Followers

Sunday, March 23, 2014

திக்குத் தெரியாத காட்டில் காங்கிரஸ் கட்சி!



வாய்ப்பிருந்தும் அதனை சரி வர பயன்படுத்தாத கூமுட்டைகள் என்றால் அது இந்த காங்கிரஸ் கட்சிதான். இன்று தமிழகத்தில் இலங்கை பிரச்னையை வைத்து காங்கிரஸை வறுத்தெடுக்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள். ஆனால் உண்மையில் இலங்கை தமிழர்களுடன் நான் பேசிய வகையில் காங்கிரஸை பலர் பாராட்டவே செய்கின்றனர். தற்போது யாழ்பாணம் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. முன்பு விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் எதற்கெடுத்தாலும் வரி கட்ட வேண்டும். இன்று அது போன்ற நிலை இல்லை. இலங்கை முழுவதும் சுதந்திரமாக எங்களால் செல்ல முடிகிறது. முன்பு காலையில் எனது பிள்ளை வீட்டை விட்டு வெளியேறினால் இரவு வீடு திரும்புவானா என்ற பயத்தில் வாழ்ந்தோம். இன்று அந்த பயம் இல்லை. ஆனால் போரின் கடைசியில் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டது ரணத்தை ஏற்படுத்தக் கூடியது. அது கூட வன்னி மக்களை விடுதலைப் புலிகள் மனித கேடயமாக பயன்படுத்தியதே என்று பலர் கூறுவதை நான் கேட்டேன்.

இலங்கை ராணுவத்தையும் ராஜபக்ஷேயையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். ஆனால் அதனை வைத்து வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் அரசியல் பண்ணி அந்த மக்களுக்கு மேலும் துன்பத்தைத்தான் தந்து கொண்டிருக்கிறார்கள். இன்று ராஜபக்ஷேயின் ஆதரவாளரான மோடியோடு கை கோர்த்து விட்டார் வைகோ. அவரது அரசியல் மறு வாழ்வுக்காக ஈழத் தமிழர் பிரச்னை சற்று மூட்டை கட்டி வைக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரை தற்போது நிம்மதியாக உள்ளனர். இந்திய அரசின் செலவில் பல கோடி ரூபாய் செலவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வீடுகளையும் அந்த மக்களையும் சோனியாவும் ராகுலும் சென்று சந்தித்து மற்ற அடிப்படை வசதிகளையும் பெருக்கிக் கொடுத்திருந்தால் காங்கிரஸின் மேலுள்ள கோபம் சற்றே தணிந்திருக்கும்.

மோடி வைகோ போன்றவர்களெல்லாம் வெறும் வாயால் முழம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்று விடுதலைபலிகள் ஒழிக்கப்படாமல் இருந்திருந்தால் இலங்கை பிரச்னை இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் தீரப் போவதில்லை. ஐநாவின் அச்சுறுத்தலுக்கு பயந்தாவது ராஜபக்ஷே தமிழர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் உள்ளார். சோனியா காந்தி ராஜபக்ஷேயிடம் மேலும் பல நெருக்கங்களை கொடுத்து தமிழர்களின் வாழ்வுரிமைக்கு கோரிக்கை வைத்து அதனை தமிழ் மக்களையும் சென்றடையுமாறு பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். காங்கிரஸூக்கு விடுதலைப்புலிகள் தான் எதிரிகளே யொழிய அப்பாவி இலங்கை தமிழ் மக்கள் அல்ல.

ப.சிதம்பரம் போன்றவர்கள் இதனை அழகாக சோனியாவிடம் எடுத்துரைத்து தமிழர்களின் நலனுக்கு ஏற்றவாறு காரியமாற்ற அறிவுரை வழங்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் செய்து வரும் நலத் திட்டங்களை தமிழக மக்களை சென்றடையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கல்விக் கடன் பெறாத குடும்பங்களே தமிழகத்தில் இல்லை எனும் அளவுக்கு ஏழை மக்களும் இன்று டாக்டராகவும் இன்ஜினியராகவும் பரிணமிக்க முடிகிறது என்றால் அதற்கும் காங்கிரஸே காரணம். இவை எல்லாம் மக்களிடம் சரியாக சென்றடையவில்லை.

மோடியின் தலைமையில் ஆட்சி அமையாமல் தடுக்கும் சக்தி ஆம் ஆத்மிக்கும் காங்கிரஸூக்கும் உண்டு. ஏனெனில் தேர்தலுக்கு பிறகு திமுகவும் அதிமுகவும் மோடிக்கு அதரவு தருவதில் எந்த வெட்கமும் பட மாட்டார்கள் என்பது நமக்கு தெரிந்ததே!

காங்கிரஸை ஆதரிப்பது ஒன்றுதான் முஸ்லிம்களுக்கு உள்ள ஒரே வழி என்ற மமதையில் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டில் அசட்டையாக இருந்தது காங்கிரஸ். ஆனால் இன்று மாற்று சக்தியாக ஆத் ஆத்மி விசுவரூபம் எடுத்துள்ளது. மோடியின் பிரதமர் கனவை கிட்டத்தட்ட தூரமாக்கி விட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். இதிலிருந்து பாடம் படித்து காங்கிரஸ் வருங்காலங்களில் இஸ்லாமியரின் இட ஒதுக்கீட்டில் கவனம் செலுத்த வேண்டும். காங்கிரஸின் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் வாக்கும் தற்போது ஆம் ஆத்மியின் பக்கம் திரும்பியுள்ளதை நோக்க வேண்டும். தமிழகத்தில் பாரம்பரிய காங்கிரஸ் வாக்கு வங்கி எப்போதும் உண்டு. இஸ்லாமியரின் வாக்கும் கணிசமாக காங்கிரஸூக்கு வரும். மோடியை ஆட்சிக் கட்டில் ஏற விடாமல் தடுக்கும் எண்ணம் உடையவர்களின் வாக்கும் காங்கிரஸூக்கு செல்லும்.

எனது கணிப்பின்படி காங்கிரஸ் 150 இடங்களிலும், பிஜேபி 100 இடங்களிலும், ஆம் ஆத்மி 100 இடங்களிலும் மற்ற பிராந்திய கட்சிகள் 150 இடங்களிலும் வரும் என்று நினைக்கிறேன். எனது கணிப்பு சரியாக இருந்தால் ஆம் ஆத்மி துணையோடு காங்கிரஸ் ஆட்சிக் கட்டில் ஏறும் என்றே நினைக்கிறேன். முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments: