Followers

Friday, March 07, 2014

நாங்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா?

ஸ்ரீபெரும்புதூர் பிரசாரத்தின்போது ராஜீவ் அருகில் இருந்த காங்கிரஸ் பிரமுகர் லீக் முனுசாமி, எஸ்.பி-யான முகமது இக்பால், டெல்லியில் இருந்து பாதுகாப்புக்காக வந்த குப்தா, இன்ஸ்பெக்டர் ராஜகுரு, இன்ஸ்பெக்டர் எட்வர்டு ஜோசப், சப் இன்ஸ்பெக்டர் எத்திராஜூ, கான்ஸ்டபிள் முருகன், கான்ஸ்டபிள் தர்மன், பெண் கான்ஸ்டபிள் சந்திரா, கமாண்டோ வீரர் ரவிச்சந்திரன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களான லதா கண்ணன், (அவருடைய மகள்) கோகில வாணி, சந்தானி பேகம், சரோஜா தேவி, டேனியல் பீட்டர் ஆகியோர் அந்தச் சம்பவத்தில் இறந்தனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, ஜெயலலிதா அறிவித்த விடுதலை போன்ற பரபரப்பான சூழலில் அவர்கள் குடும்பத்தினரைச் சந்தித்தோம்.

காங்கிரஸைச் சேர்ந்த சந்தானி பேகத்தின் மகன் அப்பாஸ், ''எங்க அம்மா அந்த சமயத்தில காங்கிரஸ் தென் செங்கை மாவட்ட தலைவியா இருந்தாங்க. காங்கிரஸ் மீதும் ராஜீவ் காந்தி மீதும் அதிகப் பற்று வெச்சிருந்தாங்க. நான்கு பையன், மூணு பொண்ணுங்க, எங்கம்மாவுக்கு. நான் கடைசி பையன். எங்களுடைய அப்பா எனக்கு எட்டு வயசா இருக்கும்போதே இறந்துட்டார். எனக்கு 10 வயசா இருக்கும்போது அம்மாவும் அந்தக் குண்டு வெடிப்பில் உடல் சிதறி இறந்தாங்க. அதன் பிறகு எங்க வாழ்க்கையே திசை மாறி போயிடுச்சு. நாங்க பட்ட கஷ்டங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாதுங்க. அப்பா, அம்மா இல்லாம அநாதைகள் போல வளர்ந்தோம். ஏழ்மையின் காரணமா நான் 10-வது வரைக்கும்தான் படிக்க முடிஞ்சுது. ஏதோ பிழைப்பு நடத்தி வருகிறோம். இதுவே எங்க அம்மா உயிருடன் இருந்து இருந்தால், எங்களை இந்த நிலைக்கு விட்டு இருப்பாரா? இதுவரைக்கும் எங்களுக்கு ஆதரவா யாராவது ஒரு வார்த்தை சொல்லி இருப்பாங்களா? தப்பு செஞ்சவங்களுக்காகப் பெரிய பெரிய வக்கீல்களைக் கூப்பிட்டு வாதாடுகிறாங்க. அவங்களுக்கு நிறைய தலைவருங்க குரல் கொடுக்கறாங்க. ஆனா, இந்த அப்பாவி உயிர்களுக்காக இதுவரை யாராவது குரல் கொடுத்தாங்களா? மூன்று பேரும் இத்தனை ஆண்டுகளா ஜெயிலில் தண்டனை அனுபவிச்சாங்கன்னு சொல்லுறாங்க. இத்தனை வருடங்களா தாய், தந்தை இல்லாம எவ்வளவு துடிச்சிருப்போம். கொலைகாரர்களுக்குக் காட்டும் கருணையை எங்களுக்கு யாருமே காட்டலையே... எங்க அம்மா திரும்பவும் வரமாட்டாங்கன்னு தெரியும். ஆனா, அவர்களைக் கொன்ற படுபாவிகளுக்குக் குறைந்தபட்ச தண்டனையாவது தர வேணாமா? இவர்களைத் தூக்குல போடுங்கன்னு சொல்லலை. இவர்களை விடுதலை செய்யக் கூடாது. ராகுலுக்கும் பிரியங்காவுக்கும்தான் எங்களது வேதனை புரியும். நாங்க அவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டு இருக்கிறோம்'' என்றார் கோபமாக.



சரோஜா தேவியின் அக்கா சாந்தா குமாரி, ''சரோஜா தேவி, அந்த சமயத்துல தனியார் ஸ்கூல்ல டீச்சரா வேலை செஞ்சுட்டு இருந்தா. அவளுக்கு அப்ப 20 வயசு. நல்ல அழகு. துறுதுறுன்னு இருப்பா. நான் தமிழ்நாட்டின் மகிளா காங்கிரஸ்ல இணை செயலாளரா இருந்தேன். காங்கிரஸ் பஞ்சாயத்து போர்டுலயும் உறுப்பினரா இருந்தேன். தேர்தல் பிரசாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவ் வந்தபோது என் தங்கை சரோஜா தேவி, 'நானும் உன்கூட வர்றேன். ராஜீவ் காந்தியைப் பார்க்கணும்’னு ஆசையா சொன்னா. நானும் அவளும் மீட்டிங் நடக்கும் இடத்துக்குப் போனோம். என் தங்கை அவரைப் பக்கத்துல பார்க்கணும்னு போனா. திடீர்னு ஒரு பெரிய சத்தம் கேட்டது. என்னனு புரியவே கொஞ்ச நேரம் ஆச்சு. நானும் அந்த கிரவுண்ட்ல இருந்து தூக்கி வீசப்பட்டேன். என் தங்கை இறந்துட்டான்னு அப்புறம்தான் தெரிஞ்சது. அதற்குப் பிறகு என் வாழ்க்கையே திசை மாறிடுச்சு. அந்த விபத்துனால எனக்குக் கல்யாணமே நடக்கல. இன்னமும் அதில் இருந்து மீள முடியாத துயரத்தில்தான் நான் இருக்கிறேன். எனக்கு ஒரு வேலை தேடிக்கொண்டேன். வீடு விட்டால் வேலை... வேலை விட்டால் வீடு என்று இருக்கிறேன். வேறு எங்குமே இதுவரை செல்லவில்லை. அந்த சில நொடிகளால் எங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது. பாதிக்கப்பட்ட எங்களுக்கு இதுவரை அரசாங்கம் என்ன செய்தது? ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டபட்டவர்களின் தீர்ப்பை நான் மனிதாபிமான அடிப்படையில பார்க்கிறேன். ஆனா, அந்தக் கோர விபத்தில் என் தங்கை உட்பட 15 பேர் குடும்பத்தினரை யார் மனிதாபிமான அடிப்படையில் பார்க்கிறார்கள்?' என்று கேள்வியுடன் முடித்தார் ஆவேசமாக.



முகமது இக்பாலின் மகன் ஜாவித் இக்பால், ''அப்பா காஞ்சிபுரம் எஸ்.பி-யாக இருந்தாங்க. நான் பிறக்கும்போதே எங்க அப்பா டி.எஸ்.பி. அதற்கு முன்னாடி மிலிட்டரியில இருந்தாங்க. அவர் இறக்கும்போது எனக்கு 17 வயசு. எனக்கு ஒரு அக்காவும் இருக்காங்க. அப்பா இறந்ததற்குப் பிறகு சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவிச்சோம். அதன் பிறகு மூப்பனார் எங்களைப் பார்த்து சோனியா மேடத்திடம் சொல்லி காஸ் ஏஜென்சி வெச்சுக் கொடுத்தார். அதை வைத்துதான் நாங்க வாழ்க்கை நடத்தி வர்றோம். அப்பா இறந்துபோனதற்கு பிறகு ரம்ஜான், பக்ரீத் எதுவுமே கொண்டாடுவது இல்லை. எங்க அப்பா உயிருடன் இருந்து இருந்தா எங்களை இப்படியா வைத்து இருப்பாரு? அந்தப் படுபாவிகளைத் தூக்குல போடச் சொல்லி ரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு மவுண்ட் ரோட்ல என் தலைமையில் 6,000 பேர் உண்ணாவிரதம் இருந்தோம். ஆனால், இப்ப உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனை இல்லேன்னு தீர்ப்பு வழங்கி இருக்காங்க. இது தர்மமா?

மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்குத் தூக்கு வேண்டாம் என்றாலும், அவர்களை வெளியேவிடக் கூடாது. அவர்கள் செய்தது மன்னிக்கவே முடியாத ரொம்ப பெரிய தவறு. 15 அப்பாவிகளைக் கொன்றிருக்கிறார்கள். அவங்கபாட்டுக்கு நாளைக்கு வெளியில நடந்து வந்தால், இந்த நாட்டில் என்ன சட்டம் ஒழுங்கு இருக்கு? தமிழன்... தமிழன்னு எல்லோரும் பேசிட்டு கொலையாளிகளுக்காகப் பேசுகிறார்கள். இறந்துபோன எங்க எல்லோருடைய குடும்பத்தினரின் கோரிக்கை... நாங்க ராகுலைச் சந்திக்கணும். ஏன்னா, அவர் ஒருத்தருக்குத்தான் நாங்க அனுபவிக்கும் கஷ்டம் புரியும்'' என்றார் காட்டமாக.

தியாகி லீக் முனுசாமி மகன் லீக் மோகன், ''தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் லீக்னு ஒரு அமைப்பு அப்போது இருந்தது. அதில் அப்பா ஜெனரல் செகரட்டரியாக இருந்தாரு. அதில் இருந்து அப்பாவை 'லீக்’னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. அந்த சமயத்துல மரகதம் சந்திரசேகர் எம்.பி-யாகத் தேர்தலில் நிற்க இருந்ததால், அப்பா அவருடன்தான் இருந்தார். அப்போதுதான் அந்த விபத்து நடந்து இருக்கிறது. அப்பாவும் அதில் இருந்து தூக்கி வீசப்பட்டார். கை பிய்ந்து தொங்கிக்கொண்டிருந்தது. அப்போது கூட அப்பா 'படுபாவிங்க தலைவர் ராஜீவை இப்படி பண்ணிட்டாங்களே’னு வேதனையில அழுதார். ஒரு சேர்ல வந்து உட்கார்ந்தாரு. அங்க அப்படியே இறந்துட்டார். இப்படி ஒரு தீர்ப்பு வந்தது எங்களால் ஜீரணித்துக்கொள்ளவே முடியாதது. ஒரு தவறான முன் உதாரணத்தை உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. 'எதிர்காலத்தில் நம் நாட்டில் பிரதமரையும் கொலை செய்யலாம், முதல்வரையும் கொலை செய்யலாம். 20 ஆண்டுகள் தண்டனை வழங்கிவிட்டு விட்டுவிடுவார்கள்’ என்ற எண்ணம் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டுவிடும். ஜெயலலிதா தேர்தல் வாக்குக்காக இப்படி அறிவித்து இருக்கிறார். ஆனால், அவர் நினைப்பது ஒருபோதும் நடக்காது. தமிழக மக்களுக்கு உண்மை என்னன்னு தெரியும். ஒருபோதும் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களை மறக்க மாட்டாங்க, மன்னிக்கவும் மாட்டாங்க'' என்றார்.

போலீஸ் எஸ்.ஐ-.யான எட்வார்ட் ஜோசப்பின் தம்பி ஜான் ஜோசப், ''எங்க அண்ணன் புத்திசாலித்தனமானவர். எம்.ஜி.ஆரின் ஸ்பெஷல் பாதுகாப்பு அதிகாரியாக ரொம்ப நாள் இருந்தார். தமிழகத்தில் வரும் வி.ஜ.பி-க்கு எல்லாம் பாதுகாப்பு அதிகாரியா இருந்தவர். அந்தச் சம்பவத்தன்று டியூட்டி போய்ட்டு அப்பதான் வீட்டுக்கு வந்தார். உடனே அண்ணனைக் கூப்பிட்டாங்க. 'ராஜீவ் காந்தி விமானநிலையம் வருகிறார். உடனே அங்கு செல்லவும்’னு உத்தரவு. உடனே புல்லட்டை எடுத்துக்கிட்டுப் போனார். அப்பதான் நாங்க அவரைக் கடைசியா பார்த்தோம். அன்று இரவு 12.30 மணிக்கு சிலபேர் வீட்டுக்கு வந்து, 'சின்ன விபத்து வாங்க’ன்னு சொன்னாங்க. அப்பகூட ராஜீவ் காந்தி இறந்தது தெரியாது. அண்ணன் உடல் சிதறிக் கிடந்தாரு. அப்ப நான் கதறியது இன்னும் நினைவில அப்படியே இருக்கு.

எங்கள் குடும்பமே ஆடிபோய்விட்டது. அதில் இருந்து மீண்டு வரவே ரொம்ப காலம் ஆனது. அவருக்கு இரண்டு பொண்ணுங்க. அப்ப ஒரு பொண்ணுக்கு ஒன்பது வயது. இன்னொரு பொண்ணுக்கு ஆறு வயசு. பள்ளிக்கூடம் வரைக்கும் அவர்களுக்குப் பணம் கட்டினாங்க. அதன் பிறகு நாங்கதான் பணம் கட்டிப் படிக்க வெச்சோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை யாரும் விமர்சிக்கக் கூடாது. ஆனால், அவர்கள் திட்டமிட்டுப் படுகொலை நடத்தி இருக்காங்க. இவங்க இங்க தப்பிடலாம். ஆனா, அனைத்தையும் கடவுள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார். அவரது கோர்ட்டில் கண்டிப்பா இவர்களுக்குத் தண்டனை உண்டு'' என்றார்.

எத்திராஜூவின் சகோதரர் கோவிந்தராஜூலு, ''அண்ணனுக்கு அப்ப 36 வயசு. கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பொண்ணு தேடிக்கிட்டு இருந்தாங்க. ராஜீவ் பாதுகாப்புக்குப் போனவர் குண்டு அடிப்பட்டு இறந்தார். நாட்டுக்காகத் தியாகம் பண்ணி இருக்கிறார். தமிழ்நாட்டுல ஏண்டா பிறந்தோம்னு வருத்தமா இருக்கு. ஒரு பரம்பரையையே அழிச்சுட்டுப் போய்ட்டாங்க. பாதுகாப்புக்குப் போய் அவருடன் இறந்த குடும்பத்தினர் எல்லோரும் என்ன ஆனார்கள்னு இதுவரை யாராவது யோசித்து இருப்பாங்களா? அப்ப அவர்கள் எல்லோரும் மனித உயிர்கள் கிடையாதா? கொலை செய்தவர்களுக்கு அவரது கூட்டாளிகளுக்கு விடுதலை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற ஒரே முயற்சிதான் இங்கே இருக்கிறது.

கருணாநிதியையே கருணாநிதின்னு சொல்லும் முதலமைச்சர் ஜெயலலிதா, கொலை செய்தவர்களைத் திருவாளர்கள்னு சொல்லுறாங்க. என்னங்கடா நாடு இது? இந்த நாட்டுல தியாகம் செய்தவர்களுக்கு அவ்வளவுதான் மரியாதைன்னு நினைச்சுக்க வேண்டியதுதான். கட்சிக்காரங்களுக்கு எல்லாம் ஒண்ணு சொல்லிக்கறேன். அற்ப வாக்குக்காக இப்படி செய்யறீங்களே... ராஜீவ் ஆத்மா உங்களை மன்னிக்காது'' என்றார் கடும்கோபத்தில்.

இவர்களின் கேள்விகளுக்கு யார் பதில் சொல்வது?

- நா.சிபிச்சக்கரவர்த்தி

படங்கள்: எஸ்.கேசவசுதன்

ராஜீவ் காந்தி கொலையில் பலியான இந்தக் குடும்பங்களை ஒன்று திரட்டியவர் ஜோதி ராமலிங்கம். அவர், ''ராஜீவ் காந்தி நம் தமிழ் மக்களை ரொம்ப நேசித்தார். 9.9.2011 அன்று மூவருக்கும் தூக்குத் தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்கள். அதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதேநாள் ராஜீவ் காந்தி படுகொலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைக் கண்டுபிடித்து ஒன்று சேர்த்து பெரிய அளவில் உண்ணாவிரதம் இருந்தோம். அதன்பின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலைச் சந்தித்து மனு கொடுத்தோம். இந்தக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். நீதி வேண்டும். தமிழன் என்று சொல்லி மார்தட்டிக்கொள்ளும் தமிழகத் தலைவர்கள் இதுவரை ராஜீவுடன் இறந்த தமிழ்க் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் சொன்னார்களா?'' என்றார்.

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=92554

நன்றி விகடன்

ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பில் கைதாகியுள்ள தமிழர்கள் நிரபராதிகள் என்றால் வழக்காடி வெளி வரட்டும். தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக விசாரணையின்றி வெளியில் விட்டால் அது மேலும் பல குற்றவாளிகள் உருவாக காரணமாகி விடும். எனவே உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் உண்மைக்கு இடம் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களின் மேல் முறையீட்டு வழக்கை மிக விரைவில் முடித்து குற்றமற்றவர்களாக வெளி வர என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் நாம் முன்னெடுக்க வேண்டும்.

1 comment:

sultangulam@blogspot.com said...

தடா, பொடா இன்றி நேர்மையான விசாரணை நடத்த அனுமதித்தால் பெருந்தலைகள் பெயர்கள் வெளியில் வரும் என்பதால் தொடக்கத்திலேயே தடுக்கப்படுகின்றது. மீண்டும் விசாரணை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். அந்தப் பேச்சு எழக்கூட அனுமதிக்க மாட்டார்கள் என்ற நிலையில் செய்யாத கொலைக்காக சாகும் வரை சிறையில் வைத்திருக்க வேண்டுமென்பது நீதியானதா?