி மூலம் பாரத மாதாவை பாதுகாக்கும் பணியினை அமெரிக்க விமானங்களும், ரசிய கப்பல்களும், பிரான்ஸ் துப்பாக்கிகளும், இங்கிலாந்து ஹெலிகாப்டர்களும், இசுரேல் ரேடார்களும் இங்கே தயாரிக்கப்பட அனுமதிக்கப்படும். ஓம் சுதேசி ரக்ஷா விதேசி கரக்ஷா ஷாந்தி!


வினவு
SOURCE:http://www.vinavu.com/2014/04/09/bjp-election-manifesto-one-liners/

Continued ....

UNMAIKAL said...

ஒரு வரிச் செய்திகளில் பாஜக தேர்தல் அறிக்கை - வினவு
PART 2.


“தேர்தல் வந்தாச்சு.. வழக்கம் போல இத எடுத்துக் கிட்டுப் போய் வேலைய காட்டு”

செய்தி: நாட்டு மக்களுக்கு நல்லாட்சி வழங்கப்படும். நிர்வாகம், காவல்துறை, தேர்தல் துறைகளில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.

நீதி: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் தேவர்களுக்கு அம்மா வழியில் கட்டற்ற அதிகாரம் வழங்கப்படுவதன் மூலம் மூலதன கோமான்களுக்கு சுபீட்சத்தையும், புகார் கொடுத்தாலே பரலோகம் எனும் சாஸ்வத யதார்த்தம் மூலமாக நாட்டு மக்கள் குறைபட்டுக் கொள்ளாத சூழலையும் உருவாக்கி ந(வ)ல்லாட்சி வழங்குவோம். ஓம் கடாயுதம் ஷாந்தி!
________

செய்தி: வெளிநாட்டு முதலீடுகள் வரவேற்கப்படும். அதேசமயம் சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு தடை விதிக்கப்படும்.

நீதி: பாரத மாதாவை பிளாட்டு போட்டும், ரூட்டு போட்டும் சம்ஹாரம் செய்ய அந்நிய முதலீடுகள் வரவேற்கப்படும். சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு தடை என்பது மறைமுக அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என்று புரிந்து கொள்க. ஓம் அமெரிக்க பகவான் ஷாந்தி.
_________

செய்தி: வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக சிறப்பு நடவடிக்கைக் குழு ஏற்படுத்தப்படும்.

நீதி: வெளிநாட்டு இந்தியர்களின் கருப்பு பணத்தை யாராவது அனாமதேயங்கள் அடித்துக் கொண்டு போவதை தடுக்கும் வண்ணம், எவரும் அறியாத படி பாதுகாப்பாக வேறு இடங்களில் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். இதற்கான லட்சுமி கடாட்ச நடவடிக்கை குழு, நிதீன் கட்காரிஜி, எடியூரப்பாஜி, ரெட்டி சகோதரர்கள்ஜி பங்கேற்புடன் அமைக்கப்படும். ஓம் ஸ்விஸ் வங்கி நமஹா!
_________

செய்தி: பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்தியாவசியப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கு தனி நிதியம் ஏற்படுத்தப்படும்.

நீதி: பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வங்கி மற்றும் இதர அரசு வங்கிகளில் மாதந்தோறும் லட்சுமி கடாட்ச நிதி ஸ்தல ஜீவாமிருத யாகம் தலா ஐந்து கோடி செலவில் நடத்தப்படும். விலைவாசியைக் கட்டுப்படுத்த அன்னதானம், துணிதானம், காய்தானம், அரிசி தானம், கோதுமை தானம், பருப்பு தானம், எண்ணெய் தானம் செய்ய கார்ப்பரேட் நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்படும். அதற்கான செலவை அரசே கொடுக்கும். ஓம் மக்கள் காசில் பிச்சா தர்மம் ஸ்வாஹா!
_________

செய்தி: வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்தியா – வங்கதேசம், இந்தியா – மியான்மர் எல்லைப் பகுதிகளில் கிடப்பில் போடப்பட்டுள்ள தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்படும்.

நீதி: வடகிழக்கு மாநிலங்கள் பாதுகாப்புடன் வளர இப்போது இருக்கும் இராணுவப் படைகள் இருமடங்காக்கப்படும். இராணுவச் சட்டங்களின் விதிமுறைகள் மூன்று மடங்காக அதிகரிக்கப்படும். தடுப்பு வேலிக்கு தரமான கம்பிகள் வாங்குவதற்கான தர கட்டுப்பாடு நான்கு மடங்கு அதிகரிக்கப்படும். ஓம் நார்த் ஈஸ்ட் குளோஸ் பண்ணு ஷாந்தி!
_________

செய்தி: பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இணையதளம் மூலம் நிர்வாக நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் வரி விதிப்பில் எளிய முறையை பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் ஊழலுக்கு முடிவு கட்டப்படும்.

நீதி: விழிப்புணர்வு – லஞ்சம் கொடுத்தும் வேலை நடக்கவில்லையா என்ற எச்சரிக்கை, இணைய தள நிர்வாக நடவடிக்கை – லஞ்சத்திற்கு பேரம் பேசாமல் ஒரே ரேட்டில் நெட்டில் மாற்றிக் கொள்ளும் வசதி, வரி விதிப்பில் எளிய முறை – காசு இல்லாதவனுக்கு அதிக வரி, இருக்கிறவனுக்கு கம்மி வரி போட்டால் பணக்காரர்கள் தலையை பிய்த்துக் கொண்டு வரி ஏய்ப்பில் ஈடுபடாமலும், ஏழைகள் தலையெழுத்தே என நொந்து கொண்டு வரி கட்டியும் வருவார்கள் – ஓம் கரப்ஷன் கன்வர்ஷன் ஷாந்தி! - வினவு

SOURCE:http://www.vinavu.com/2014/04/09/bjp-election-manifesto-one-liners/

Continued ...

UNMAIKAL said...

ஒரு வரிச் செய்திகளில் பாஜக தேர்தல் அறிக்கை - வினவு

PART 1.

April 9, 2014
சுருங்கக் கூறின் பாஜக தேர்தல் அறிக்கை பச்சையான பார்ப்பனிய பாசிசத் திட்டத்தை பகிரங்கமாக அறிவிக்கிறது.

செய்தி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் அரசியலமைப்பு சட்ட வரையறைக்கு உள்பட்டு ராமர் கோயில் கட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நீதி: அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பதை மறுத்தால் வரலாற்றுத் துறை ஒழிக்கப்படுவது வரலாறாயிருக்கும். பாபர் மசூதியை இடிப்பதற்கு சட்டபூர்வமாகவே அனுமதிக்கவில்லை என்பதாலேயே அரசு நிர்வாகம் கரசேவகர்களால் முடக்கப்பட்டது. இதற்கு மேல் ராமர் கோவில் கட்டுவதை மறுத்து விடுவதற்கு அரசியலமைப்பு சட்டம் என்ன அடிமுட்டாளா? ஓம் கடப்பாறை கரசேவை ஷாந்தி!
_________

செய்தி: அரசியலமைப்பு சட்டத்தின் 44-வது பிரிவில், பொது சிவில் சட்டம் அரசின் முக்கியக் கொள்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் பாஜக ஆட்சிக்கு வந்ததும், பொது சிவில் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதி: அப்போது பொதுசிவில் சட்டப்படி அக்ரகாரங்களில் மட்டுமே அரசு அலுவலகங்கள் இருக்கும். வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டு வருண தர்ம ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்படும். கிறித்தவ சீரழிவான விவாகரத்து ஒழிக்கப்பட்டு, கல்லானாலும் கணவன், ஃபுல்லானாலும் புருஷன் எனும் இல்லற நீதி வல்லறமாக நிலை நிறுத்தப்படும். பெண்களுக்கு சம சொத்துரிமை எனும் இசுலாமிய சீரழிவு அகற்றப்பட்டு பாரதப் பண்பாட்டின் படி அடுப்பங்கரையிலேயே மாதர் தம் வாழ்க்கை முடிய வேண்டும் என்பது நிலைநாட்டப்படும். ஓம் முசல்மான் – கிறித்தவ – ஒழிப்பு ஷாந்தி!
________

செய்தி: ராமர் சேது பாலம் நமது நாட்டின் கலாசார பாரம்பரிய சின்னமாகும். மேலும் தோரியம் அதிக அளவு கிடைக்கும் பகுதியாக அப்பகுதி திகழ்கிறது. இவற்றை கருத்தில் கொண்டு சேது சமுத்திர திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்.

நீதி: தசரதனது அறுபதினாயிரம் மனைவியர் வாழ்ந்த வடக்கு உபி மாநிலத்தில் மக்களை வெளியேற்றி, கிருஷ்ணன் கோபியர் உடைகளை ஒளித்த நதியில் நீரெடுக்கும் விவசாயிகளை தடை செய்து, பீமன் புசித்த காய், கனி, கிழங்குகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டு, இந்திரன் கள்ள உறவு கொண்ட ரிஷி பத்தினிகள் வசித்த காடுகளில் இருக்கும் விலங்குகளை கொன்று, புராணங்களில் வரும் அனைத்து பாரம்பரிய சின்னங்களும் எச்சரிக்கையாக பாதுகாக்கப்படும். ஓம் புண்ணிய ஷேத்ர மாத்ரு பூமி ஷாந்தி!
_________

செய்தி: ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்துள்ள அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை நீக்குவது குறித்து அனைத்து தரப்பினருடன் ஆலோசனை நடத்தப்படும். காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட்டுகள் முழு மரியாதை மற்றும் பாதுகாப்புடன் அவர்களின் பூர்விக இடத்தில் குடியமர்த்தப்படுவார்கள்.

நீதி: ஆர்.எஸ்.எஸ் குடும்பத்தின் அனைத்து பரிவாரங்களோடும் கலந்து பேசி, காஷ்மீர் விடுதலைக் கட்சிகளை இராணுவத்தின் துணை கொண்டு ஒடுக்கி ஜனநாயக முறைப்படி 370-வது பிரிவை ரத்து செய்வோம். பண்டிட்டுகள் கௌரவத்துடன் குடியேற்றப்படும் நாளில் ‘காணாமல் போன’ காஷ்மீர் மக்களின் பட்டியல்கள், புகார்கள், விசாரணைகள் அடங்கிய ஆவணங்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டு, காஷ்மீரில் அமைதி நிலைநாட்டப்படும். ஓம் காஷ்மீர் ஸ்வாஹா!
________

செய்தி: 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில், நாடு நிர்வாகச் சீர்கேடுகளாலும், ஊழல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வேலையின்மை அதிகரித்து விட்டது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த நிலை மாற்றியமைக்கப்படும்.

நீதி: அந்த நிலை மாற்றம் இப்படித்தான். நாங்கள் ஆட்சிக்கு வரும் போது ஊழல்கள், நிர்வாக சீர்கேடுகள் வெளியே தெரியாத வண்ணம் இரகசியம் பேணப்பட்டு, ஊடகங்களும் கவனிக்கப்பட்டு ‘வளர்ச்சியை’ உறுதி செய்வோம். வேலையின்மையை போக்காவிட்டாலும் வேலையற்ற இளைஞர்களை அமைதிப்படுத்தும் வண்ணம் ஒவ்வொரு நகரத்திலும் கதாகலேட்சேபம், உபந்நியாசம், ஆன்மீக உரைகள், முதலியவை ஜக்கி, நித்தி, ஆஸ்ரம் பாபு, ஜயேந்திரர், மதுரை ஆதீனம், ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர் முதலான ஆன்றோர்களை கொண்டு நடத்தப்படும். ஓம் ஸ்வாமிஜி காயகல்பம் ஷாந்தி! - வினவு

SOURCE:http://www.vinavu.com/2014/04/09/bjp-election-manifesto-one-liners/

CONTINUED .....