Followers

Tuesday, March 04, 2014

அசோக் மோஷியும், அன்சாரியும் நண்பர்களானார்கள்!



இந்த இரண்டு படங்களையும் மனிதாபிமானம் உள்ள எவரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. முதல் படம் பிப்ரவரி 28 2002 ம் ஆண்டு மோடி மற்றும் அவரது ஆட்சியாளர்களால் வெறியூட்டப்பட்ட இந்துத்வாவாதிகளில் ஒருவனான அசோக் மோச்சி வெறிகொண்டு முஸ்லிம்களை அழிக்க புறப்பட்ட போது எடுத்த புகைப்படம்.

அடுத்த படம் குத்புதீன் அன்சாரியினுடையது. தன்னை இந்துத்வா வெறியர்களிடமிருந்து காப்பாற்றும் படி பாதுகாப்பு படைகளிடம் அதே நாளில் கெஞ்சுகிறார். மோடியின் அரசாங்கம் எந்த அளவு அன்று வெறி ஆட்டம் ஆடியது என்பதை இந்த இரண்டு படங்களுமே விளக்கும்.

காலங்கள் இப்படியே வெறுப்பில் சென்று விடுவதில்லை. இந்த இரண்டு நபர்களையும் கேரளா மாநிலம் கண்ணூரில் ஒரு விழாவில் நாட்டு நலனில் அக்கறையுள்ளோர் சந்திக்க வைத்தனர். பழம் பெருமை வாய்ந்த இந்த பாரத நாட்டை இந்துத்வாவாதிகளால் அழிக்க இடம் தந்து விட மாட்டோம் என்று சொல்வது போல் மத ஒற்றுமைக்கு சான்றாக அமைந்தது இந்த நிகழ்ச்சி.



அசோக் மோஷி தனது உரையில் 'நான் முன்பு மிகப் பெரும் தவறு செய்து விட்டேன். மனிதத் தன்மை என்ன என்பதை தற்போது கற்றுக் கொண்டுள்ளேன். குஜராத்தில் வளர்ச்சி எங்கு இருக்கிறது? மாநிலம் முன்னேறி விட்டது என்று சொல்பவர்கள் வெட்கப்பட வேண்டும். லால்தர்வாஜாவில் உள்ள நடைபாதையில்தான் நான் இன்றும் வாழ்ந்து வருகிறேன். எனக்கு 39 வயதாகிறது. இன்று வரை தனிமையில்தான் உள்ளேன். திருமணம் முடிக்க என்னிடம் வசதி இல்லை.' என்று கூறினார்.

அன்சாரி தனது உரையில் 'அனந்த் ஷ்ரோப் என்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி இந்துத்வாவாதிகளால் இஸ்லாமியருக்கு ஏற்பட்ட இன்னல்களுக்காக என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். நானும் அசோக் மோஷியும் குஜராத்திகள். மேடையில் இங்கு அருகருகே அமர்ந்துள்ளோம். ஆனால் இவ்வளவு நெருக்கமாக அருகருகே குஜராத்தில் உட்கார முடியாது. மோடியின் ஆட்சியில் இதுதான் தற்போதய நிலை. சமூகங்கள் பல துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது. இன்று அசோக் மோஷி தனது தவறுக்காக வருத்தம் தெரிவித்தார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. நமது நாட்டு மனிதத் தன்மையின் புதிய அத்தியாயம் இன்று தொடங்கியுள்ளதாக எண்ணுகிறேன்.' என்றார்.

மனோஜ் குமாரின் புகழ் பெற்ற பாடலான 'ஹே...ப்ரீத் ஜஹாங்கி ரீத் சதா' என்ற பாடலை அசோக் மோஷி பாடினார். பாடி முடிந்தவுடன் மிக பலமான கைதட்டல்களால் அந்த இடமே அதிர்ந்தது. கேரளாவில் மொழி கடந்து நாட்டு பற்றினை அனைவரும் வெளிக்காட்டினர்.

அன்சாரி எழுதிய ‘Njan Qutubuddin Ansari’ (I am Qutubuddin Ansari) என்ற புத்தகமும் இந்த விழாவில் வெளியிடப்பட்டது.




அசோக் மோஷி தனது கைகளால் அன்சாரிக்கு பூச்செண்டு கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். மோடியின் பிரித்தாளும் சூழ்ச்சி நமது பாரத தேசத்தில் அரங்கேற எந்நாளும் வாய்ப்பில்லை என்பதை இந்நிகழ்ச்சி நமக்கு அழகாக உணர்த்தியது.

தகவல் உதவி

மாத்ரு பூமி
கண்ணூர்

1 comment:

Anonymous said...

அசோக் மோசி இஸ்லாத்தை ஏற்க அல்லாஹ் அருள் புரிவானாக.